குடிக்கணக்கின் கட்டளை.

4 ஜூன்  1944.

நாசரேத் வீட்டை மீண்டும் காண்கிறேன் - வழக்கமாக மரியா உணவருந்தும் அறை.  இப்பொழுது அவர்கள் ஒரு வெள்ளைத் துகிலில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இருட்டாகி வருவதால், அந்தத் துணியை வைத்து விட்டு, விளக்கை ஏற்றுகிறார்கள்.  தோட்டப் பக்கமாய் பாதி திறந்திருக்கும் கதவின் வழியாக வருகிற பச்சை ஒளியில் அவர்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை.  அந்தக் கதவையும் சாத்திவிடுகிறார்கள்.

இந்நிலையிலும் மாதா மிக அழகோடிருக்கிறார்கள்.  அவர்களுடைய நடை எப்போதும் இலகு விரைவாயிருக்கிறது.  அவர்களுடைய கிரியைகள் சாந்தமாயிருக்கின்றன.  பேறுகாலம் நெருங்கிய நிலையில் ஸ்திரீகளிடம் பொதுவாகக் காணப்படும் கனத்த சுழிந்த அசைவுகள் அவர்களிடம் இல்லை.  அவர்களின் முகம் மட்டுமே மாறியுள்ளது.  மங்கள வார்த்தை சமயத்தில் அவர்கள் ஒரு குழந்தையின் களங்கமற்ற முகத்தையுடைய நங்கையாயிருந்தார்கள்.  பின் எலிசபெத்தம்மாள் வீட்டில் ஸ்நாபகர் பிறந்தபோது அந்த முகம் அதிக பண்படைந்து வசீகரமாய் முதிர்ச்சி பெற்றிருந்தது.  இப்பொழுது அம்முகம் தாய்மையில் தன் முழு நிறைவையும் எய்திய ஸ்திரீயின் இனிய மகத்வமுடைய தெளிந்த முகமாயிருக்கிறது.

சங்கைக்குரிய தந்தாய், ஃபிளாரன்ஸிலுள்ள உங்களுக்கு மிகப் பிடித்தமான “மங்கள வார்த்தை” ஓவியத்தைப்போல் மாதா இப்போது இல்லை.  நங்கைப் பருவமாயிருக்கையில் அந்த ஓவியத்தைப்போல் அவர்கள் இருந்ததை நான் கண்டிருக்கிறேன்.  இப்பொழுது அவர்களின் முகம் நீண்டும் ஒடுங்கியும் இருக்கின்றது.  அவர்களின் கண்கள் சிந்தனை வசப்பட்டு பெரிதாகியுள்ளன.  சுருங்கச் சொன்னால் அது, இப்பொழுது மோட்சத்தில் மாதா எப்படியிருக்கிறார்களோ அப்படியிருக்கிறது.  ஏனென்றால் அவர்களின் வதனமும் வயதும் இரட்சகர் பிறந்த சமயம் இருந்தது போல் இப்பொழுது இருக்கின்றன.  அவர்களுடைய இளமை நித்திய இளமையாகும்.  அதற்கு மரணத்தின் அழிவு இல்லாதது மட்டுமல்ல, வயதின் தளர்தலும்கூட இல்லை.  காலத்தை சிருஷ்டித்த கர்த்தரின் தாயையும் நம் இராக்கினியையும் காலம் தீண்டவில்லை.  சேசு பாடுபட்டபோது அவர்கள் வாதைப்பட்டார்களே, அது நெடுநாளைக்கு முன்பே, சேசு போதிக்கத் தொடங்கியபோதே தொடங்கிவிட்டது என்று நான் சொல்வேன்.  அப்போது அவர்கள் மூப்படைந்ததுபோல் காணப்பட்டார்கள்.  அந்த மூப்படைதல், அழிவில்லாத அவர்களின்மேல் போடப்பட்ட போர்வை போலவே இருந்தது.

