இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 47. தகுந்த மனநிலை வேண்டும்

மோட்சத்துக்கு முன் குறிக்கப்பட்ட ஆன்மாக்களே! இறைவனால் உண்டானவர்களே! தங்கள் பக்தியற்ற வாழ்க்கையாலும் அசமந்தத்தினாலும் பற்றுதலின்மை யாலும் தங்களையே ஆக்கினைத் தீர்ப்பிட்டுக் கொள்கிறவர்களிடமிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். மேலும் காலதாமதம் இன்றி அடிக்கடி ஜெபமாலை சொல்லுங்கள். தாழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நீடித்த முயற்சியுடனும் சொல்லி வாருங்கள்.

நமதாண்டவர் சேசு கிறீஸ்து அவரைப் போல் நாமும் எப்போதும் ஜெபிக்க வேண்டுமென்று நமக்குக் கூறியுள்ளார். ஏனென்றால், ஜெபம் நமக்கு எப்போதும் தேவையாயிருக்கிறது. நம் மனம் இருண்டு கிடக்கிறது; நாம் அறியாமையில் உழல்கிறோம். நாம் பலமற்றவர் களாயிருக்கிறோம். நம் பகைவரோ பலர். அவர்கள் வலிமையுடையவர்களாயிருக்கிறார்கள். ஆண்டவரின் இக்கட்டளையை உண்மையாகவே செவிமடுக்கிறவன் நிச்சயம் ஆண்டுக்கொரு ஜெபமாலையுடன் நிறுத்த மாட்டான் (ஆயுள் உறுப்பினரைப் போல). அல்லது வாரத்துக்கு ஒரு ஜெபமாலை மட்டும் சொல்ல மாட்டான் (சாதாரண உறுப்பினரைப் போல), ஆனால் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்வான் (நாள் உறுப்பினரைப் போல). இதில் அவன் ஒருபோதும் தவறமாட்டான். தன் ஆன்மாவைக் காப்பாற்றுவது ஒன்றுதான் அவன் கடமையென்றாலும் அன்னைக்கு ஜெபமாலையை அவன் எப்படியும் செய்தே வருவான்.

1. ‘மனந் தளராமல் எப்பொழுதும் நாம் ஜெபிக்க வேண்டும்' (லூக். 18:1) என நமதாண்டவரே கூறியுள்ள நித்திய வார்த்தை இது. நாம் நரகத் தீர்ப்படையாதிருக்க விரும்பினால் ஆண்டவருடைய இவ்வாக்கை ஏற்று அதன்படி ஒழுக வேண்டும். இவ்வார்த்தையை உலகம் எவ்வாறு அர்த்தப்படுத்தியுள்ளதோ அவ்வாறு நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. உலக முறைப்படி இதை நடைமுறையில் கொள்ளவும் கூடாது. மற்றப்படி இவ் வார்த்தையை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரியே.

தம்முடைய இவ்வார்த்தைகளின் உண்மையான பொருளை நம் ஆண்டவரே தம் நடைமுறையால் நமக்கு விளக்குகிறார். 'நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்; நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்' (அரு. 13:15). ஜெபிப்பதில் இரவெல்லாம் கழித்தார் (லூக் 6:12), சேசுவுக்கு பகல் நேரம் பற்றாக் குறையானது போல் அவர் இரவு நேரத்தை ஜெபத்தில் கழித்தார். 'விழித்திருந்து ஜெபியுங்கள்' என்று அவர் தம் சீடர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார். ஊனுடல் பலமற்றது. சோதனையோ, எங்கும் எப்போதும் உங்களைச் சுற்றிலும் உள்ளது. நீங்கள் ஜெபத்தில் நிலைத்திரா விட்டால் தவறி விழுவீர்கள். ஆண்டவர் இவ்வாறு கூறியதெல்லாம் ஒரு ஆலோசனை போலத்தான் என்று அவர்களுள் சிலர் கருதியதால் அதன் பொருளைக் கண்டுபிடியாமலே போய் விட்டார்கள். இதனாலேயே அவர்கள் சேசுவுடன் இருந்த போதிலுங்கூட சோதனையிலும், பாவத்திலும் விழுந்தார்கள்.

