இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவசிநேகம் தேற்றரவு தருகிற நீரூற்றாக இருக்கிறது!

"ரிகா குவோத் எஸ்த் ஆரிதும்.''

அன்பு உயிருள்ள நீரூற்று, நெருப்பு, சிநேகம் என்று அழைக்கப் படுகிறது. ஃபோன்ஸ் வீவுஸ், இக்னிஸ் காரித்தாஸ், நம் திவ்ய இரட்சகர் சமாரியப் பெண்ணிடம்: ""நான் கொடுக்கும் தண்ணீரில் பானம்பண்ணுகிறவனுக்கோ, என்றென்றைக்கும் தாகமுண்டாகாது'' என்றார் (அரு.4:13). தேவ அன்பு நம் தாகத்தைத் தணிக்கும் நீராக இருக்கிறது; ஏனெனில் கடவுளைத் தன் முழு இருதயத்தோடு உண்மையாகவே நேசிக்கிறவன் வேறு எதையும் தேடுவதில்லை, ஆசிப்பதுமில்லை, ஏனெனில் கடவுளில் அவன் ஒவ்வொரு நன்மையையும் கண்டடைகிறான். இதன் காரணமாக, கடவுளைச் சொந்தமாகக் கொண்டிருப்பதில் மகிழ்ந்து, அவன் அடிக்கடி அக்களிப்போடு: ""என் தேவனே! என் சர்வமுமே!'' என்கிறான். எல்லாம் வல்ல சர்வேசுரன் சிருஷ்டிகளிடமிருந்து வரும் கடந்து போகிற நீச இன்பங்களைத் தேடி, அளவற்ற நன்மைத்தனமும், முழு மகிழ்ச்சியின் ஊற்றுமாகிய தம்மை விட்டுப் பிரிந்துசெல்லும் எண்ணற்ற மனிதர்களைப் பற்றி முறையிடுகிறார்: ""ஜீவ தண்ணீரின் ஊற்றாகிய நம்மைக் கைநெகிழ்ந்தார்கள்; தண்ணீரை நிறுத்த இயலாத வெடிப்பு நிறைந்த கிணறுகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்'' (எரே.2:13). இதனிடையே, நம்மை நேசிப்பவரும், நாம் மகிழ்ச்சியாயிருப்பதைக் காண ஆசிப்பவருமான சர்வேசுரன், ""தாகமாயிருக்கிற எவனும் என்னிடம் வருவானாக'' என்று அறிவிக்கிறார் (அரு.7 :37). மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறவன், என்னிடம் வருவானாக, நான் பரிசுத்த ஆவியானவரை அவன் மீது பொழிவேன். அவர் அவனை இவ்வுலகிலும், மறுவுலகிலும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆக்குவார்.

தோமினே, தா மீக்கி ஆங்க் ஆக்குவாம்! ஆண்டவரே, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்! (அரு.4:15). ஓ சேசுவே, அந்த சமாரியப் பெண்ணோடு சேர்ந்து நானும், உமது அன்பின் இந்தத் தண்ணீரை எனக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறேன். அது பூலோகத்தை நான் மறக்கவும், அளவில்லாத சிநேகத்துக்கு முற்றும் உரியவராகிய உமக்காக மட்டுமே வாழவும் செய்து விடும். ரிகா குவோத் எஸ்த் ஆரிதாம்! என் ஆத்துமம் தரிசான நிலமாக இருக்கிறது. அது பாவக் களைகளையும், முட்களையும் மட்டுமே முளைப்பிக்கிறது. ஓ, உமது பரிசுத்த வரப்பிரசாதத்தால் அதற்கு நீர் பாய்ச்சும், அப்போது அது மரணத்தில் இவ்வுலகை விட்டுப் பிரியுமுன், உமது மகத்துவத்திற்கு உகந்த கனிகளைத் தரும்.

ஆகவே, சேசுநாதரின் விசுவாசம் கொண்டு, அவரை நேசிப்பவன் எவ்வளவு அதிக வரப்பிரசாதங்களைக் கொண்டு வளப்படுத்தப் படுவான் என்றால், அவனுடைய இருதயத்திலிருந்து பரிசுத்த புண்ணியங்களின் நீரூற்றுகள் பீறிட்டுப் புறப்படும். அவை அவனது உயிரைப் பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் உயிரளிக்கும். உண்மையில் இந்தத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவர்தான், அது, தமது பரலோக ஆரோகணத்திற்குப் பிறகு தாம் பரலோகத்திலிருந்து அனுப்புவதாக சேசுநாதர் வாக்களித்த, நிலையான நேசம்தான். ""தம்மை விசுவசிக்கிறவர்கள் அடையப் போகிற இஸ்பீரித்துசாந்துவைக் குறித்தே இதைத் திருவுளம் பற்றினார். ஏனெனில் சேசுநாதர் இன்னும் மகிமைப்படாமல் இருந்ததால், இஸ்பிரீத்துசாந்துவானவர் இன்னும் தந்தருளப் படாதிருந்தார்''  (அரு.7:39).

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீருள்ள வாய்க்கால்களைத் திறக்கும் திறவுகோல் பரிசுத்த ஜெபமே. அது, ""கேளுங்கள், கொடுக்கப்படும்'' என்ற வாக்குறுதியின் பலனாக நன்மையான காரியங்கள் அனைத்தையும் பெற்றுத் தருகிறது. நாம் பலவீனர்களாகவும், குருடர்களாகவும், நீசப் பாவிகளாகவும் இருக்கிறோம். ஆனால் ஜெபம் நமக்கு பலத்தையும், ஒளியையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். ""ஜெபம் ஒன்றே ஒன்றுதான் எனினும், அது எல்லாவற்றையும் செய்ய வல்லது'' என்று தியோடோரே கூறுகிறார். ஜெபிக்கிறவன், தான் கேட்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். கடவுள் தமது வரப்பிரசாதங்களை நமக்குத் தர ஆசிக்கிறார், ஆனால் அவற்றிற்காக நாம் ஜெபிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

ஓ, ஜீவ தண்ணீரின் ஊற்றே, ஓ இராஜரீக நன்மைத்தனமே, உமது அன்பிலிருந்து என்னைப் பிரித்த இவ்வுலகின் கெட்டுப் போன தண்ணீர்களுக்காக எவ்வளவு அடிக்கடி நான் உம்மை விட்டு விலகி ஓடியிருக்கிறேன்! ஓ, உம்மை நோகச் செய்வதை விட நான் சாவதாயிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! ஆனால் எதிர் காலத்தில் வேறு எதையுமன்றி, என் தேவனாகிய உம்மை மட்டுமே நான் தேடுவேன். எனக்கு உதவி செய்யும், எப்போதும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்கச் செய்தருளும். மரியாயே, என் நம்பிக்கையே, உங்கள் பரிசுத்த பாதுகாவலின் கீழ் என்னை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.