சேசு உயிர்த்தெழுந்ததை அவர்கள் கண்ட மாத்திரத் திலிருந்து அத்தகைய வாதைக்கு முன் இருந்ததுபோல் புதுப் பொலிவான உத்தம சிருஷ்டியாக அவர்கள் ஆகிவிட்டார்கள்.  அதாவது அவருடைய மிகப் புனிதமான காயங்களை மாதா முத்தமிட்டதால் காலத்தின் செயலையும், அதற்கும் அதிகமாய் துயரத்தின் விளைவையும் ரத்துச் செய்துவிட்ட ஒரு இளமையின் அவிழ்தத்தைப் பருகியதுபோல.  எட்டு நாளைக்கு முன்புகூட, உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறன்று பரிசுத்த ஆவியானவர் இறங்கியதை நான் கண்டபோது மாதா “அழகுடன், மிக்க அழகுடன் திடீரென இளமைத் தோற்றமளித்தார்கள்” என்று நான் எழுதியிருக்கிறேன்.  முன்னாலும் அதேபோல் “ஒரு நீல சம்மனசுபோல் தோன்றினார்கள்” என்று எழுதினேன்.  சம்மனசுக்கள் மூப்படைவதில்லை.  அவர்கள் நித்திய அழகோடிருக்கிறார்கள்.  ஏனென்றால் அவர்கள் கடவுளின் நித்திய இளமையையும் நித்திய நிகழ்காலத்தையும் பிரதிபலிக்கிறார்கள்.  மரியா நீல சம்மனசு. சம்மனசுக்குரிய மரியாயின் இளமை இப்பொழுது பூரணமாக்கப்படுகிறது.  ஆனால் உலகத்திற்குத் தெரியாமல் ஒரு சிறு அறையில் ஒரே ஒரு அதிதூதரின் சாட்சியுடன் அல்ல.  அவர்கள் மோட்சத்திற்குக் கொண்டு சென்ற பூரண வயதுடன், அவர்கள் நித்தியத்திற்கும் கொண்டிருக்கப் போகிற மகிமையாக்கப்பட்ட சரீரத்துடன், பரிசுத்த ஆவியானவர் திருமணக் கணையாழியால் அவர்களைள அலங்கரித்து சகலருக்கும் முன்பாக அவர்களுக்கு முடிசூட்டுவாரே அந்த நிறைவயதுடன் அது விளங்கும்.

இந்த விவரம் தேவையென்று நான் கருதியதால், என் விவரிப்பை நிறுத்தி இந்த விவரங்களை இங்கே எழுதினேன்.  இப்பொழுது மீண்டும் காட்சிக்கு வருகிறேன்.

இப்பொழுது மாமரி உண்மையாகவே கண்ணியமும் வரப்பிரசாதமும் நிறைந்த ஒரு “ஸ்திரீயாக” இருக்கிறார்கள்.  அவர்களுடைய புன்முறுவல் இனிமையும் மகத்துவமும் பெற்றுள்ளது.  எவ்வளவோ அழகுடன் மாதா விளங்குகிறார்கள்!

சூசையப்பர் உள்ளே வருகிறார்.  அவர் கிராமத்திலிருந்து வருவதாகத் தெரிகிறது.  ஏனென்றால் பட்டறையிலிருந்து வராமல் தலைவாசல் வழியாக வருகிறார்.  மாதா தலை நிமிர்ந்து புன்முறுவல் செய்கிறார்கள்.  சூசையப்பரும் சிரிக்கிறார்.  ஆனால் அது வலிந்து வரவழைக்கப்பட்டது போல், அவர் கவலையிலிருப்பதுபோல் காணப்படுகிறது.  மரியா சூசையப்பரைத் துருவி நோக்குகிறார்கள்.  பின் எழுந்து சூசையப்பரைத் துருவி நோக்குகிறார்கள்.  பின் எழுந்து சூசையப்பர் கழற்றுகிற மேல் வஸ்திரத்தை வாங்கி மடித்து ஒரு பெட்டியில் வைக்கிறார்கள்.  சூசையப்பர் மேசைப் பக்கம் அமர்கிறார்.  ஒரு முழங்கையை அதில் ஊன்றி தலையை அதில் வைத்து, மறு கையால் தன்னை மறந்தபடி தாடியைக் கோதிவிடுகிறார்.

“ஏதும் கவலையில் இருக்கிறீர்களா?  என்னால் உதவி செய்ய முடியுமா?” என்று மாதா கேட்கிறார்கள்.

“மரியா நீங்கள் எப்போதும் எனக்கு ஆறுதலாகவே இருக்கிறீர்கள்.  ஆனால் இப்பொழுது எனக்கொரு பெரிய பிரச்னை உள்ளது - அதுவும் உங்களைப் பற்றித்தான்.” 

“என்னைப் பற்றியா?  என்ன அது?” 

