அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - போனெட்டி காலக்கிரமப் பதிவேடு தொடர்கிறது:

1862, ஏப்ரல் 29, உயிர்ப்பு ஞாயிறன்று, டொன் போஸ்கோ கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் எவ்வளவு பலவீனமடைந் தார் என்றால், எழுந்து நிற்கவோ, பேசவோ கூட அவரால் முடியவில்லை. என்றாலும் அவர் தம் அறையிலிருந்து வெளியே வந்து, ஆறரை மணி முதல் ஒன்பது மணி வரை பாவசங்கீர்த்தனங்கள் கேட்டார்.

இந்தக் காரியம் முன்னுரைக்கப்பட்ட பின் ஒரு மாதம் கடந்து விட்டது. அது சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த ஆரோக்கியமான அச்சம் இப்போது தேய்வடைந்து கொண்டிருந்தது. என்றாலும், “யார் சாகப் போகிறார்கள், எப்போது. பாஸ்கா - அந்த முதல் 'P' போய் விட்டதே!” என்று பலர் இன்னும் வியந்து கொண்டிருந்தார்கள்.

கொஞ்சமும் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 25 அன்று, மோண்டோவியைச் சேர்ந்த வியோராவின் விக்டர் மேஸ்ட்ரோ என்ற சிறுவன், தனது பதின்மூன்று வயதில், மாரடைப்பால் இறந்து போனான். அவன் மிக அருமையான சிறுவன், ஒரு வாரத்தில் பல தடவை திவ்விய நன்மை வாங்குபவன். 

டொன் போஸ்கோவின் முன்னறிவிப்பின்போது அவன் நல்ல சுகத்தோடு இருந்தான். ஆனால் தனது மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அவனுடைய கண்களில் பிரச்சினை வந்தது. அவனுடைய பார்வை மாலை நேரங்களில் மங்கலாயிற்று. மாரடைப்பு வருவதற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன், இலேசான நெஞ்சு வலிகள் வருவதாக அவன் முறையிட்டான். ஆகவே அதிக நேரம் தூங்கும்படி மருத்துவர் பரிந்துரைத்தார்.

ஒருநாள் காலையில் டொன் போஸ்கோ படிக்கட்டுகளில் அவனைச் சந்தித்து, “நீ மோட்சம் செல்ல விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” என்று பதிலளித்தான் மேஸ்ட்ரோ .

“அப்படியானால் தயாராகு!” சிறுவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். ஆனால் அதன்பின் டொன் போஸ்கோ எதையோ ஜாடையாகக் குறிப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு, மீண்டும் அமைதியடைந்தான். ஆயினும் டொன் போஸ்கோ அடுத்த சில நாட்களில் அவனைத் தம் அருகிலேயே வைத்துக் கொண்டார், முறையாக அவனைத் தயாரித்தார். ஒரு நல்ல, முழு ஆறுதல் அளிக்கக் கூடிய பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்ய அவனைத் தூண்டினார்.

ஏப்ரல் 24 அன்று, மேஸ்ட்ரோ மருத்துவமனையின் முகப்பு மாடியில் அமர்ந்திருப்பதை ஒரு சிறுவன் கவனித்தான். ஏதோ உள்ளுணர்வு அவனை உந்த, அவன் டொன் போஸ்கோவை அணுகி, “மரிக்க விரும்பும் சிறுவன் மேஸ்ட்ரோதான் என்பது உண்மையா?” என்று கேட்டான்.

“எனக்கு எப்படித் தெரியும்!” என்று டொன் போஸ்கோ பதிலளித்தார். “அவனிடமே கேள்!”

