இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 45

ஜோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்பண்ணினதும் - அவன் அவர்களுக்குத் தேறுதலைச் சொல்லியதும் - அவன் தன் தகப்பனை வரவழைத்ததும் - அவன் சகோதரர் பிரயாணத்துக்கு வேண்டியவைகளைச் சேகரித்துக் கொடுத்து அனுப்பினதும் - யாக்கோபு திடன் கொண்டதும்.

1. (அப்பொழுது) ஜோசேப்பு தன் அருகே நிற்கிற அத்தனைபேருக்கு முன்பாகத் தன்னை அடக்கிக்கொள்ளக் கூடாமல், தானுந் தன் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் அடையாளங் கண்டுபிடிக்கப் போகிறதற்குப் பிறத்தியான் இல்லாதபடிக்கு மற்றவர்களெல்லோரும் வெளியே போகும்படி கற்பித்த பின்பு,

2. எஜிப்த்தியரும் பரவோனின் வீட்டாரும் கேட்கத் தேம்பியழுது, 

3. தன் சகோதரர்களை நோக்கி: நானே ஜோசேப்பு! என் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரோ? என்று அலறிக் கேட்டான். ஆனால் அவனுடைய சகோதரர் திகில்பட்டு பதில் சொல்லக் கூடாமலிருப்பது கண்டு, 

4. அவன் அவர்களைத் தயவோடே நோக்கி: என் அண்டை வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப் போனபோது, அவன்: நீங்கள் எஜிப்த்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய ஜோசேப்பு நான்தானே.

5. பயப்படாதேயுங்கள்; என்னை இந்தத் தேசத்திற்கு வரும்படி நீங்கள் விற்றுப் போட்டதினாலே நீங்கள் சஞ்சலப் பட வேண்டாம்; ஏனெனில் உங்கள் ஜீவரட்சணைக்காகத் தேவன் உங்களுக்கு முன்னே என்னை எஜிப்த்துக்கு அனுப்பியருளினார்.

* 5-ம் வசனம். நீங்கள் என்னை வஞ்சகம் பண்ணினது பொல்லாத பாதகந்தான். ஆயினும் தேவ திருவுளத்தால் அவைகள் நடந்தேறினதென்று அறிந்து, இனிமேல் கொடுமை யென்று எண்ண வேண்டாம் என்பதே இதன் தாற்பரியம்.

6. பூமியிலே பஞ்சந் தொடங்கி இரண்டு வருஷமாயிற்று; இன்னும் ஐந்து வருஷமளவும் உழவும் அறுப்பும் நடந்தேறாது.

7. ஆதலால் பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமல் இருக்கும்படியாகவும், நீங்கள் வேண்டிய உணவுகளைப் பெற்றுப் பிழைக்கும்படியாகவும் அல்லோ தேவன் என்னை உங்களுக்கு முன்னமே இவ்விடத்தில் வரப்பண்ணினார்.

8. உங்கள் யோசனையால் அல்ல, கடவுளின் திருவுளத்தினாலே இவ்விடத்திற்கு அனுப்பப்பட்டேன். அவரே என்னைப் பரவோனுக்குத் தந்தையைப் போலவும், அவருடைய முழு வீட்டுக்கு எஜமானாகவும் எஜிப்த்து தேச முழுவதுக்கும் அதிபதியாகவும் இருக்கச் செய்திருக்கிறார்.

9. நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்திற் போய்ச் சொல்லவேண்டியதாவது: உமது புத்திரனாகிய ஜோசேப்பு உமக்குத் தெரிவிப் பதேதெனில்: கடவுள் என்னை எஜிப்த்து தேச முழுவதுக்கும் அதிபதியாகச் செய்தார்; நீர் சாகாதபடிக்கு என்னிடத்தில் வாரும்,

10. ஜெசேன் நாட்டில் வாசம்பண்ணுவீர்; நீரும் உமது குமாரர்களும் உமது குமாரர்களின் புத்திரர்களும் உமது ஆடு மாடுகளோடும் நீர் கொண்டிருக்கிற (மற்ற) யாவற்றோடுமே என் சமீபத்தில் இருக்கலாம்.

11. (இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும்.) உமக்கும் உம் குடும்பத்தாருக்கும் உமக்கிருக்கிற யாவற்றிற்கும் சாவு நஷ்டம் வராமல் உங்களை நான் பராமரித்துப் போஷித்து வருவேன் என்று சொல்லச் சொன்னானென்று சொல்லுங்கள்;

12. இதோ உங்களோடு பேசுகிற வாய் என் வாய்தானென்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பெஞ்சமீனின் கண்களும் காண்கின்றன.

