இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 46. கூட்டு ஜெபமாலை

ஜெபமாலை சொல்வற்குப் பல முறைகள் இருக்கின்றன. ஆயினும் எல்லாம் வல்ல சர்வேசுரனுக்கு மிகச் சிறந்த மகிமையளிப்பதும் ஆன்மாக்களுக்கு அதிக நலன் பயப்பதும் மற்ற எதனையும் விட பசாசு அதிகம் பயப்படுவதுமான முறை எதுவென்றால், ஜெபமாலையை பகிரங்கமாய் இரண்டு குழுக்களாக இருந்து ஜெபிப்பது அல்லது பாடுவதாகும்.

மக்கள் ஜெபிப்பதற்கென குழுமியிருப்பதை ஆண்டவர் அதிகம் விரும்புகிறார். சம்மனசுக்களும் அர்ச்சிஷ்டவர் களும் கடவுளை இடைவிடாமல் புகழ கூடியிருக்கிறார்கள். பூமியில் நல்லவர்கள் பல கூட்டங்களாய்ச் சேர்ந்து இரவும் பகலும் பொது ஜெபம் செய்கிறார்கள். அப்போஸ்தலர் களும் சீடர்களும் பொது ஜெபம் செய்யும்படி நமதாண்டவர் கூறினார். அவருடைய நாமத்தில் எங்கே இருவர் அல்லது மூவர் கூடியிருப்பார்களோ அவர்கள் நடுவில் தாம் இருப்பதாக வாக்களித்தார் (மத். 18:20)

சேசு கிறீஸ்துவை நம் மத்தியில் கொண்டிருப்பது எத்தகைய நல்ல காரியம். சேசுவை நம் மத்தியில் கொண்டு வருவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாம் குழுமியிருந்து ஜெபமாலை சொல்வதே. இதனாலேயே ஆதி கிறீஸ்தவர்கள் கூட்டமாய்ச் சேர்ந்திருப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், உரோமை சக்கரவர்த்திகளின் வேத கலாபனையையும் பொருட்படுத்தாமல் ஜெபிப்பதற்காக அடிக்கடி ஒன்று கூடி வந்தார்கள். நமதாண்டவர் தங்களுடன் இருக்கும் அந்தக் கூட்டங்களுக்கு வரும்படி உயிராபத்தில் உட்படவும் அவர்கள் தயாராயிருந்தார்கள். இவ்வாறு கூட்டாய்ச் சேர்ந்து ஜெபித்தால் நமக்கு மிகப் பெரிய நன்மையாக இருக்கிறது. ஏனென்றால்.

1 நாம் கூட்டமாகச் சேர்ந்து ஜெபிக்கும் போது, தனிமையில் ஜெபிப்பதை விட நம் மனம் அதிக விழிப்புடன் இருக்கிறது.

2. சேர்ந்து ஜெபிக்கும் போது ஒவ்வொருவரின் ஜெபமும் மற்ற எல்லாருடையதாகிறது. எல்லாம் சேர்ந்து ஒரு மாபெரும் ஜெபமாகிறது. கூட்டத்தில் ஒருவன் நன்றாக ஜெபியாமல் இருந்தாலும் அதிக நன்றாகச் ஜெபிக்கும் இன்னொருவனின் ஜெபம் அந்தக் குறையை நிறைவாக்குகிறது. இவ்விதம், பலமுள்ளவர்கள் பலவீனரைத் தாங்கிக் கொள்கிறார்கள். நல்ல பக்தி உருக்கமுடையவர்கள் மிதமானவர்களைத் தூண்டி எழுப்புகிறார்கள். ஜெபத்தில் திரவியவான்கள் அது இல்லாத ஏழைகளை நிறைவிக்கிறார் கள். மோசமானவர்கள் நல்லோராகக் கருதப்படுகிறார்கள். ஒரு அளவு பதரை நாலைந்து அளவு நல்ல தானியத்துடன் விரவினால் பதரும் விற்பனையாகிவிடும். * (* இதை ஒரு உபமானமாக இப்புனிதர் கூறுகிறாரேயன்றி இவ்வாறு கலப்படம் செய்வதை ஆதரித்து அல்ல. எந்த உபமானத்திலும் குறை இருக்கவே செய்யும்).

