இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 41

பரவோன் இரண்டு சொப்பனங் கண்டதும் - ஜோசேப்பு அவைகளை வியாக்கியானம் பண்ணினதும் - அவன் எஜிப்த்து தேசத்திற்கு அதிபதியானதும் - கலியாணம் பண்ணினதும்.

1. இரண்டு வருஷம் சென்ற பின்னர் பரவோன் ஒரு சொப்பனத்தைக் கண்டான். அது என்னவென்றால்: தான் நதிக்கரையில் நிற்ப தாக எண்ணினான்.

2. நதியிலிருந்து அதிக அழகும் புஷ்டியு மான ஏழு பசுக்கள் கரை ஏறிவந்து சதுப்பு நிலங்களில் மேய்ந்துகொண்டிருந்தன.

3. பிறகு அவலட்சணமும் இளைத்தது மான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து கரையில்தானே பசிய புல் எங்கே கிடை த்ததோ அங்கே மேய்ந்துகொண் டிருந்தன.

4. இவைகள் அழகிய மேனியையும் புஷ் டாங்கத்தையும் உடைய ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டன. இதைக் கண்டு பர வோன் விழித்துக்கொண்டான்.

5. மறுபடியும் அவன் தூங்கினான். தூக் கத்திலே மற்றொரு கனாவைக் கண்டான். அது என்னவெனில்: ஒரே தாளிலிருந்து செழுமையும் அழகுமுள்ள ஏழு கதிர்களும் ஓங்கி வளர்ந்திருந்தன;

6. பின்பு சாவியாய் வெம்பி உஷ்ண காற்றால் வாடிய வேறு ஏழு கதிர்களும் தளிர்த்தது,

7. முந்தினவைகளின் செழுமையெல்லாம் பட்சித்தன; பரவோன் நித்திரைவிட்டு விழித் து,

8. சூரியன் விடிந்தபோது அஞ்சித் திடுக் கிட்டு, எஜிப்த்து தேசத்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்து சொப்பனத்தை விவரித்துச் சொன்னான்: ஆனால் ஒருவராலும் அதன் தாற்பரியம் சொல்லக்கூடாதே போயிற்று.

9. அப்போதே பானாதி தலைவன் முன் தனக்கு நேரிட்டதை நினைத்து பரவோனை நோக்கி: என் குற்றத்தை நான் சொல்லுகிறேன்.

* 9-ம் வசனம். பானாதி தலைவன் ஜோசேப்பிடத்திலே வார்த்தைப்பாடு கொடுத்து: நான் உனக்காகப் பரவோனை மன்றாடி உன்னை விடுதலையாக்கும்படி செய்வே னென்று திட்டம் பண்ணியிருந்தான். ஆனால் தாழ்வு நீங்கி வாழ்வு வந்த பிறகு அவன் தனக்கு உபகாரம் செய்தவனை நினையாமலே மறந்தான். நன்றிகெட்டதனம் மகா கெட்ட குணமாதலால் இவ்விடத்தில் அவன் இவ்வாறு பேசுகிறான்.

10. நமது இராஜா தம்முடைய ஊழியர்களின்மேல் கோபங்கொண்டு அடியேனையும் பணியாரத் தலைவனையும் சேனாதிபதியுடைய காவற்கிடங்கிலே அடைக்கும்படி கட்டளையிட்ட காலத்தில்,

11. அவனுக்கும் எனக்கும் இனி சம்பவிக்கப் போகிறதைக் காட்டும் வெவ்வேறு சொப்பனத்தை நாங்கள் இருவரும் கண்டோம். 

12. அங்கே சேனாதிபதியின் ஊழியனாகிய எபிரேய வாலிபன் ஒருவன் இருந்தான். நாங்கள் அவனிடத்தில் சொப்பனங்களைத் தெரிவித்திருக்க, 

13. அவன் எங்களுக்கு என்னென்ன சொன்னானோ, அவையெல்லாம் அந்தப்படிக்குத் தானே நடந்தேறிவந்தன. உள்ளபடி நான் திரும்ப என் உத்தியோகத்தைப் பெற்றேன்; மற்றவன் சிலுவையில் தூக்கப்பட்டான் என் றான்.

