இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 43. பராக்குகளுக்கெதிராகப் போர்

ஜெபமாலை நன்றாகச் சொல்லப்பட்டால், வேறு எந்த ஜெபத்தையும் விட சேசுவுக்கும் மரியாயிக்கும் அது அதிக மகிமையளிக்கிறது. வேறு எந்த ஜெபத்தையும் விட ஆன்மாவுக்கு அதிக பேறு பலனைத் தருகிறது. ஆனால் நன்றாகச் சொல்வதற்கும் அதில் நீடித்து நிலைப்பதற்கும் மற்ற எந்த ஜெபத்தையும் விட அதிக சிரமமானது ஜெபமாலையே. இதன் முக்கிய காரணம் யாதெனில், ஒரே வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லும் போது ஏறக்குறைய தவிர்க்க முடியாதபடி நுழைந்து விடும் பராக்குதான்.

ஜெபமாலையைத் தவிர்த்து, மற்றுள்ள நம் மாதாவின் மந்திர மாலை அல்லது ஏழு தவ சங்கீதங்கள் அல்லது வேறு ஏதாவது ஜெபங்களைச் சொல்லும்போது, மாறி மாறி வருகிற வார்த்தைகளும் சொற்றொடர்களும் நம்மை விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. நம் நினைவு அலையாதபடி தடுத்துக் கொள்கின்றன. எனவே அச்செபங்களை நன்றாகச் சொல்வது எளிதாயிருக்கின்றது. இதற்கு மாறாக, ஒரே பரலோக மந்திரத்தையும், ஒரே அருள் நிறை மந்திரத்தையும் ஒரு மாற்றமுமில்லாமல் திருப்பித் திருப்பி சொல்வதால், ஜெபமாலை சொல்லும்போது சலிப்படையாமலும் தூக்கத்துக்குட்படாமலுமிருப்பது கடினம். அதிக உற்சாகமும் குறைந்த சிரமமும் உள்ள ஜெபங்களைத் தேடாமல் இருப்பதும் கஷ்டமாகி விடுகிறது. இதிலிருந்து என்ன தெளிவாகிறது என்றால், தாவீதின் சங்கீதங்களைக் கூட அதிக எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் ஜெபமாலை சொல்வதில் நீடித்து நிலைத்து நிற்க, வேறு எந்த ஜெபத்தையும் விட அதிகமான பக்தி பற்றுதல் தேவைப்படுகிறது.

நம் கற்பனைத்திறன் ஒரு நிமிடம் கூட ஓய்வதில்லை . இது ஜெபமாலை ஜெபிப்பதை அதிகக் கடினமாக்குகிறது. மேலும் பசாசு இருக்கவே இருக்கிறது! நமக்கு பராக்குக் காட்டி ஜெபிக்காமல் தடுக்க முயல்வதில் அது ஒரு போதும் களைத்துப் போவதில்லை. சாத்தானுக்கெதிராய் நாம் ஜெபமாலை செய்வதில் ஈடுபடும் போது இந்த சாத்தான் நமக்கெதிராய் எவ்வளவு தூரம் செல்லும் என்பதற்கு ஒரு கணக்கில்லை .

நாம் மனிதர்கள், எளிதில் களைத்துப் போகிறோம். காரியங்களைக் கை நழுவ விட்டு விடுகிறோம். இந்தக் குறைபாடுகளை நாம் ஜெபமாலை சொல்லும் போது அதிகப்படுத்தி விடுகிறது பசாசு. ஜெபமாலையை ஆரம்பிக்கு முன்பே நமக்கு சலிப்பைத் தருகிறது. பராக்குகளையும் களைப்பையும் கொண்டு வருகிறது. ஜெபமாலையைத் தொடங்கினால் எல்லாப் பக்கத்திலுமிருந்து நெருக்குதல். பின்னர், அதிக சிரமத்துடனும் பராக்குகளுடனும் ஜெபமாலையை சொல்லி முடிக்கிறோம். அப்போது பசாசு நம் காதுக்குள் ஓதுகிறது. 'நீ இப்போ செய்தது வீண். நீ ஜெபமாலை சொல்வதே வீண்! இதை விட்டு விட்டு நீ மற்ற காரியங்களில் ஈடுபடுவதே சரி. நீ சொல்வது என்ன என்று கவனமில்லாமலே ஜெபிப்பது நேரத்தை பாழாக்குவதுதான். ஒரு அரை மணி நேர தியானம் அல்லது ஞான வாசகம் இதைவிட மிகவும் நல்லது. நாளைக்கு நீ இவ்வளவு சோம்பேறித்தனமில்லாமல் இருக்கும் போது இதை விட நன்றாகச் சொல்லலாம். ஆதலால் இந்த ஜெபமாலையை இன்று முடிக்க வேண்டாம். நாளை முடிக்கலாம்' என்று! இப்படித் தந்திரங்களால் பசாசு நாம் ஜெபமாலை சொல்வதை நிறுத்திவிடச் செய்கிறது. அல்லது சொன்னால் உண்டு சொல்லாவிட்டால் இல்லை என்ற நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து விடுகிறது. அல்லது சொல்லிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகச் செய்கிறது. இதுவுமில்லாவிட்டால், ஜெபமாலைக்குப் பதிலாக வேறு ஏதாவது பக்தி முயற்சியை நாம் கைக்கொள்ளச் செய்து விடுகிறது.

