முட்கள் - நடக்க மிக சிரமமான வழி!

நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டேன் என்று என் வழிகாட்டி திருப்தியடைந்தபோது, ரோஜாச் செடிகளை வேலி யாகக் கொண்ட அந்தப் பாதையில் நான் தொடர்ந்து போகும்படி அவர் என்னை அழைத்துச் சென்றார். ஆனால் நாங்கள் அதிகத் தொலைவு செல்லச் செல்ல, ரோஜாக்கள் தென்படுவது அரிதாகிக் கொண்டே வந்தது. நீண்ட முட்கள் தலைகாட்டத் தொடங்கின. விரைவில் ரோஜாக்களே இல்லாமல் போயிற்று. வேலிகள் சூரிய வெப்பத்தால் எரிந்து போனவையாகவும், இலைகளற்றவையாகவும், முட்கள் நிறைந்தவையாகவும் ஆகிவிட்டன. புதர்களிலிருந்து காய்ந்து விழுந்திருந்த கிளைகள் அந்தச் சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன. அவை சாலையை முட்களால் நிரப்பி, அதைக் கடக்கப்பட முடியாததாக ஆக்கியிருந்தன. இப்போது நாங்கள் பாறைகள் நிறைந்த ஓர் ஒடுங்கிய பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்ந்திருந்தோம். அதன் செங்குத்தான சரிவுகள், அதற்கு அப்பால் இருப்பதை எங்களிடமிருந்து மறைத்தன. இன்னும் கீழ்நோக்கிச் சரிந்து சென்ற சாலை மேலும் மேலும் அதிக பயங்கரமானதாகவும், தடங்கள் பதிந்ததாகவும், சாக்கடை நீர் நிறைந்ததாகவும், பாறைகளும், பெரிய வழுக்குப் பாறைகளும் நீட்டிக் கொண்டிருப்பதாகவும் மாறிக் கொண்டேயிருந்தது. இப்போது என் சிறுவர்களில் யாரையும் என்னால் காண முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏமாற்றிச் சிக்க வைக்கிற இந்தச் சாலையை விட்டு விலகி, வேறு பாதைகளுக்குச் சென்றிருந்தனர்.

நான் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் எவ்வளவுக்கு நான் முன்னேறிச் சென்றேனோ, அவ்வளவுக்கு அந்தச் சாலையின் இறக்கம் அதைக் கடக்க அதிகக் கடினமானதாகவும், செங்குத்தானதாகவும் மாறியது. இதனால் நான் பல தடவைகள் கால் தடுக்கி விழுந்து, என் சுவாசம் சீராகும்வரை அப்படியே கிடந்தேன். அவ்வப்போது என் வழிகாட்டி என்னைத் தாங்கிக் கொண்டார், அல்லது எழுவதற்கு எனக்கு உதவி செய்தார். ஒவ்வொரு அடி எடுத்து வைத்த போதும், என் மூட்டுகள் பிசகி விடப் போவது போலத் தோன்றியது. முழங்காலிலிருந்து கணுக்கால் வரையுள்ள காலின் முன்பக்க எலும்பு உடைந்து விடும் என்று நான் நினைத்தேன். மூச்சிரைத்தபடி, நான் என் வழிகாட்டியிடம், “என் நல்ல நண்பரே, இந்தக் கால்களை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க என்னால் முடியாது. இதற்கு மேல் சிறிது தூரம் கூட என்னால் போக முடியாது” என்றேன்.

அவர் பதில் சொல்லவில்லை, மாறாகத் தொடர்ந்து நடந்தார். ஆகவே நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரைப் பின்பற்றினேன். இறுதியாக நான் வியர்வையில் குளித் திருப்பதையும், முற்றிலுமாகக் களைத்துப் போய்விட்டதையும் கண்ட அவர், சாலையின் ஓரத்தில் இருந்த கற்களும், முட்களும் இல்லாத ஒரு சிறு சமதளத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றார். நான் அங்கே அமர்ந்தேன், நன்றாக மூச்சை இழுத்து விட்டேன். இப்போது சற்று நன்றாக உணர்ந்தேன். என் ஓய்விடத்தில் இருந்து, நான் ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருந்த சாலை மிக செங்குத் தாகவும், கற்கள் துருத்திக் கொண்டிருப்பதாகவும், எளிதாக நகரக்கூடிய கற்கள் நிறைந்ததாகவும் தெரிந்தது. ஆனால் முன்பக்கம் தெரிந்தது எவ்வளவு அதிக மோசமானதாயிருந்தது என்றால், கடும் திகிலோடு நான் என் கண்களை மூடிக் கொண்டேன்.

“நாம் திரும்பிப் போய்விடுவோம். இதற்கு மேல் தொடர்ந்து போனால், நாம் எப்படி ஆரட்டரிக்குத் திரும்பிப் போவது? நானெல்லாம் இந்தச் சரிவில் ஏறிக்கொள்ளவே மாட்டேன்” என்று நான் அவரிடம் கெஞ்சினேன்.

“இப்போது நாம் இவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்பதால், நான் உம்மை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட வேண்டும் என்று விரும்புகிறீரா?'' என்று என் வழிகாட்டி கடுமையாகக் கேட்டார்.

இந்த மிரட்டலைக் கேட்டதும், 'உம்முடைய உதவி இல்லாமல் நான் எப்படி உயிர் பிழைத்திருக்க முடியும்?” என்று நான் புலம்பத் தொடங்கினேன்.

“அப்படியானால் என் பின்னால் வாரும்.”