இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரண மட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயம்!

சுயாதீன சித்தமானது கடவுள் மனிதனுக்கு அளித்த விலையேறப் பெற்ற கொடைகளுள் ஒன்றாக இருக்கிறது. ஆயினும் மற்ற கொடைகளைப் போலவே, அதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட முடியும். அதன்பின் அதற்காக நாம் பயங்கரமான விளைவுகளை அனுபவிக்கிறோம். கடவுளுடைய கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சித்தங் கொள்ளுகிறாரோ, அப்படியே அவற்றைப் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்வோமாக.

முதலில் சுயாதீன சித்தமானது, காற்றாடியின் ஓர் இதழைப் போன்றதாக இருக்கிறது. காற்றினாலோ, அல்லது சிறிய உலகக் காரியங்களின் மீதான நேசத்தின் ஒரு சுவாசத்தினாலோ அது எளிதாக நகர்த்தப்படுகிறது. நம் சித்தத்தைத் திடமானதாக்குவதும், மாறாத ஒன்றோடு அதைச் சேர்த்துக் கட்டுவதும் நம் கடமையாக இருக்கிறது. ஆயினும் நம்மைச் சுற்றியும், நம்மிலும் இருக்கிற ஒவ்வொன்றும் மாற்றமடைகிறது. அப்படியானால் நிலையற்ற நம் சித்தங்களைப் பிணைத்து வைக்கக் கூடிய ஒரு மாற முடியாத கம்பத்தை நாம் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? நம் இரட்சகர் இந்த மிக முக்கியமான பாடத்தை வார்த்தையாலும், மாதிரிகையாலும் நமக்குக் கற்பித்தார். அவர் தம் மனித சித்தத்தைக் கட்டி வைத்த மாறாத நேரான தாங்குகோல் அல்லது தூண் எது? அவருடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய ஒருபோதும் மாறாத திருச்சித்தமே அது. அவருடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய நித்திய சித்தத்தோடு முழு ஐக்கியமானது, அவர் சாவதற்கு முந்தின இரவில், ஒலிவத் தோப்பில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆயினும் அது உறுதியாகவும், பிரமாணிக்கமுள்ளதாகவும் இருந்தது. இப்போது சேசுவைப் பற்றி: “அவர் சாவு வரையிலும், அதுவும் சிலுவைச் சாவு வரையிலும் கீழ்ப்படிதலுள்ளவரானார்” என்று நம்மால் சொல்ல முடிகிறது.

நமக்கோ, அர்ச்சிஷ்டதனத்தின் இரகசியம் இதே காரியத்தில் - கீழ்ப்படிதலில் அடங்கியுள்ளது. கீழ்ப்படிதல் என்பது நம் சித்தம் கடவுளின் மாறாத சித்தத்தோடு கொள்ளும் ஐக்கியம் ஆகும். அது உண்மையான சுதந்திரத்தை நமக்குத் தருகிறது. ஏனென்றால், “நீங்கள் சத்தியத்தை விசுவசித்தால், சத்தியம் உங்களை விடுவிக்கும் - பாவம் செய்கிறவர்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறார்கள்” என்று நம் இரட்சகர் கூறினார். முழுமையான கீழ்ப்படிதலில் மட்டுமே முழுமையான சுதந்திரத்தை நாம் காண முடியும். கீழ்ப்படிதல் நம் குணாதிசயத்தில் ஆண்மைத்தன்மையைக் கொண்டு வருகிறது. ஆனால் கீழ்ப்படிதலின்மையோ மனிதர்களைப் பெண்தன்மையுள்ள ஜெல்லி மீன்களாகவும், நிலையற்றவர்களாகவும், கடும் அச்சத்தினால் தள்ளாடுகிறவனைப் போல, நடுக்கமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது. கீழ்ப்படிதல் ஒரு பலமிக்க சித்தத்தோடு கொள்ளும் நெருக்கமான ஐக்கியமாக இருப்பதால், அது ஆத்துமத்தை பலமுள்ளதாகவும், தைரியமுள்ளதாகவும் ஆக்குகிறது. கடவுளின் சித்தம் பாவத்திற்கு நேர் எதிரானது என்பதால், அது கீழ்ப்படிதலைக் கொண்டு நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கிறது. கீழ்ப்படிதல் என்பது இயல்பான முறையில், சுயத்தின் மீதும், ஆசாபாசங்களின் மீதும் நாம் நடத்தும் கசப்பான போராட்டம் எனறு பொருள்படுகிறது. ஏனென்றால் இவை கடவுளின் சித்தத்திற்கு முரண்பட்ட ஆற்றல்களாக இருக்கின்றன. சில சமயங்களில் இந்தப் போராட்டத்தை நாம் உணர்கிறோம். ஒருவேளை நாம் அதை வெறுக்கிறோம். ஆனாலும், நம் ஆசாபாசங்கள் முற்றிலும் பலமுள்ளவையாக ஆகிவிடும் அளவுக்கு நாம் அவற்றை நீண்ட காலமாக வளர்த்து வந்திருக்கிறோம் என்பதும், அவை கசப்பான முறையில் நம்மை எதிர்த்துப் போராட முடியும் என்பதும்தான் அதன் காரணமாக இருக்கிறது. ஆனாலும் சுய நேசத்தின் சிறு செயல்களின் மூலம் அவை பலமுள்ளவையாக ஆக்கப்பட்டது போலவே, இப்போது அவை சுய மறுதலிப்பின் சிறு சிறு செயல்களைக் கொண்டு பலவீனப்படுத்தப்படவும், கொல்லப்படவும் முடியும். சுய மறுதலிப்பு என்பதன் பொருள், அவை ஏதாவது ஒரு ஆசைக்கு இணங்கும்படி கெஞ்சும்போது, முடியாது என்று சொல்வது ஆகும். நாவிலிருந்து - பேச்சு, உண்ணுதல் ஆகியவற்றிலிருந்து - தொடங்கு. நீ முழு மனிதன் மீதும் வெற்றி பெறுவாய்.