ஜெபமாலை சபை உறுப்பினரே! நீங்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து உலகத்துக்குரியவர்களாயிருக்க விரும்பினால் - அதாவது, சமயா சமயங்களில் சாவான பாவத்தில் விழுந்து, அதன்பின் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்வது போதும் என்று நினைப்பதாயிருந்தால் உலகம் ஈனம் எனக் கருதுகிற துலக்கமான பாவங்களை விலக்கி, அதே நேரத்தில் 'அந்தஸ்து எனப்படுகின்ற பாவங்களை' நீங்கள் செய்கிறவர்களாயிருந்தால் - இத்தனை ஜெபங்களைச் சொல்லவோ, இத்தனை ஜெபமாலைகளைச் சொல்லவோ, தேவையே இல்லை! 'உயர்ந்த ரகமாய் இருப்பதற்கு அதிக சிரமம் இல்லை . காலையிலும் மாலையிலும் ஒரு மிகச் சிறிய ஜெபம், பாவ சங்கீர்த்தனத்தில் அபராதமாகக் கொடுக்கப்படும் ஜெபமாலை - உங்களுக்கு விருப்பமும் சௌகரியமும் இருக்கும் போது ஜெபமாலையில் நீங்கள் சொல்லும் சில பத்து மணி ஜெபங்கள் (இது எப்படிச் சொல்லப்படுமென்றால், ஒரு கவனமுமில்லாமல் ஏதோ முறையைக் கழிப்பது போல) இவ்வளவு போதும் உயர்ந்த ரகமாயிருப்பதற்கு இந்த அளவு ஜெபத்தை நீங்கள் குறைப்பதாயிருந்தால் உங்களை சுயமரியாதைக்காரன் என்றோ ஊதாரி என்றோ பிறர் கூறுவார்கள். இந்த அளவை விட அதிகமாக நீங்கள் ஜெபித்தால் உங்களை பக்திமான் எனப் பட்டம் சூட்டி விடுவார்கள். ஆனால்,

- நீ உண்மையான கிறீஸ்தவ வாழ்க்கை வாழ விரும்பினால்,

- உண்மையிலேயே உன் ஆன்மாவை இரட்சிக்க விரும்பினால்,

- அர்ச்சிஷ்டவர்களின் பாதையில் நீ நடக்க விரும்பினால்,

- ஒரு போதும் சாவான பாவத்தில் விழாமலிருக்க வேண்டுமானால்,

- சாத்தானின் கண்ணிகளை அறுத்தெறிய நீ விரும்பினால்,

அவன் வீசும் அம்புகள் உன்னைத் தாக்காமல் தப்ப விரும்பினால், 

நம் ஆண்டவர் கூறியது போல், அவர் கட்டளையிட்டது போல, நீ எப்பொழுதும் ஜெபித்து வர வேண்டும்.