அந்தச் சிறுவனும் முகப்பு மாடிக்கு ஏறிப் போய் மேஸ்ட்ரோ விடம் இது பற்றிக் கேட்டான். உடனே விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிய மேஸ்ட்ரோ , அதன்பின் படியிறங்கிக் கீழே வந்து, டொன் போஸ்கோவிடம், ஒரு சில நாட்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டான். “நிச்சயமாக, ஆனால் நீ போவதற்கு முன், உன் நோய் பற்றிய எழுத்துபூர்வமான அறிக்கை ஒன்றை மருத்துவரிடம் கேட்டு வாங்கிக் கொள்” என்றார் டொன் போஸ்கோ. 

சிறுவன் அமைதியடைந்தான். “ஆரட்டரியில் யாரோ சாகப் போகிறார்கள். நான் வீட்டுக்குச் சென்று விட்டால், அது நானாக இருக்க முடியாது. ஒரு நீண்ட பாஸ்கு கால விடுமுறையை அனுபவித்து விட்டு, நல்ல உடல்நலத்துடன் நான் திரும்பி வருவேன்” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டுதான் அவன் டொன் போஸ்கோவிடம் அனுமதி கேட்க வந்திருந்தான்.

மறுநாள், ஏப்ரல் 25, வெள்ளியன்று, மேஸ்ட்ரோ மற்றவர்களோடு விழித்தெழுந்தான், பூசை கண்டான். அதன்பின் முற்றிலும் களைத்துப் போனவனாக உணர்ந்த அவன், தன் பள்ளித் தோழர்களிடம், வீட்டுக்குப் போவது பற்றி தான் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறான் என்பது பற்றிச் சொல்லி விட்டு, தன் படுக்கைக்குத் திரும்பினான்.

வகுப்புகளுக்காக ஒன்பது மணிக்கு மணியடித்த போது, அவனுடைய நண்பர்கள் ஒரு மகிழ்ச்சியான விடுமுறைக்காகவும், அவன் பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்காகவும் அவனுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு பள்ளி சென்றார்கள். மேஸ்ட்ரோ உறங்கும் அறையில் தனியாக விடப்பட்டான். பத்து மணி வாக்கில் மருத்துவ இல்லக் காப்பாளர் அவனிடம் வந்து, மருத்துவர் விரைவில் வந்து விடுவார் என்றும், அவன் எழுந்து மருத்துவ விடுதியில் அவரை வந்து சந்திக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்.

மருத்துவர் சற்று நேரத்தில் வந்து விட்டார். அடுத்திருந்த உறங்கும் அறையிலிருந்த ஒரு சிறுவன் மேஸ்ட்ரோவைத் தேடி வந்தான். அவனும் மருத்துவரைப் பார்க்க வேண்டியிருந்தது. அவன் வாசலில் நின்றபடி மேஸ்ட்ரோவை சத்தமாகப் பெயர் சொல்லி அழைத்தான். பதில் வராமல் போகவே, மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தான். இப்போதும் பதில் வரவில்லை. 

மேஸ்ட்ரோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்த அவன், அவனுடைய படுக்கையருகில் சென்று அவன் பெயரைச் சொல்லியபடி அவனைப் பிடித்து உலுக்கினான். ஆனால் மேஸ்ட்ரோவிடம் எந்த அசைவும் இல்லை. ஆகவே விவரிக்க முடியாத அளவு கடும் அச்ச வசப்பட்ட சிறுவன், “மேஸ்ட்ரோ இறந்து விட்டான்!” என்று அலறியபடி, யாரையாவது கூப்பிட ஓடினான். 

சுவாமி ருவாதான் முதல் ஆளாக அவனுக்கு எதிர்ப்பட்டார். அவர் மேஸ்ட்ரோவின் படுக்கை அருகே ஓடி, அவன் இறந்து கொண்டிருக்கையில், சரியான நேரத்தில் அவனுக்குப் பாவ மன்னிப்பு அளித்தார். மடத்தின் அதிபரான சுவாமி ஆலாஸ்ஸோனாட்டிக்கு உடனடியாகத் தகவல் அறிவிக்கப்பட்டது. போனெட்டி டொன் போஸ்கோவை அழைக்கச் சென்றார்.

