இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே!

விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்ற மூன்று புண்ணியங்களும் தேவ சம்பந்தமான புண்ணியங்கள் (Theological Virtues) என்று சொல்லப் படுகின்றன. இம்மூன்று புண்ணியங்களும் நமது ஆத்தும இரட்சணியத்திற்கு அவசியமானவை. இம் மூன்று புண்ணியங்களும் அன்னை மாமரியிடம் அபரிமிதமாய்க் காணப்பட்டன. இவற்றுள் முதற் புண்ணியமான “விசுவாசம்” அவர்களிடம் சிறந்து விளங்கியதை நமக்கு எடுத்துக் கூறவே திருச்சபை அவர்களை “விசுவாசியா யிருக்கிற கன்னிகையே” என்று அழைக்கிறது.

நாம் ஒரு காரியத்தைக் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், புத்தியால் முதலாய் கண்டுபிடிக்க முடியாதிருந்த போதிலும், நம்பிக்கைக்குரிய வேறொருவன் சொன்னதினிமித்தம், அந்தக் காரியம் உண்மை என்ற அங்கீகரித்துக் கொள்வதுதான் விசுவாசமாகும். விசுவாசம் மனித விசுவாசம் (Human faith), தேவ விசுவாசம் (Divine Faith) என இருவகைப்படும். நீதிமான்களான மனிதர் நம்மிடம் சொல்லும் விஷயங்களை நம் தினசரி வாழ்வில் நம்பி வருகிறோம். இதுவே மனித விசுவாசமெனப்படும். மற்றவர்கள் சொல்லும் யாவற்றிலும் நமக்கு நம்பிக்கையில்லையாயின், நாம் இவ்வுலகில் ஜீவிப்பதே பெரும் கஷ்டமாகிவிடும். ஏவுதலும், ஒத்தாசையும் கொடுக்கிற தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு, சர்வேசுரன் அறிவித் ததினிமித்தம், அவர் அறிவித்த சகல சத்தியங்களையும் மெய்யென்று முழுமனதுடன் ஒத்துக் கொள்ளுகிறதே தேவ விசுவாசமாகும்.

நமது கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை யின்படி நமது இரட்சணியத்திற்கு ஆரம்பமும், அஸ்திவாரமும் இத்தேவ விசுவாசமே (Conc. Trid. Sess. VI, Chap. 8). நமது திவ்ய வேதம் முழுவதும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. பரிசுத்த திரித்துவம், இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனின் மனிதாவதாரம், மனித இரட்சணியம், பரிசுத்த திவ்விய நற்கருணையில் நமதாண்டவரின் பிரசன்னம், மோட்சம், நரகம், தேவ பராமரிப்பு முதலான சத்தியங்கள் யாவையும் நம்புவதற்கு விசுவாசம் அவசியம். விசுவாசமில்லையேல் நமது ஞான ஜீவியம் அழிவுறும்.

நமது பரிசுத்த அன்னையிடம் இப்புண்ணியம் சிறந்து விளங்கிற்று; ஏனெனில் அர்ச். இரேனேயுஸ் சொல்லுவது போல, “நமது ஆதித் தாயாகிய ஏவாளின் அவிசுவாசத்தினால் ஏற்பட்ட பெருந்தோஷம் மாமரியின் விசுவாசத்தினால் நிவிர்த்திக்கப்பட்டது; ஏவாள் சர்வேசுரனுடைய கட்டளையைப் புறக்கணித்து, பசாசின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து, சாவை இவ்வுலகிற்குக் கொண்டு வந்தாள்; ஆனால் நமது மோட்ச இராக்கினியோவெனில், தேவதூதன் தனக்கு அறிவித்த மனிதாவதாரத்தின் பரம இரகசியம் தன்னிடம் நிறைவேறும் என உறுதியாய் விசுவசித்தார்கள். இதோ தேவகுமாரன் நமது இரட்சணியத்தின் பொருட்டு அவர்களிடம் மனிதனாக அவதரிக்கிறார். அவர்களுடைய விசுவாசம் மோட்சத்தின் கதவுகளை நமக்குத் திறந்து வைக்கிறது.” 

மாமரியின் ஜீவியத்தைச் சற்று நோக்கின் அவர் களிடம் விளங்கிய ஆழ்ந்த விசுவாசம் நமக்குப் புலனாகும். தேவனால் அவளுக்கு அறிவிக்கப்பட்டவை யாவற்றையும் தாழ்மையுடன் விசுவசித்தார்கள். கபிரியேல் தூதர் அவர்களுக்குச் சொன்னவற்றை மெய்யென நம்புகிறார்கள். தனது திருக்குமாரனை பெத்லகேம் மாட்டுக் கொட்டிலில் பெற்றெடுத்த போது உலக இரட்சகர் அவரே என விசுவசித்தார்கள். திவ்விய சேசு ஏரோது அரசனின் கொடுமைக்குப் பலியாகாவண்ணம் எஜிப்து தேசத்திற்கு ஓட வேண்டியிருந்த போதும், இராஜாதி இராஜன் அவரே என அவர்கள் விசுவசித் தார்கள். தமது குழந்தைப் பருவத்தில் அவர் மெளனமாயிருந்ததையும், கண்ணீர் சிந்தி அழுததையும் அவர்கள் கண்ணோக்கினார்கள்; எனினும், சகல ஞானமும், சர்வ சக்தியும் வாய்ந்த தேவன் அவர்தானென அவர்களுடைய விசுவாசம் கூறிற்று. அவர் தரித்திரத் திலும் துன்பத்திலும் தமது கைத்தாதையுடன் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்ததை அவர்கள் கண்டபோதும் அவர் பேரில் அவர்களுடைய விசுவாசம் சிறிதும் குன்றவில்லை.

