இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 4. முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச்

அர்ச். சாமிநாதர் ஜெபமாலைப் பக்தி சபையை நிறுவிய ஒரு நூற்றாண்டு வரை ஜெபமாலையின் மீது ஆதியிலிருந்த ஊக்கம் காணப்பட்டது. அதன்பின் அது மறக்கப்பட்டு புதைபட்டுப் போயிற்று. இது பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் எல்லாக் காரியங்களும் - மிகவும் புனிதமானவை உட்பட அதிலும் அவை மனித சுயாதீனத்துக்கு விடப்பட்டிருந்தால், அவைகள் மாறத்தான் செய்யும். சாத்தானின் தீய திட்டங்களும் அவனுடைய பொறாமையும் ஜெபமாலையை மக்கள் கைவிட்டதன் பெரும் காரணமாக இருந்தன என்பதில் ஐயமேயில்லை. இதனால் ஜெபமாலையின் வழியாக உலகில் பொழியப்பட்ட கடவுளின் வரப்பிரசாதங்கள் தடைபட்டன.

1349-ம் ஆண்டு இறைவன் ஐரோப்பா முழுவதையும் மிகப் பயங்கரமான கொள்ளை நோயால் தண்டித்தார். அது போல் கொடிய கொள்ளை நோய் எங்கும் கண்டதில்லை. கிழக்கிலிருந்து ஆரம்பமாகி இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி நாடுகளில் பரவியது. எங்கெல்லாம் அது பரவியதோ அங்கெல்லாம் அழிவைக் கொண்டு வந்தது. தன் கதையைச் சொல்ல நூற்றில் ஒருவன் முதலாய் விடப்படவில்லை. இக்கொள்ளை நோய் பரவிய மூன்று ஆண்டுகளாக பெரிய நகரங்களும் சிறிய பட்டணங்களும் கிராமங்களும் துறவற மடங்களும் ஏறக்குறைய வசிப்பாரற்றுக் காலியாகக் கிடந்தன.

இந்த வாதனை முடியவும், 1376-ம் ஆண்டில் ஃபிளாஜெல்லாந்தெஸ்* என்ற பதிதப் போதனையும் ஒரு பெரிய பிரிவினையும் ஏற்பட்டன. (ஃபிளாஜெல்லாந்தெஸ்: பாவங்களுக்காக தங்களையே பகிரங்கமாய் சாட்டைகளால் அடித்துக் கொள்பவர்களின் கூட்டம் இது. தேவ திரவிய அனுமானங்கள் தேவையில்லை என்று இவர்கள் கூறினர். ஒருவருக்கு ஒருவர் பாவப்பொறுத்தல் அளித்துக் கொண்டனர். இப்பதிதம் 14-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 15-ம் நூற்றாண்டு வரை இருந்தது.) தேவ இரக்கத்தால் இந்தத் துன்பங்கள் முடிந்தபின் தேவதாய் முத் ஆலனிடம் பரிசுத்த ஜெபமாலைப் பக்தி சபையைப் புதுப்பித்து நடத்தும்படி கூறினார்கள். முத். ஆலன் பிரிட்டனி தேசத்தில் தினான் மாநிலத்திலுள்ள சாமிநாதர் சபையைச் சார்ந்த குரு. இவர் ஒரு சிறந்த வேத சாஸ்திர வல்லுநர். பிரசங்கம் செய்வதில் பெரும் புகழ் பெற்றவர். தேவதாய் இவரை இவ்வலுவலுக்குத் தெரிந்து கொண்ட காரணம். இந்த மாநிலத்தில்தான் முதல் முதல் ஜெபமாலைப் பக்தி சபை தோற்றுவிக்கப்பட்டது. அம்மாநிலத்திலுள்ள சாமிநாதர் சபை உறுப்பினர் ஒருவரே அப் பக்தியை மீண்டும் நிலை நாட்டும் பேறு பெறுவது தகுதியாயுமிருந்தது.

1460 -ம் ஆண்டில் நமதாண்டவரிடமிருந்து ஒரு தனியான எச்சரிப்பைப் பெற்ற பின்னர் முத். ஆலன் இவ்வலுவலை மேற்கொண்டார். இச்செய்தியை தாம் பெற்றுக் கொண்ட வகையை முத். ஆலனே கீழ்வருமாறு கூறுகிறார்.