“ஜெப ஆலயக் கதவில் அவர்கள் ஒரு கட்டளை ஒட்டியிருக்கிறார்கள்.  பலஸ்தீன் நாட்டார் அனைவரும் ஒரு குடிக் கணக்கெடுப்பிற்குப் போக வேண்டும் என்று கட்டளையிடப் பட்டுள்ளது.  எல்லாரும் அவரவர் சொந்தப் பட்டணத்திலேயே பெயர் எழுதிக் கொடுக்க வேண்டுமாம்.  நாம் பெத்லகேமுக்குப் போக வேண்டியுள்ளது...” 

மாதா இதைக் கேட்டதும் தன் நெஞ்சில் கை வைத்தபடி “ஆ!” என்று ஆச்சரியமாய்க் கூற, அதற்கு சூசையப்பர்:

“இது ஒரு அதிர்ச்சிதான் - துயரமான அதிர்ச்சியல்லவா?” என்கிறார்.

“இல்லை.  நான் அதை நினைக்கவில்லை.  நான் வேதாகமங்களை நினைக்கிறேன்... பெஞ்சமினுடைய தாயும், யாக்கோபின் மனைவியுமான ராக்கேல் - அவள் வம்சத்தில் நட்சத்திரம் தோன்றும் - அவரே இரட்சகர்.  ராக்கேல் பெத்லகேமில் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கிறாள்.  பெத்லகேமைப்பற்றி: “நீ பெத்லகேமே, எப்பிரத்தாத், யூதாவின் கோத்திரத்தில் மிகச் சிறியவள் நீ, அரசாள்பவர் உன்னிடமிருந்து பிறப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.  தாவீதின் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட அரசர்.  அவர் அங்கு பிறப்பார்...” 

“அதற்கு சமயம் வந்துவிட்டதெனக் கருதுகிறீர்களா!... அப்படியானால் நாம் என்ன செய்வோம்!”  சூசையப்பர் கலங்கிப்போய் மாதாவை இரக்கத்தோடு பார்க்கிறார்.

அதைக் கண்டுபிடித்த மாதா புன்னகை செய்கிறார்கள்.  ஆனால் கூடுதல் தன்னைப் பார்த்தே அப்படிச் செய்கிறார்கள்.  அந்தப் புன்னகை இப்படிக் கூறுவதுபோல் உள்ளது:  “சூசையப்பர் ஒரு மனிதன் - நீதியுள்ள மனிதன்.  ஆயினும் அவர் மனிதன்தான்.  மனிதனைப்போல் அவர் பார்க்கிறார், நினைக்கிறார்.  ஓ என் ஆன்மாவே!  அவர் மேல் இரங்கு.  அவர் ஞானப் பார்வையில் பார்க்கும்படி அவரை நீ வழிநடத்து.” 

மாதாவின் கருணையுள்ளம் அவருக்குத் தைரியம் சொல்லும்படி அவர்களைத் தூண்டுகிறது.  “என் நேரம் வெகு சமீபமாயிருக்கிறது.  ஆயினும் உங்களை இக்கவலையிலிருந்து விடுவிப்பதற்காக ஆண்டவர் அதைப் பிந்த வைக்கமாட்டாரா?  அவரால் எல்லாம் கூடும்.  கவலைப்படாதிருங்கள்” என்கிறார்கள்.  சூசையப்பரின் கவனத்தை திருப்பிவிடும்படியாகவே இப்படிக் கூறுகிறார்கள்.

“ஆனால் பயணம்!... ஜனக் கூட்டத்தை எண்ணிப் பாருங்கள்.  நல்ல தங்குமிடம் நமக்குக் கிடைக்குமா? சமயத்திற்கு நம்மால் திரும்பி வந்துவிட முடியுமா?  நீங்கள்... நீங்கள் அங்கே தாய்மைப் பேறு அடைந்தால் நாம் என்ன செய்வோம்?  நமக்கு அங்கே வீடில்லையே... நமக்கு இப்போது அங்குள்ள யாரையும்  

தெரியாதே!” 

