மரியாயின் மீது உண்மை பக்தி எதில் அடங்கியுள்ளது?

215. நம் அன்னையை மகிமைப்படுத்த விரும்பும் யாராவது என்னிடம், "மரியாயின் மீது உண்மை பக்தி எதனோடு தொடர் புள்ளதாக இருக்கிறது?" என்று கேட்டால், நான் இவ்வாறு பதில் கூறுவேன். அது நம் இராக்கினியின் வரப்பிரசாத சலுகைகளை யும், அவர்களது மகத்துவ மேன்மையையும் மதித்துப் போற்று வதிலும், நமக்கு அவர்கள் காட்டும் நன்மைத்தனத்திற்கு நன்றி தெரிவிப்பதிலும், முற்றிலும் அவர்களைச் சார்ந்திருப்பதிலும், அவர்களுடைய தாய்க்குரிய நன்மைத்தனத்தில் நம் முழுச் சார்புடைமையையும், நேசமுள்ள நம்பிக்கையையும் வைப் பதிலும் அடங்கியுள்ளது. 

216. அநேக ஆன்மாக்களை ஏமாற்றிக் கெடுக்கும்படியாக, பசாசு பயன்படுத்துகிற மாமரியின் மீதான போலி பக்திகளைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இங்கே நான் அவற்றை விளக்கிக் கூறப் போவதில்லை. மரியாயின் மீது உண்மை பக்தி நேர்மையானதாகவும், வெளிவேடமும், மூடநம்பிக்கைகளும் இல்லாததாகவும், ஞான வெதுவெதுப்போ, அதீத மன உறுத்தலோ இன்றி, நேசமுள்ள தாகவும், நிலையற்றதாகவோ, பிரமாணிக்கமற்றதாகவோ இன்றி நிலையானதாகவும், தகாத்துணிவோ, அல்லது ஊதாரித்தனமோ இன்றி பரிசுத்தமானதாகவும் இருக்க வேண்டும். 

217. தங்கள் உதடுகளிலும், வெளி நடத்தையிலும் மட்டுமே ஒரு போலியான, வெளிவேடமுள்ள பக்தியைக் கொண்டிருப்பவர் களை நம்மோடு சேர்த்துக் கொள்ளாதபடி நாம் அவர்களைத் தவிர்க்க வேண்டும்.

குற்றம் கண்டு பிடிப்பவர்கள் மற்றும் தேவையற்ற மனவுறுத்தல் உள்ளவர்கள் மத்தியிலும் நாம் இருக்கக் கூடாது. மாமரிக்குச் செலுத்தப்படும் பக்தி, அவர்களுடைய திருக்குமார னின் மகிமை யைக் குறைத்துவிடும் என்பது போல, நம் இராக்கினிக்கு வணக்கம் செலுத்த இவர்கள் பயப்படுகிறார்கள்.

ஞான வெதுவெதுப்புள்ளவர்கள் அல்லது சுய நேசம் மிக்கவர்கள் மத்தியிலும் நாம் இருக்கக் கூடாது. இவர்கள் நம் இராக்கினியின் மீது உண்மையான பக்தியையோ, அவர்களில் பிள்ளைகளுக்குரிய நம்பிக்கையோ கொண்டிருப்பதில்லை. ஏதாவது ஒரு உலக நன்மையைப் பெற்றுக் கொள்ள, அல்லது அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மட்டுமே இவர்கள் மாமரியிடம் ஜெபிக்கிறார்கள்.

நிலையற்றவர்களும், பரிசுத்த கன்னிகையின் பேரிலுள்ள தங்கள் பக்தியில் மிக அலட்சியமாயிருப்பவர்களுமான மனிதர்கள் மத்தியில் நாம் இருக்கக் கூடாது. இவர்கள் மாமரிக்கு பக்தியோடு ஊழியம் செய்யத் தொடங்கியபின், அதை இடையில் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு குறுகிய காலம் மட்டும் மாமரியின் மீதான பக்தியைக் கடைப்பிடித்த பின், சோதனை வரும்போது விழுந்து விடுகிறார்கள்.