13. நான் எஜிப்த்திலே அடைந்த சகல மகிமையையும், நீங்கள் எஜிப்த்திலே கண்ட யாவற்றையும் என் தகப்பனுக்குச் சொல்லுங் கள். தீவிரித்துப்போய் அவர் என்னிடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று கூறி,

14. பிறகு தன் தம்பியாகிய பெஞ்சமீனை அரவணைத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான், இவனும் அப்படியே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

15. பின்பு ஜோசேப்பு தன் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு ஒவ்வொருவனையும் கட்டிக்கொண்டு அழுதான். இதன் பின்னரே அவர்கள் அவனோடே சம்பாஷிக்கத் துணிந்தார்கள்.

16. ஜோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள் என்னும் சமாச்சாரம் அரசனுடைய அரண்மனையில் பிரசித்தமாய்க் கூறப்பட்டவுடனே பரவோனும், அவனுடைய வீட்டிலிருப்போரும் அகமகிழ்ந்துகொண் ர்கள்.

17. பரவோன் ஜோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரர்களுக்குச் சொல்லவேண்டியது என்னவெனில்: நீங்கள் மிருகங்களின் மேற் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குப் போய்,

18. அவ்விடமிருந்து உங்கள் தந்தையையும் இனத்தாரையும் கூட்டிக்கொண்டு என்னிடத் திற்கு வாருங்கள்; நான் உங்களுக்கு எஜிப்த் தின் நன்மையெல்லாந் தருவேன், நீங்கள் பூமிக் கொழுமையைச் சாப்பிடுவீர்கள் என் றான்.

19. மறுபடியும் பரவோன் ஜோசேப்பை நோக்கி: உன் சகோதரர் தங்கள் பிள்ளைக ளையும் மனைவிகளையும் கொண்டுவருவதற் காக எஜிப்த்து தேசத்தினின்று வண்டிகளைக் கொண்டு போகும்படி அவர்களுக்குச் சொல்ல வேண்டியதன்றி: நீங்கள் போய் தந்தையை அழைத்துக்கொண்டு கூடியமட்டும் சீக்கிரமாய் வாருங்கள்;

20. உங்கள் தட்டுமுட்டுக்களில் ஒன்றையும் விட்டுவிடாதேயுங்கள்; ஏனெனில் எஜிப்த் தின் செல்வமெல்லாம் உங்களுடையதாகும் என்று சொல்லச் சொன்னான்.

21. இஸ்றாயேலின் குமாரர்கள் தங்களுக் குக் கற்பிக்கப்பட்டிருந்தபடியே செய்தார்கள். ஜோசேப்பு பரவோனுடைய உத்தரவின்படி அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுகளையும் கொடுத்தான்;

22. அன்றியும் அவர்களில் ஒவ்வொரு வனுக்கும் இரண்டு வஸ்திரங்களையும் கொடுப்பித்தான், பெஞ்சமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசுகளையும் விலையேறப் பெற்ற ஐந்து வஸ்திரங்களையும் தந்தான்.

23. அப்படியே தன் தகப்பனுக்கு ஜந்து உடைகளையும் முந்நூறு வெள்ளிக்காசையும், அனுப்பினதல்லாமல் எஜிப்த்திலுள்ள உச்சித சரக்குகளையும் கொண்டுபோகிறதற்குப் பத்து வேசரிகளையும், வழிக்குக் கோதுமை யையும், அப்பவர்க்கங்களையும் சுமப் பதற்குப் பத்து கோளிகைக் கழுதைகளையும் கூட அனுப்பிவிட்டான்.

24. பிறகு அவன் தன் சகோதரர்களுக்குப் போக விடையளித்து அவர்களைவிட்டுப் பிரியும்போது: நீங்கள் போகும் வழியிலே சச்சரவு பண்ணாதேயுங்கள் என்றனுப்பினான்.

25. அவர்கள் எஜிப்த்திலிருந்து போய், கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடத்தில் சேர்ந்து:

26. உமது குமாரன் ஜோசேப்பு உயிரோடே இருக்கிறான்; அவனே எஜிப்த்து தேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று ஜோசேப்பு சொல்லச் சொன்னதை எல்லாம் அறிவித்தார்கள். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த நித்திரையினின்று கண் விழித்தவனைப் போலானான். ஆயினும் அவர்களை அவன் நம்பாதிருந்தான்.

27. கடைசியிலே அவர்கள் சங்கதிகளை எல்லாம் ஒழுங்குடன் விவரித்துச் சொன்னபோது, ஜோசேப்பு அனுப்பின வண்டிகளையும், சரக்குகள் யாவற்றையும் கண்டபோதும், அவன் புது ஜீவியம் பெற்றவனாக இருந்தான்:

28. ஆ! என் குமாரனான ஜோசேப்பு இன்னும் உயிரோடிருந்தால் எனக்குப் போதும்; நான் மரணமடையும் முன் போய் அவனைக் காண்பேன் என்றான்.