அன்புள்ள ஜெபமாலைப் பக்தி சபை அங்கத்தினர்களே. இந்த பசாசுக்கு செவி கொடாதீர்கள். நீங்கள் ஜெபமாலை சொல்லும் நேரம் முழுவதும் உங்கள் கற்பனைத்திறன் உங்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாலும், எல்லா வகையான பராக்குகளால் உங்கள் நினைவை நிறைத்தாலும், அவைகள் தோன்றிய உடனே அவற்றை நீக்கி விட நல்ல முயற்சி மட்டும் செய்திருப்பீர்களானால் நீங்கள் மனங்கலங்க வேண்டாம் இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அதிகப் பலனோடு சொல்லப்பட்ட ஜெபமாலையே மிக நல்ல ஜெபமாலை. ஜெபிக்க கஷ்டமாயிருக்கும் போது ஜெபிப்பதே அதிக பலனுள்ள ஜெபம். நம் இயல்புப்படி பார்த்தால், ஆன்மாவுக்கு விருப்பமில்லாத போது ஜெபிப்பது கடினம். நாம் விரும்பாத சிறு சிறு எறும்பு ஈக்கள் போல நினைவில் பலதும் தோன்றி ஒரு சிறு அமைதியும் இல்லாமல், நாம் சொல்லும் ஜெபத்தின் அழகைக் காண விடாதபடி செய்யும் போது ஜெபிப்பதென்பது அதிகக் கடினமாகிறது.

நீங்கள் ஜெபமாலை சொல்லும் நேரம் முழுவதும் பராக்குகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தாலும், ஆயுதம் ஏந்தி நன்கு போராடுங்கள். அதாவது ஜெபமாலை சொல்லக் கடினமாயிருந்தாலும் சொல்வதை நிறுத்தாதீர்கள். எந்த பக்தியையும் உங்களால் உணர முடியாவிட்டாலும் ஜெபமாலை சொல்வதை நிறுத்தாதீர்கள். இது ஒரு கடும் போர் என்பதை அறிவேன். ஆனால் இதில் உண்மையுடன் நடந்து கொள்ளும் ஆன்மாவுக்கு ஊதியந் தரும் போர் இது. நீங்கள் உங்கள் ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டால், அதாவது ஜெபமாலை சொல்வதை நிறுத்தி விட்டால், நீங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டவர்களாவீர்கள், பசாசு உங்கள் மீது வெற்றியடைந்து விட்டதால் இனி அது உங்களைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்,

ஆனால் இறுதி தீர்ப்பு நாளில் உங்கள் உண்மையற்றதனத்தையும் கோழைத்தனத்தையும் வைத்து பசாசு உங்களைக் குற்றஞ் சாட்டும். மிகச் சிறிய காரியத்தில் நம்பத்தக்கவன் பெரியதிலும் நம்பத்தக்கவனே (லூக். 16.10)

மிகச்சிறிய ஒரு ஜெபம் சொல்லும் போது உண்மையுடன் எதிர்த்துப் போராடுகிறவன் பெரிய காரியங்களிலும் உண்மையுடன் இருப்பான். இது உண்மையென்று முழு நிச்சயமாய்ச் சொல்லலாம். ஏனென்றால் பரிசுத்த ஆவியே இதை நமக்குக் கூறியுள்ளார்.

எனவே தினமும் ஜெபமாலை சொல்வோமென்று உறுதி பூண்டிருக்கும் சேசு கிறீஸ்துவினுடையவும் திருக் கன்னித்தாயுடையவும் ஊழியரும், ஊழியக்காரி களுமாயிருக்கிற நீங்கள் அனைவரும் மகிழ்வடையுங்கள். ஜெபமாலை சொல்லும் போதெல்லாம் நீங்கள் சேசு, மாமரி இவர்களுடன் இருக்கிறீர்கள். இந்த ஈக்கள் (ஜெப நேரத்தில் எங்களுடன் போர்தொடுக்கும் பராக்குகளை நான் இவ்வாறு தான் அழைக்கிறேன்) உங்களை கோழைகளாக்க விட்டு விடாதீர்கள். இனி இந்தப் பராக்குகளைக் களைய என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறேன்.