14. அதைக் கேட்டு இராஜா ஜோசேப்பை அழைப்பிக்கக் கட்டளையிட்டான். காவற் கிடங்கிலிருந்து அவனைச் சீக்கிரத்திற் கொண்டுவந்து சவரம்பண்ணிப் புது வஸ்திரந் தரிப்பித்து அவனை இராஜாவின் சமூகத்திலே நிறுத்தினார்கள்.

15. இராஜா அவனை நோக்கி: நான் சொப்பனங்களைக் கண்டேன. அவைகளின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவருமில்லை; நீயோ அப்படிப்பட்டவைகளுக்கு மகா புத்தி விவேகத்தோடு அர்த்தம் சொல்வாயென்று கேள்விப்பட்டேன் என்றான்.

16. ஜோசேப்பு பிரத்தியுத்தாரமாக, நான் அல்ல, கடவுளே பரவோனுக்கு மங்களமான உத்தரவை அருளிச் செய்வாரென்றான்.

* 16-ம் வசனம். நான் அரசனுக்குச் சொல்லப் போகிற வியாக்கியானம் கடவுளின் நல்வாக்கே யயாழிய என் சொந்தத்தினால் நான் அவைகளைச் சொல்லப் போகிறதில்லை என்று ஜோ சேப்பு சொல்லியபோது அவன் தனக்குள்ள மெய்மையையும் தாழ்ச்சி மிகுதியையும் நேர்த்தியாய்க் காண்பித்தானன்றோ?

17. அப்பொழுது பரவோன் தான் கண்டதை விவரிக்கத் தொடங்கினான்: நான் நதிக்கரையில் நிற்பதுபோலக் கண்ணுற்றேன்;

18. மிக அழகும் சதைப் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளிப்பட்டேறிச் சதுப்புநில மேய்ச்சல்களில் பசிய புற்களை மேய்ந்திருக்கையில்,

19. அதோ அவைகளை வேறேழு பசுக்கள் தொடர்ந்து வந்தன. இவைகள் எவ்வளவு அவலட்சணமும் கேவலமுமுடையவைக ளென்றால் அவைகளைப்போல எஜிப்த்து தேசமெங்கும் நான் ஒருக்காலும் கண்டே னில் லை;

20. இவைகள் முற்சொல்லிய பசுக்களைப் பட்சித்துப்போட்டன.

21. ஆயினும் கொஞ்சமாவது வயிறு உப்பிப் போகாமல், முன்போலே கேவலமும், அவ லட்சணமுமுள்ளவைகளாய்த் தள்ளாடிக் கொண்டிருந்தன. நான் அந்நேரத்தில் விழித் துக் கொண்டு மறுபடியும் நித்திரை மயக்கத் தில் அமிழ்ந்தினவனாய்,

22.(வேறொரு) சொப்பனத்தைக் கண்டேன்: நிறைமேனியும் அழகுமுள்ள ஏழு கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்திருந்தன.

23. பின்னும், சாவியும் தீந்து திடலுமாயிருந்த வேறேழு கதிர்கள் தாளினின்று முளைத் தன.

24. இவைகள் முற்சொல்லியவைகளின் செழுமையைப் பட்சித்துப் போட்டன. இச் சொப்பனத்தை நான் மந்திரவாதிகளிடத்தில் விவரித்துச் சொன்னேன். ஆனால் அதன் தாற் பரியஞ் சொல்ல எவனாலும் கூடவில்லை, என்றான்.

25. அதற்கு ஜோசேப்பு: இராஜாவின் இரு சொப்பனங்களும் ஒன்றுதான். கடவுள் எதைச் செய்யக் கருத்தாயிருக்கிறாரோ, அதைப் பரவோனுக்கு அறிவித்திருக்கிறார்.

