வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - புயலில் அகப்பட்ட போர்த்துக்கீசியர்

துன்ப நோய்க்குயிர் மருந்தே 
துயர் கடலின் நிலைக் கரையே
- வீரமா முனிவர் 

''திரை கடலோடியும் திரவியம் தேடு'' என்னும் மூதுரைக்கொப்ப 15-ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கீசியர் கடல் வழியாக கீழை நாடுகளில் வாணிபம் செய்து பெரும் பொருள் திரட்டினர். அவர்களுடைய வியாபாரக் கப்பல் ஒன்று சீன நாட்டிலுள்ள மக்காவ் துறைமுகப்பட்டினத்தில் பாய் விரித்து, மேற்குத் திசையை நோக்கி ஓடி, வங்காள விரிகுடாவில் புகுந்து சென்றுகொண்டிருந்தது. பருவக் காற்று சரியாக வீசியபடியால் ஆபத்தின்றி விரைவிலேயே இலங்கை சென்றுவிடலாம் என்று எண்ணி, அதிலிருந்த மாலுமிகள் உற்சாகமாக இருந்தார்கள், ஆனால் வானத்தில் திடீரென கார்மேகம் சூழ்ந்தது ; காற்று வலுத்தது ; கடல் கொந்தளித்தது ; புயலடித்தது. அலைகடலில் சிறு துரும்பென அந்தச் சிறு கப்பல் தத்தளித்துத் தடுமாறியது. கப்பலோட்டிகளும், வியாபாரிகளும் தங்களால் இயன்றனவெல்லாம் செய்தார்கள். யாவும் பயனற்றுப் போகவே தமக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டதெனக் கலங்கி, ஆபத்திலே அடைக்கலமளிக்கும் அன்னையை நினைத்தார்கள். அன்னையின் பாதத்தில் சரண் அடைந்தார்கள்.

தாயே, தஞ்சமே, பயணிகளின் துணையே!
ஆபத்தில் அடைக்கலமே, எங்களைக் காப்பாற்று. 
நாங்கள் பிழைத்துக் கரை சேருமிடத்தில்
உமது பெயரால் ஒரு கோவிலைக் கட்டுவோம். 

எனப் பொருத்தனை செய்து வேண்டினர். 

அமல நாயகியே, அபயம் அபயம்,
அமுத வாரிதியே, அபயம் அபயம், 
விமலவெண் மலரே, அபயம் அபயம்,
வேதநன் மணியே, அபயம் அபயம்! 
அன்னைமா மரியே, அபயம் அபயம்,
ஆழியின் விண்மீன் ஆனாய், அபயம், 
மன்னிய கருணைக் கன்னி, அபயம்,
வழித்துணை நல்கும் அரசி, அபயம்! 

என வேண்டினர். விசுவாசமும், தாழ்ச்சியும், உருக்கமும் நிறைந்திருந்த அவர்களது மன்றாட்டு உடனடியாகக் கேட்கப்பட்டது. கடலின் கொந்தளிப்பு முற்றும் தணிந்தது ;

இருண்ட வானம் ஒளிர்ந்தது; 
சினம் கொண்டு வீசிய புயல் தென்றலாக மாறியது,

முட்டி மோதிய பேரலைகள் சட்டென மறைந்தன மாலுமிகள் மரக்கலத்தைக் கரையோரமாகச் செலுத்தினார்கள் எல்லாரும் கரை சேர்ந்து முழந்தாளிட்டு, தேவ அன்னைக்கு நன்றி செலுத்தினார்கள், சற்று தூரத்தில் குடிசைகள் தென்படவே அத்திசையை நோக்கி நடந்தனர். கிராமவாசிகள் அங்குள்ள குடிசைக் கோவிலைக் காட்டினர். உள்ளே சென்று தேவமாதாவின், சுரூபத்தைப் பார்த்து, அருள் மரியாள் தேவ மகனொடும், அமர்ந்த உறைவிடத்தைப் பார்த்து உள்ளம் உருக நின்றார்கள். அவ்வன்னையின் கோவிலிருக்கும் ஊரில் அவர்கள் கரை சேர்ந்தது. அவள் செயல்தான் என்றுணர்ந்து பேராச்சரியமும், மகிழ்ச்சியுமுற்றுத் திரும்பவும் அத்தாய்க்கு நன்றி செலுத்தினார்கள். அவ்வூர் வேளாங்கண்ணியென்றும், அக்கோவில் புனித ஆரோக்கியமாதா கோவில் என்றும் அறிந்தனர். போர்த்துக்கீசிய வணிகர்கள் ஆபத்து நீங்கிக் கரை சேர்ந்த நாள் செப்டம்பர் 8; அன்று தேவமாதா பிறந்த நாள்,

பேரரசி! உனக்கிந்த சிறுகுடிலோ கோவில்? 
பெண் குலத்தின் திருவிளக்கே! மண்சுவரோ மாடம்! 
பாருலகம் உடையவளே! பழங்கீற்றோ கூரை?
பழிதுடைப்போம்" என விழைந்து பணி ஏற்றார் வணிகர். 

பிறகு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிட, கட்டிடத்திற்கு வேண்டிய பொருள் களைச் சேகரித்தார்கள், 24 அடி நீளமும் | 2 அடி அகலமும் உள்ள ஒரு சிறு மண்டபக் கோவிலை விரைவில் கட்டி முடித்தனர். அன்னையின் அழகிய, அதிசய சுரூபம் புதிய ஆலயப் பீடத்தில் அரியணை ஏறியது. மக்கள் அத்தாயாரை வாயார வாழ்த்தினார்கள், அன்று முதல் இன்று வரை வந்தவர்க்கெல்லாம் வரங்களை வழங்கிய வண்ணம் அன்னை வீற்றிருக்கின்றாள்.

போர்த்துக்கீசிய வியாபாரிகள் மறுமுறை அப்பக்கம் சென்ற சமயம் சீனாவிலிருந்து அழகான பீங்கான் ஓடுகளைக் கொண்டு வந்து பீடத்தை அழகுபடுத்தினார்கள். அப்பீங்கான் ஓடுகளில் பழைய, புதிய ஆகமங்களின் நிகழ்ச்சிகள் அழகான முறையில் தீட்டப்பட்டுள்ளன. இன்றும் அவற்றைக் காணலாம்.

வனப்பான மண்டபக் கோவில் இவ்வாறு எழுப்பப்படவே, மக்கள் கூரைக் கோவிலை விட்டுத் தேவதாயை - ஆரோக்கிய அன்னையைப் புதிய கோவிலில் கண்டு மகிழ்ந்தனர். அன்னையின் புகழ் அகிலமெங்கும் பரவியது. மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் திருப்பயணிகளின் கூட்டம் வந்து குழுமியது. ஆரோக்கிய அன்னையும் அவர்களுக்கு ஆன்ம சரீர நன்மைகளை ஏராளமாகப் பொழிந்தாள். ஒவ்வோர் ஆண்டும் அன்னையின் பிறந்த நாள் ஆரோக்கிய அன்னையின் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஞானமே விளைந்த பாரத மண்ணில்
நாயக மரியாள் நண்ணினாள் , மாந்தர் 
ஊனமே ஒழித்தாள், மானமும் காத்தாள்
உறுத்திய பாவப் புயலையும் மாய்த்தாள். 

இவ்வாறு மக்கள் மனமெல்லாம் அன்னை மரியாள் நிறைந்தாள்,