இங்கே பேசப்படுகிற கீழ்ப்படிதல் என்பது வெறுமனே பாவம் செய்யாதிருக்க ஆசிப்பதை விட மேலானது. கீழ்ப்படிதல் என்பது துறவற மடத்தில் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடு எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது என்று சில மனிதர்கள் நினைக்கிறார்கள். இத்தகைய ஒரு தவறான கண்ணோட்ம் அநேக ஆத்துமங்களை அழித்துள்ளது. நாம் ஒரு கணம் நின்று: “நான் இந்த உலகத்தில் இருப்பது என் சித்தத்தை நிறைவேற்றவா, அல்லது கடவுளின் சித்தத்தை நிறைவேற்றவா?” என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். இதன் பதில் தெளிவாயிருக்கும் - கடவுளின் சித்தத்தைச் செய்வதற்காகவே நாம் இங்கே இருக்கிறோம். அதன்பின், “கடவுளின் சித்தம் இன்னதென்று நான் எப்படி அறிவது?” என்று நாம் கேட்க வேண்டும். இந்தக் கேள்விக்கான பதிலும் எளியதாகவே இருக்கும் - என் நியாயமான மேலதிகாரிகள் கடவுளின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவருடைய இடத்திலிருந்து அவர்கள் எனக்குக் கட்டளையிடுகிறார்கள். கடவுளின் சித்தத்தைச் செய்ய நான் விரும்பினால், என் மேலதிகாரிகளுக்கு நான் கீழ்ப்படிய வேண்டும். எனவே, கீழ்ப்படிதல் என்பது ஒவ்வொரு கிறீஸ்தவனுக்கும் உரியது. அது ஒரு சிலருக்கென்று மட்டும் நியமிக்கப்பட்ட, கடமைக்கும் அதிகமாகச் செய்கிற காரியம் அல்ல. கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டில் அடங்கியுள்ள சுய பரித்தியாகமானது, ஒவ்வொரு கிறீஸ்தவனிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிற சுய பரித்தியாகத்திலிருந்து, வகையில் மட்டுமல்ல, அளவிலும் வேறுபடாததாக இருக்கிறது. நாம் இன்னும் நம் சொந்த வழியையே பின்செல்லும் இடத்தில், ஒரு கன்னிகாஸ்திரீ ஓராயிரம் காரியங்களில் தன் சித்தத்தை மறுதலிக்கிறாள். நாம் எழுந்திருப்பதற்கான நேரத்தை யாரும் நிர்ணயிப்பதில்லை; ஒவ்வொரு நாளும் நாம் பூசைக்குச் செல்ல வேண்டுமென்று சொல்பவர்களோ, பூசைக்கான நேரத்தை நிர்ணயிப்பவர்களோ யாருமில்லை; என்ன விதமான ஆடைகள் அணிய வேண்டும் என்பது பற்றி உறுதியான கட்டளைகளை நமக்கு இடுபவர்கள் யாருமில்லை; நம் சிறு அன்றாடக் காரியங்களில் தலையிடுபவர்கள் யாருமில்லை; என்ன வகையான உணவை நாம் உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும் என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை; எல்லாவற்றிலும் அதிக முக்கியமாக, கற்பித்தலோ, சமைப்பதோ, செவிலியாக பணி செய்வதோ, தோட்ட வேலை செய்வதோ, தேய்த்துக் கழுவுதலோ - என்ன விதமான வேலையை நாம் செய்ய வேண்டும் என்று யாரும் நமக்குச் சொல்வதில்லை. இத்தகைய ஒரு முக்கியமான காரியம், மடத்திற்குப் போகிற ஒரு சிறு பெண்ணால் கைவிடப்படுகிறது. நமக்குத் தரப்பட்ட பதவியில் எவ்வளவு நேரம் நாம் வேலை செய்ய வேண்டும், அதன்பின் எப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒரு புதிய பதவியை ஏற்று வேலை செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் யாரும் சொல்வதில்லை. ஆகவே, நான் மேலே கூறியது போல, நாம் சுதந்திரமாயிருக்கிற ஓராயிரம் காரியங்களில் ஒரு கன்னிகை தனது கீழ்ப்படிதலின் வார்த்தைப்பாட்டின் காரணமாக கட்டுண்டவளாக இருக்கிறாள். ஆயினும் நாம் கீழ்ப்படியக் கடமைப்பட்டிருக்கிறோம். இரட்சிக்கப்பட விரும்பினால், நாம் கீழ்ப்படிய வேண்டும். பத்துக் கட்டளைகளை அனுசரிப்பதன் மூலம் கடவுளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். திருச்சபைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். நம் பங்குக் குருவுக்கும், நம் பெற்றோருக்கும், உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும். மேலும் நினைவில் கொள் - கீழ்ப்படிதல் உன்னை ஒரு அடிமையாக அல்ல, மாறாக, ஒரு சுதந்திரமுள்ள மனிதனாக ஆக்குகிறது. சேசு கீழ்ப்படிந்தார். அவர் கடவுளாக இருந்தார். அளவற்ற விதமாக அவர் சூசையப்பருக்கும், மாமரிக்கும் மேலானவராக இருந்தார். ஆயினும் அவர் அவர்களுக்கு உடனடியாகவும், மகிழ்ச்சியோடும், உவப்போடும் கீழ்ப்படிந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவரைத் தாழ்த்திவிடவில்லை. இல்லை. அவருடைய கீழ்ப்படிதல் எவ்வளவு அழகாயும், எவ்வளவு அற்புதமாயும் இருந்ததென்றால், ஆங்காரமுள்ள ஓர் உலகத்தில் அவருடைய கீழ்ப்படிதல் செய்த நன்மையை விளக்கிக் கூற யாராலும் இயலாது. மாமரி தனது மகா மேன்மையில், சூசையப்பருக்கு மிகவும் மேலானவர்களாக இருந்தார்கள். ஆயினும் அவர்கள் சூசையப்பருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஒரு வார்த்தை கூட இன்றி, மிக மோசமான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (உதாரணமாக, எகிப்துக்கு ஓடிப்போனது.) தனது அழகிய கீழ்ப்படிதலைக் கொண்டு அவர்கள் தனது அழகிய, கிறீஸ்துநாதருக்கு ஒப்பான ஆத்துமத்தை வெளிக்காட்டினார்கள். உலகம் ஆங்காரமுள்ளதாக இருப்பதால் அது கீழ்ப்படிதலை வெறுக்கிறது. பசாசு கீழ்ப்படிதலை வெறுக்கிறது. அடங்கியிராமல் போனது அதனுடைய பாவமான இருந்தது. நம் சர்வேசுரனாகிய கிறீஸ்துநாதரோ அவமானமுள்ள, வேதனை மிகுந்த மரண மட்டும் கூட கீழ்ப்படிந்திருந்தார்.

கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதே கீழ்ப்படிதல் ஆகும். அது மெய்யான சுதந்திரமாகவும், மெய்யான மேன்மையாகவும், மெய்யான ஆண்மையாகவும், மெய்யான புண்ணியமாகவும் இருக்கிறது. கீழ்ப்படிதல் ஒவ்வொரு புண்ணியத்தையும் கொண்டு வருகிறது, ஒவ்வொரு ஒழுங்கீன நடத்தையையும் துரத்தியடிக்கிறது. தேவ ஊழியத்தின் எல்லாவற்றிற்கும் உயர்ந்த வடிவம் ஜெபம் ஆகும். ஜெபத்தின் எல்லாவற்றிலும் உயர்ந்த வடிவம் பலி ஆகும். இருந்தாலும், “கீழ்ப்படிதல், பலியை விட சிறந்தது.” நேசிக்கிறவன், கீழ்ப்படிகிறான்; கீழ்ப்படிகிறவன் நேசிக்கிறான்; கடவுளின் மீதான நேசமே எல்லாச் சட்டத்தினுடையவும், தீர்க்கதரிசனங்களுடையவும் நிறைவேற்றமாக இருக்கிறது. கீழ்ப்படியாமை, அல்லது (சிறிய காரியங்களிலும் கூட) மேலதிகாரிகளின் சித்தத்தை எதிர்த்து நிற்பது, அல்லது மேலதிகாரிகள் மீது கொள்ளும் வெறுப்பின் பேய்த்தனமுள்ள வடிவம், மேலதிகாரிகள் வழியாக கடவுளிடமிருந்து நம்மிடம் இறங்கி வருகிற உயிரளிக்கும் வரப்பிரசாதப் பொழிவிலிருந்து நம்மைத் துண்டித்து விடுகிறது. மெய்யான திராட்சைக் கொடியிலிருந்து வருகிற அந்த தெய்வீக உயிர்ச்சாறு கீழ்ப்படிதலால் தடுக்கப் பட்டு விடும்போது, நாம் காய்ந்து போகிறோம், கனி தருவதை நிறுத்திக் கொள்கிறோம், வளர்வதை நிறுத்திக் கொள்கிறோம், இறுதியாக வாழ்வதையே நிறுத்திக் கொள்கிறோம்.

