இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 3. அர்ச்சிஷ்ட சாமிநாதர்

மேற்கூறியபடி ஒரு அற்புத முறையால் ஜெபமாலைப் பக்தி உருவாக்கப்பட்டது. இந்த முறைக்கும் கடவுள் உலகிற்கு தம் கட்டளைகளை சீனாய் மலை மேல் தந்த முறைமைக்கும் ஒரு ஒப்புமை காணப்படுகிறது. இதனால் ஜெபமாலையின் முக்கியத்துவமும் பயனும் தெளிவாகின்றன.

பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு பரிசுத்த கன்னிமரியாயிடம் உத்திரவு பெற்ற அர்ச். சாமிநாதர், தமது அனுபவத்தையும் அவற்றுடன் சேர்த்துக் கொண்டு எஞ்சிய தம் வாழ்நாள் முழுவதும் ஜெபமாலையைப் பிரசங்கித்து வந்தார். தம் முன் மாதிரிகையால் போதித்தார். பிரசங்கத்தின் வழியாக போதித்தார். நகரங்களிலும் கிராமங்களிலும் சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர் களுக்கும் போதித்தார். கற்றவருக்கும் கல்லாதவருக்கும் பதிதருக்கும் கத்தோலிக்க மறையினருக்கும் போதித்தார்.

ஒவ்வொரு நாளும் ஜெபமாலையை ஜெபித்தார். அதுவே அவருக்கு பிரசங்கத்திற்கு முன் ஆயத்தமாகவும் பிரசங்கம் முடிந்தபின் தேவ அன்னையுடன் உரையாடலாகவும் இருந்தது.

ஒரு நாள் பாரீஸ் பட்டணத்திலுள்ள மாதாவின் பேராலயத்தில் அவர் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. அன்று சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் திருநாள். சாமிநாதர் அவ்வாலய பெரிய பீடத்தின் பின்னால் ஒரு சிற்றாலயத்தில் தம் வழக்கப்படி பக்தியுணர்வுடன் ஜெபமாலை ஜெபித்து ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கு தேவ அன்னை அவருக்கு தோன்றி சாமிநாதா நீ சொல்ல நினைத்திருக்கும் பிரசங்கம் மிக நல்லதுதான் என்றாலும், நான் அதை விட மிக நல்ல ஒரு பிரசங்கத்தை உனக்குத் தர வந்துள்ளேன்' என்றார்கள்.

தேவ அன்னை கொண்டு வந்திருந்த புத்தகத்தை சாமிநாதர் கரத்தில் வாங்கினார். அதிலிருந்த பிரசங்கத்தைக் கவனமாய்ப் படித்தார். அதைப் புரிந்து கொண்டு அதனைத் தியானித்தார். தேவ தாய்க்கு நன்றி கூறினார்.

பிரசங்கத்திற்கு நேரமானதும் சாமிநாதர் பிரசங்கத் தொட்டியில் ஏறினார். அன்று சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் திருநாளாயினும், அருளப்பர் பரலோக அரசியான மரியாயின் காப்பாளராக இருக்கும் தகுதி பெற்றார்' என்பதை தவிர வேறு எதுவும் அவரைப் பற்றிக் கூறவில்லை. கோவிலில் வேத சாஸ்திர வல்லுநரும் மற்ற உயர் நிலையிலுள்ளவர்களும் கூடியிருந்தனர். புதுமையான சொல்லழகுப் பிரசங்கங்களைக் கேட்டுப் பழக்கமானவர்கள் அவர்கள். ஆனால் அர்ச். சாமிநாதர் உலகக் கண்களுக்கு ஞானமாக, அறிவுத் திறம் விளங்கும் அறிவுரையை அவர்களுக்கு தாம் கூற வரவில்லை என்றும், பரிசுத்த ஆவியின் எளிமையிலும் அவருடைய சக்தியோடும் தாம் பேசப் போவதாகவும் கூறினார்.

இங்ஙனம் சாமிநாதர் ஜெபமாலையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினார். குழந்தைகளுக்குச் சொல்வது போல் சிறிய உதாரணங்களைக் கொண்டு மாதா கொடுத்த புத்தகத்தில் கண்டபடி அருள் நிறை மந்திரத்தை ஒவ்வொரு வார்த்தையாக எடுத்து விவரித்துக் கூறினார்.

இது எங்ஙனம் நிகழ்ந்தது என்று ஜெபமாலையின் மகிமை' என்ற நூலில், முத்தி பேறு பெற்ற ஆலன் ரோச் கூறியுள்ளார். இதுபற்றி கார்த்த ஜெனா என்பவர் கீழ்வருமாறு விவரிக்கிறார்.