26. அழகிய ஏழு பசுக்களும், நிறைமேனியுள்ள ஏழு கதிர்களும் ஏழு நல்ல வருஷங்களாம்; அவ்விரண்டு சொப்பனத்துக்கும் ஒரே தாற்பரியம்.

27. இவற்றின் பின் (கரையில்) ஏறிய சதையற்றதும் இளைத்ததுமான ஏழு பசுக்களும், சாவியும் காற்றினால் தீய்ந்தது மான ஏழு கதிர்களும் வரப்போகிற பஞ்சத்தின் ஏழு வருஷங்களாம்.

28. அவைகள் எந்த முறைப்படி நிறைவேறுமென்று கேட்டால்,

29. இதோ எஜிப்த்து தேசமெங்கும் பெருஞ் செல்வமுள்ள ஏழு வருஷங்கள் வரப் போகிறது.

30. அவற்றின்பின் வேறேழு வருஷங்களாய்ப் பஞ்சமுண்டாயிருக்கும். அது எப்படிப்பட்ட பஞ்சமென்றால், முந்தின செல்வ வருஷங்கள் மறக்கப்பட்டுப்போம். அது தேச முழுவதையும் பாழாக்கும்.

31. வறுமையின் மிகுதியால் செழிப்பின் மிகுதியே தோற்கப்படும்.

32. தேவரீர் கண்ட இரண்டாவது கனவோ வென்றால் மேற்படி விருத்தாந்தத்தைக் குறித்தேயாம். அது தேவனால் செய்யப் படுமென்றும் அதிசீக்கிரத்தில் நிறைவேறுமென்றும் சொல்வதற்கு அத்தாட்சியா யிருக்கிறது.

33. ஆதலால் இராஜா இப்போது செய்ய வேண்டியது யாதெனில், அவர் ஞானமும் சாமர்த்தியமுமுடைய ஓர் மனிதனைத் தேடி, அவனை எஜிப்த்து தேசத்திற்கு அதிபதியாய் ஏற்படுத்தக்கடவார்.

34. இவன் எல்லா நாடுகளிலும் காரியஸ்தரை நியமித்து நல்ல விளைவு உண்டாகும் மேற்படி ஏழு வருஷங்களிலே விளைச்சலில் ஐந்திலொரு பங்கை வாங்கிக்கொண்டு

35. இப்போதே வரப்போகிற வருஷங்களிலே களஞ்சியங்களில் பத்திரப்படுத்தி வைக்கக் கடவான்; இவ்வாறாய் விளையுந் தானியங்களெல்லாம் பரவோனுடைய அதிகாரத்திலிருந்து நகரங்களிலே சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

36. அவ்விதமாய் எஜிப்தை வருத்தும் ஏழு வருஷத்திய பஞ்சத்துக்காகத் தானியங்கள் தயாராயிருந்தால் தேசம் பஞ்சத்தினாலே பாழாகாதென்றான்.

37. இந்த வார்த்தை பரவோனுக்கும் அவனுடைய மந்திரிமார் அனைவருக்கும் பிரியமாயிற்று.

38. அவன் அவர்களை நோக்கி: தேவ ஞானத்தால் நிறைந்த இப்பேர்ப்பட்ட மனிதனைப்போல வேறொருவன் கிடைக்கக் கூடுமோ? என்று சொல்லி,

39. பின்னும் ஜோசேப்பை நோக்கி: நீர் கூறியதெல்லாவற்றையும் கடவுளே உமக்குத் தெரிவித்திருக்கச் செய்தே, உம்மிலும் அதிக ஞானமுடையவனாகிலும், உமக்கு ஒத்தான வனென்கிலும் எனக்குக் கிடைக்கக் கூடுமோ?