மேற்கூறிய இவ்விருப்பத்தை நீ உண்மையிலே உன் இருதயத்தில் கொண்டிருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் உன் ஜெபமாலையைச் சொல். அல்லது அதற்கு ஈடான வேறொன்றைச் செய், 'குறைந்தபட்சம் என்று கூறினேன். ஏனென்றால், இவ்வாறு நீ செய்யும் ஜெபமாலை அநேகமாய் உன்னை சாவான பாவத்திலிருந்து காப்பாற்றி சோதனைகளை வெல்லச் செய்யும். இதன் காரணம் யாதெனில் உலகத்தின் தீய அக்கிரம நீரோட்டத்தில் நீ விடப்பட்டிருக்கிறாய். இத்தீமைகளால் அநேக திடமான ஆன்மாக்கள் கூட அடித்துச் செல்லப்பட்டு விட்டார்கள். மிகவும் ஒளி பெற்ற ஆன்மாக்களைக்கூட அடிக்கடி குருடாக்கி விடுகிற இருண்ட காரிருளின் மத்தியில் நீ இருக்கின்றாய். கெட்ட அரூபிகளால் நீ சூழப்பட்டிருக்கிறாய், இக்கெட்ட அரூபிகள் அனுபவத்தில் மிகவும் தேர்ந்தவை. கொஞ்சக் காலம் மட்டுமே தங்களுக்கு உள்ளதென அறிந்திருப்பதால், அவை உன்னைச் சோதிப்பதில் அதிக தந்திரமும் ஆற்றலும் கொண்டுள்ளன.

உலகம் பசாசு சரீரம் இவற்றின் பிடியிலிருந்து தப்பி சாவான பாவத்தில் விழாமல் காப்பாற்றப்பட்டு, மோட்சத்தை நீ அடைந்து விட்டால், அது மகா பரிசுத்த ஜெபமாலையால் நிகழும் ஒரு அருளின் புதுமையே ஆகும். என்னை நீ நம்ப விரும்பாவிட்டாலும் உன் சொந்த அனுபவத்திலிருந்தாவது கற்றுக் கொள். உன்னிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உலகத்தார் இருக்கிறார்களே, அவர்கள் சொல்லும் ஜெபங்களை மட்டும் நீ சொல்லி வந்தபோது, அதுவும் அவர்கள் அவற்றை எப்படிச் சொல்கிறார்களோ அப்படியே நீயும் சொல்லி வந்த போது, நீ சாவான பாவத்தில் விழமலிருந்தாயா? அல்லது சாவான பாவமாயிருந்தாலும் உன குருட்டுத் தனத்தில் சாவான பாவமாகத் தோன்றாத கனமான தவறுகளை உன்னால் தடுக்க முடிந்ததா? இப்போதாவது நீ விழித்துக் கொள். பாவத்தில் விழாமலாவது வாழ்ந்து இறக்க நீ விரும்பினால் இடைவிடாமல் ஜெபம் செய். தினமும் தவறாமல் ஜெபமாலை சொல்லி வா, ஜெபமாலை சபை அங்கத்தினர் அதன் ஆரம்ப காலத்தில் செய்து வந்ததைப் போல!

தேவ அன்னை , அர்ச். சாமிநாதருக்கு ஜெபமாலையைக் கொடுத்த போது அதை அவர் தினமும் சொல்ல வேண்டுமென்றும் மற்றவர்களும் அவ்வாறே சொல்லும்படி செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தினம் தவறாமல் ஜெபமாலை சொல்ல உறுதிப்படாத யாரையும் அவர் அச்சபையில் ஏற்றுக் கொண்டதில்லை. இன்று சாதாரண அங்கத்தினர் வாரம் ஒரு ஜெபமாலை சொல்வது போதும் என்று அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால், அது பக்தி தளர்ந்து. தேவ சிநேகம் குறைந்துள்ள காரணத்தினால்தான். ஜெபிப்பதில் வறியவன் ஒருவன் இருந்தால் அவனிடம் எவ்வளவு கேட்க முடியுமோ அவ்வளவு கேட்போம். ஆனால் 'ஆதியிலே இவ்வாறு இருந்ததில்லை.