இறுதியாக, தகாத்துணிவுள்ள பக்தி கொண்டிருப்பவர் களோடு சேர்வதை நாம் தவிர்க்க வேண்டும். இவர்கள் மரியாயின் பக்தியின் ஏதாவது சில வெளியரங்கமான பக்தி முயற்சிகளின் மேற்போர்வையின் கீழ், பாவத்தால் கறைப்பட்டுள்ள ஓர் இருதயணத்தை மறைக்கிறார்கள், மரியாயின் மீது தாங்கள் கொண்டுள்ள இத்தகைய பக்தியின் காரணமாக, தேவத்திரவிய அனுமானங்கள் இன்றி தாங்கள் சாக மாட்டார்கள் என்றும், தாங்கள் என்ன பாவங்களைக் கட்டிக் கொண்டாலும், மாமரி எப்படியும் தங்களை இரட்சித்துக் கொள்வார்கள் என்றும் கற்பனை செய்கிறார்கள். 

218. நம் இராக்கினியின் பக்த சபைகளில், குறிப்பாக திருச் செபமாலை சபையில், உறுப்பினர்களாக சேர்ந்து, நம்மைப் பரிசுத்தர்களாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அச்சபைகளின் கடமைகளைப் பிரமாணிக்கமாக அனுசரிப்பதை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. 

219. ஆனால் பரிசுத்த கன்னிகையின் மீதான சகல பக்திகளிலும் அதிக உத்தமமானதும், அதிக ஆதாயமுள்ளதுமான பக்தி, மாமரியினுடையவும், சேசுவினுடையவும் அடிமைகளாக, நம்மை முழுவதுமாக மாமரிக்கும், அவர்கள் வழியாக சேசுவுக்கும் அர்ப்பணம் செய்வதிலேயே அடங்கியுள்ளது. நம் சரீரத்தையும், ஆத்துமத்தையும், நம் ஆன்ம, இலௌகீக உடைமைகளையும், நம் நற்செயல்களின் பரிகார மதிப்பையும், பேறுபலன்களையும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான நம் உரிமையையும் மாமரிக்கு முழு அர்ப்பணம் செய்து விடுவதில் அது அடங்கியுள்ளது. சுருங்கக் கூறுவதானால், கடந்த காலத்தில் நாம் சம்பாதித்துக் கொண்ட எல்லாவற்றையும், தற்சமயம் நாம் சொந்தமாகக் கொண்டுள்ள எல்லாவற்றையும், எதிர்காலத்தில் நாம் பெற்றுக் கொள்ள இருக்கும் எல்லாவற்றையும் மாமரிக்கு அர்ப்பணித்து விடுவதில் இந்த உண்மை பக்தி அடங்கியுள்ளது.

இந்த பக்தியை விளக்கிக் கூறும் பல புத்தகங்கள் இருக் கின்றன என்பதால், மாமரியின் மீதான இந்த பக்தியை விட அதிக திடமான ஒரு பக்தியை நான் ஒருபோதும் கண்டதில்லை என்று சொல்வதோடு நான் நிறுத்திக் கொள்வேன். ஏனெனில் இந்த பக்தி சேசுக்கிறீஸ்துநாதரின் மாதிரிகையால் நம்மில் தூண்டப்படுகிறது. கடவுளுக்கு மகிமை செலுத்துவதில் இதை விட அதிகமாகப் பெரும் பங்காற்றுவதும், ஆத்துமத்திற்கு அதிக பயனுள்ளதும், நம் இரட்சணியத்தின் எதிரிகளை அதிக அச்சத்திற்கு உள்ளாக்குவது மான வேறு எந்த பக்தியையும் கூட நான் கண்டதில்லை. இறுதியாக, இதை விட அதிக வசீகரமானதும், அதிக திருப்தி யானதுமான பக்தி எதையும் நான் கண்டதில்லை. 

