குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை அறிக்கையிடுகிறார்கள்

ஏதாவது பயங்கரமுள்ள குற்றத்தைக் கட்டிக் கொண்டவர்களும், நீதியின் கரத்திலிருந்து தப்புவதில் வெற்றி பெற்றவர்களும் ஒருபோதும் நிம்மதியாக ஓய்வெடுப்பதில்லை என்பது குற்றங்களின் பதிவேடுகளில் காணப்படுகிற பிரபலமான உண்மையாக இருக்கிறது. தங்கள் பாவத்தின் காட்சியும், தங்களால் கொலை செய்யப்பட்ட வனின் முகமும், இரத்தமும் எப்போதும் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக இருக்கின்றன. ஒரு விசித்திரமான பயம் அவர்களை இரவும் பகலும் ஆட்கொள்கிறது, அவர்களுடைய வாழ்வுகள் ஒரு முழுமையான நரகமாக ஆகி விடுகின்றன.

இறுதியாக, இந்த பயங்கரமுள்ள சித்திரவதையை இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக, அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, நீதிக்குத் தங்களைக் கையளிக்கிறார்கள். மிகக் கடுமையான நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் நிரந்தர சிறைவாசம், அல்லது தூக்குமரத்தின் அவமானமுள்ள மரணமும் கூட, ஒரு தீய மனசாட்சியின் சித்திரவதையில் இருந்து அவர்களை விடுவிக்கிற நிவாரணமாக இருக்கிறது. இந்தப் பரிதாபத்திற்குரிய மனிதர்கள் மட்டும் விசுவாசத் தைக் கொண்டிருந்து, கிறீஸ்துநாதரின் பிரதிநிதியின் பாதங்களில் விழுந்து, தங்கள் பாவங்களை அவர் முன் கொட்டியிருப்பார்கள் என்றால், அவருடைய மன்னிப் பிலும், தங்கள் சொந்த மனஸ்தாபத்திலும் அவர்கள் விடுதலையைக் கண்டிருப்பார்கள்.

யூதாஸ் சேசுநாதரைக் காட்டிக் கொடுத்தபின் அவநம்பிக்கைப்பட்டு, நான்று கொண்டு செத்தான். தன் குருவின் பாதங்களில் போய் அவன் விழுந்திருப்பான் என்றால், அல்லது ஒரே ஒரு உத்தம மனஸ்தாப முயற்சி மட்டுமாவது அவன் செய்திருப்பான் என்றால், தனது மகா பயங்கரத்துக்குரிய, பரிதாபமான இறுதிக் கதியிலிருந்து அவன் தப்பியிருப்பான். தம் ஆண்டவரை மும்முறை மறுதலித்தவரான இராயப்பர், அவருடைய இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடினார், அதனால் அவர் பூமியின்மீது கிறீஸ்துநாதரின் பிரதிநிதியாக ஆனார். இப்போது அவர் மோட்ச இராச்சியத்தின் திறவுகோல்களைத் தம் கரங்களில் வைத்திருக்கிறார்.