மூன்று காரியங்கள் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

1 ஜெபமாலை சபையில் உட்பட்டு அதன் அங்கத்தினரின் ஜெபங்களிலும் பேறுபலன்களிலும் பங்கு பெற நீ விரும்பினால், சாதாரண உறுப்பினனாக இருந்தால் பற்றாது. அல்லது ஜெபமாலையை ஒவ்வொரு நாளும் சொல்வதாக மனதில் தீர்மானித்துக் கொண்டாலும் போதாது. இந்தத் தீர்மானமும் வேண்டும். அனுதின ஜெபமாலை சபையில் சேர்க்க அதிகாரம் உடையவர்களிடம் பெயர் கொடுக்கவும் வேண்டும். * இதன் காரணம் என்னவென்றால், ஜெபமாலை சடையின் சாதாரண உறுப்பினராவதினால் அனுதின ஜெபமாலை சபை அங்கத்துவம் வாய்ப்பதில்லை. ஆனால் அனுதின ஜெபமாலை சடையில் சேர்ந்தால் சாதாரண உறுப்பினராக முடியும். மேலும் இவ்வாறு சேரும் போது இக்கருத்துக்காக பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்ளுதல் மிக நன்று.

2. தன்னிலே பார்த்தால், ஜெபமாலையைத் தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை சொல்லாவிட்டால் அற்பப்பாவம் கூட இல்லை.

3. உடல்நலக் குறைவால், அல்லது நியாயமான அதிகாரத்திற்கு உட்பட்டு மேற்கொண்ட அலுவலின் காரணத்தால், அல்லது முழு மறதியால் நீ ஜெபமாலை

* ஜெபமாலை சபையின் மறு உருவமே வாழும் ஜெபமாலை. அதில் சேருவதால் ஜெபமாலை சபையினர் அடையும் பலன்களை நாமும் அடையலாம்.

சொல்லத் தவறினால், மற்ற ஜெபமாலை சபை அங்கத்தினரின் ஜெபமாலை, பேறுபலன் இவற்றில் உன் பங்கை நீ இழப்பதில்லலை. எனவே எனக்குத் தெரிகிறபடி, ஒரு நாள் சொல்லத் தவறிய ஜெபமாலையை அடுத்த நாள் சொல்ல வேண்டியதில்லை. ஆயினும் நீ உடல் நலமில்லாதிருக்கையில் உன்னால் ஜெபமாலையின் ஒரு பகுதியை சொல்ல முடியுமானால் அதைச் சொல்ல வேண்டும்.

'உம் முன்பாக எப்பொழுதும் நின்று உம் ஞானத்தைக் கேட்டவர்கள் பாக்கியவான்கள் (1 அர. 10:8) உமது வீட்டில் வாசம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் நித்திய காலங்களிலும் உம்மைத் துதிப்பார்கள்', (சங். 84:4), 'ஓ அன்புள்ள ஆண்டவராகிய சேசுவே! அனுதின ஜெபமாலை சபையினரான சகோதரரும், சகோதரிகளும் எந்நாளும் உமது முன்னிலையில் இருக்கிறார்கள். இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்கள் உமது சந்தோச துக்க மகிமை தேவ இரகசியங்களைத் தியானிப்பதற்காக நசரேத்திலுள்ள உம் சிறிய இல்லத்திலும் கல்வாரியில் சிலுவையடியிலும், மோட்சத்தில் உமது அரியாசனத்தைச் சுற்றியும் நிற்கிறார்கள். நீர் அவர்களுக்கு அளிக்கும் வியத்தகு வரங்களால் பூவுலகில் அவர்கள் எவ்வளவு மகிழ்வுடன் இருக்கிறார்கள். மோட்சத்தில் உம்மை தனிச்சிறந்த முறையில் எக்காலமும் வாழ்த்தித் துதிக்கும் அவர்கள் எவ்வளவு பாக்கியவான்களாய் இருப்பார்கள்!