40. நீரே என் வீட்டுக்கு விசாரணைக் கர்த்தராயிருப்பீர். உம் வாக்கின்படியே ஜனங்கள் எல்லோரும் அடங்கி நடப்பார்கள். சிம்மாசனத்தில் மாத்திரம் நான் உமக்கு மேற்பட்டவனாயிருப்பேன் என்றான்.

* 40-ம் வசனம். சிம்மாசனத்தில் வீற்றிருத்தலும் இராஜாவென்கிற பெயரும் இவ்விரண்டும் நீங்கலாக, பரவோன் மற்றுமுள்ள அதிகாரத்தை எல்லாம் ஜோசேப்பிடத்தில் கையளித்தாரென்று இதனால் தெரியவருகிறது.

41. மீளவும் பரவோன் ஜோசேப்பை நோக்கி: இதோ எஜிப்த்து தேசமுழுவதுக்கும் உம்மை அதிகாரியாக ஸ்தாபித்தேன் என,

42. தன் கையினின்று முத்திரை மோதிரத்தைக் கழற்றி அதை அவன் கையிற் போட்டுச், சீமை மெல்லிய சணலால் நெய்யப்பட்ட ஒரு வஸ்திரத்தை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பளியை அவன் கழுத்திலே தரிப்பித்து,

43. அவனைத் தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் ஏறச்செய்து: இவரைத் தெண்டனிட்டுப் பணியுங்கள், இவரே எஜிப்து தேச முழுமைக்கும் அதிபதியென் றறியுங்கள் என்று கட்டியக் காரன் கூறும்படிக் (கட்டளையிட்டான்.)

44. பின்னும் அரசன் ஜோசேப்பை நோக்கி: நான் பரவோன்; உம்முடைய உத்தரவில்லா மல் எஜிப்து தேசமெங்கும் எவனாவது கையையாகிலுங் காலையென்கிலும் அசைக்கக் கூடாதென்றான்.

45. பிறகு (பரவோன்) அவனுடைய பெயரையும் மாற்றி, எஜிப்து பாஷையில் அவனைப் பூபாலன் என்று அழைத்து, எலியோப் பொலிசின் ஆசாரியனாகிய புத்திப்பாரே என்பவருடைய புத்திரியான அசெனேத்தை அவனுக்கு மனைவியாகத் தந்தான். அப்போது ஜோசேப் எஜிப்து தேசத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான்.

* 45-ம் வசனம். பூபாலன் என்னும் நாமதேயமானது உலகத்தை இரட்சித்தவர் என்று பொருளுள்ளதாம். உள்ளபடி பஞ்சத்தால் வருந்திய எஜிப்து தேசத்தார்களையும் சுற்றிலுமுள்ள நாட்டார்களையும் ஜோசேப்பு போஷித்துக் காப்பாற்றினான். ஆதலால் அவன் சத்திய பூபாலராகிய திவ்விய இரட்சகருக்கு அடையாளமானான். அந்தக் காலத்திலே ஜோசேப்பின் அனுக்கிரகத்தைத் தேடாதவர்கள் எப்படிப் பட்டினியாய்ச் செத்துப் போனார்களோ, அப்படியே சேசுநாதருடைய அருளைத் தேடாத இக்காலத்து உலகத்தாரும் கெட்டுப்போவார்கள்.

46. (அவன் இராஜாவாகிய பரவோனின் சந்நிதியிலே வந்து நின்றபோது முப்பது வயதாயிருந்தான்;) எஜிப்த்திலுள்ள சகல நாடுகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டான்.

47. அதற்குள்ளே ஏழு வருஷங்களின் மிகு தியான விளைவு உண்டானது. அரிக்கட்டாய் அறுக்கப்பட்ட பயிரானது எஜிப்த்தின் களஞ் சியங்களிலே சேர்க்கப்பட்டது.

48. அவ்வண்ணமே மிகுதியான தானி யங் களை அந்தந்தப் பட்டணங்களிலே கட்டி வைத்தார்கள்.