3. தனியே ஜெபமாலை சொல்லும் ஒருவன் ஒரு ஜெபமாலையின் பலளைத்தாள் பெறுகிறான். ஆனால் முப்பது பேருடன் சேர்ந்து அவன் அதைச் சொன்னால், முப்பது ஜெபமாலைப் பலன்களையும் பெறுகிறான். பொதுச் ஜெபத்தின் திருச்சட்டம் இது. எவ்வளவு இலாபகரமானது எவ்வளவு உபயோகமுள்ளது.

4. எட்டாம் உர்பன் என்ற பாப்பு, உரோமையில் ஜெபமாலைப் பக்தி பரவி வந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இரு குழுக்களாக இருந்து மக்கள் ஜெபமாலை சொல்வார்கள். அல்லது பாடுவார்கள். சிறப்பாக அர்ச். மினெர்வா சோப்ரா மரியா என்ற இடத்தில் இந்தப் பழக்கம் நிலவியது. இதைக் கண்ட பாப்பரசர், இரு குழுக்களாக ஜெபமாயைச் சொல்லும் போதெல்லாம், மக்கள் அதிகமான பலன்களை அடைவார்கள் என 1626 ல் வெளியிட்ட தமது சுற்றுமடல் ஒன்றில் அறிவித்தார். ஆகவே இரு குழுக்களாக ஜெபமாலை சொல்லும் நாமும் இந்த அதிகமான பலனை அடைகிறோம்.

5. இறைவனின் சினம் அமரவும் அவருடைய இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளவும் தனி ஜெபத்தைவிட பொது ஜெபத்திற்கு அதிக வலிமை உள்ளது. பரிசுத்த தாயாகிய திருச்சடையும் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு மக்களுக்குப் பெரிய ஆபத்து, தீமைகள் நேரிடும் காலத்தில் பொது ஜெபங்கள் செய்யப்பட வேண்டுமென்று எப்போதும் ஆதரவு காட்டி வந்துள்ளது.

பதிமூன்றாம் கிரகோரியார் என்ற பாப்பு ஜெபமாலையைப் பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் 1571-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்று லெப்பான்டோ என்னுமிடத்தில் துருக்கியர் மீது கிறீஸ்தவர்களுக்கு கிடைத்த வெற்றி பெரும்பாலும் ஜெபமாலைப் பக்தி சபையினர் செய்த பொது ஜெபத்தாலும் அவர்கள் நடத்திய பொதுப் பக்திப் பவனிகளாலுமே என்பதை நாம் பக்தி விசுவாசமாய் {on pious faith) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஒரு தடவை, நம் நல் நினைவுக்குரியவரான லூயிஸ் அரசன் {Louis the Just) எதிர்த்தெழுந்த பதிதர்களின் பலக்கோட்டையான ரோச்செல் என்னுமிடத்தை முற்றுகையிட்டார். அங்கிருந்து அவர் தம் தாய்க்குக் கடிதம் எழுதி, தான் வெற்றியுடன் திரும்புமாறு பொது ஜெபங்கள் செய்யப்பட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவ்வம்மையாரும் பாரிஸிலுள்ள சாமிநாதர் சபை ஆலயம் ஒன்றில் (Church Faubourg Saint Honore) ஜெபமாலையை பொதுவில் சொல்ல வேண்டுமென்று தீர்மானித்தாள். பாரீஸ் நகர மேற்றிராணியாரால் இந்தப் பொது ஜெபமாலை நடத்தப்பட்டது. முதல் ஜெபமாலை 1628-ம் ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் சொல்லப்பட்டது.