I. ஜெபமாலை, விசுவாசத்துடன் சொல்லப்பட வேண்டும். ஏனென்றால், 'நீங்கள் ஜெபம் பண்ணும் போது கேட்கிறதையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவசியுங்கள். அவைகள் உங்களுக்கு சம்பவிக்கும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்' (மாற். 11:24) என நமதாண்டவர் உரைக்கிறார். எல்லாம் வல்லவரான சர்வேசுரனிடமிருந்து நீங்கள் கேட்பதையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவசித்தால் நீங்கள் கேட்பதை அவர். தருவார். 'நீ விசுவசித்தபடியே உனக்கு ஆகக்கடவது' (மத் 813) என்று அவர் உனக்கு கூறுவார். 'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால்... சர்வேசுரனிடத்தில் கேட்கக் கடவான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனால் அவன் சற்றும் தத்தளியாமல் விசுவாசத்தோடு கேட்கக்கடவான் (யாக. 1:5,6). ஞானம் யாருக்குத் தேவையோ அவன் விசுவாசத்தோடு அதைக் கேட்கட்டும். தயங்காமல் கேட்கட்டும். தன் ஜெபமாலை வழியாகக் கேட்கட்டும். அவன் கேட்பது அவனுக்குக் கொடுக்கப்படும்.

II, மூன்றாவதாக, நாம் தாழ்ச்சியுடன் ஜெபிக்க வேண்டும். ஆயக்காரனைப் போல, அவன் தன் இரு முழங்கால்களிலும் நின்றான் - அதுவும் முன்னுள்ள பெஞ்சில் ஊன்றிக் கொண்டு தற்பெருமையுள்ள உலகச் சார்புடையவர்கள் செய்வது போல் ஒரு முழங்காலில் மட்டுமல்ல, பரிசேயனைப் போல பீட முற்றத்திலல்ல, கோவில் கடைசியில் இருந்தான் ஆயக்காரன், அவன் பரலோகத்தை எட்டிப் பார்க்கவும் துணியாமல் தாழ்த்திய கண்களோடு இருந்தான், பரிசேயனைப் போல் தலையை உயர்த்தி பெருமையுடன் சுற்றிலும் பார்வையைச் செலுத்தவில்லை, பாவ அறிக்கையிட்டு மார்பில் தட்டி மன்னிப்புக் கேட்டான். 'பாவியாகிய என் மீது இரக்கமாயிரும் (லூக் 18:13) தன் ஜெபத்தில் பிறரை இகழ்ந்து தன் நற்செயல்களைப் புகழ்ந்து கொண்ட பரிசேயனைப் போல அவன் இல்லவே இல்லை, தன் இருதயத்தை கடினமாக்கி பாவத்தை அதிகரிக்கச் செய்த இப்பரிசேயனுடைய ஆங்காரத்தைப் பின்பற்றி விடாதீர்கள். அவனுடைய ஜெபம் அவன் இருதயத்தைக் கடினமாக்கி அவன் குற்றத்தை அதிகமாகத்தான் ஆக்கியது. பாவ மன்னிப்பை பெற்றுத் தந்த ஆயக்காரனுடைய தாழ்ச்சியைக் கண்டு நடங்கள்.

அசாதாரணமான எதையும் செய்யாதபடி வெகு கவனமாயிருக்க வேண்டும். அசாதாரண காரியங்களைப் பற்றி அறிய விரும்ப வேண்டாம். அவற்றிற்காக மன்றாடவும் கூடாது. காட்சிகள், வெளிப்படுத்தல்கள் அல்லது சர்வேசுரன் சில சமயங்களில் தம் அர்ச்சிஷ்டவர்கள் ஜெபமாலை ஜெபிக்கையில் அவர்களுக்கு அருளிய அற்புத வரம் இவற்றைப் பெற விரும்பவோ மன்றாடவோ கூடாது, 'விசுவாசம் ஒன்றே போதும். சுவிசேஷமும் மற்ற எல்லா பக்தி முயற்சிகளும் நற்பழக்கங்களும் திடமாய் வேரூன்றப்பட்டுள்ளன என்பதால் விசுவாசம் மட்டுமே தாராளமாய் நமக்குப் போதும்.