“பயப்படாதீர்கள்.  எல்லாம் சரியாக இருக்கும்.  ஈனுகிற மிருகத்திற்கு சர்வேசுரன் புகலிடம் தருகிறார்.  அவர் தன் மெசையாவுக்கு ஓர் இடம் கண்டுபிடிக்க மாட்டாரா?  நாம் அவரை நம்பியிருக்கிறோமல்லவா!  நாம் எப்போதும் அவரை நம்பியே இருக்கிறோம்.  துன்ப சோதனை எவ்வளவு கடினமாயிருக்கிறதோ அவ்வளவுக்கதிகமாய் அவரை நம்புகிறோம்.  இரு சிறு குழந்தைகளைப் போல் தந்தையாகிய அவருடைய கரங்களில் நம் கரங்களை வைத்திருக்கிறோம்.  அவரே நமக்கு வழிகாட்டி.  அவரையே முழுதும் நம்பி சார்ந்திருக்கிறோம்.  இவ்வளவு காலமும் அவர் நம்மை எப்படி அன்புடன் நடத்தி வந்துள்ளார் என்று பாருங்கள்.  ஒரு தந்தை, மிகச் சிறந்த தந்தை முதலாய் இதைவிட அதிக கரிசனையோடு அப்படிச் செய்திருக்க முடியாது.  நாம் அவருடைய பிள்ளைகளும் ஊழியருமாயிருக்கிறோம்.  அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறோம்.  ஒரு தீமையும் நமக்கு நேரிட முடியாது.  இந்தக் கட்டளையும் அவருடைய சித்தம.  செசார் மன்னன்தான் யார்?  கடவுளின் கரத்தில் ஒரு கருவி.  மனிதனை மன்னிக்க கடவுள் திருவுளங்கொண்ட போதிலிருந்தே, அவர் தமது கிறீஸ்து பெத்லகேமில் பிறக்கும்படி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.  யூதாவின் மிகச் சிறிய பட்டணமாகிய பெத்லகேம் இன்னும் தோன்றும் முன்பே அதன் மகிமை முன்னேற்பாடு செய்யப்பட்டது... வெகு தொலைவிலுள்ள பலவானான ஒரு மனிதன் எழும்பி நம்மேல் வெற்றி கொண்டான்.  அவன் இப்பொழுது தன் பிரஜைகளையெல்லாம் அறிய ஆசைப்படுகிறான் - உலகம் அமைதியாயிருக்கும் இவ்வேளையில்... பெத்லகேமின் மகிமை நிறைவுபெறவும் கடவுளின் வார்த்தை பொய்யாகாதிருக்கும் பொருட்டும் அப்படிச் செய்கிறான்.  மெசையா வேறிடத்தில் பிறப்பாரானால் அது பொய்யாகிவிடும்.  இந்த அமைதியான நேரத்தின் அழகை எண்ணிப் பார்க்கையில் நம்முடைய சிறிய கஷ்டம் எந்த அளவிற்கு?  சற்று சிந்தியுங்கள் சூசையே:  உலகத்தில் பகை இல்லாதிருக்கிற ஒரு கால கட்டம்!  அந்த “நட்சத்திரம்” உதிப்பதற்கு இதைவிட மகிழ்ச்சிகரமான நேரம் வாய்க்க முடியுமா?  தெய்வீகம் அதன் பிரகாசம்.  அதன் பலன் இரட்சண்யம்! சூசையே பயப்படாதிருங்கள்.  சாலைகள் பாதுகாப்பற்றவைகளாயிருந்தாலும் ஜனக் கூட்டங்கள் நம் பயணத்தை கடினமாக்கினாலும் சம்மனசுக்கள் நம்மை தற்காத்து காப்பாற்றுவார்கள்.  நம்மையல்ல, அவர்களுடைய அரசரை.  நமக்கு அங்கு இடம் கிடைக்காவிட்டால் அவர்களுடைய இறக்கைகள் நமக்குக் கூடாரமாயிருக்கும்.  ஒரு ஆபத்தும் நமக்கு நேரிடாது.  அப்படி நேரிட முடியாது.  கடவுள் நம்மோடு இருக்கிறார்.” 

அர்ச். சூசையப்பர் மாதா சொல்வதை மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அவர் நெற்றியின் சுருக்கம் கலைந்து கவலை நீங்கி களைப்பு நீங்கி எழுகிறார்.  புன்னகை அரும்பக் கூறுகிறார்:

“என் ஆத்துமத்தின் சூரியனே!  நீங்கள் ஆசீர்பெற்றவர்கள்.  ஏனென்றால் நீங்கள் நிரம்பியிருக்கிற வரப்பிரசாதத்தின் வழியாகவே எதையும் காண்கிறீர்கள்.  இனி நாம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.  ஏனென்றால் எவ்வளவு சீக்கிரத்தில் போக முடியுமோ அப்படிப் போக வேண்டும், அப்படியே திரும்பி வரவும் வேண்டும்.  ஏனென்றால் இங்கே... இங்கே எல்லாம் தயாராக உள்ளன...” 