220. இந்த பக்தி, நல்ல முறையில் அனுசரிக்கப்பட்டால், நித்திய ஞானமானவரை நம் ஆத்துமத்திற்குள் இழுத்து வருவது மட்டு மின்றி, அது நம் ஆத்துமத்தை அவருக்கு ஏற்புடையதாகவும் ஆக்குகிறது. அவரும் நம் வாழ்வின் இறுதி வரை அதில் நிலைத் திருக்கிறார். ஏனெனில், நான் உங்களிடம் கேட்கிறேன், தேவ ஞானமாகிய இந்தத் திரவியத்தைப் பெற்றுக் கொண்டபின், சாலமோனைப் போல, நம் பிரமாணிக்கமின்மையால் அதை நாம் இழந்து போகும் நிர்ப்பாக்கியத்திற்கு உள்ளாவோம் என்றால், இந்த மாபெரும் திரவியத்தின் இரகசியங்களைத் தேடுவதிலும், அதைப் பெற்றுக்கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள் வதிலும் நமக்கு வரும் நன்மை என்ன? சாலமோன் நம்மை விட அதிக ஞானமுள்ளவராகவும், அதன் காரணமாக, அதிக வலிமையும், அதிக ஞானத் தெளிவும் உள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வழிதவறினார், சோதனையால் வெற்றிகொள்ளப் பட்டார், பாவத்திலும், மடமையிலும் விழுந்தார். இவ்வாறு அவர் தமக்குப் பின்வந்த அனைவருக்கும் ஓர் இருமடங்கு பேராச்சரியத்திற்குரிய காரியத்தை விட்டுச் சென்றார். அதாவது. இவ்வளவு ஞான வெளிச்சம் பெற்றவராக இருந்தும், அவர் காணாதிருந்தார். இவ்வளவு ஞானமுள்ளவராக இருந்தும், தம் பாவங்களில் அவர் மூடத்தனமுள்ளவராக இருந்தார். அவருக்குப் பின் வந்த ஏராளமான மக்களை ஞானத்தைத் தேடவும், அதை ஆசிக்கவும் அவருடைய முன்மாதிரிகையும், எழுத்துக்களும் தூண்டின என்றால், அவரது வீழ்ச்சி, விலை மதிக்கப்பட முடியாத தாக இருந்தாலும், எளிதாக இழக்கப்படக் கூடிய ஒன்றைப் பயனுள்ள முறையில் தேடிச் செல்லாதபடி ஏராளமான ஆத்துமங் களைத் தடுத்தும் விட்டது. 

221. ஆகவே ஒரு வகையில் சாலமோனை விட அதிக ஞானமுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டுமானால், மாமரி நமக்காக சேசுவை நம்மில் பாதுகாத்து வைக்கும்படியாக, நாம் சொந்தமாகக் கொண்டிருக்கும் சகலத்தையும், சகல பொக்கிஷங் களிலும் மேலான பொக்கிஷமாகிய சேசுநாதரையும் மாமரியின் பாதுகாப்பில் நாம் வைத்து விட வேண்டும். இந்த விலை மதிக்கப் படாத பொக்கிஷத்தை. இந்தப் பரலோக மன்னாவை நம்முள் கொண்டிருக்க முடியாத அளவுக்கு நாம் எளிதில் உடையக் கூடிய பாத்திரங்களாக இருக்கிறோம். நம் சொந்த விவேகத்திலும், பலத் திலும் நாம் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு தந்திரமும், அனுபவமும் மிக்க ஏராளமான எதிரிகளால் நாம் சூழப்பட்டிருக் கிறோம். மேலும், நம் நிலையற்ற தன்மை மற்றும் இயல்பான சிந்தனையற்ற தன்மை ஆகியவற்றின் ஏராளமான வருத்தம் தரும் அனுபவங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே நம் சொந்த ஞானத்திலும், பக்தியார்வத்திலும் நாம் நம்பிக்கை வைக்காதிருப்போம். 