நீ ஆன்ம வறட்சியுற்றிருந்தாலும், அல்லது சலிப்புணர்வு, தளர்வு இவற்றில் உழன்றாலும், அதற்காக உன் ஜெபமாலையில் ஒரு சிறு பகுதியைக்கூட சொல்லாமல் விட்டு விடாதே. நீ அவ்வாறு விட்டு விடுவது ஆங்காரத்தின் அல்லது பிரமாணிக்கம் தவறுதலின் நிச்சயமான அடையாளமாகும். ஆனால் சேசு மரியாயின் உண்மை வீரனைப் போல பரலோக மந்திரத்தையும், அருள் நிறை மந்திரத்தையும் சொல். எதையும் காணாத, கேட்காத உணர்ச்சியே அற்ற நிலையிலும்கூட எந்த ஆறுதலுமே இல்லாவிட்டாலும் கூட உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மட்டும் தேவ இரகசியங்களை சிந்தனை செய். குழந்தைகள் இனிப்பைத் தேடுவது போல உன் அனுதின அப்பத்திற்கு நீ தேடக்கூடாது. சில சமயம் ஜெபமாலை சொல்ல அதிகக் கடினமாய் இருக்கும் போது அதை இன்னும் மெதுவாக நிறுத்திச் சொல்ல வேண்டும். நமதாண்டவர் பூங்காவனத்தில் பட்ட மரண அவஸ்தையை நல்ல விதமாய்க் கண்டு பாவிப்பதற்காக அவ்வாறு செய், 'அவரோ அவஸ்தையாகி வெகு நேரம் ஜெபித்துக் கொண்டிருந்தார் (லூக், 22:43) ஆண்டவரைப் பற்றிச் சொல்லப்பட்டது உன்னைப் பற்றியும் சொல்லப்பட வேண்டும். அவஸ்தையாகி வெகு நேரம் ஜெபித்தார்.

IV. நம்பிக்கையோடு ஜெபி. கடவுளின் அளவற்ற நன்மைத்தனத்திலும் அளவற்ற தாராள குணத்திலும் நம்பிக்கை வைத்து ஜெபி. சேசு கிறீஸ்துவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து ஜெபி. ஜெபிக்கிறவர்களுடைய இருதயங்களில் இடைவிடாமல் பாயும் ஜீவிய நீரூற்றாய் இருப்பவர் கடவுள். நித்திய பிதா தமது வாழ்வு தரும் நீரூற்றுக்களான தேவ வரப்பிரசாதங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது போல் வேறு எதையும் ஆசிப்பதில்லை. நம்மை நோக்கி அவர் 'தாகமாயிருப்பவர்களே அனைவரும் தண்ணீ ரருகில் வாருங்கள்' (இசை, 55:1) என்கிறார். அதாவது ஜெபத்தின் மூலம் நீரூற்றில் வந்து பருகுங்கள்'. ஜெபத்தினால் நாம் அவரிடம் எதையும் கேட்காமல் இருக்கும் போது அவரை நாம் கை விடுவதாக துயரத்தோடு கூறுகிறார். 'உயிருள்ள நீர் சுரக்கும் ஊற்றாகிய எம்மைக் கை நெகிழ்ந்தார்கள்' (எரே. 2:13).

நமதாண்டவரிடம் நாம் வரப்பிரசாதங்களைக் கேட்கும் போது அவர் மகிழ்கிறார். நாம் அவரிடம் கேட்காவிட்டால் அன்பான ஒரு குறை கூறுகிறார். இதுவரைக்கும் நீங்கள்.... ஒன்றும் கேட்கவில்லலை... கேளுங்கள்... பெற்றுக் கொள்வீர்கள்' (அரு16:24) 'தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும் (மத். 7:7).

மேலும் நமக்கு அவர் மீது அதிக நம்பிக்கை ஏற்படும்படி தம்மையே ஒரு வாக்குறுதிக்கு உட்படுத்தியுள்ளார். தம் நாமத்தால் பிதாவிடம் நாம் எதைக் கேட்டாலும் தருவதாக.