முத். ஆலன் எழுதியுள்ளது யாதெனில் ஒரு நாள் ஒரு காட்சியில், தந்தை சாமிநாதர் என்னைப் பார்த்து, பிரசங்கிப்பது நல்ல காரியம்தான். ஆனால் பிரசங்கம் செய்யும் போது ஆன்மாக்களின் மீட்பைத் தேடுவதை விட, நல்ல பிரசங்கம் செய்ததாகப் பாராட்டப்பட வேண்டும் என்று தேடக்கூடிய ஆபத்து இருக்கின்றது. இவ்வித தவறு உமக்கு நேரிடாமலிருக்கும்படி பாரீஸ் பட்டணத்தில் எனக்கு நடந்ததைக் கூறுகிறேன். கவனமுடன் கேட்பீர். தேவ அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்தப் பெரிய ஆலயத்தில் நான் பிரசங்கம் செய்ய வேண்டியிருந்தது. அதை ஒரு மிகச் சிறந்த பிரசங்கமாக நிகழ்த்தி விட வேண்டும் என்பது என் ஆவல். இது பெருமைக்காக அல்ல, ஆனால் அங்கு கூடும் மக்களின் உயர்ந்த அறிவுத் தரத்தை முன்னிட்டே இந்த ஆவல் எழுந்தது.

'குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணிக்கு முன் என் வழக்கப்படி - பிரசங்கிக்கு முன் எப்போதும் ஜெபமாலை சொல்வது என் வழக்கம். மனதை ஒருநிலைப்படுத்தி ஜெபமாலை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது நான் பரவசமானேன். என் அன்பு மிக்க தோழியும், கடவுளின் தாயுமான மாமரி தன் கையில் ஒரு புத்தகத்துடன் என்னை நோக்கி வரக் கண்டேன். சாமிநாதா நீ சொல்லப் போகும் பிரசங்கம் மிக நல்லதுதான் என்றாலும், நான் அதைவிட நல்ல ஒரு பிரசங்கத்ததை உனக்குத் தர வந்திருக்கிறேன் என்றார்கள் தேவ அன்னை.

'நான் மிகவும் மகிழ்ந்தேன். அப்புத்தகத்தை எடுத்து வார்த்தை விடாமல் படித்தேன். தேவ தாய் கூறியது போலவே என் பிரசங்கத்தில் கூறுவதற்கு சரியானவற்றை அதில் கண்டேன். என் மனமார மாதாவுக்கு நன்றி கூறினேன்.

பிரசங்கம் தொடங்க நேரமாயிற்று. பாரீஸ் சர்வகலா சாலை முழுவதும் அங்கு வந்து குழுமியிருக்கக் கண்டேன். பிரபுக்கள் பலரும் வந்திருந்தனர். நல்ல கடவுள் என் மூலமாய் செய்திருந்த பெரிய காரியங்களை அவர்கள் கண்டும் கேட்டுமிருந்தார்கள். நான் பிரசங்கத் தொட்டியில் ஏறினேன்.

அன்று சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் திருநாள். ஆனால் என் பிரசங்கத்தில் அவர் பரலோக அரசியான மாமரிக்குப் பாதுகாப்பாளராக இருக்க தகுதியுள்ளள வராய்க் காணப்பட்டார் என்று மட்டுமே கூறினேன். கூறிவிட்டு மக்களைப் பார்த்து,
உயர்குல மக்களே, கலாசாலைப் பண்டிதர்களே, உங்கள் ரசிக்கத் தன்மைக்கு ஏற்றபடி, சிறந்த சொற் பொழிவுகளைக் கேட்டு பழகியிருக்கின்றீர்கள். ஆனால் இப்போது மனித அறிவின் முறைப்படி சீரிய மொழியில் நான் பேச விரும்பவில்லை . மாறாக, கடவுளின் பரிசுத்த ஆவியையும் அவருடைய பெருமைகளையும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

இந்நிகழ்ச்சி, முத். ஆலனின் உரையாக இதுவரை கூறப் பட்டது. இதற்குப் பின்வருவது கார்த்த ஜெனா எழுதியவை.

பின்னர் அவர்களுக்கு சம்மனசு சொன்ன மங்கள் வார்த்தையை அன்றாட வாழ்வில் காணப்படும் எளிய உவமை உதாரணங்களுடன் விளக்கினார் சாமிநாதர்.