இறுதியாக, நமது திவ்விய இரட்சகர் கடின வாதைகள் மத்தியில் ஒரு பெரிய கள்ளனைப் போல் இரு பாதகர்கள் நடுவே சிலுவையில் தொங்குகிறார். யூதர்கள் அவரைப் பரிகசிக்கிறார்கள்; மற்றவர்களை இரட்சித்த அவர் தம்மைத்தாமே இரட்சிக்க முடியவில்லை என்று ஏளனம் செய்கின்றனர். அவருடைய சீஷர்கள் முதலாய் அவரைவிட்டு ஓடிவிட்டனர். ஆனால் அவருடைய நேச பரிசுத்த மாதா அவரே மெய்யான தேவசுதன் என்று விசுவசித்து, அவருடைய பக்கத்தில் நின்று, தனது மனோ வியாகுலங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, பரமபிதாவுக்கு ஒப்புக் கொடுக்கிறார்கள். “நீதிமான் விசுவாசத்தில் ஜீவிக்கிறான்” என்னும் தேவ வாக்கியம் இவ்வாறு உத்தம விதமாய் அவர்களிடம் நிறைவேறிற்று.

நமது ஜீவியமும் விசுவாசத்தால் நடத்தப்படுதல் அவசியம். நமதாண்டவரால் ஏற்படுத்தப்பட்ட தவறாவரம் பெற்ற திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கும் சத்தியங்கள் யாவையும் ஏற்று, அவற்றின் பிரகாரம் நாம் நடப்போமாயின், நம்மிடம் உண்மையான விசுவாசம் உண்டென்பதற்கு அதுவே அறிகுறியாகும். நமது விசுவாசத்தை நற்கிரியைகளிலும், நன்னடத்தையிலும் காட்ட வேண்டும். இதுபற்றியே அர்ச். யாகப்பர்: “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், கிரியைகளினால் அதைக் காட்டாவிடில், அவனுக்குப் பிரயோஜனம் என்ன? அதெப்படியெனில்: ஒரு சகோதரனாவது, சகோதரியாவது வஸ்திரமில் லாமலும், அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும் போது உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: “சமா தானத்துடன் போங்கள், குளிர் காய்ந்து பசியாறுங்கள்” என்று சொல்லி சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாதிருந்தால் பிரயோஜனம் என்ன? அதுபோல் விசுவாசமும் கிரிகைகளைக் கொண்டிரா விடில், தன்னிலே செத்த விசுவாசமாயிருக்கிறது” என்று எழுதியுள்ளார் (இயா. 2:14-17).

“சிலர் தங்களுக்கு யாவும், சந்தோஷமாயும் அனுகூலமாயும் நடைபெறும்போது கடவுளைத் துதித்து, அவருடைய கட்டளையின்படி நேர்மையாய் ஜீவிப்பார் கள். ஆனால் தங்களுக்கு வியாதி, நஷ்டம், பெருந்துன்பம் முதலியன நேரிட்டால், சர்வேசுரன் தங்களைக் கைவிட்டு விட்டார் என்று வீணாக எண்ணி, அவருடைய படிப் பினைகளைச் சட்டை பண்ணாமல், அவருடைய கட்டளைகளை முற்றும் மறந்து விடுவார்கள். இது மெய்யான கிறீஸ்துவர்களுக்கு அழகல்ல. அர்ச். அவிலா தெரசம்மாள் சொல்லுவது போல, விசுவாசத்தின் குறைவே எல்லாப் பாவங்களுக்கும் மூலகாரணம். மாறாக துன்பத்தையும், இன்பத்தையும், நன்மையையும், தின்மையையும், மற்றும் எவ்வித நிகழ்ச்சிகளையும் விசுவாசக் கண்களால் நோக்கி, யாவும் பரமண்டலங்களிலேயிருக்கிற நமது நல்ல தந்தையின் திருக்கரங் களிலிருந்து வருவதாக விசுவசித்து அதின்படி ஜீவிப்பதே மெய்யான கிறீஸ்தவர்களின் இலட்சணம், தேவ விசுவாசமென்னும் புண்ணியத்தை உத்தமமாய்ப் பயிற்சி செய்த பரிசுத்த கன்னிகை தமது மன்றாட்டுக்களால் நம்முடைய விசுவாசத்தையும் அதிகரிக்கும்படி அவர்களை மன்றாடுவோமாக.” (“தேவ மாதாவின் திருநாட்கள்” -- F. ஜோசப் S.J. பக்கம் 231). 

“அர்ச். மரியாயே! தேவனால் உமக்கு அறிவிக்கப்பட்ட யாவற்றையும் நீர் விசுவசித்தீர். உமது சகல கஷ்டங்களிலும், துயரங்களிலும், தேவ பரா மரிப்பின் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்டிருந்தீர். மனுவுருவெடுத்த தேவன் வெளிப் பார்வைக்கு தேவனைப் போன்று தோன்றாவிடினும், அவரே மெய்யான கடவுளென நீர் விசுவசித்தீர். உமது ஜீவிய முழுமையுமே ஒரு விசுவாச ஜீவியமாக இருந்தது. ஞானக் காரியங்களில் குருடாயிருக்கும் எங்கள் கண்களைத் திறந்தருளும் அம்மா! நாங்கள் எப்பொழுதும் தேவ விசுவாசத்தில் வாழ்க்கை நடத்த எங்களுக்கு வேண்டிய வரப்பிரசாதத்தை அடைந்து தந்தருளும் தாயே.” 


விசுவாசியாயிருக்கிற கன்னிகையே!
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!