இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மூன்றாம் வெளிப்படுத்தல்

அர்ச். பிலோமினம்மாள் தன் வரலாற்றைப் பற்றி மூன்றாம் வெளிப்படுத்தலை நேப்பிள்ஸ் பட்டணத்திலுள்ள கன்னியர் மடத்துத் தாயாராயிருந்த சங். சகோதரி சேசுவின் மரிய லூயிஸாவுக்குக் கொடுத்தாள். இந்த சகோதரி அர்ச். சாமிநாதர் சபையைச் சேர்ந்த கன்னிகை. இவ்வெளிப் படுத்தல் 1833ம் ஆண்டில் நிகழ்ந்தது. இச்சகோதரி பாப்பரசர் 9-ம் பத்திநாதருக்கு மிகவும் அறிமுகமானவள். அர்ச். பிலோமினம்மாளிடம் சகோதரி மரிய லூயிஸா அதிகப் பற்றுதல் கொண்டிருந்தாள். இருவரும் கன்னிமையின் உயர் வைப் பற்றியும் அதைப் பழுதறக் காப்பாற்ற அர்ச். பிலோமினம்மாள் கையாண்ட உபாயங்களைப் பற்றியும் மன உரையாடல் நடத்துவார்கள். அதற்கு சிலுவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், சிலுவையின் கனியாகிய சேசு அதற்கு அதிகம் உதவுவார் என்றும் பேசிக் கொள் வார்கள். இதெல்லாம் வெறும் பிரமைதானோ என்று அஞ்சிய லூயிஸா, அப்படி தான் ஏமாற்றத்திற்கு உட்பட்டுவிடக் கூடாதென்று அதிகம் ஜெபிப்பாள். அவளுடைய ஆன்ம குரு அவள் அடைந்து வந்த அநேக ஞான வரங்களை தீர்க்க ஆராய்ந்து அவளை வழி நடத்தி வந்தார். இது இப்படி யிருக்க இன்னொரு வகையான வெளிப்படுத்தலையும் அவள் அர்ச். பிலோமினா வழியாகப் பெற்றாள்.

லூயிஸா சகோதரியின் அறையில் முஞ்ஞானோ பட்டணத்திலிருக்கிற அர்ச். பிலோமினம்மாளின் சுரூபத் தைப் போல் சிறியது ஒன்று இருந்தது. இந்த சுரூபம் இடைக் கிடையே, அங்குள்ள கன்னியர் அனைவரும் பார்க்கவே தன் தோற்றத்தில் மாற்றமடைந்தது. இப்படி சுரூபத்தின் முகம் பிரகாசமாய் மாறுதல்களை அடைவதை அவர்கள் புதுமை என்றே கருதினார்கள். ஆதலால் அந்த சுரூபத்தை ஒரு தனி அறையில் வைக்காமல் எல்லாரும் காணும்படி அதை ஆடம்பரமாய் கோவிலில் ஸ்தாபிக்க வேண்டும் என விரும்பினார்கள். அதன்படியே பீடத்திலேயே அதை ஸ்தாபித் தார்கள். லூயிஸா நற்கருணை உட்கொள்ளும் நாட்களில், நன்மை வாங்கியபின் நன்றியறிதல் செய்வதற்காக இந்த சுரூபத்தின் முன்னால் சென்று செபிப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் அவள் ஜெபித்துக்கொண்டிருக்கையில் அர்ச். பிலோமினம்மாள் எப்போது, குறிப்பாக வரலாற்றில் எந்தக் காலத்தில் வேதசாட்சிய முடிபெற்றாள் என்பதை அறிய அவள் உள்ளத்தில் பெரிய ஆவல் எழுந்தது. அச்சமயம் ஒரு இனிமையான குரல் அந்த சுரூபம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து எழும்பி அந்த சகோதரியை நோக்கி இவ்வாறு கூறியது:

“என் அன்பு சகோதரி! ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தான், முடிவற்று வாழ்வதற்காக நான் மரணமடைந்த நாளாகும். அன்றுதான் நான் வெற்றியடைந்து மோட்சத் திற்கு நுழைந்தேன். அங்கே என் தெய்வீக மணாளர் நித்திய மகிழ்ச்சிகளை எனக்குச் சொந்தமாக்கினார். அவைகளை மனதால், அறிவால் அறிவது இயலாது. இதற்காகவே அவர் தம் வியத்தகு ஞானத்தால் என்னை முஞ்ஞானோ பட்டணத் திற்கு ஆகஸ்ட் 10ம் நாளில் கொண்டுவரச் சித்தமானார். திட்டமிட்டப்படி நான் அங்கே ஆகஸ்ட் 5ம் தேதியல்ல, 10ம் தேதியில்தான் வந்தேன். அங்கேயும் பங்குக் குருவின் விருப்பப்படி அவர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில் அல்ல, மக்கள் என்னை வணங்குகிற பங்குக் கோவிலில்தான் வைக்கப் பட்டேன். இவ்வாறு என் வேதசாட்சியத்தின் நாள், பல அற்புதங்களின் நடுவே மெய்யாகவே உண்மையான வெற்றியின் நாளாக இருந்தது.''

குரல் நின்றது. சத்தியத்தின் நிரூபணங்களுடன் கூறப் பட்ட இந்த வார்த்தைகள் அந்த சகோதரிக்கு, ஒரு வேளை தான் ஏமாற்றப்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தை அவள் இருதயத்திலிருந்து அகற்றியது. இப்படி அர்ச். பிலோமினம் மாளின் சுரூபத்திடமிருந்து எழுந்த குரலைக் கேட்டபின் சகோதரி லூயிஸா மேலும் அதிகமாக ஜெபித்தாள். அவளை ஞான வழியில் நடத்தி வந்த குருக்கள் முஞ்ஞானோ பங்குக் குருவான சங். பிரான்ஸிஸ்கோவிற்கு கடிதம் எழுதினார்கள். சகோதரி லூயிஸா, அர்ச். பிலோமினம்மாளின் அருளிக் கங்கள் முஞ்ஞானோவுக்கு வந்த தேதி பற்றி தனக்குக் கூறப் பட்டதாகச் சொல்வது உண்மைதானா, அது நடந்தது ஆகஸ்ட் 10ம் தேதியில்தானா என்று விவரம் கேட்டார்கள். ஆம். அது முற்றிலும் உண்மைதான் என்ற சுவாமி பிரான் ஸிஸ்கோவின் பதிலைப் பெற்றதும் சகோதரி லூயிஸா மிகுந்த ஆறுதலும், திடமும் பெற்றாள். அர்ச். பிலோமினம்மாளின் வாழ்க்கை வரலாற்றை இனி அறிந்து கொள்ளலாம் என்ற திருப்தியும் அவளுடைய ஆன்ம குருக்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் கட்டளைப்படியே சகோதரி லூயிஸா மறுபடி யும் அர்ச். பிலோமினம்மாளிடம் அவளின் வாழ்க்கையை யும் வேதசாட்சியத்தையும் தனக்கு வெளிப்படுத்தும்படி மன்றாடினாள். அவள் மன்றாட்டிற்கிணங்கிய அர்ச். பிலோமி னம்மாள் முன்பு ஒலித்த அதே சுரூபத்திடமிருந்து புறப் பட்ட அதே குரலில் தன் வாழ்க்கை வரலாற்றை அந்த சகோதரிக்கு அறிவித்தாள். அது பின்வருமாறு:

“என் அன்புச் சகோதரி, நான் ஒரு கிரேக்க நாட்டு சிற்றரசனின் மகள். என் தாயும் அரச குலத்தைச் சேர்ந் தவளே. என் பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லையென் பதால் அவர்கள் எப்போதும் தங்கள் பொய்த் தேவர் களுக்குப் பலியிட்டும் ஒரு குழந்தைக்காக விண்ணப்பித்தும் வந்தார்கள். எங்களுக்கு புப்ளியுஸ் என்ற குடும்ப மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிறீஸ்தவர். என் பெற்றோர் களின் குருட்டாட்டத்தைக் கண்டு இரங்கிய அவர் பிள்ளைப் பேறில்லாத என் தாய் மீது அனுதாபம் கொண் டார். பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு, கிறீஸ்தவ விசுவாசத்தைப் பற்றி அவர்களிடம் பேசி: “உங்களுக்குக் குழந்தைப்பேறு வேண்டுமென்றால் ஞானஸ்நானம் பெற்று சேசு கிறீஸ்துவின் மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்"' என்று கூறினார். அவருடைய வார்த்தையுடன், வரப்பிரசாதமும் வந்தது. என் பெற்றோரின் இருதயங்கள் இளகின. கிறீஸ் தவர்கள் ஆக அவர்கள் சம்மதித்தார்கள். அவர்களுக்கு ஞான உபதேசம் கற்பிக்கப்பட்ட பின் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அரசவையில் இருந்த பலரும் அவர்களுடன் ஞானஸ்நானம் பெற்றனர். ஓராண்டுக்குப் பின் ஜனவரி மாதம் 10ம் தேதி நான் பிறந்தேன். என்னை லூமினா (ஒளி) என்று அழைத்தார்கள். காரணம் நான் விசுவாச ஒளியில் பிறந்ததினால். என் ஞானஸ்நானத்தில் பிலூமினா அதாவது ஒளியின் மகள் என்று அருமையோடு அழைக்கப்பட்டேன். கிறீஸ்துவின் ஒளி என் ஆன்மாவில் இருந்தது. என் பிறப்பின் காரணமாக நிறைய குடும்பங்கள் எங்கள் சிற்றரசில் கிறீஸ்தவர்களானார்கள். சுவிசேஷ போதனைகள் என் இருதயத்தில் மேலும் மேலும் ஊன்றப் பட்டு நான் வளர்ந்தேன். என் ஐந்தாவது வயதில் புது நன்மை வாங்கி சேசுவை என்னிடத்தில் பெற்றுக்கொண் டேன். அன்று கன்னியர்களின் மணவாளரான என் இரட் சகர் சேசுவுடன் ஒன்றித்திருக்க வேண்டுமென்ற ஆவல் என் இருதயத்தில் ஊன்றப்பட்டது. எனக்குப் பதினொரு வயதா போது நான் சேசுவுக்காக எப்போதும் கன்னியாயிருப்பேன் என அவருக்கு வாக்குக் கொடுத்தேன். 

என் பதின்மூன்றாம் வயது தொடங்கியது. அது வரை யிலும் எங்கள் வீட்டிலும், என் தந்தையின் இராச்சியத் திலும் குடிகொண்டிருந்த கிறீஸ்துவின் சமாதானம், கர்வ மும், வலிமையும் கொண்ட தியோக்ளேஷியன் சக்கர வர்த்தியால் கலைந்தது. அவன் எங்களுக்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தான். என் தந்தை தன்னுடைய குறைந்த பலத்தை உணர்ந்து, சக்கரவர்த்தியுடன் சமாதான உடன் படிக்கை செய்து கொள்வதற்காக, உரோமை நகருக்குச் செல்லத் தீர்மானித்தார். என் மீது என் தந்தை எவ்வளவு கனிந்த அன்பு கொண்டிருந்தாரென்றால் என்னைக் காணா மல் ஒரு மணி நேரம் அவரால் இருக்க முடியாது. ஆதலால் நானும் இப்பயணத்தில் அவருடன் சென்றேன். என் தாயும் வீட்டில் தனியே இருப்பதைவிட எங்களுடன் சேர்ந்து கொண்டாள். உரோமையில் வந்து சேர்ந்ததும் என் தந்தை அந்தக் கொடுங்கோலனின் பேட்டிக்கு விண்ணப்பித்தார். அது கிடைத்ததும் என்னையும் என் தாயையும் செசார் களின் அரண்மனைக்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். சக்கரவர்த்தியுடன் பேட்டியின்போது என் தந்தை தம் காரணங்களை எடுத்துக் கூறினார். யுத்தப் பிரகடனத்தின் அநீதியையும் சுட்டிக் காட்டினார். முழுநேரமும் சக்கர வர்த்தி என்னைப் பார்த்த பார்வையாகவே இருந்தான். அவன் என் தந்தையை இடைமறித்து இவ்வாறு கூறினான்.

இதற்குமேல் நீர் சஞ்சலப்பட வேண்டாம். நீர் அமைதி யடைந்திருக்கலாம். உம்முடைய பாதுகாப்பிற்காக உரோமைப் பேரரசின் எல்லாப் படைகளுமே தரப்படும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை : உம் மகள் பிலோமினாவை எனக்கு மனைவியாகத் தரவேண்டும் என்று கூறினான். 

