இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 9. பகைவர்கள்

ஜெபமாலைப் பக்தி சபையின் வளர்ச்சியைத் தடை செய்வது மிகவும் தீய செயல். அது ஆன்மாக்களுக்கு கேடு செய்வதாகும்.

ஜெபமாலை இயக்கத்தை வெறுக்குமளவிற்கு இருண்ட மனமுடையவர்கள் பலரையும் அதை அழிக்கத் தேடியவர்களையும் இறைவன் கடுமையாகத் தண்டித்துள்ளார்.

பரிசுத்த ஜெபமாலையை இறைவன் அங்கீகரித்து பல புதுமைகளால் தமது அங்கீகார முத்திரையை அதன் மீது பதித்துள்ளார். பாப்புமார்கள் ஜெபமாலையை அங்கீகரித்து நிரூபங்கள் எழுதியுள்ளனர். இத்தனை இருந்தும் ஜெபமாலையை எதிர்ப்பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். இந்த சுய சிந்தனைக்காரரும், வேதத்தை வெறுத்துப் பரிகசிப்பவர்களும் ஒன்றில் ஜெபமாலையைத் தாக்குகின்றனர், அல்லது மற்றவர்கள் அதை விட்டுவிடச் செய்கின்றனர்.

இத்தகையோர் நரக நஞ்சை நன்றாய் உட்கொண்டு விட்டார்கள். பசாசினால் ஏவப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் கத்தோலிக்க மறையில் மிகவும் புனிதமாகக் கொள்ளப்படும் கர்த்தர் கற்பித்த ஜெபம், மங்கள வார்த்தை ஜெபம், சேசு மரியாயின் வாழ்வு, மரணம், மகிமை ஆகிய திரு நிகழ்ச்சிகள் போன்றவைகளை தவறென்று கூறினாலொழிய, மற்றப்படி யாருமே ஜெபமாலையைத் தவறென்றும் கூற முடியாது.

மற்றவர்கள் அடிக்கடி ஜெபமாலை சொல்வதையும் பொறுக்க முடியாத இந்த சுய சிந்தனைக் கும்பல் தாங்கள் உணராமலே பதித மனப்பான்மையைக் கொண்டு விடுகின்றனர். சிலர் ஜெபமாலையையும் அதன் மறை பொருளையும் வெறுத்துப் பகைக்கின்றனர்.

இவ்வித பக்தி சபைகளைப் பற்றி எரிச்சல் கொள்வது இறைவனையும் உண்மையான பக்தியையும் விட்டு விலகுவதாகும். ஏனென்றால், ஆண்டவருடைய பெயரால் கூடியருப்பவர்களின் நடுவில் தாம் இருப்பதாக அவரே நமக்கு சொல்லியிருக்கிறார். பரிசுத்த தாயாகிய திருச்சபை பக்த சபைகளுக்கு அளித்திருக்கும் பல பெரிய ஞானப் பலன்களை நல்ல கத்தோலிக்கர் யாரும் மறக்கக் கூடாது. மேலும், ஜெபமாலைப் பக்தி சபையில் பிறர் சேர்வதை தடை செய்வது ஆன்மாக்களின் எதிரியாவதாகும். ஏனெனில் தன்னைப் பாவ நோயிலிருந்து குணப்படுத்திக் கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்வைப் பெற்றுக் கொள்ளவும் நிச்சயமான ஒரு வழி ஜெபமாலையாகும்.

தேவ அன்னையைக் கைநெகிழ்ந்தவன் எவனும் தன் பாவத்தில் மடிந்து தண்டனைத் தீர்ப்பிடப்படுவான் என்று அர்ச்சிஷ்ட பொன வெந்தூர் என்பவர் பகர்கின்றார். அவர்களை (தேவ அன்னையை கை நெகிழ்ந்தவன் தன் பாவத்தில் சாவான்'. தேவ தாயை அலட்சியம் செய்கிறவர்களின் தண்டனை இதுவானால், பிறரை இப்பக்தி முயற்சிகளை விட்டுவிடச் செய்கிறவர்களுக்கு எவ்வளவு தண்டனை காத்திருக்கும்!