லூயிஸ் அரசனின் தாயும் அவரது பட்டத்து ராணியும் இப்பொது ஜெபமாலைக்குச் சென்றனர். அவர்களுடன் ஆர்லியன்ஸ் நகர அதிபதியும், காதினால்மார்களான ரோச் வூக்கோ, பெரூல் என்பவர்களும் மற்றும் மேற்றிராணிமாரும் அதில் கலந்து கொண்டனர். அரண்மனையின் அலுவலர் யாவரும் அதில் சேர்ந்து கொண்டார்கள், ஏராளமான பொது மக்களும் இச்செபத்தில் பங்கு கொண்டார்கள். ஜெபமாலைத் தேவ இரகசியங்களின் தியானத்தை மேற்றிராணியார் உரத்த குரலில் வாசிப்பார். பின் பரலோக மந்திரத்தையும் அருள் நிறை மந்திரத்தையும் ஆரம்பிப்பார்.

அவர் முதல் பாதியைச் சொல்ல அங்கு கூடியிருந்த துறவிகளும் விசுவாசிகள் அனைவரும் பிந்திய பாதியைச் சொல்வார்கள். இவ்வாறு ஜெபமாலை சொல்லி முடிந்தவுடன் தேவ அன்னையின் சுரூபம் ஒன்றை பவனியாக எடுத்துச் செல்வார்கள். பவனியின் போது தேவதாயின் பிரார்த்தனை பாடப்படும்.

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் இப்பக்தி முயற்சி நடைபெற்றது. மிக ஆச்சரியமான பக்தி ஊக்கத்துடன் நடந்தது. இதன் பலனாக பரலோகத்திலிருந்து தேவ ஆசீர் இறங்கியது. அதே ஆண்டு சகல அர்ச்சிஷ்டவர்களின் விழாவன்று லூயிஸ் அரசன் ஆங்கிலேயரை ரெ என்ற தீவில் தோற்கடித்தார். வெற்றி வீரராய் ரோச்செல் கோட்டைக்குள் நுழைந்தார். பொதுச் ஜெபத்தின் மகிமையை இது காட்டுகின்றது.

மேலும் மக்கள் சேர்ந்து ஜெபமாலை சொல்வது, தனியாகச் சொல்வதைவிட பசாசுக்கு மிக மிக பயங்கரத்துக்குரியதாகின்றது. ஏனென்றால் இப்பொது ஜெபத்தில் ஒரு பெரும்படையே சாத்தானை தாக்குதல் செய்கிறது. ஒரு தனிநபரின் ஜெபத்தை பசாசு பல சமயங்களில் மேற்கொண்டு விட முடியும். ஆனால் இச்செபம் மற்ற கிறீஸ்தவர்களுடைய ஜெபத்துடன் சேர்ந்து சொல்லப்படுமானால் அதை எதிர்க்க சாத்தானால் எளிதில் கூடுவதில்லை . ஒரு குச்சியை எளிதில் ஓடித்து விடலாம், ஆனால் அதை வேறு குச்சிகளுடன் சேர்த்துக் கட்டி விட்டால் அதை ஒடிக்க முடியாது.

'ஒற்றுமையே பலம், போர் வீரர்கள் எதிரிகளை வெல்ல ஒரு அணியாய்ச் சேர்ந்து கொள்கிறார்கள். கெட்டவர்கள் கூட்டாகச் சேர்ந்து தங்கள் ஒழுக்கக் கேடுகளையும் நடனங்களையும் நடத்துகிறார்கள். கெட்ட அரூபிகள் ஒன்று சேர்ந்து நம் ஆன்மாக்களை கெடுக்கத் தேடுகின்றன. அப்படியானால் ஜெபிக்கும் போது சேசு கிறீஸ்துவை தங்களுடன் கொண்டிருக்க கிறீஸ்தவர்கள் ஏன் ஒன்று சேரக் கூடாது? இறைவனின் முடிவை சாந்தப்படுத்தலும் அவருடைய வரங்களையும், இரக்கத்தையும் நம்மீது இறங்கத் தடை செய்யும் பசாசையும் அதன் தூதரையும் அதிக வேகமுடன் சிதறடிக்கவும் கிறீஸ்தவர்கள் ஏன் ஒன்று திரளக்கூடாது?

