அர்ச். தோமையார் வரலாறு - பெரும் மரக்கட்டை

மயிலாப்பூர், கடற்கரை ஓரமுள்ள பட்டணம் என்றும், அங்கு பல வர்த்தகக் கப்பல்கள் வந்து போவது வழக்கமென்றும் ஏற்கனவே கூறியுள்ளோம். அங்ஙனம் இருக்க ஒரு நாள் கரையோரம் ஒரு பிரமாண்டமான மரக்கட்டை வந்து ஒதுங்கியது. அதனால் கப்பல்கள் வழக்கமாக வரும் கரையண்டை வருவது முடியாது போயிற்று. 

இதை அறிந்த அரசன் அக்கட்டையை உடனே கரைமேல் கொண்டு வரக் கட்டளையிட்டான். அதற்காகப் பெரிய யானை ஒன்றும் பல கூலி ஆட்களும் கொண்டு வரப்பட்டார்கள். அரசனும் அங்கு வந்திருந்தான். ஆட்கள் தண்ணீரில் இறங்கி யானையின் உதவியைக் கொண்டு தங்களால் ஆன முயற்சியை எல்லாம் செய்து முயன்றும், மரம் சிறிதும் அசைவதாகத் தோன்றவில்லை. 

இதைக் கண்ட அரசன் தங்கள் தெய்வத்தால் சாதிக்கக்கூடுமென்று கருதி, பூசாரிகள் பலரைக் கொண்டுவந்து தேவ ஆராதனைகள் நடத்தக் கட்டளையிட்டான். அவர்களும் தீபதூபம் காட்டி நைவேத்தியங்கள் செய்து, தேவர்களை இறைஞ்சினார்கள். ஒன்றும் பலிக்கவில்லை 

அதற்குப்பின் மந்திரவாதிகளை அழைப்பித்து, அவர்கள் தங்கள் மந்திர பலத்தால் காரியத்தைச் சாதித்துத் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டும்படிக் கற்பித்தான். அவர்கள் வந்து ஏராளமான ஆடு கோழிகளைப் பலியிட்டும் கை கூடவில்லை. 

இதைப் பார்த்த அரசன் மிகவும் சினந்து, "நீங்கள் எல்லோரும் பயனற்ற பேதைகள்; ஒன்றும் செய்ய இயலாத வீணர்கள்; பெரும் பொய்யர்கள்: உங்கள் மந்திரங்களும் பொய். உங்களால் முடியாததை நான் முடிக்கிறேன் பாருங்கள்" என்று சபதம் கூறி, 300 யானைகளையும் ஆயிரக்கணக்கான படை வீரர்களையும் கொண்டு வந்தான். யானைகளெல்லாம் மரத்தை முன்னின்று இழுக்க, மனிதர் பின்னின்று தள்ள ஒரு நிமிடத்தில் கரையேறி விடும் என்று அரசனும் அங்குக் கூடியிருந்த திரளான மக்களும் எண்ணினர். 

ஆனால் யானைகளும் பிறரும் கடும் முயற்சி செய்தும் கட்டையானது கடுகளவும் நகரவில்லை. இதைக்கண்ட அரசன் ஏமாற்றமடைந்து, வெட்கி, இன்னது செய்வதென்று தெரியாமல் ஏக்கங் கொண்டிருந்தான்.

அச்சமயம் தோமையார் அங்கு சென்றார். நடந்தவற்றைக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டபின் மன்னனாகிய மஹாதேவனை அணுகி, "அரசே! நான் ஒரு கோவில் கட்டவேண்டியிருக்கிறது. அதற்கு மரம் தேவையானபடியால் கடற்கரையில் ஒதுங்கியுள்ள மரத்தை எனக்குக் கொடுத்தருள்வீராக. நானே அதைக் கரை சேர்த்து எடுத்துக் கொள்ளுகிறேன்" என்று வேண்டினார். 

இங்கிருக்கின்ற யானைகளையும் ஆட்களையும் விட நீ அதிக பலசாலியென்று நினைக்கின்றாயா? அவர்களால் முடியாததை உன்னால் செய்ய முடியுமானால் வேண்டுகோளின்படிச் செய்து கொள்ளுவதில் எனக்குத் தடையில்லை" என்று பரிகாசச் சிரிப்புடன் பகன்றான் அரசன். 

இதைக் கேட்டதும் தோமையார், "நானோ வயதானவன்; வலிமையற்றவன். ஆயினும் நான் வணங்கும் தேவன் வல்லபமுள்ளவர். அவருடைய வல்லமையை இப்போது காண்பீர்'' என்று உரைத்துத் தமது இடுப்பிலிருந்த கச்சையை அவிழ்த்து, அங்கு நின்ற கூலியாட்களில் ஒருவனிடம் கொடுத்து, ஒரு நுனியால் மரத்தைக் கட்டி மறு நுனியைக் கையிற் பிடித்து இழுக்கும்படிக் கூறினார். 

அவன் மரத்தைக் கட்டினவுடன் அப்போஸ்தலர் வானத்தை நோக்கி ஆண்டவரை வேண்டிய பின், கட்டையின் மேல் சிலுவை அடையாளம் வரைந்து, “இப்போது இழுப்பாயாக" என்றார். அவன் அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, நம்பிக்கையுடன் கச்சையைப் பிடித்து இழுத்தான். அனைவரும் திடுக்குற்று வியக்கும்படிச் சிறிதும் தடங்கலின் றி அக்கட்டை கரை வந்து சேர்ந்தது.

மேலும் அவன் அதைத் தோமையார் கோவில் கட்டக் குறித்திருந்த இடத்திற்கே இழுத்துக் கொண்டுபோய் போட்டான்.

இதைக் கண்கூடாகப் பார்த்த அரசனோ பிரமிப்படைந்து பேராச்சரியத்தால் மலைத்துப் போனான். பூசாரிகளையும் மந்திரவாதிகளையும் பார்த்து, ''நீங்கள் மெய்யாகவே பொய்யர்கள், வீணர்கள்'' என்று சினந்து கூறி விட்டு, அப்போஸ்தலரை அணுகி அவரை வணங்கி, "ஓ! அருளுடையாரே! நீரே வல்லமையுள்ளவர். உமது விருப்பப்படி கோவில் கட்டிக்கொள்ளலாம். அதற்கு வேண்டிய பொருள் உதவியும் அளிப்பேன்'' என்று அவருக்குப் பணிவுடன் வாக்களித்தான்.

பின்னர் அப்போஸ்தலர் சீத்தாராமன் வீட்டிற்குப் போயினார். பெருந்திரள் அவரைப் பின் சென்றது. தமது அதிமுக்கிய வேலையாகிய போதனையைத் தொடர்ந்து நடத்தி வருகையில், மலையாளத்தில் சாந்திப்புஸ் மறை ஆயர் இறந்துபோனார் என்னும் துக்க செய்தி எட்டியது. தோமையார் அதிக கவலைக்குள்ளாயினார். ஆயினும், உடனே பீட்டர் ராபானை வரவழைத்து, அவருக்கு அபிஷேகம் பண்ணி அவரை ஆயராக நியமித்து மலையாளத்துக்கு அனுப்பினார்.