இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 41. தூய கருத்து வேண்டும்

ஒரு ஜெபத்தின் நீளமல்ல, ஆனால் அது எவ்வளவு பக்தியுடன் சொல்லப்படுகிறதோ அதுதான் கடவுளுக்கு விருப்பமுள்ளதாகி அவருடைய இருதயத்தைத் தொடுகிறது. நூற்றைம்பது அருள் நிறை மந்திரங்கள் மோசமாய்ச் சொல்லப்படுவதை விட சரியாகச் சொல்லப்பட்ட ஒரே ஒன்று அதிகப் பலனுள்ளதாகும். பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஜெபமாலை சொல்லுகிறார்கள். பதினைந்து தேவ இரகசியங்களையும் கொண்ட முழு ஜெபமாலை அல்லது எப்படியும் ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை, குறைந்தபட்சம் சில பத்து மணிகளாவது சொல்லி விடுகிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுள், பாவ வழியை விட்டு விலகி ஞான வாழ்வில் முன் செல்பவர்கள் ஏன் இவ்வளவு சிறு தொகையினரா யிருக்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் இச்செயத்தை சொல்ல வேண்டிய விதமாய்ச் சொல்லாததே காரணம் என்பது உறுதி. நாம் உண்மையிலே சர்வேசுரனுக்கு விருப்பமுள்ளவர்களாகி இன்னும் அதிகமான புனிதத்தன்மை அடைய வேண்டுமானால், நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டுமென்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

பலனுள்ள முறையில் ஜெபமாலையைச் சொல்ல வேண்டுமானால், நாம் தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருத்தல் வேண்டும். குறைந்தது சாவான பாவத்தை விட்டு விடுவேன் என்ற முழுத் தீர்மானமாவது இருக்க வேண்டும். இது எப்படி நமக்குத் தெரியுமென்றால், சாவான பாவ நிலையில் செய்யப்படும் ஜெபங்களும், நற்செயல்களும் செத்தவைகளாக இருக்கின்றன என்று நம் வேத சாஸ்திரங்கள் யாவும் நமக்குக் கூறுகின்றன. எனவே அவை

விருப்பமாயிருக்க முடியாது. நித்திய வாழ்வடைய நமக்கு உதவி செய்யவும் இயலாது. இதனாலேயே, 'பாவியினுடைய வாயில் சர்வேசுரனுடைய புகழ்ச்சி சிறந்ததல்ல' (சீராக் 15:9) என்று கூறப்பட்டுள்ளது. கடவுளின் துதியும், சம்மனசின் மங்கள மொழியும், சேசு கிறீஸ்துவின் ஜெபமும் கூட மனந்திருந்தாத பாவிகளால் சொல்லப்படுவது கடவுளுக்கு விருப்பமற்றது.

இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளால் என்னைச் சங்கிக்கிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாயிருக்கிறது. (மாற் 7:6) என்று நமதாண்டவர் உரைத்தார். இது, நமதாண்டவர் பின்வருமாறு கூறுவது போலுள்ளது. தங்கள் பாவங்களுக்காக துக்கப்படாத நிலையில், என்னுடைய பக்தி சடையில் சேர்ந்து, தினமும் ஜெபமாலை சொல்கிறவர்கள் அவர்கள் முழு ஜெபமாலையே சொன்னாலும்) எனக்கு அவர்கள் உதடுகளால் ஊழியஞ் செய்கிறார்களே தவிர, அவர்கள் இருதயம் என்னை விட்டுத் தொலைவில் இருக்கிறது.

பலனுள்ள முறையில் ஜெபமாலை சொல்ல வேண்டுமானால் நாம் தேவ இஷ்டப் பிரசாத நிலையில் இருத்தல் வேண்டும். குறைந்தது சாவான பாவத்தை விட்டு விடுவேன் என்ற முழுத்தீர்மானமாவது இருக்க வேண்டும் என்று நான் இப்பொழுது தான் கூறினேன்.