ஜெபமாலை சபை அங்கத்தினர்களே! நீங்கள் பட்டணத்தில் வாழ்ந்தாலும் கிராமத்தில் இருந்தாலும், உங்கள் பங்குக் கோவிலுக்கு அருகில் இருந்தாலும் அல்லது ஒரு சிறு சேத்திரத்தின் அருகில் இருந்தாலும் ஒவ்வொரு நாள் மாலையிலும் அங்கு செல்லுங்கள். இரு பிரிவாக சேர்ந்து ஜெபமாலை சொல்ல விரும்புகிறவர்களுடன் சொல்லுங்கள். கோவிலுக்கோ ஒரு சேத்திரத்திற்கோ இவ்வாறு போக முடியாவிட்டால் உங்கள் வீட்டிலோ அடுத்த வீட்டிலோ ஜெபமாலையை சேர்ந்து சொல்லுங்கள். சர்வேசுரன் தமது இரக்கத்தினால் நான் தியானப் பிரசங்கம் நிகழ்த்திய இடங்களில் நிறுவிய ஒரு புனித வழக்கம் இது. இந்தத் தியானப் பிரசங்கங்களினால் விளைந்தநன்மையைப் பாதுகாக்கவும், அதிகரிக்கவும், மேற்கொண்டு பாவத்தைத் தடுக்கவும் இறைவன் செய்துள்ள ஏற்பாடு இது.

இச்சிறு பட்டணங்களிலும் கிராமங்களிலும் ஜெபமாலைப் பக்தி வேரூன்றும் முன்னர் அங்கு நாட்டியங்களும் ஒழுக்கக் கேடான விருந்துக் கூட்டங்களும் எல்லாப் பக்கமும் நடந்து கொண்டிருந்தன. கட்டுப்பாடின்மையும் தேவ தூஷணமும் சண்டை சச்சரவுகளும் வளர்ந்திருந்தன. எங்கும் கெட்ட பாட்டுகளும் ஈரர்த்தமுள்ள பேச்சும்தான். ஆனால் இப்போது அதே இடங்களில் வேதப் பாடல்களும் பரலோக மந்திரம் அருள் நிறை மந்திரம் இவற்றின் இசை நாதமும் கேட்கின்றன. மக்கள் கூடினால் அது துறவு சபைகளில் நடப்பது போல், இறைவனைப் புகழ்வதற்காகவே. குறிப்பிட்ட நேரங்களில் 20, 30 அல்லது 100 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் கூடுகிறார்கள். ஒரு வேளைக்கு ஐம்பத்து மூன்று மணி வீதம் ஒரு நாளில் மூன்று வேளை கூடி பொது ஜெபமாலை சொல்லப்படும் இடங்கள் உள்ளன. பரலோகத்திலிருந்து கிடைத்த எத்தகைய ஆசீர்வாதம் இது!

எல்லா இடங்களிலும் தீயோர் உள்ளார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என எதிர்பாராதீர்கள். எப்படியும் சிலர் ஜெபமாலை சொல்ல கோவிலுக்கு வரமாட்டார்கள். அவர்கள் அதைக் கேலி கூட செய்வார்கள். தங்கள் துர்மாதிரிகையாலும் தீய மொழியாலும் நீங்கள் ஜெபமாலைக்குப் போவதை நிறுத்தக்கூட ஆவன செய்வார்கள். ஆனால் நீங்கள் இதை விட்டு விடாதீர்கள். இந்நிர்ப்பாக்கியரின் இடம் நரகம். இவர்கள் கடவுளிடமிருந்தும், மோட்சத்திலிருந்தும், நித்தியத்துக்கும் பிரிக்கப்பட வேண்டியவர்களாயிருப்பதால், இவ்வுலகிலேயே நமதாண்டவர் கிறீஸ்துவிடமிருந்தும் அவருடைய ஊழியர், ஊழியக்காரிகளிடமிருந்தும் பிரிக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.