நம் இரட்சகர் மரணமட்டும் கீழ்ப்படிதல் உள்ளவராக இருந்தார். கல்வாரியின் கொடிய நிந்தை அவமானங்களைப் பற்றிய ஒரு பலமான வெறுப்பை நிச்சயமாக அவர் தம்மில் கொணடிருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதைப் பற்றிய சிந்தனை, அவருடைய இரத்த நாளங்களிலிருந்து, குளிர்ந்த வியர்வையைப் போல இரத்தம் வெளியேறும்படி செய்தது. இருந்தாலும், அந்நேரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆத்துமங்களை வீரத்துவமிக்க பிரமாணிக்கமுள்ளவர்களாக ஆக்கிய அந்த அழகிய ஜெபத்தை அவர் அப்போது ஜெபித்தார் - “பிதாவே, என் சித்தப்படியல்ல, உமது சித்தப்படியே ஆகக் கடவது!” கீழ்ப்படிதலானது நம் மீது சுமத்தியுள்ள நுகத்தடியைப் பற்றிய நினைவில் நாம் இரத்த வியர்வை சிந்தியிருக்கிறோமா? இல்லை என்று நான் நினைக்கிறேன்! அது பெரியது என்று நாம் நினைத்திருக்கிறோம் என்றால், ஓர் ஒழுங்கற்ற கற்பனையை நாம் கொண்டிருக்கிறோம், அல்லது நம் ஆங்காரம் ஒரு நல்ல பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. நம் மீது சுமத்தப்பட்ட கீழ்ப்படிதலின் செயலை நிறைவேற்றுவதில், ஏளனம் செய்கிற எதிரிகளின் கேலி பரிகாசங்களுக்கு மத்தியில் நாம் இரத்தம் சிந்தியிருக்கிறோமா? இல்லையென்று நான் நினைக்கிறேன். நாம் பெரும் கோழைகள். அத்தகைய ஒரு கீழ்ப்படிதலின் செயலுக்கு நாம் சமமாக மாட்டோம். அத்தகைய ஒரு காரியம் நாம் சுமக்கத் தக்கதை விட மிகப் பெரியதென்றும், அநீதியானதென்றும், நம்மை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்றும் இன்னும் பலவாறாக பசாசானவன் அந்தக் காரியத்தை நமக்கு சித்தரித்துக் காட்டுவான். நாமும் அந்தச் சுமையை இறக்கி வைத்துவிட்டு அதற்கு சாக்குபோக்கு சொல்லிக் கொள்வோம் - அந்தோ, நம் சொந்த அழிவிற்காக! அதற்குப் பதிலாக, கடவுளின் சித்தமாக நமக்கு வெளிப்படுத்தப் பட்ட வேலைக்குள் மகிழ்ச்சியோடு உடனே குதித்துவிடுபோமானால், அந்த வேலையில் கடவுளை நாம் கண்டிருப்போம். மேலும், “என் நுகம் இனியது, என் சுமை எளியது” என்னும் அவருடைய வார்த்தைகளின் உண்மையை நாம் அனுபவித்திருப்போம். நாம் கீழ்ப்படியும் போது, அவரே நம்மையும், நம் சுமைகளையும் சுமக்கிறார் என்பதால், அது நமக்கு ஏன் இனிமையாக இருக்க முடியாது?

ஆங்காரிகளுக்கு கீழ்ப்படிதல் என்பது கசப்பின் வார்த்தையாகவும், மரண மட்டும் கீழ்ப்படிந்திருந்தவரைத் தாழ்ச்சியோடு நேசிப்பவனுக்கு மகிழ்ச்சியின் வார்த்தையாகவும் இருக்கிறது!


மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!