என் தந்தை எதிர்பாராத இந்த மகிமையால் கவரப் பட்டு அந்த நிபந்தனையை அந்த இடத்திலேயே ஏற்றார். எங்கள் உறைவிடம் திரும்பியதும் என் பெற்றோர் தியோக் ளேஷியனுடைய விருப்பத்தை நான் ஏற்கும்படி எல்லா முயற்சிகளையும் செய்தார்கள். 

ஆனால் நானோ ஒரு விநாடி தயக்கமின்றி அதை மறுத்தேன். நான் சொன்னேன்: “ஒரு மனிதனின் அன்பிற்காக சேசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை மீற வேண்டும் என்கிறீர்களா? என் பதினோராவது வயதில் சேசுவுக்கு என்னை வாக்களித்தேன். என் கன்னிமை அவருக்குச் சொந்தமானது. அதை மாற்றமுடியாது'' என்று சொன்னேன். அப்படிப்பட்ட வாக்குறுதியைக் கொடுக்க உனக்கு வயது பற்றாது. நீ என் மகளாயிருப்பதால் நீ விரும் பியபடி நடக்க உரிமை கிடையாது என்று தம் அதிகாரத் தையெல்லாம் காட்டி என்னை அச்சுறுத்தி அரசனின் விருப் பத்தை ஏற்கும்படி வலியுறுத்தினார் என் தந்தை. ஆனால் என் தெய்வீக மணாளர் என் தீர்மானத்தில் உறுதியாயிருக்க எனக்குப் பலத்தையளித்தார். என் தாய் என்னை சீராட்டிய படி, நான் என் தந்தை மேலும் தன் மேலும் தங்கள் நாட்டின் மேலும் இரக்கம் கொள்ளும்படி கெஞ்சிக் கேட் டாள். அதற்கு நான், கடவுளே என் தந்தை என்றும் மோட்சமே என் தாய் என்றும் பதில் கூறினேன். 

விஷயமறிந்த தியோக்கிளேஷியன் என்னைத் தன் னிடம் அனுப்பக் கட்டளையிட்டான். என் தந்தை என் னிடம் வந்தார். என் தீர்மானத்தில் நான் உறுதியாயிருந் ததைக் கண்டு, அவரும், என் தாயும் என் கால்களில் விழுந்து மன்றாடினார்கள். “மகளே, உன்னைப் பெற்ற எங்கள் மேல் இரக்கம் காட்டு. நம் நாட்டின் மீதும் இராட் சியத்தின் மீதும் இரக்கம் கொள்'' என்றார்கள். அதற்கு நான் “கடவுளும் என் கன்னிமையையும் தான் முதலில், என் நாடும் இராச்சியமும் மோட்சமே'' என்று பதில் கூறினேன். என் பெற்றோருக்கு நம்பிக்கையற்று விடவே, என்னை அரசனிடம் கூட்டிச் சென்றனர். 

முதலில் தியோக்ளேஷியன் என்னை மிகப் பரிவுட னும், மதிப்புடனும் வரவேற்று, தன் கோரிக்கைக்கு இணங்கு வதாக நான் வாக்களிக்கும்படி கேட்டான். நான் அப்படிச் செய்யவில்லை. நான் முழு உறுதியுடன் இருப்பதைக் கண்ட அவன் தன் விருப்பம் நிறைவேறாது என்று உணர்ந்து என்னை அச்சுறுத்த ஆரம்பித்தான். அதிலும் என்னை அவனால் மேற்கொள்ள முடியவில்லை. அதனால் கோப வெறி கொண்டு பசாசால் ஏவப்பட்டு கர்ஜித்தபடி என்னைப் பயமுறுத்தி முழங்கினான்.

“என்னைக் காதலனாக நீ ஏற்க மறுத்தால் நான் உனக்கு கொடுங்கோலனாக மாறுவேன்'' என்றான். அதற்கு நான்,

“காதலனாக உன்னை ஏற்கமாட்டேன். கொடுங்கோலனாகக் கண்டு பயப்படவு மாட்டேன்'' என்றேன். 

