இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 44. ஜெபமாலை சொல்ல ஒரு நல்ல முறை

முதலில் நீ நன்றாய்ச் ஜெபிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியைக் கேள். கேட்ட பின், தேவ சந்நிதியில் ஒரு வினாடி உன்னை நிறுத்து. ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணியையும் நான் கூறப்போகும் முறைப்படி ஒப்புக்கொடு.

ஒரு பத்து மணி ஜெபத்தை ஆரம்பிக்கு முன், உனக்குள்ள அவகாசத்தைப் பொறுத்து, நீ சிந்திக்க இருக்கும் தேவ இரகசியத்தை சற்று நினை. இந்தத் தேவ இரகசிய நிகழ்ச்சியாலும் தேவ அன்னையின் வேண்டுதலாலும், இதில் துலங்குகிற ஒரு புண்ணியத்தை அல்லது உனக்கு இப்போது தேவைப்படுகிற புண்ணியத்தை இறைவனிடம் மன்றாட மறவாதே.

ஜெபமாலை சொல்லும் போது பெரும்பாலானவர்கள் செய்யும் இரண்டு தவறுகளைத் தவிர்க்க கவனமாயிரு முதல் தவறு என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட மன்றாட்டும் செய்யாதிருத்தல், சிலரிடம் நீங்கள் எந்தக் கருத்துக்காக இந்த ஜெபமாலையைச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியாது! நீ எப்போது ஜெபமாலை சொன்னாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேவ உதவியைக் கேட்பாயாக. ஒரு நல்ல கிறீஸ்தவப் புண்ணியத்தை அடைய அல்லது உன் பாவங்களில் ஒன்றைத் தவிர்க்க தேவ உதவியைக் கேள்.

இரண்டாவது பெருந்தவறு : மிகப் பலர் ஜெபமாலை சொல்லும் போது அதை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு துரிதமாய் முடித்து விடும் ஒரே எண்ணத்தோடு செய்கிறார்கள். இது ஏனென்றால் நம்மில் பலர் ஜெபமாலையை ஒரு பாரமாக நினைக்கிறோம். அதைச் சொல்லும் வரை அது அதிக பளுவான பாரமாகத் தெரியும். விசேஷமாக, நாம் தவறாமல் ஜெபமாலை சொல்வதாக வாக்களித்திருந்தால், அல்லது நாம் விரும்பாத ஒரு பரிகாரமாக நமக்கு அது விதிக்கப்பட்டிருந்தால், நம் மனச்சாட்சியை அது அழுத்திக் கொண்டேயிருக்கும்.

பெரும்பான்மையான மக்கள் இப்புனித ஜெபமாலையைச் சொல்வதைப் பார்த்தால் உண்மையிலே பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் ஜெபமாலை சொல்லும் வேகமே ஆச்சரியமாயிருக்கும். வார்த்தைகளை முனகுவார்கள். ஆதலால் அவை தெளிவுடன் உச்சரிக்கப்படுவதில்லை. இவ்வாறு விழுங்கி விழுங்கிச் சொல்லப்படும் இச்செபம் ஒரு வாழ்த்தாக இருக்க முடியும் என்று யாரும், வெகு சாதாரண மக்கள் கூட நினைக்க மாட்டார்கள். அப்படியிருக்க சேசுவும் மரியாயும் இதை விரும்புவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதனால், நம் திருமறையில் மிகவும் புனிதமான ஜெபங்கள் ஒரு பயனும் இல்லாமல் போவது கூட ஆச்சரியமில்லை. நாமும் ஆயிரக்கணக்கான ஜெபமாலைகள் செய்த பின்னும், முன்பிருந்தது போலவே இருக்கிறோம். ஜெபமாலைச் சபையின் அன்புள்ள அங்கத்தினர்களே, ஜெபமாலை சொல்லும் போது மிக எளிதில் வந்து விடக்கூடிய இந்த வேகத்தைக் குறையுங்கள். பரலோக மந்திரத்தையும் அருள் நிறை மந்திரத்தையும் சொல்லும் போது பல இடங்களில் நிறுத்திச் சொல்லுங்கள். நீங்கள் நிறுத்த வேண்டிய இடங் களில் சிலுவை அடையாளமிட்டு கீழே காட்டியுள்ளேன்.

