இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். தோமையார் வரலாறு - தேவ அன்னை படம் (பரங்கிமலை)

இப்படமானது தேவதாய் திருக்குழந்தையை ஏந்திய வண்ணம் பலகையில் வரையப்பட்டுள்ளது. புனித லூக்காஸ் சுவிசேஷகரால் எழுதப்பட்டதென்றும், புனித தோமையாரால் இங்குக் கொண்டு வரப்பட்டதென்றும் சொல்லப்படுகின்றது. பரிசுத்த கற்சிலுவை கண்டெடுக்கப் பட்ட இடத்திலேயே அதுவும் கிடந்தது. தரையில் புதைந் திருந்தமையால் அதிலுள்ள வண்ணம் சற்று மங்கினதுமன்றி, மாதாவின் முகத்தில் சிறு பொட்டு விழுந்திருந்தது.

இரண்டொரு இடத்தில் வண்ணமும் போயிருந்தது. இதையும் கோயிலின் பீடத்திலேயே பக்தியாக நிறுவினர் போர்த்துக்கீசியர். இப்படத்தின் மூலமாகக் கிறிஸ்துவர்களும் மற்றவர்களும் பல உதவிகளை அக்காலந் தொட்டு இக்காலம் வரையில் அடைந்து வருகின்றனர். பற்பல ஊர்களிலிருந்து மன்றாட்டுக்களும் கோரிக்கைகளும் எழுதிய கடிதங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. உதவி பெற்ற பக்தர்கள் பொருத்தனைகள் சாற்றுகிறார்கள். இன்னும் அப் புனிதமான படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான வேண்டுகோள் கடிதங்கள் அத்தேவ தாய் செய்யும் சலுகைக்குச் சரியான சான்றாகும்.

ஒருகால், இப்படத்தைப் புதுப்பிக்கும் பொருட்டு குருவானவர் ஓவியக்காரனிடம் அதை ஒப்புவித்தார். அவன் அதை மலையடியிலிருந்த தனது இல்லத்திற்குக் கொண்டு வந்து, மறு நாள் வேலை ஆரம்பிக்கலாமென்று ஓரிடத்தில் வைத்து விட்டான். சூரியன் உதயமானதும் படத்தைப் போய்ப் பார்க்க, ஆச்சரியம்! அது அங்கு இல்லாது போயிற்று. திகைத்துத் தடுமாறிப் பயந்து பதறி, குருவானவரைப் பார்க்க மேலே ஓடினான். 

அறையிலிருந்த குருவானவரைக் கண்டு செய்தியைச் சொல்லவே, அவரும் பதைத்துக் கவலைப்பட்டு என் ன செய்வதென்று அறியாது ஏங்கினார்; மாதாவைப் பார்த்துப் பிரார்த்தித்தார். பிறகு திருப்பலிக்கு ஆயத்தம் செய்யப் பீடத்தண்டை சென்றபோது, ஆச்சரியம்! அப்புதுமையுள்ள படம் அங்குப் பழையபடி கண்ணுக்குத் தென்பட்டது; கவலை நீங்கினது: அதிசயங் குடிகொண்டது. இச் சம்பவத்திலிருந்து புது வண்ணம் தீட்டுவது மாதாவுக்கு விருப்பமில்லையென்று யூகித்து அப்படியே விட்டுவிட்டார்.

இன்னொருகால், அப்படத்தைப் புதுப்பிக்க வேறொரு குருவானவர் துணிந்தார். முன் நடந்தவை அவருக்கும் தெரிந்திருந்தமையால், மாதாவின் சம்மதம் பெறுவதற்காக நவ நாள் கொண்டாடிக் கடைசி தினம் திருப்பலி நிறை வேற்றினார். அதற்குப்பின் ஓவியக்காரனை அழைப்பித்துக் கோவிலிலேயே வேலை ஆரம்பிக்கக் கற்பித்தார். அவனும் வண்ணம் பிசைந்துத் தூரிகையில் தொட்டுப் படத்தின் கிட்டப் போனான். ஐயோ! அவன் பார்வை மறைந்து விட்டது. ஒன்றும் செய்ய இயலாதவனாய் நின்று தவித்தான். இதைக் கண்ட குருவானவர் தமது எண்ணத்தை விட்டுவிட்டார்.

வேறொருகால், ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன், படத்திற்குப் புது வண்ணம் பூசத் துணிந்தார் மற்றொரு குருவானவர். அதற்காக செபதபமெல்லாஞ் செய்து மக்களை வேண்டிக் கொள்ளும்படிக் கற்பித்தார். பாட்டுப் பூசை செய்து முடிந்தபின் ஒவியக்காரன் தனது வேலையை ஆரம்பிக்கப் போனான். வண்ணக்குச்சியில் மைதொட்டு படத்தில் வைத்தான். அது பாதரசம்போல் பலகையில் ஒட்டாது உருண்டு கீழே வடிந்தது. இதைப் பார்த்தபின் அவர்கள் மேற்கொண்டு வேலை செய்யத் துணியவேயில்லை. இதுவரையில் அப்பழமையான படம் தொடக்கத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கின்றது. மேற்சொன்ன நிகழ்ச்சிகள் ஈண்டுள்ள மக்களுக்குள் வழங்கி வருகிற பாரம்பரியம்,