சக்கரவர்த்தியின் கோபம் காணக்கூடியதாகத் தெறித் தது. அரச மாளிகையில் ஆயுதக்கிடங்கின் அடியிலுள்ள பாதாளச் சிறையில் என்னை அடைக்கக் கட்டளையிட் டான். என் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டார்கள். ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் உரொட்டியும் தண்ணீரும் தந்தார்கள். தன் கோரிக்கையைப் புதுப்பிக்க தியோக்ளே ஷியனே தினமும் சிறைக்கு வந்தான். ஆனால் என் தெய்வீக மணாளர் என்னை காப்பாற்றி வந்தார். என் சேசுவிடமும் அவரின் மிகப் பெரிய அன்னையிடமும் என்னை ஒப்புவித்து மன்றாட நான் ஒருபோதும் மறக்கவில்லை.

முப்பத்தாறாவது நாளில் மிகவும் பரிசுத்த கன்னிகை தன் கரத்தில் சேசு பாலனோடு, பரலோக ஒளி சூழ, எனக்குக் காணப்பட்டார்கள். “மகளே நீ இன்னும் மூன்றே தினங்கள் இச்சிறையில் இருப்பாய். அதன்பின் உன் சிறைவாசத்தின் 40-ம் நாளில் நீ இந்தத் துயர இடத்தை விட்டு வெளியேறுவாய்'' என்று கூறினார்கள். 

இந்த வார்த்தைகளினால் நான் மகிழ்ச்சியால் நிரம்பினேன். ஆனால் மாதா தொடர்ந்து: “நீ இச்சிறையை விட்டு வெளியேறும்போது ஒரு மகா குரூர வாதனையுள்ள போராட்டத்திற்கு என் குமாரனின் நிமித்தம் உட்படுவாய்"' என்று கூறவும், நான் நடுநடுங்கி மரண அவஸ்தைப் பட்டேன். அப்போது நம் மோட்ச இராக்கினி எனக்குத் திடம் தந்து இவ்வாறு கூறினார்கள். “என் மகளே, மற்றெல் லாரையும் விட நீ எனக்கு அதிக அருமையானவளாயிருக் கிறாய். நீ என் பெயரையும், என் குமாரனின் பெயரையும் தாங்கி இருக்கிறாய். நீ லூமினா என்று அழைக்கப்படு கிறாய். என் குமாரனே ஒளியென்றும், சூரியனென்றும், நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறார், நானோ, உதய காலை, நட்சத்திரம், சந்திரன் என்றும் அழைக்கப்படு கிறேன். இந்நேரம் உன்னைத் தாழ்த்தி வைக்கிற மனித பலவீனத்தின் நேரமாயிருக்கிறது. ஆனால் உனக்கு உதவி செய்யும் வரப்பிரசாதத்தின் திடம் வரும். மேலும் உன்னைக் காவல்புரியும் சம்மனசானவரும், அதிதூதர் அர்ச். கபிரியேல் சம்மனசானவரும் உன்னைப் பாதுகாப்பார்கள். கபிரியேல் என்ற அவருடைய பெயரின் பொருள் சர்வேசுரனுடைய வலிமை என்பது. இவரே பூமியில் எனக்கு பாதுகாப்பாளராக இருந்தார். என் எல்லாக் குமாரத்திகளிலும் எனக்கு அதிக அன்புள்ள மகளாகிய உனக்கு உதவி செய்ய அவரை நான் அனுப்புவேன். வெற்றி பெறுவாய்"' என்று கூறினார்கள். இவ்வார்த்தைகள் எனக்குத் தைரியமூட்டின. மாதாவின் காட்சி மறைந்தது. அந்தச் சிறை முழுவதும் ஒரு நறுமணம் பரவியது. அது எனக்கு ஆறுதலாயிருந்தது. 