இந்தச் செய்தி மின்னலைப் போல வகுப்பறைகளிலும், பணிமனைகளிலும் பரவியது. சிறுவர் ஓட்டமாக ஓடி வந்து, முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினர். மேஸ்ட்ரோ இன்னும் உயிரோடிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அவனுக்குத் திடனளிக்கும் எண்ணத்துடன் வேறு சிலர் போர்வைகளையும், பழச்சாறுகளையும் கொண்டு வந்தனர். ஆனால் அவையெல்லாம் பயனற்றவை ஆயிற்று. 

அவன் இறந்து விட்டான் என்பதை டொன் போஸ்கோ முதல் பார்வையிலேயே அறிந்து கொண்டார். குறிப்பாக, நண்பர்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் மேஸ்ட்ரோ இறந்தது பற்றி எல்லோரும் இருதயம் உடைந்து அழுதனர். சிறுவர்களின் துக்கத்தை அறிந்த டொன் போஸ்கோ, மேஸ்ட்ரோவின் நித்திய மீட்பைப் பற்றி அவர்களுக்கு உறுதியளித்தார். அவன் புதனன்று திவ்விய நன்மை வாங்கியிருந்தான். 

அனைத்துப் புனிதர்கள் திருநாளிலிருந்து அவன் மிக நல்ல விதமாக நடந்து கொண்டதுடன், சாவதற்கு முறையான விதத்தில் தயாரிக்கவும் பட்டிருந்தான். துறவிகளும், சிறுவர்களும் திரண்டு வந்து, அவனுக்குத் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தினர். அவர்கள் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுகையில், டொன்போஸ்கோவின் தீர்க்கதரிசனம் நிறைவேறி விட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

அன்றிரவு டொன் போஸ்கோ ஆற்றிய நல்லிரவு உரை அனைவரையும் கண்ணீர் விடச் செய்தது. கடந்த ஒன்பது அல்லது பத்து நாட்களுக்குள் தங்கள் தோழர்களில் இருவரைக் கடவுள் தம்மிடம் அழைத்துக் கொண்டார், அவர்கள் இருவருமே தங்கள் கடைசித் தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வாய்ப்புப் பெற வில்லை என்ற உண்மையின்மீது அவர் அவர்களுடைய கவனத்தை ஈர்த்தார். 

“தங்கள் வாழ்வின் இறுதி வரை நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து தங்கள் மனச்சான்றுகளை சுத்தப்படுத்திக் கொள்ளத் தாமதிப்பதில் மனிதர்கள் எவ்வளவு தவறாக நடந்து கொள்கிறார்கள்! நம் இரண்டு தோழர்களை நித்தியத்திற்குள் இவ்வாறு அழைத்துக் கொண்டதற்காக ஆண்டவருக்கு நாம் நன்றி கூறுவோம். அவர்கள் ஆன்ம முறையில் சாவுக்கு ஆயத்தமாக இருந்தார்கள் என்பதை நாம் நிச்சயமாக அறிவோம். முற்றிலும் திருப்தியற்ற ஒரு நடத்தையைக் கொண்டு வேறு யாராவது இறந்திருந்தால், நம்முடைய துக்கம் இன்னும் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும்!” என்றார் அவர்.

மேஸ்ட்ரோவின் மரணம் ஆண்டவருடைய ஓர் ஆசீர்வாத மாக இருந்தது. சனிக்கிழமை காலையிலும் மாலையிலும் சிறுவர்கள் பெரும் எண்ணிக்கையில் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்பினர். இரண்டு மூன்று வார்த்தைகளில் டொன் போஸ்கோ அவர்களுடைய மனங்களை அமைதிப்படுத்தினார். 

