இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா நம் கிரியைகளின் பேறுபலன்களின் எஜமாட்டியாக ஆகிறார்கள்

30. நம்முடைய நற்கிரியைகளின் பரிகாரப் பலன்களையும் மன்றாட்டுப் பலன்களையும் மாதாவின் பரிபாலனத்திற்கு நாம் விட்டு விடுகிறோம். 

இதன்படி அவைகளை நாம் ஒப்புக் கொடுத்து விட்டபிறகு - அதை வார்த்தைப்பாட்டினால் செய்யாவிட்டாலும்கூட - இதுமுதல் நாம் செய்யக் கூடிய எந்த ஒரு நற்கிரிகைக்கும் எஜமான் நாமல்ல. ஆனல் நம் மாதா அவைகளை சில சமயம் உத்தரிக்கிற ஒரு ஆத்துமத்தின் ஆறுதலுக்காகவோ விடுதலைக்காகவோ அல்லது பரிதாபத்திற்குரிய ஒரு பாவியின் மனந்திரும்புதலுக்காகவோ உபயோகித்துக் கொள்வார்கள்.

31. மேலும் இப்பக்தியினால் நம்முடைய பேறுபலன்களையும் மாதாவின் கரங்களில் நாம் கொடுத்து விடுகிறோம். மாதா அவைகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும்படியாகவும், அவற்றை அதிகரித்து மெருகு கூட்டும் படியாகவும் அவ்வாறு செய்கிறோம். 

ஏனென்றால் தேவ இஷ்டப்பிரசாத பேறுபலனையாவது மகிமையின் பேறுபலனையாவது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள இயலாது. ஆனால் நம் ஜெபங்களுடையவும் நற்கிரியைகளுடையவும் மன்றாட்டுப் பலனையும், பரிகாரப் பலனையும் பொறுத்த வரையில், அவைகளை நாம் மாதாவிடம் கொடுக்கிறோம். 

மாதா, தன் விருப்பப்படி யாருக்கும் அவைகளைப் பகிர்ந்து கொடுத்து உதவும்படியாக அவ்வாறு கையளிக்கிறோம். இவ்வாறு நம்மை, மாதாவிடம் ஒப்புக் கொடுத்த பிறகு, நம் ஜெபத்தாலும் தானதர்மத்தாலும், ஒறுத்தல் முயற்சிகளாலும், பரித்தியாகங்களாலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஒரு ஏழை ஆத்துமத்திற்கு ஆறுதலளிக்க விரும்பினால், அதை மாதாவிடமே கேட்க வேண்டும். 

ஆயினும் மாதாவின் தீர்மானத்துக்கே உட்பட்டிருக்க வேண்டும். அவர்களின் தீர்மானம் நமக்குத் தெரியாது. ஆனால் கடவுள் தம் வரப் பிரசாதங்களையும் கொடைகளையும் பகிர்ந்தளிக்க எந்தக் கரங்களை உபயோகிக்கிறாரோ அதே கரங்களால் பரிபாலிக்கப்படுகிற நம்முடைய இச்செயல்களின் பலன்கள், கடவுளின் மிகப் பெரும் மகிமைக்காக அர்ப்பணிக்கப்படாமல் இருக்கவே முடியாது என நாம் உறுதியாயிருக்க வேண்டும்.