“ஆம், நம் குமாரனுக்கு!  சூசையே அவ்வாறே அவர் உலகின் கண்களுக்குக் காணப்பட வேண்டும்.  இதை நினைவில் வைத்திருங்கள்.  பரம பிதா அவருடைய வருகையை மறைபொருளால் திரையிட்டிருக்கிறார்.  அந்தத் திரையை நாம் எடுத்துவிடக் கூடாது.  சேசுவே அதைச் செய்வார், காலம் வரும்போது...” 

மாதா “சேசு” என்ற பெயரை உச்சரித்தபோது அவர்களுடைய குரலும் முகமும் பார்வையும் எப்படி மிளிர்ந்தன என விவரிக்க இயலாது.  அது ஒரு பரவசம். 

காட்சி இத்துடன் முடிகிறது.


மாதா கூறுகிறார்கள்: 

நான் கூறியுள்ள வார்த்தைகளிலேயே பாடம் உள்ளது.  ஆதலால் நான் இப்பொழுது அதிகம் கூறவில்லை.

ஆயினும், மனைவிமாருடைய சிந்தனைக்கு ஒரு குறிப்பைத் தருகிறேன்.  கருணை, இரக்கம், கணவர்களுக்கு ஆறுதல் இப்படி எல்லாமாக இருப்பது அன்பு.  இவ்வன்பற்ற பெண்களுடைய தவறினால் அதிக தொகையான திருமணங்கள் முறிகின்றன.  பெண்களின் மீது சுமருகிற சரீர துன்பங்கள் ஆண்களுக்கு அவ்வளவு பாரமாக இருப்பதில்லை.  ஆனால், உழைப்பு, செய்யப்பட வேண்டிய தீர்மானங்கள், ஏற்படுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு முன்பாகவும், குடும்பத்திலும் தாங்க வேண்டிய பொறுப்புகள் ஆகிய தார்மீக கவலைகள் அனைத்தும் ஆண்கள்மீது சுமருகின்றன.  ஓ!  எத்தனை காரியங்கள் அவனுக்குப் பளுவாயிருக்கின்றன!  அவனுக்கும் எவ்வளவு ஆறுதல் தேவைப்படுகிறது!  அப்படியிருந்தும் ஒரு பெண்ணின் சுயநலம் எப்படியுள்ளதென்றால், அது அவளுடைய உபயோகமற்ற, சில சமயங்களில் நியாயமில்லாத ஆவலாதிகளை எடுத்துக் கூறி, சஞ்சலப்பட்டு களைத்து மனம் தளர்ந்த கணவனுடைய பாரத்தை அதிகரிக்கிறது.  இதெல்லாம் எதனால் - அவளுடைய சுயநலத்தினால்!  அவள் நேசிப்பதில்லை.  அன்பென்பது தன் புலன்களுடையவும் தேவைகளுடையவும் திருப்தி அல்ல. அன்பென்பது புலன்களையும் தேவைகளையும் தாண்டி, தான் நேசிப்பவரை திருப்தி செய்வது; அவர் எப்பொழுதும் தன் இறக்கைகளை, நம்பிக்கை, சமாதானம் என்னும் வானில் விரித்து வைத்துக் கொள்ளத் தேவையான உதவியை அளிப்பது.

இன்னொரு விஷயத்தைப் பற்றியும் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஏற்கெனவே அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.  ஆனால் அதை அழுத்திக் கூற ஆசிக்கிறேன்:  கடவுளிடம் உறுதியான நம்பிக்கை கொள்ளுங்கள்.  நம்பிக்கையுறுதிதான் தேவ சம்பந்தமான புண்ணியங்களின் சுருக்கம்.  நம்பிக்கையுறுதி உள்ளவன் விசுவாசத்தைக் கொண்டிருக்கிறான்.  நம்பிக்கையுறுதி யடையவன் நம்புகிறான்.  நம்பிக்கையுறுதியுடையவன் நேசிக்கிறான்.  நாம் நேசிக்கும்போது, நமக்கு நம்பிக்கையுறுதியுடைய ஒருவரை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.  மற்றப்படி அப்படிச் செய்ய மாட்டோம்.  சர்வேசுரன் நம் நம்பிக்கையுறுதிக்குப் பாத்திரமாயிருக்கிறார்.  தவறிப் போகக் கூடிய பரிதாபத்துக்குரிய மனிதர்களிடம் நாம் நம்பிக்கையுறுதி கொண்டால், ஒருபோதும் தவறிப் போகக் கூடாதவராகிய சர்வேசுரனிடம் நம்பிக்கையுறுதி ஏன் கொள்ளக் கூடாது?