49. கோதுமை எவ்வளவு மிகுதியாகவிருந் ததென்றால், கடற்கரை மணலுக்கு ஒப்பாக வும், அளவுக்கடங்காத திரளாகவும் இருந்தது.

50. பஞ்சம் வரும் முன்னமே ஜோசேப்பு க்கு இரண்டு புத்திரர் பிறந்தார்கள். அவர் களை எலியோப்பொலிசின் ஆசாரியனான புத்திப்பாரே என்பவருடைய குமாரத்தி யாகிய ஆஸ்னேட் அவனுக்குப் பெற்றனள்.

51. ஜோசேப்பு: என் கஷ்டங்கள் யாவை யும் என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லி, மூத்தவ னுக்கு மனாசேஸ் என்று பெயரிட்டான்.

52. பிறகு: நான் தரித்திரனாயிருந்த இந் தத்தேசத்திலே கடவுள் என்னை விருத்தியாக் கினார் என, இளையவனுக்கு எப்பிறாயி மென்று பெயரிட்டான்.

* 52-ம் வசனம். எபிறேய பாஷையில் மானாசேஸ் என்பது மறதி என்றும், எப்பிறாயீ மென்பது விருத்தி என்றும் அர்த்தம். எப்பிறாயீம் மேல் ஜோசேப்பு அதிக அன்பு பாராட்டி வந்தான்.

53. அப்படியிருக்க, எஜிப்த்தில் உண்டான வளமையுள்ள ஏழு வருஷங்களும் முடிந்த பின்பு,

54. ஜோசேப்பு முன்னறிந்து சொல்லிய படி ஏழு வருஷப் பஞ்சம் தொடங்கின. உலக மெங்கும் பஞ்சம் உண்டாயிற்று. ஆயினும் எஜிப்த்து தேசமெவ்விடத்தும் ஆகாரங் கிடை த்தது.

55. பசித்துக்கொண்டிருக்கும்போது, எஜிப்த்து ஜனங்கள் உணவுக்காகப் பரவோனி டத்தில் வந்து ஓலமிட, அவன்: ஜோசேப்பிடத் திற்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லு கிறபடி செய்யுங்கள் என்று அவர்களை அனுப் புவான்.

* 55-ம் வசனம். பரவோன் தன் அரசுக்குரிய சகலமான கவலைகளையும் ஜோசேப்பின்மீதில் சுமத்தி வைத்திருந்தபடியால், தன்னிடத்திற்கு வரும் ஜனங்களை அவரிடத்திற்கு அனுப்பி விடு வான். இந்த ஜோசேப்புக்குத் திவ்விய இரட்சகருக்கு வளர்ப்புத் தந்தையாகிய அர்ச். சூசையப்பர் என்பவருக்கும் பற்பல விஷயத்திலே நெருக்கமான உவமானமும் சம்பந்தமும் இருக்கின்றன. கன்னிமரியாயின் பத்தாவாகிய இந்த அர்ச். சூசையப்பர் (ஜோசேப்பு) உலகத்தை யெல்லாம் போஷித்து இரட்சித்த கர்த்தரை அல்லோ வளர்த்துப் போஷித்துக் காப்பாற்றினார்.

56. வர வரச் சகல தேசங்களிலும் பஞ்சம் அதிகமாய்விட்டது. ஆனபடியால் ஜோசேப்பு களஞ்சியங்களை எல்லாம் திறந்து எஜிப்த்தியர் களுக்குத் தானியங்களை விலைக்குக் கொ டுத்து வந்தான்: ஏனென்றால் அவர்களும் பஞ் சத்தால் வருந்தினார்கள்.

57. அன்றியும் மற்றுமுள்ள தேசத்தார்கள் கூடப் பஞ்சத்தின் கொடுமைக்கு மட்டுக் கட்டத்தக்கதாக, ஜோசேப்பினிடத்தில் தானியங்களை விலைக்கு வாங்கும்படி வரு வார்கள்.