இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். அருளப்பர் சுவிசேஷம் - பாயிரம்

சுவிசேஷகராகிய அர்ச். அருளப்பர் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரும், செபதேயுவின் குமாரனும், அர்ச். பெரிய யாகப்பருக்குத் தம்பியும், சேசுநாதரால் விசேஷமாய்ச் சிநேகிக்கப்பட்டவருமாய் இருந்தார். 

சேசுநாதர் சிலுவையில் அறையுண்டிருக்கும்போது, பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்குள் அவர் மாத்திரஞ் சிலுவையடியில் தேவமாதாவோடே கூட நின்றார். 

அப்போது சேசுநாதர் தம்முடைய திருத்தாயாரை அவர் வசமாய் ஒப்புக்கொடுத்தார். 

அவர் ஏறக்குறைய கர்த்தர் அவதாரத்தின் 96-ம் வருஷத்தில் எபேசு நகரத்தில் தமது சுவிசேஷத்தைக் கிரேக்க பாஷையில் எழுதினார். 

மற்ற மூன்று சுவிசேஷகர்களுக்குப் பிறகு அவர் இதை எழுதினபடியால், மற்றவர்கள் எழுதிவைத்த அநேக காரியங்களை இவர் விட்டுவிட்டு, அவர்கள் எழுதாத சில பிரதான காரியங்களை எழுதினார். 

அவர் நாளிலே சில பதிதர் சேசுநாதருக்குத் தேவசுபாவம் இல்லையென்று சொல்லத் துணிந்தபடியால், சேசுநாதருடைய தேவசுபாவத்தைத் துலங்கப்பண்ணுவது அவருடைய பிரதான கருத்தாயிருந்ததென்று தோன்றுகிறது. 

அவர் சுவிசேஷத்தை எழுதுகிறதற்கு ஒரு வருஷத்திற்கு முன் பாத்மோஸ் என்னும் தீவிலே காட்சி ஆகமத்தை எழுதினார். 

அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் கடைசியாய் நூறு பிராயமுள்ளவராய் எபேசு நகரத்தில் பாக்கியமான மரணத்தையடைந்தார்.