இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் ஆத்துமத்தைக் கடவுளோடு சேர்த்துக் கட்டுகிற ஒரு புனித பந்தனமாக இருக்கிறது!

படைக்கப்படாத நேசமாகிய பரிசுத்த ஆவியானவர் பிதாவையும் நித்திய வார்த்தையானவரையும் ஒன்றிக்கிற அழிக்க முடியாத பந்தனமாக இருப்பது போலவே, அவர் ஆத்துமத்தையும் கடவுளோடு இணைப்பவராக இருக்கிறார். ""சிநேகம் நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு புண்ணியமாகும்'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். இதனாலேயே அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் மிகுந்த மகிழ்ச்சியோடு: ""ஓ நேசமே, கடவுளையே கட்ட வல்லதாக இருக்ற உன் பந்தனம் எவ்வளவு பலமானது!'' என்று அதிசயிக்கிறார். உலக பந்தனங்கள் மரணத்தின் பந்தனங்களாக இருக்கின்றன. ஆனால் கடவுளின் பந்தனங்களோ வாழ்வு மற்றும் இரட்சணியத்தின் பந்தனங்களாக இருக்கின்றன. ""அதன் விலங்குகள் குணப்படுத்தும் கட்டுகளாம்'' (சீராக்.6:31). ஏனெனில் கடவுளின் கட்டுக்கள், அன்பைக் கொண்டு, நம் உண்மையான, ஒரே வாழ்வாகிய கடவுளோடு நம்மைப் பிணைக்கின்றன.

சேசுநாதரின் வருகைக்கு முன்பு, மனிதர்கள் கடவுளிடமிருந்து விலகிச் சென்றார்கள். உலகத்தோடு பற்றுக் கொண்டவர்களாக, தங்கள் சிருஷ்டிகரோடு இணைந்திருக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; ஆனால் ""மனிதரைப் பாசக் கயிறுகளால் கட்டுவது போல், நாம் அவர்களை சிநேக வடத்தால் இழுத்தோம்'' (ஓசே.11:3) என்று ஓசே தீர்க்கதரிசி முன்னுரைத்தது போல, நம் நேச ஆண்டவர் அன்பின் கட்டுக்களால் நம்மைத் தம்மிடம் இழுத்திருக்கிறார். இந்தக் கட்டுகள் அவருடைய நன்மைகள், அவரது ஒளிகள், தம்மை நேசிக்க அவர் விடுக்கும் அழைப்புகள் மற்றும் பரலோகத்தைப் பற்றிய அவரது வாக்குறுதிகள் ஆகியவை ஆகும்; ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவை சிலுவைப் பலியிலும், பீடத்தின் தேவத்திரவிய அனுமானத்திலும், இறுதியாக, நம் மீது தமது பரிசுத்த ஆவியானவரை அனுப்பியதிலும் அவர் நம் மீது பொழிந்துள்ள கொடைகளாக இருக்கின்றன.

என் பிரிய சேசுவே, நான் உம்மை நேசிப்பதை எனக்குக் கடமையாக்க, நீர் உண்மையில் அளவுக்கு அதிகமாகவே செய்து விட்டீர். மிக அதிகமான விலை கொடுத்து என் அன்பை நீர் வாங்கியிருக்கிறீர். ஆகவே, நீர் எனக்காக உம் இரத்தத்தைச் சிந்தி, உம் உயிரைக் கையளித்த பிறகும் நான் உம்மைக் கொஞ்சமாக மட்டுமே நேசிப்பேன் என்றால், அல்லது என் இருதயத்தை உமக்கும் சிருஷ்டிகளுக்கும் பங்கிட்டுத் தருவேன் என்றால், நான் மிகவும் நன்றிகெட்டவனாகவே இருப்பேன். என் பாசங்கள் முழுவதையும் உமக்குத் தரும்படியாக, மற்ற எல்லாற்றிலிருந்தும் என்னைப் பிரித்துக் கொள்ள நான் ஆசிக்கிறேன். ஆயினும் இந்த ஆசையைத் தனியாக நிறைவேற்ற இயலாதபடி நான் மிகவும் பலவீனனாக இருக்கிறேன். இந்த ஆசையை என்னுள் தூண்டிய நீரே இதை நிறைவேற்றத் தேவையான பலத்தையும் எனக்குத் தந்தருளும்.ணூணூ

"கைதியாய்க் கிடந்த சியோன் புத்திரியே, உன் கழுத்துச் சங்கிலியை அறுத்துவிடு'' என்று இசையாஸ் தீர்க்கதரிசி கூறுகிறார் (52:2). ஓ என் ஆத்துமமே, பரலோகத்திற்காகப் படைக்கப்பட்ட என் ஆத்துமமே, உன் கழுத்திலிருந்து இவ்வுலகின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு, அன்பின் கட்டுக்களைக் கொண்டு கடவுளோடு உன்னைப் பிணைத்துக் கொள். ""உத்தமதனத்தின் பந்தனமாகிய தேவசிநேகத்தைக் கொண்டிருங்கள்'' (கொலோ.3:14). நேசம் தன்னோடு மற்ற எல்லாப் புண்ணியங்களையும் ஒன்றிணைத்து, ஆத்துமத்தை உத்தமமாக்குகிற பந்தனமாகும். ""நேசி, அதன்பின் உனக்குப் பிரியமானதைச் செய்'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். ஆம், கடவுளை நேசி, அதன்பின் உனக்குப் பிரியமானதைச் செய்இ ஏனெனில் கடவுளை நேசிப்பவன் தனது நேசரை நோகச் செய்யும் எதையும் கவனமாகத் தவிர்க்கிறான், எல்லாக் காரியங்களிலும் அவரை மகிழ்விக்கத் தேடுகிறான்.

ஓ என் சேசுவே, நான் எப்போதும் உம் மீதுள்ள ஆசையால் ஏங்கித் தவிக்கவும், உமது அன்பில் கரைந்து போகவும் என் எளிய இருதயத்தை உமது அன்பின் இனிய அம்பினால் ஊடுருவக் குத்தியருளும். நான் எப்போதும் உம்மை மட்டுமே தேடுவேனாக, உம்மை மட்டுமே ஆசிப்பேனாக, உம்மை மட்டுமே கண்டடைவேனாக! ஓ சேசுவே, நான் உம்மை மட்டுமே ஆசிக்கிறேன். வாழ்வின் போதும், குறிப்பாக என் மரண நேரத்திலும், ஆண்டவரே, உம்மை மட்டுமே நான் நேசிக்கிறேன் என்று எபபோதும் நான் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு அருள்வீராக. ஓ மரியாயே, என் தாயாரே, இன்று முதல் கடவுளைத் தவிர வேறு ஒன்றையும் நான் ஒருபோதும் ஆசிக்காதபடி எனக்காக ஜெபியுங்கள்.