ஆனால், தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களின் ஜெபங்களைத்தான் கடவுள் கேட்கிறார் என்றால், சாவான பாவத்தோடிருப்பவர்கள் ஜெபமே செய்யக் கூடாது என்று அல்லவா ஆகிவிடும்? இது திருச்சபையால் கண்டிக்கப்பட்ட ஒரு தப்பான போதகமாயிற்றே! ஏனென்றால் நல்லலவர்களை விட பாவ நிலையிலுள்ளவர்கள் எவ்வளவோ அதிகமாக ஜெபிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாவி ஜெபிக்கக் கூடாது என்றால், ஒரு பாவியிடம் ஒரு ஜெபமாலையோ அல்லது ஜெபமாலையின் ஒரு பகுதியையோ சொல் எனக் கூறுவது பயனற்றதும் வீணானதுமாகும். ஏனென்றால் அதனால் அவனுக்கு எந்தப் பயனும் ஏற்படாதே!

மேலும் யாராவது சிலர் பாவத்தை விட்டுவிட ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் தேவ தாயின் பக்தி சபை ஒன்றில் சேர்ந்து ஜெபமாலையையும் வேறு ஜெடங்களையும் சொல்வார்களானால், அவர்கள் கள்ளப் பக்திமான்களின் வரிசையில் இருக்கிறார்கள். மனந்திருந்தாத மிஞ்சிய சுய நம்பிக்கையுள்ள இப்பக்திமான்கள் தேவ அன்னையின் போர்வையுள் பதுங்கிக் கொண்டு உத்தரியம் அணிந்து ஜெபமாலையைக் கையில் ஏந்திக் கொண்டு 'பரிசுத்த கன்னிகையே, நல்ல தாயே, வாழ்க மரியாயே' என்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தங்கள் பாவங்களால் சேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவருடைய திருச்சதையை மீண்டும் கிழிக்கிறார்கள். நமதன்னையின் பக்தி சபைகளில் அங்கம் வகித்துக் கொண்டே ஆன்மாக்கள் நரகில் விழுகிறார்கள் - இது ஓர் பெரிய பரிதாபமல்லவா!

ஆகவே, எல்லோரும் ஜெபமாலை சொல்லும்படி மிகுந்த ஆர்வமுடன் கேட்கிறோம். நல்லவர்கள் அந்நிலையில் நிலைத்திருக்கவும் கடவுளின் அருளில் வளரவும் ஜெபமாலை சொல்லுங்கள். பாவ நிலையில் இருப்பவர்கள் அந்நிலையை விட்டு வெளியேறுமாறு ஜெபமாலையைச் சொல்லுங்கள்.

ஒரு பாவி பாவத்தை விரும்பிக் கொண்டே தேவ தாயின் போர்வையால் நான் பாதுகாக்கப்படுவேன் என்று நினைப்பதற்கு நாம் அவனைத் தூண்டக் கூடாது. ஏனென்றால் தேவ அன்னையின் போர்வை அவன் பாவங்களை மற்றவர் கண்ணுக்கு மறைத்தாலும் அவன் தண்டனைத் தீர்ப்படையவே அவனுக்குப் பயன்படும். நம் பிணிகளுக்கெல்லாம் மருந்தாகும் ஜெபமாலை, இவன் விஷயத்தில் கொல்லும் விஷமாக அல்லவா மாறி விடும் 'மிக நல்லது கெட்டால், மிகக் கெட்டதாகி விடும்.

அறிவிற் சிறந்த கர்தினால் ஹயூக் உரைக்கிறார். சம்மனசின் மங்கள மொழியைச் சொல்ல வேண்டும் என்று நினைத்த நல்லொழுக்கம் சிதைந்த ஒரு மனிதன் தினமும் ஜெபமாலை சொல்லி வந்தான். அவனுக்கு ஒரு நாள் தேவ தாய் தோன்றி, ஒரு கோப்பை நிறைய இனிய பழங்களைக் காட்டினார்கள். ஆனால் அந்தக் கோப்பையோ அசுத்தம் நிரம்பியிருந்தது. அதைப் பார்த்த அம்மனிதன் மிகவும் அரோசிகப்பட்டான். அவனை நோக்கி தேவ அன்னை, “நீ என்னைப் புகழும் விதமும் இப்படித்தான். அசுத்தம் நிரம்பிய கோப்பையில் நீ அழகிய ரோஜா மலர்களை எனக்குத் தருகிறாய். இவ்வித காணிக்கையை என்னால் ஏற்க முடியும் என்று நினைக்கிறாயா?' என்றார்கள்.