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே + உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக + உம்முடைய இராச்சியம் வருக + உம்முடைய சித்தம் + பரலோகத்தில் செய்யப்படுவது போல + பூலோகத்திலும் செய்யப்படுவதாக + எங்கள் அனுதின உணவை + எங்களுக்கு இன்று அளித்தருளும் + எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல + எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் + எங்களை சோதனையில் விழ விடாதேயும் + தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

அருள் நிறைந்த மரியாயே வாழ்க + கர்த்தர் உம்முடனே + பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே +உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே + அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே + பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் + எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும். ஆமென்.

முதலில் இப்படி நிறுத்திச் சொல்வது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம், ஜெபங்களை வேகமாகச் சொல்லும் தவறான பழக்கத்தால் அப்படி ஆனால் இவ்வாறு கருத்துடன் சொல்லும் ஒரு பத்துமணிச் ஜெபம், நிறுத்தாமல், சிந்தனையில்லாமல் ஆத்திரத்தில் சொல்லப்படும் ஆயிரக்கணக்கான ஜெபமாலைகளை விட மேலானது.

கீழே வரும் சரித்திரம் முத் ஆலன் ரோச், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், இன்னும் மற்றும் சிலராலும் கூறப்பட்டுள்ளது. ஒரு நல்ல ஆன்ம குரு இருந்தார். அவரிடம் ஞான ஆலோசனை பெற்று வந்த மூன்று உடன் பிறந்த சகோதரிகள் இருந்தனர். அவர்கள் மூவரையும் ஓராண்டுக் காலம் ஜெபமாலை சொல்லும்படி அக்குரு ஆலோசனை கூறினார். இவ்வாறு தினமும் ஜெபமாலை செய்து, தேவ அன்னைக்கு அழகிய அலங்கார ஆடை தயாரிக்கும்படி சொல்லியிருந்தார். இது அவருக்கு விண்ணுலகிலிருந்து கிடைத்த ஓர் இரகசியமாகும்.

அம்மூன்று சகோதரிகளும் ஒரு வருடம் முழுவதும் தினசரி ஜெபமாலை செய்து வந்தனர். அன்று தேவதாயின் சுத்திகரத் திருநாள். அன்றிரவு நம் அன்னை மூவருக்கும் சேர்ந்தாப்போல் தரிசனையானார்கள். அர்ச். கத்தரினும் அர்ச், ஆக்னேசம்மாளும் அவர்களுடன் காணப்பட்டார்கள். அன்னையின் ஆடை அழகுடன் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஆடை முழுவதிலும் அருள் நிறைந்த மரியாயே வாழ்க' என்ற சொற்கள் பொன்மயமாக விளங்கிக் கொண்டிருந்தன, தேவ அன்னை அம்மூவருள் மூத்த சகோதரியிடம் வந்து, 'என் மகளே நீ என்னை இவ்வளவு அருமையாக அடிக்கடி வாழ்த்தி வந்ததால் நானும் உன்னை வாழ்த்துகிறேன். நீ எனக்களித்துள்ள அழகிய ஆடைக்காக உனக்கு நன்றி கூற விரும்புகிறேன்' என்று கூறினார்கள். அன்னையுடன் தோன்றிய இரு புனிதையரும் அவ்வாறே நன்றி கூற மூவரும் மறைந்தனர்.

ஒரு மணி நேரம் கடந்தது. தேவ அன்னையும் அவ்விரு புனிதையரும் மீண்டும் அச்சகோதரிகளுக்குக் காட்சி கொடுத்தனர். இம்முறை அன்னையிடம் ஆடை பச்சை நிறத்தில் இருந்தது. அதில் ஒளியில்லை. பொன் எழுத்துக்களும் காணப்படவில்லை. தேவதாய் இரண்டாம் சகோதரியிடம் சென்று அவள் செய்த ஜெபமாலைகளால் தனக்கு அந்த ஆடையை அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்கள். தன் அக்காளிடம் அன்னை வந்த போது அவர்கள் அதிக அழகிய ஆடை அணிந்திருந்ததை இவள் கண்டிருந்ததால், இந்த மாற்றத்தின் காரணம் என்னவென்று தேவதாயிடம் கேட்டதற்கு நம் அன்னை, 'உன் அக்காள், உன்னை விட நன்றாக ஜெபமாலை செய்ததால் எனக்கு நீ கொடுத்ததை விட அதிக அழகிய ஆடையைத் தந்தாள்' என்று விடை பகர்ந்தார்கள். காட்சி மறைந்தது.