நம்பிக்கையுறுதி தாழ்ச்சியுமாகும்.  “நானே அதைச் செய்வேன்.  மற்றவனை நான் நம்பவில்லை. ஏனென்றால் அவன் ஏலாத மனிதன், பொய்யன், ஆதிக்கம் பண்ணுகிறவன்...” என்று அகங்காரமுடையவன் சொல்கிறான்.  தாழ்ச்சியுள்ளவன் சொல்கிறான்:   “அவனை நான் நம்புகிறேன்.  ஏன் நம்பக் கூடாது?  அவனைவிட நான் தாவிளை என்று ஏன் நினைக்க வேண்டும்?” என்று.  இதைவிட அதிக சரியாக அவன் கடவுளைப் பற்றி இப்படிக் கூறுகிறேன்:   “இவ்வளவு நல்லவரை நான் ஏன் அவநம்பிக்கைப்பட வேண்டும்?  நானாகவே இதைச் செய்யக் கூடும் என்று நான் ஏன் நினைக்க வேண்டும்?” என்கிறான்.  சர்வேசுரன் தாழ்ச்சியுள்ள வர்களுக்குத் தம்மையே கொடுக்கிறார்;  அகங்காரிகளிடமிருந்து அகன்று விடுகிறார்.

நம்பிக்கையுறுதி கீழ்ப்படிதலாகவும் இருக்கிறது. கடவுளும் கீழ்ப்படிதலுள்ள மனிதனை நேசிக்கிறார்.  நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகள் என்பதையும் அவர் நம் தகப்பன் என்பதையும் ஒப்புக் கொள்ளுதலை கீழ்ப்படிதல் உள்ளடக்கியிருக்கிறது.  ஒரு மெய்யான தகப்பன் நேசியாமலிருக்க முடியாது.  சர்வேசுரனோ நமது மெய்யான தகப்பனாகவும் உத்தம தகப்பனாகவும் இருக்கிறார்.

இன்னொரு மூன்றாம் கருத்தையும் நீ கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன்.  அது எப்போதும் நம்பிக்கையுறுதியிலே அடிப்படை கொண்டிருக்கிறது.  கடவுள் அனுமதிக்காமல் யாதொன்றும் நிகழாது.  நீ வலியவனாயிருக்கிறாயா, கடவுள் அனுமதித்ததினால் நீ அவ்வாறிருக்கிறாய். நீ யாருக்கடியிலும் இருக்கிறாயா? கடவுள் அனுமதித்ததினால் நீ அவ்வாறிருக்கிறாய். ஆதலால் வலிமையுடையவனே உன் வலிமையே உன் கேட்டுக்குக் காரணமாகி விடாமலிருக்க முயற்சி எடு.  தொடக்கத்தில் அது பிறருடைய கேட்டுக்காகக் காணப்பட்ட போதிலும் அது எப்போதும் உன் கேட்டிற்காகவே இருக்கும்.  ஏனெனில் கடவுள் எதையும் அனுமதிக்கும்போது அது அளவைத் தாண்ட அனுமதிக்க மாட்டார்.  நீ அளவைத் தாண்டுவாயாகில் அவர் உன்னை அடித்து நசுக்கிவிடுவார்.  ஆகவே பிறருக்குக் கீழ்ப்பட்டிருப்பவனே, நீ உன் நிலைமையை, பரலோகத்தின் பாதுகாப்பு உன்னிடம் வரும்படி இழுக்கிற காந்தமாக ஆக்கிக் கொள்.  யாரையும் ஒருபோதும் சபிக்காதே.  கடவுளின் கவனத்திற்கு அதை விட்டுவிடு.  தன் சிருஷ்டிகளை ஆசீர்வதிப்பதும் சபிப்பதும் அனைத்திற்கும் ஆண்டவராகிய அவருக்கே உரியது.

சமாதானத்துடன் போ.