இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 49. ஜெபமாலைப் பலன்கள்

ஜெபமாலைப் பக்தி சபையாருக்கு வழங்கப்பட்டுள்ள பலாபலன்களைப் பற்றி சிறிது கூற இதுவே நல்ல தருணம். நீங்கள் எவ்வளவு பலன் அடைய முடியுமோ அவ்வளவும் அடைந்து கொள்ளும்படி இங்கு இதைக் கூறுகிறேன்.

பலன்கள் பாவத்துக்குரிய அநித்திய தண்டனைகளிலிருந்து விடுதலையளிக்கின்றன, சேசு, மாதா, அர்ச்சிஷ்டவர்கள் இவர்களின் அளவற்ற பேறு பலன்களை, இப்பலன்கள் மூலம் நாம் பெற்றுக் கொள்வதால் இவ்விடுதலை நமக்குக் கிடைக்கிறது. இப்பேறுபலன்கள் திருச்சபையின் ஞான திரவிய சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

பரிபூரணப் பலன் (Plenary Indulgence) என்பது பாவத்துக்குரிய முழுத் தண்டனையின் நீக்கம், பகுதிப்பலன் (Partlal Indulgence) என்பது பாவத்துக்குரிய தண்ட னையில் ஒரு பாகத்தை நீக்கம் செய்வதாகும்.

ஜெபமாலைப் பலன்களை அடைய விரும்பும் அங்கத்தினர்கள் செய்ய வேண்டியது :

1. தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை அருந்த வேண்டும் - (பலன்களைப் பற்றிய பிரகடனம் கூறுவதின்படி பலன் அடையும் நாளுக்கு முன்போ அல்லது பின்போ ஒரு வாரத்திற்குள் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ளலாம்.)

2. அற்பப் பாவத்தின் மீது கூட சார்பே இல்லாமல் இருத்தல் வேண்டும். பாவச் சார்பு இருந்தால் பாவக்கறையும் இருக்கும். பாவக்கறை இருந்தால் அதன் தண்டனை எடுபட முடியாது.

3. பலன்கள் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நற்செயல்களைச் செய்ய வேண்டும். பரிபூரணப் பலன் இல்லாமல் பகுதிப்பலன் அடையக்கூடிய சந்தர்ப்பங்களில், இப்பகுதிப் பலனை அடைய எப்போதும் பாவ சங்கீர்த்தனம், நன்மை அத்தியாவசியம் இல்லை. ஜெபமாலைப் பலன்களில் பல ஜெபித்தல், பவனிகள், மந்திரித்த ஜெபமாலை இவை போன்றவற்றிற்கு பகுதிப் பலன் உண்டு .

இந்தப் பலன்களைப் பற்றி அலட்சியம் வேண்டாம். பிளாம்மின் என்பவரும் இன்னும் பலரும் அலெக்ஸான்ட்ரா என்ற இளம் பெண்ணைப் பற்றிய இவ்வரலாற்றை எழுதியுள்ளார்கள். இப்பெண் ஒரு புதுமையால் மனந்திருப்பப்பட்டாள். அர்ச். சாமிநாதர் இவளை ஜெபமாலை பக்தி சடையில் சேர்த்திருந்தார். இவள் இறந்த பின் அவருக்குத் தோன்றி தான் எழுநூறு ஆண்டுகள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கும்படி தீர்ப்புப் பெற்றதாக அறிவித்தாள். காரணம் இவளுடைய சொந்தப் பாவங்களும், இவளுடைய உலகப் போக்கான வாழ்வின் துர்மாதிரிகையால் மற்றவர்கள் செய்த பாவங்களுமே. இவள் அர்ச், சாமிநாதரிடம் தன் வேதனைகளைக் குறைக்கும்படி ஜெபிக்கவும், ஜெபமாலை சபையினரும் ஜெபிக்குமாறு கேட்கவும் வேண்டினாள். அர்ச், சாமிநாதரும் அவள் கேட்டவாறே செய்தார்.

இரண்டு வாரம் கடந்தபின் அவள் சூரியனை விட அதிக ஒளியோடு அவருக்குத் தோன்றினாள். ஜெபமாலை சபையார் அவளுக்காகச் செய்த மன்றாட்டுக்களினால் வெகு விரைவில் அவள் விடுதலையாக்கப்பட்டாள். உத்தரிக்கிற ஆன்மாக்கள் அர்ச். சாமிநாதருக்குச் சொல்லும்படி ஒரு செய்தி கூறியதாகவும் சொன்னாள். அதாவது, அவர் ஜெபமாலையைத் தொடர்ந்து பிரசங்கித்து வர வேண்டும் என்றும், அவர்களுடைய உறவினர்கள் அவர்களுக்காக ஜெபமாலைகள் செய்து ஒப்புக் கொடுக்குமாறு கேட்க வேண்டுமென்றும், அவர்கள் விடுதலை பெற்று மோட்சம் சேர்ந்ததும் இவ்வாறு வேண்டிக் கொண்டவர்களுக்கு நிரம்ப நலன்களைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்றும் அர்ச். சாமிநாதரிடம் கூறும்படி அவ்வானமாக்கள் கேட்டுக் கொண்டன.