பிற்பாடு அவர் மிக அப்பட்டமாக, “மேஸ்ட்ரோதான் என் கனவில் அந்தக் குறிப்புச் சீட்டைப் பெற்றுக் கொள்வதாக நான் கண்ட சிறுவன் .... ஆழமான விதத்தில் எனக்கு ஆறுதலளிக்கும் காரியம் என்னவெனில், அதே வெள்ளிக்கிழமை காலையில், பல சிறுவர்கள் எனக்கு உறுதியளித்த படி, அவன் தேவத்திரவிய அனுமானங்களைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய மரணம் திடீரென நிகழ்ந்தது, ஆயினும் போதிய ஆயத்தமின்றி நிகழவில்லை ” என்றார்.

மேஸ்ட்ரோவின் உடல் ஏப்ரல் 27, ஞாயிறு காலையில் அடக்கம் செய்யப்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு டொன் போஸ்கோவின் தீர்க்கதரிசனத்தை அதன் கடைசி விவரம் வரை முழுமையாக நிறைவேற்றியது. கனவில் வந்த அந்த மர்மமான அன்னியர், பழத் தோட்டத்திற்குச் செல்லும் நடைபாதையை எதிர்நோக்கிய முகப்பு மண்டபத்தில் மேஸ்ட்ரோ நின்று கொண்டிருக்கையில்தான் அந்தக் குறிப்புச் சீட்டை அவனிடம் கொடுத்தார். அங்கிருந்து அவர் ஒரு சில அடிகள் தூரத்திலிருந்த சவப்பெட்டியைச் சிறுவனுக்குச் சுட்டிக் காட்டினார்.

அடக்க வேலைகளுக்குப் பொறுப்பாளரும், அவருடைய உதவியாளர்களும் வந்தபோது, அவர்கள் மேஸ்ட்ரோவின் சடலத்தை நடுவிலுள்ள படிக்கட்டின் வழியாகக் கீழே இறக்கி, முகப்பு மண்டபத்தின் வழியாக, அந்த நடைபாதை வரைக்கும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் நின்று, நாற்காலிகள் கொண்டு வரச் செய்து, அவற்றின்மீது சவப்பெட்டியை வைத்தனர். அதன்பின் அவர்கள் குருவும், கல்லறைத் தோட்டத்திற்கு உடன் வர இருந்த மாணவர்களும் வருவதற்காகக் காத்திருந்தனர்.

(போனெட்டியின்காலக்கிரமப்பதிவேடு இப்படிக் கூறுகிறது.)

(அப்போது ஒரு தியாக்கோனாக இருந்த) ஜான் காலியேரோ, சவப் பெட்டியைக் கடந்து செல்கையில், இந்த ஏற்பாட்டைக் கண்டு வருத்தப்பட்டார். ஏனெனில், மற்ற அடக்கச் சடங்குகளில், சவப் பெட்டி வழக்கமாக கோவிலை ஒட்டியிருந்த படிக்கட்டு களுக்குச் செல்லும் வாசலுக்கு அருகிலுள்ள முகப்பு மண்டபத்தின் மறுகோடியில்தான் வைக்கப்பட்டிருக்கும். அடக்க ஏற்பாடுகள் செய்பவர்கள் தான் நாற்காலிகளை அவற்றின் வழக்கமான இடத்திலிருந்து அகற்றினார்கள் என்பதை அவர் கேள்விப்பட்டபோது, அவர் இன்னும் அதிக வருத்தத்திற்கு உள்ளானார். வழக்கமான இடத்தில்தான் சவப்பெட்டி வைக்கப்பட வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார்.

மிகச் சரியாக அந்நேரத்தில் டொன் போஸ்கோ கோவிலில் இருந்து வெளியே வந்தார். மிகுந்த துயரத்தோடு சவப் பெட்டியைப் பார்த்த அவர், ஜான் பாப்டிஸ்ட் ஃப்ரான்செஸியாவிடமும், மற்றவர்களிடமும், “என்ன ஒரு தற்செயலான நிகழ்வு! கனவில் நான் சவப் பெட்டியை இப்படியேதான் பார்த்தேன்” என்று அறிவித்தார்.