'பாவிகளையும், பதிதர்களையும் மனந்திருப்பவும் பாவத்தை அழிக்கவும் ஏதுவாக ஜெபமாலையை எடுத்துச் சொல்' என நமதாண்டவரும் தேவ அன்னையும் புனித சாமிநாதருக்குப் பலமுறை தோன்றி கூறியதாக முத் ஆலன் உரைக்கின்றார். கார்த்த ஜெனா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

மேலும் முத். ஆலனுக்கு தேவ தாய் வெளிப் படுத்தியுள்ள ஓர் சம்பவம் இது. அர்ச். சாமிநாதர் தேவ அன்னையின் காட்சியைப் பெற்ற பின், சேசுவும் அவருக்கு காட்சியளித்தார். அக்காட்சியில் நமதாண்டவர் சாமிநாதரைப் பார்த்து, 'சாமிநாதா, நீ உன் பலத்தில் ஊன்றாமலும், மனிதரின் வெறும் புகழ்ச்சியைத் தேடாமலும், ஆன்மாக்களின் மீட்புக்காக மிகுந்த தாழ்ச்சியோடு உழைப்பது பற்றி நான் மகிழ்கிறேன். ஆனால், பல குருக்கள் எடுத்த எடுப்பிலேயே இடி இடித்தாற் போல் மிகப் பெரிய பாவங்களைத் தாக்கிப் பேச விரும்புகிறார்கள். இவர்கள் ஒரு காரியத்தை உணருவதில்லை. அதாவது, ஒரு நோயாளிக்கு கசப்பான மருந்து கொடுக்கு முன் அதனால் அவன் பயனடையக் கூடிய மனப்பான்மையை அவனுக்கு ஊட்ட வேண்டும். ஆகவே, முதன் முதலாக மக்களின் இதயங்களில் ஜெபத்தின் மீது, குறிப்பாக ஜெபமாலையின் மீது ஒரு அன்பை, ஒரு விருப்பத்தை மக்களிடம் ஏற்படுத்த குருக்கள் முயல வேண்டும். ஜெபமாலையைத் தொடங்கி உண்மையிலே அதை அவர்கள் தொடர்ந்து ஜெபித்து வருவார்களானால், இரக்கமுள்ள கடவுள் அவர்களுக்கு தம் வரத்தை மறுக்க முடியாது. ஆதலால், நீ ஜெபமாலையைப் பிரசங்கிக்க வேண்டுமென விரும்புகிறேன். - இதுவும் கார்த்த ஜெனா கூறியுள்ளதே.

வேறொரு இடத்தில் முத். ஆலன் சொல்கிறார்.

பிரசங்கம் ஆரம்பிக்கு முன் எல்லா குருக்களும் விசுவாசிகளுடன் சேர்ந்து ஒரு அருள் நிறை மந்திரம் சொல்கிறார்கள். கடவுளின் உதவியைக் கேட்டு அப்படிச் செய்கிறார்கள். அர்ச். சாமிநாதருக்கு தேவ தாய் அருளிய வெளிப்படுத்தலின்படி இங்ஙனம் செய்து வருகிறார்கள். அர்ச். சாமிநாதருக்கு தேவ தாய் ஒரு தடவை இவ்வாறு கூறினார்கள். என் மகனே, உன் பிரசங்கங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று நீ ஆச்சரியப்படாதே. நீ மழை பெய்யாத ஒரு நிலத்தில் விவசாயம் செய்ய முயல்கிறாய். எல்லாம் வல்ல கடவுள் இப்பூமியைப் புதுப்பிக்கத் திட்டமிட்டபோது, முதலில் மோட்சத்தி லிருந்து மழையை அனுப்பினார். தேவ தூதனின் 'மங்கள் வார்த்தை தான் அந்த மழை. இதனைக் கொண்டு இறைவன் உலகைப் புதுப்பித்தார்.

ஆதலால் நீ பிரசங்கம் செய்யும் போது மக்கள் என் ஜெபமாலையைச் செய்யும்படி தூண்டும். அப்படிச் செய்தால் உன் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிக பலனை விளைவிக்கும். அர்ச். சாமிநாதர் இவ்வாறு செய்யத் தாமதிக்கவில்லை . அது முதல் அவருடைய பிரசங்கங்கள் அதிக வலிமை பெற்றிருந்தன.

மேலே கூறப்பட்ட சம்பவம் 'ஜெபமாலை அற்புதங்கள்' என்ற இத்தாலிய நூலில் காணப்படுகிறது.

யுஸ்தின் என்பவருடைய புத்தகங்களிலும் இது காணப்படுகிறது. (143-ம் பிரசங்கத்தில்)

அர்ச். சாமிநாதரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி குருக்கள் ஜெபமாலையைப் பிரசங்கித்து வந்த காலத்தில் பக்தியும் பக்தியில் ஊக்கமும் கிறிஸ்தவ உலகில் செழித்து வளர்ந்தன. இதே போல் ஜெபமாலை மீது பற்றுதல் கொண்டிருந்த துறவற சபைகளிலும் பக்தி செழிப்புற்று வளர்ந்தது. இதை மக்கள் கைவிட்ட நாளிலிருந்து எல்லா வகையான பாவமும் ஒழுங்கீனமும் எங்கும் பரவி வருகின்றன.