கடைசியாக, தியோக்ளேஷியன் என் தீர்மானத்தை அவனால் மாற்றமுடியாது என்பதை உணர்ந்துகொண்டதும், என்னை வாதைப்படுத்தவும், அச்சுறுத்தவும் முடிவெடுத் தான். அவ்வகையாய் என் தெய்வீக மணாளருக்கு நான் கொடுத்திருந்த கன்னிமை வாக்குறுதியை நான் திரும்பப் பெறவேண்டுமென முயற்சித்தான். அவன் என்னைச் சிறை யிலிருந்து வெளியே கொண்டுவந்து, அவனுடைய பல ராணுவ அதிகாரிகள், அரண்மனை உத்யோகஸ்தர்கள் முன் னிலையில் இவள் சக்கரவர்த்தியாகிய என்னைத் தெரிந்து கொள்ளாமல், தன் ஜனத்தாலேயே மரணத் தீர்ப்பிடப் பட்ட ஒரு குற்றவாளியைத் தெரிந்து கொண்டதால், என் நீதி அவனைப் போலவே இவளையும் நடத்தத் தகுதியா யிருக்கிறாள் என்று கூறி நான் துகிலுரியப்பட்டு கசையடி கொடுக்கப்பட தீர்ப்பிட்டான். காவலர்கள் என் துகிலை முழுவதும் அகற்றத் தயங்கினார்கள். ஆனால் ஒரு தூணில் என்னைக் கட்டி வைத்து வலுவாக கொடூரமாய் கசை களால் அடித்தார்கள்.

என் உடலெல்லாம் காயங்களாலும், இரத்தத்தாலும் மூடப்பட்டிருந்ததை மன்னன் கண்டான். என் உயிர் ஊசலாடியது. என்னை மீண்டும் சிறையில் அடைத்து, அங்கே நான் சாகவிடப்படும்படி ஆணையிட்டான். அங்கே நான் என் மரணத்தை எதிர்பார்த்திருந்தபோது இரண்டு சம்மனசுக்கள் வந்து ஒரு மேலான பரிமளத்தை என் காயங் களில் வார்த்து என்னைக் குணப்படுத்தினார்கள். 

மறுநாள் இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சி யும், ஆச்சரியமும் அடைந்தான். நல்ல சுகத்துடனும், அழகுடனும் இருந்த என்னை, நான் இப்படி அனுகூலம் பெற்றது ஜூப்பிட்டர் என்ற தன் தெய்வத்தினால்தான் என்றும், அதன் காரணம் நான் உரோமைச் சக்கரவர்த்தியின் மனைவி ஆகவேண்டும் என்பதுதான் என்றும் கூறி பசாசால் நிரப்பப்பட்டவனாய் எனக்கு மிக்க மதிப்பளித்து அசுத்த பாசத்தினால் என்னை சீராட்டி, என்னை அழிவிற்கு இழுக்கப் பார்த்தான். நான் அசையவில்லை. என் தெய்வீக மணாளருக்கு நான் வாக்களித்துக் கொடுத்திருந்த இரத்தின மான கன்னிமை என்னும் லீலி மலரைப் பறிக்க பசாசு செய் யும் உபாயமே இது என நிச்சயித்திருந்தேன். இப்போராட் டத்தில் என்னை வலுப்படுத்தியவர் பரிசுத்த ஆவியே.

தியோக்ளேஷியனிடம் விசுவாசத்தின் சார்பாக நான் கொடுத்த காரணங்களுக்கு அவனால் பதில் சொல்லக்கூட வில்லை. அவற்றை அவன் ஏளனம் செய்துவிட்டு சிங்கம் போல் உறுமிக்கொண்டே என் கழுத்தில் ஒரு நங்கூரத்தைக் கட்டி தைபர் நதியில் உடனே எறியப்படும்படி கட்டளை யிட்டான். அவ்வாறு நானும், என் ஞாபகமும் அற்றுப் போக எண்ணினான். ஆனால் சேசு சர்வ வல்லமையினால் அக்கொடுங்கோலனும் விக்கிரக ஆராதனைக்காரர்களும் குழப்பமடையும்படி இரண்டு மிக அழகிய சம்மனசுக்களை அனுப்பினார். அவர்கள் என் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்துவிடவே நங்கூரம் தைபர் நதியின் ஆழத் திற்குள் விழுந்து சேற்றால் மூடப்பட்டது. நான் சம்மனசுக் களின் இறக்கைகளால் ஏந்தப்பட்டு கரை சேர்க்கப் பட்டேன். ஒரு துளித் தண்ணீர் கூட என்மேல் படவில்லை. ஜனங்கள் நான் மகிமையுடன் ஈரம் படாமல் பாதுகாக்கப் பட்டதைப் பார்த்து அச்செய்தியை எங்கும் பரப்பினார்கள். அதனால் அநேகர் ¼சுசு கிறீஸ்துவின் வேதத்திற்கு மனந் திரும்பினார்கள்.

