அர்ச். தோமையார் வரலாறு - பேயை அடக்குகிறார்

காளி கோவிலில் பெரும் கூட்டம். தோமையார் வரவை எதிர் பார்த்திருந்தனர். அரச அரண்மனையின் முன் மேள வாத்தியங்கள் முழங்கின. பல விருதுகள் வந்திருந்தன. நடனமாடுவோர் பேய் ஆவேசம் கொண்டவர்போல் ஆடினர். அரண்மனை அதிகாரிகள், சேவகர்கள் பலர் சூழத் தோமையார் காளி பீடத்திற்குக் கொண்டு வரப்பட்டார். அரசனும் உடன் வந்தான். காளி கோவிலை அடைந்தனர். 

கூடியிருந்த மக்கள் பரபரப்புடன் பார்த்தார்கள். அப்போஸ்தலரோ அமைதியுடன் படியில் ஏறிச் சிலையண்டை சென்றார். பலியிடப் போகிறார் என்று எல்லாரும் கெக்கலி கொட்டிக் கூச்சலிட்டுப் பெரும் ஆரவாரம் செய்தனர். அவரோ சிலையைப் பார்த்து, "நான் சொல்வதைக் கேள். இந்த மக்களில் எவரையும் தொல்லைப்படுத்தக் கூடாது. இயேசுவின் பேரால் இக்கட்டளையைக் கொடுக்கிறேன்" என்றார். கூடியிருந்த மக்கள் அப்போஸ்தலர் பேசிய சத்தத்தைக் கேட்டார்களே தவிர யாருடன் என்ன பேசினார் என்பது அவர்களுக்கு மறைபொருளாயிருந்தது. ஏனெனில் அவர் எபிரேய மொழியில் பேசினார். 

பக்கத்தில் நின்ற அரசன், "ஏ! என் முன் என்ன பிதற்றுகிறாய்? உனக்கென்ன துணிவு! உடனே காளி தேவதைக்குப் பலியிடு. இல்லையேல் உனக்குக் கிடைப்பது சாவு தான்" என்று சினந்து கூறினான். சற்றேனும் கலவரப்படாத அப்போஸ்தலர், "நானும் ஒருவரை வணங்குகிறேன். நான் தொழுகிறவர் மெய்யங் கடவுள். இயேசு தேவன், நம் ஆண்டவர்". பின் சிலையை  நோக்கி, இங்கு நிற்கும் மக்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாது நீயே அழிந்துபோ'' எனக் கட்டளையிட்டார். அவர் பேசி முடியுமுன்னரே சிலையானது நெருப்பில் இட்ட மெழுகுபோல் உருகித் தரையில் வழிந்தோடியது. இந்தக் காட்சியைக் கண்ணுற்றதும் அரசனும் கிருஷ்ணனும் பெரிதும் அவமானமடைந்து அரண்மனையை நோக்கி ஓடினர். அப்போது பெருத்த அமளி உண்டாயிற்று. கூடியிருந்த மக்களுள் பெரும்பாலோர் தோமையார் மட்டில் அன்பு கொண்டனர்.

அவருடைய எதிரிகள் அப்போஸ்தலரை எப்படியாவது தொலைத்துவிட வழிதேடினர். முந்தமுந்தக் குறிகாரனிடம் போய், தங்கள் எண்ணத்தை நிறைவேற்றத் தகுந்த வழி என்ன வென்று வினவினர். அதற்கு அவன், "ஒரு நரபலி கொடுக்கவேண்டும். அதற்காக உயர்குலத்துச் சிசுவின் இரத்தம் சிலை முன் சிந்தப்பட வேண்டும்'' என்றான். இதைக் கேட்டதும் அரச அரண்மனைக் குரு தன் சொந்தக் குழந்தையையே கொன்று பலியிட்டான். இவ்வண்ணம் செய்துவிட்டு அரசனிடம் விரைந்தோடி அப்போஸ்தலரே குழந்தையைக் கொன்றார் என்று அவர் மீது பழி சாட்டினான். 

அரசன் அதிக ஆவேசம் கொண்டு, உடனே அப்போஸ்தலரைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அவர் வந்ததும், "ஏ! என்ன செய்தனை? உன் குற்றம் என்னவென்று கேட்டனையா? படுபாவி! பச்சைக் குழந்தையைப் படுகொலை செய்தாயே! பழி பாவத்திற்கு அஞ்சாத பாதகா! இந்தக் குற்றத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்றான் அரசன். தோமையாரோ அமைதியுடன், "அண்ணலே! தயவு செய்து மரித்த குழந்தை யின் பிணத்தை இங்குக் கொண்டு வரும்படி கட்டளை யிடுவீராக" என்று கேட்டார். அப்படியே குழந்தையின் பிணம் கொண்டுவரப்பட்டது. எல்லாரும் என்ன நேரிடப் போ கிறதென்று பார்க்க ஆவலோடு காத்திருந்தனர். 

அப்போஸ்தலர் மரித்த சிசுவின் அருகில் போய் நின்று அதன் கையைப் பற்றி, ''குழந்தாய்! உன்னைப் படைத்த இயேசுவின் பெயரால் எழுந்திரு. அரசன் முன் உன்னைக் கொன்றது யார் என்று கூறுவாயாக'' என்று மொழிந்தார். ஆச்சரியம்! உடனே குழந்தை உயிர் பெற்று எழுந்து அரசனைப் பார்த்தது, பின்னும் வாய் திறந்து, ''என் உயிரைப் போக்கினவர் என் தந்தையே!'' என்றது. எல்லாரும் திகைத்தார்கள். தன் குழந்தையைத் தானே கொன்று அப்போஸ்தலர் மீது அபாண்டமான பழி சுமத்தியவன் மீது மக்கள் வெறுப்புக் கொண்டனர்; அவனைப் பழிகாரனெனத் தூற்றினர்! அப்போஸ்தலரைப் போற்றினர்.

அரசனோ அச்சம் கொண்டவனாய், ''அந்த மாந்திரிகனைச் சிறையில் இடுங்கள்; அவனை என்ன செய்வதென்று முடிவு செய்கிறேன்'' என்று கூறி அவ்விடத்தைவிட்டு எழுந்து சென்றான்.