222. மாமரி ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். நாம் எல்லா வற்றையும் அவர்களுடைய திருக்கரங்களில் வைத்து விடுவோம். நம்மையும், நம்மிடமுள்ள அனைத்தையும் கடவுளின் அதிமிக மகிமைக்காக எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

மாமரி சிநேகமுள்ளவர்கள். அவர்கள் தன் பிள்ளைகளாக வும், ஊழியர்களாகவும் நம்மை நேசிக்கிறார்கள். நாம் எல்லாவற் றையும் அவர்களிடம் அர்ப்பணிப்போம். இதனால் நாம் எதையும் இழக்க மாட்டோம். அவர்கள் எல்லாவற்றையும் நமக்கு ஆதாய மானவையாக மாற்றுவார்கள்.

மாமரி தாராளமுள்ளவர்கள். நாம் அவர்களுக்குத் தருவதை விட அவர்கள் நமக்கு அதிகமாகத் திருப்பித் தருகிறார்கள். எதையும் நமக்கென வைத்துக் கொள்ளாமல், எந்த ஒதுக்கீடும் இன்றி, நமக்குள்ள எல்லாவற்றையும் அவர்களிடம் நாம் தந்து விடுவோம். அவர்கள் நமக்கு நூறுமடங்காகப் பிரதிபலன் அளிப்பார்கள்.

மாமரி வல்லமையுள்ளவர்கள். மாமரியின் பாதுகாவலில் நாம் வைத்து விட்ட எதையும் உலகத்தால் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடியாது. ஆகவே அவர்களுடைய பாதுகாவலில் நம்மை ஒப்படைத்து விடுவோம். அவர்கள் நம் எதிரிகளுக்கு எதிராக நம்மைப் பாதுகாத்து, அவற்றின் மீது நாம் வெற்றி கொள்ள நமக்கு உதவுவார்கள்.

மாமரி பிரமாணிக்கமுள்ளவர்கள். நாம் அவர்களிடம் தரும் எதுவும் இழக்கப்படவோ, வீணாக்கப்படவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் மகா பிரமாணிக்கமுள்ள திவ்விய கன்னிகையாக அவர்கள் தனித்து நிற்கிறார்கள். கடவுள் தன்னிடம் ஒப்படைத்ததில் ஒரு மிகச் சிறிதளவும் கூட இழக்கப்பட ஒருபோதும் அனுமதிக்காமல், அவர்கள் அவை அனைத்தையும் பிரமாணிக்கத்தோடு பாதுகாத்து வந்தார்கள். அவ்வாறே, இன்றும் கூட தன் பாதுகாவ லிலும், வழிகாட்டுதலிலும் தங்களை வைத்து விடும் சகலரையும் அவர்கள் விழிப்பாயிருந்து கண்காணித்து, ஒரு விசேஷ அக்கறை யோடு அவர்களைப் பாதுகாக்கிறார்கள்.

ஆகவே, பிரமாணிக்கமுள்ளவர்களாகிய கன்னிமாமரி யிடம் நாம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுவோமாக. அசைவுறாத ஒரு தூணோடு, அல்லது, தன் பிடியை விடாத ஒரு நங்கூரத்தோடு, அல்லது இன்னும் அதிகமாக, அசைவுற முடியாத சீயோன் மலையோடு , நம்மைச் சேர்த்துக் கட்டிக் கொள்வது போல, மாமரியோடு நம்மைப் பிணைத்துக்கொள்வோமாக.

இவ்வாறு, நம் சுபாவத்திற்குரிய குருட்டுத்தனமும், நம் பலவீனமும், நம் நிலையற்ற தன்மையும் எப்படிப்பட்டதாக இருந் தாலும், நம் எதிரிகள் எவ்வளவு எண்ணற்றவர்களாகவும், தீயவர் களாகவும் இருந்தாலும், நாம் ஒருபோதும் தவறி விட மாட்டோம், அல்லது ஒருபோதும் வழிதவறிச் சென்று விட மாட்டோம், அல்லது கடவுளின் வரப்பிரசாதத்தையும், நித்திய ஞானமாகிய அளவற்ற திரவியத்தையும் இழந்து போகும் நிர்ப்பாக்கியத்திற்கு நாம் ஆளாகவும் மாட்டோம்.