கொடுங்கோலன் கோபமும், மனச்சோர்வும் அடைந்து இதெல்லாம் மாந்திரீகம் என்று கூச்சலிட்டான். பாரவோனை விட கடின சித்தனானான். மேலும் நான் உரோமை முழுவதும் இழுத்துச் செல்லப்பட்டு அம்புகளால் எய்யப்படக் கட்டளையிட்டான். நான் அம்புகளால் துளைக்கப்பட்டதை அவன் பார்த்தான். நான் மரணத்தறுவாயிலிருந்தேன். அவன் என்னை மறுபடியும் குரூரமாய் சிறையில் தள்ளி அங்கே கைவிடப்பட்டவளாய் எவ்வித ஆறுதலின்றி நான் சாகும்படி விட்டான். 

மறுநாள் காலையில் நான் இறந்திருப்பேன் என எதிர் பார்த்த அவன் மலர்ச்சியுடன் நான் நலமே இருந்து கடவு ளின் புகழ்ச்சிக்காக சங்கீதங்களைப் பாடியதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். இரவில் சர்வ வல்லபர் எனக்கு இனிய உறக்கத்தை தந்து, என் சரீரத்தையும் தம் சம்மனசை அனுப்பி ஒரு நறுமண தைலத்தால் பூசச் செய்தார். இதைக் கண்ட மன்னன் குரூர முனிவு கொண்டு நான் இறக்கும் வரையிலும் அம்புகளால் எய்யும்படி கட்டளையிட்டான். வில்லாளர்கள் வில்களை இழுத்து வளைத்தாலும் அம்புகள் புறப்பட மறுத்தன. அரசனோ நான் மாயவித்தைக்காரி என்று என்னைச் சபித்தான். மாந்திரீகம் நெருப்புக்கு முன் வலிமையை இழக்கும் என்று கருதி, அந்த அம்புகளை ஒரு சூளையில் பழுக்கக் காய்ச்சி அதன்பின் எய்யும்படி ஏவி னான். இந்த வாதையிலிருந்தும் என் மணாளர் என்னைக் காப்பாற்றினார். நான் பரவசமடைந்தேன். என்னை நோக்கி எய்யப்பட்ட அந்த அம்புகள் நடுவழயில் திரும்பி அவை களை எய்தவர்களையே சென்று தாக்கியதால் ஆறுபேர் மாண்டார்கள். இப்புதிய புதுமையைக் கண்டு மேலும் பலர் மனந்திரும்பினார்கள். ஜனங்கள் நம் வேதத்துக்கு சார்புடை யவர்களாயினர். இன்னும் மோசமான விளைவுகள் வரக் கூடும் என்று அஞ்சிய தியோக்ளேஷியன் அதற்குமேல் வேறு எதிலும் ஈடுபடாமல் என் மரணத்தை விரைவுபடுத்தும்படி ஒரு ஈட்டியால் என் கழுத்தைக் குத்தி ஊடுருவக் கட்டளை கொடுத்தான். என் ஆன்மா மகிமையுடனும், ஜெயசீலத் துடனும் என் மோட்ச மாணாளனிடம் பறந்து சென்றது. அங்கே, அவர், எனக்கு கன்னிமையின் மகுடத்தையும், வேதசாட்சியின் குருத்தையும் தந்து மோட்சவாசிகளுள் சிறந்த இடத்தை எனக்கு அளித்தார். 

இது நடந்தது ஆகஸ்ட் 10ம் நாள். அன்று வெள்ளிக் கிழமை. நேரம் பிற்பகல் மணி மூன்று - என் தெய்வீக மணவாளர் மரணமடைந்த அதே நேரம். இதனால் உன்னத ரான தேவன் என்னை முஞ்ஞானோவுக்கு அதே நாளில் இத்தனை மோட்ச உதவிகளுடன் அதன் மகிமை தனிச் சிறப்புடையதாயிருக்கும்படி கொண்டு வந்தார்.

- இவ்வாறு அர்ச். பிலோமினம்மாள் தன் சரிதையை வெளியிட்டாள்.