இன்னும் ஒரு மணி நேரம் கடந்த பின் அதே காட்சி மூவரிலும் இளைய சகோதரிக்குத் தோன்றியது. கந்தலும் அழுக்கேறியதுமான ஆடைகளுடன் தேவ அன்னை அவளை நோக்கி, 'என் மகளே, நீ எனக்களித்த இந்த ஆடைகளுக்காக உனக்கு நன்றி கூற விரும்புகிறேன்' என்றார்கள். அதைக் கேட்டதும் அவள் மிகவும் வெட்கி, 'ஓ என் அரசியே! இவ்வளவு மோசமான ஆடையை உங்களுக்கு எவ்வாறு நான் கொடுத்தேன். என்னை மன்னியுங்கள். ஜெபமாலை அதிக நன்றாகச் சொல்லி, உங்களுக்கு அழகிய ஆடை தயாரிக்க எனக்கு இன்னும் கொஞ்ச காலம் கொடுங்கள்' என்றாள். காட்சி மறைந்தது. அந்த இளைய சகோதரி மனம் உடைந்து போனாள். நடந்த யாவற்றையும் அவள் தன் ஆன்ம குருவிடம் கூறினாள். இன்னும் ஒரு வருடம் அவள் தன் ஜெபமாலையை மிக பக்தியுடன் சொல்லி வரும்படி கூறினார் ஆன்ம குரு.

இவ்விரண்டாம் ஆண்டு முடிந்தது. அதே சுத்திகரத் திருநாள். தேவ அன்னை மற்ற இரு புனிதைகளுடன் அலங்கார ஆடை தரித்து தலையில் முடி சூடியவர்களாய் மாலை வேளையில் தோன்றினார்கள். அந்த மூன்று சகோதரிகளையும் பார்த்து, தேவ அன்னை : 'என் குமாரத்திகளே! நீங்கள் மோட்சத்தை சம்பாதித்துக் கொண்டீர்கள் என்று உங்களுக்கு கூற வந்துள்ளேன். நாளை நீங்கள் மோட்சம் செல்வீர்கள்' என்று கூறினார்கள். அம்மூவரும் அன்னையைப் பார்த்து, 'மிகவும் அன்புள்ள அரசியே, எங்கள் இருதயங்கள் தயாராக உள்ளன' என்றார்கள். அத்துடன் காட்சி மறைந்தது.

அன்று இரவே மூவரும் மிகவும் நோயுற்றார்கள். தங்கள் ஆன்ம குருவை அழைத்தார்கள். அவர் அவர்களுக்கு கடைசி தேவ திரவிய அனுமானங்களைக் கொடுத்தார். அவர் தங்களுக்குக் கற்றுத் தந்த ஜெபமாலைப் பக்திக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்: இராச் ஜெபம் முடிந்த பின் ஒரு பெருங்கூட்டமான கன்னியர்களுடன் தேவ அன்னை தோன்றி அம்மூவரையும் வெண்ணுடையால் போர்த்தினார்கள். தூதர்கள் இசை பாடினர். சேசு கிறீஸ்துவின் பத்தினிகளே வாருங்கள். நித்தியமாய் உங்களுக்குத் தயாரிக்கப்பட்ட மகுடங்களை அணிந்து கொள்ளுங்கள்' என்று அவர்கள் பாடும் போது அம்மூவரும் இவ்வுலக வாழ்வை நீத்தனர்.

இச்சம்பவத்திலிருந்து சில ஆழமான உண்மைகளை நாம் கற்றுக் கொள்கிறோம்:

1 பக்தி முயற்சிகளையும், முக்கியமாய் மிகப் புனித ஜெபமாலையையும் எடுத்துக்கூறும் ஒரு நல்ல ஆன்ம குரு வாய்ப்பது எவ்வளவு முக்கியமானது!

2. ஜெபமாலையை கவனத்தோடும் பக்தியுடனும் சொல்வது எவ்வளவு முக்கியமானது!

3. தங்கள் முந்திய வாழ்வுக்காக துக்கப்பட்டு இனிமேல் அதிக நல்வாழ்வு வாழ திடமாய்த் தீர்மானிக்கிறவர்களுக்கு தேவ அன்னை காட்டும் அன்பும் இரக்கமும் எவ்வளவு!

4. நாம் நம் அன்னைக்கு உண்மையுடன் செய்யும் சிறு காரியங்களுக்கு, நம் வாழ்விலும், மரணத்திலும், நித்தியத்திலும் அவர்கள் வெகுமானமளிக்கும் தாராள தன்மை எத்தகையது!