ஒரு நாள் அவர் திவ்ய பலி பூசை செய்து கொண்டிருந்தார். ஜெபமாலையைப் பற்றி பிரசங்கிக்க அவரைத் தூண்டும் படி நமதாண்டவர் திரு அப்பத்திலிருந்தபடியே அவருடன் பேசினார். 'இவ்வளவு சீக்கிரத்தில் நீ என்னை மீண்டும் சிலுவையில் அறைவதேன்?' என்ற குரல் கேட்டு முத். ஆலன் திடுக்குற்றார். 'ஆண்டவரே என்ன சொல்லுகின்றீர்?' என்று கேட்டார் ஆலன். 'முன்பு ஒரு தடவை நீ உன் பாவங்களால் என்னை சிலுவையில் அறைந்தாய். உன் பாவங்களால் என் பிதா மனம் நோவதை விட மீண்டும் நான் சிலுவையில் அறையப்படவே விரும்புவேன். ஆனால் நீ இப்போது என்னை மறுபடியும் சிலுவையில் அறைகின்றாய். ஏனென்றால் என் அன்னையின் ஜெபமாலையைப் பிரசங்கிக்கக உன்னிடம் போதிய அறிவும் கல்வியும் உள்ளன. ஆயினும் நீ அதைச் செய்யவில்லை. நீ இதை மட்டும் செய்வாயானால், அநேக ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி அவர்களை பாவத்தில் விழாமல் சரியான பாதையில் நடக்கச் செய்ய முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யாததால் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு நீயே பொறுப்பாளியாகிறாய்.

முத். ஆலன் இடைவிடாமல் ஜெபமாலையைப் பிரசங்கிக்க தீர்மானம் செய்ய வைத்தது சேசுவின் இப்பயங்கர குற்றச்சாட்டே.

மேலும், தேவதாயும் அவருடன் பேசி, அவர் ஜெபமாலை பற்றி பிரசங்கிக்கும்படி தூண்டினார்கள். தேவ அன்னை அவரைப் பார்த்து: 'உன் வாலிபப் பருவத்தில் நீ ஒரு பெரிய பாவியாக இருந்தாய். ஆனால் நீ மனந்திரும்பும் வரத்தை என் திருக்குமாரனிடமிருந்து நான் உனக்குப் பெற்றுத் தந்தேன். உன்னை மீட்க எல்லா வகையான துன்பங்களையும் அனுபவிக்க முடிந்திருக்குமானால் நான் விரும்பியிருப்பேன். ஏனென்றால் மனந்திரும்பிய பாவிகள் என் மகிமையாயிருக்கிறார்கள். நீ என் ஜெபமாலையை எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்ல தகுதியாகும்படியும் அதே துன்பங்களை நான் பட்டிருப்பேன் என்றார்கள்.

மேலும் அர்ச். சாமிநாதரும் முத். ஆலனுக்குத் தோன்றி, தம் ஊழியத்தால் அடையப் பெற்ற பெரிய நன்மைகளை எடுத்துச் சொன்னார்: தாம் இடைவிடாமல் ஜெபமாலையைப் பிரசங்கித்ததாகவும், அவருடைய போதனைகள் பெரிய நற்கனிகளை விளைவித்ததாகவும், அவர் பிரசங்கம் செய்யும் போது அநேகர் மனந்திரும்பியதாகவும் கூறினார். 'ஜெபமாலையை நான் பிரசங்கித்ததால் வந்த ஆச்சரியமான பலன்களைப் பார். நீயும், தேவ அன்னையை நேசிக்கும் எல்லோரும் அவ்வாறே செய்ய வேண்டும். ஜெபமாலையைச் சொல்லி, அதன் வழியாக புண்ணியங்களைப் பற்றிய உண்மையான அறிவை எல்லா மக்களும் அடைந்து கொள்ளுமாறு ஜெபமாலையைப் போதிக்க வேண்டும்.

அர்ச். சாமிநாதர் ஜெபமாலைப் பக்தியை எவ்வாறு நிறுவினார் என்றும் முத். ஆலன் ரோச் எவ்வாறு அதனைப் புதுப்பித்தார் என்றும் சுருக்கமாக மேலே கூறப்பட்டுள்ளது.