ஜெபங்களில் மிகச் சிறந்த ஜெபமாலை வழியாக நம் விண்ணப்பங்களை வெளியிடுவது பற்றாது. நன்கு ஜெபிக்க வேண்டுமானால் உண்மையான கவனத்தோடும் நாம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் வாயின் குரலை விட இருதயத்தின் குரலையே கடவுள் அதிகம் கேட்கிறார். ஜெப நேரத்தில் மனமறிந்த பராக்குகளுக்கு இடமளிப்பது பெரிய மரியாதைக் குறைவாகும். அது நம் ஜெபமாலையைப் பயனற்றதாக்கி நம்மைப் பாவத்துக்கும் உட்படுத்தும்.
நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் பற்றி நமக்கே கவனமில்லாவிட்டால் கடவுள் அதைக் கேட்க வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதெப்படி? நாம் கடவுளின் அஞ்சுதற்குரிய மாட்சிமையின் சந்நிதானத்தில், சிறுவர்கள் வண்ணத்துப்பூச்சி பின்னால் ஓடுவது போல் பராக்குகளுக்கு இடமளித்தால், அவர் நம்மீது பிரியப்படுவார் என நாம் எப்படி எதிர்பார்க்கக்கூடும்? இவ்வாறு நடந்து கொள்பவர்கள் கடவுளின் ஆசீரை இழந்து விடுகிறார்கள், அவர்கள் மரியாதையற்ற முறையில் ஜெபித்தால் அது சாபமாக மாறுகிறது.
நாம் விரும்பாத சில பராக்குகள் இல்லாமல் ஜெபமாலையைச் சொல்வதென்பது முடியாததுதான். (நம் கற்பனை ஒருபோதும் ஓய்வதில்லையாதலால்) ஒரு அருள் நிறை மந்திரத்தைக் கூட கற்பனையின் தொந்தரவு இல்லாமல் சொல்வது கஷ்டம். ஆனால் நாம் மனமறிந்து பராக்குகளுக்கு இடமளிக்காமல் இருக்கலாம். நம்மை மீறி வரும் பராக்குகளை குறைத்து நம் கற்பனையை கட்டுப்படுத்த எல்லா பாதுகாப்புகளையும் நாம் செய்து கொள்வது நன்று.
இதை ஞாபகத்தில் கொண்டு உன்னையே கடவுளின் சந்நிதானத்தில் வை, எல்லாம் வல்ல இறைவனும் அவர் திருத்தாயும் உன்னைக் கவனிப்பதாக நினை. உன் காவல் சம்மனசு உன் வலது பக்கத்தில் நின்று நீ சொல்லும் அருள் நிறை மந்திரங்களை, அவை நன்றாகச் சொல்லப்பட்டால், எடுத்து சேசுவுக்கும், மரியாயிக்கும் மகுடங்கள் புனைய அவற்றை உபயோகிக்கிறார் என்று சிந்தி. ஆனால் உன் இடது பக்கம் பசாசு பதுங்கி நிற்கிறது. அதற்குரியதாய் கவனமின்றியும், பக்தியின்றியும் மரியாதைக் குறைவாயும் சொல்லப்படும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்தையும் உடனே கவ்விப் பிடித்து தன் மரணப்புத்தகத்தில் எழுதிக் கொள்கிறது என்பதையும் நினைத்துக் கொள்.
யாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு பத்து மணி ஜெபத்தையும் ஒரு தேவ இரகசியத்தின் மகிமைக்காக ஒப்புக் கொடுக்க மறவாதே. ஒவ்வொரு பத்து மணியையும் சொல்லும் போது, அந்த தேவ இரகசியத்தில் சேசுவும் மரியாயும் கொண்டுள்ள தொடர்பை மனதில் சித்திரம் போல் சிந்திக்க முயற்சி செய்.
முத். ஹெர்மன் என்ப வர் (Premonstratensian Father) கூறுகிறார்: ஒரு காலத்தில் அவர் ஜெபமாலையை கவனத்துடனும் பக்தியுடனும் தேவ இரகசியங்களைத் தியானித்துக் கொண்டே சொல்லும் போது, தேவ அன்னை ஒளி வீசும் ஆச்சரிய அழகுடனும் மகத்துவத்தோடும் அவருக்குத் தோன்றுவார்களாம். நாள் போக்கில் அவருடைய உருக்கம் குறைந்து போனதால் அவர் ஜெபமாலையை அவசரமாயும் முழுக்கவனமின்றியும் சொல்லி வந்தார். அப்போது ஒரு நாள் தேவ அன்னை அவருக்குத் தோன்றினார்கள். அவர்கள் அழகின்றி சுருக்கம் விழுந்த முகத்துடன் துயரமாய்க் காணப்பட்டார்கள், இதைக் கண்ட முத் ஹெர்மன் மிகவும் மலைத்து நிற்கையில் தேவ அன்னை .
'ஹெர்மன், உன் பார்வையில் நான் இவ்வாறுதான் இருக்கிறேன். ஏனென்றால் உன் ஆன்மாவில் நீ என்னை இப்படித்தான் நடத்துகிறாய். அதாவது வெறுக்கப்பட்ட இனந்தெரியாத ஒரு பெண்ணை நடத்ததுவது போல! நான் பெற்றுள்ள வரங்களை வாழ்த்தி, தேவ இரகசியங்களை கவனமுடன் தியானித்து மரியாதையுடன் ஏன் என்னை நடத்துவதில்லை ? என்று கூறினார்கள்,