இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 39. திருந்திய பங்கு

மேலே கூறப்பட்ட ஸ்பெயின் நாட்டு மேற்றிராணியார் தமது மேற்றிராசனத்தில் கண்ட முன்னேற்றத்தை டென்மார்க்கிலுள்ள ஒரு குரு தன்னுடைய பங்கிலும் தாம் கண்டதாக மிக்க ஆர்வத்துடன் கூறுகிறார். இவர் இதை மிக்க மகிழ்ச்சியோடு எப்போதும் கூறுவார். ஏனென்றால் அது இறைவனுக்கு மிகுந்த மகிமையாயிருந்தது. அவர் கூறுகிறார். என்னால் எவ்வளவு வற்புறுத்திக் கூற முடியுமோ அவ்வளவு கூறிவிட்டேன். நம் வேதத்தின் விசுவாசத்தை பல கோணங்களிலிருந்தும் எடுத்துச் சொன்னேன். என்னால் நினைத்துப் பார்க்க முடிந்த எல்லா காரணங்களையும் உபயோகித்தேன், மக்கள் தங்கள் வாழ்வை சீர்படுத்துமாறு பிரசங்கித்தேன். இத்தனை முயற்சி செய்தும் அவர்கள் சட்டை பண்ணவேயில்லை. முன் போலவே கவலையற்றவர்களாய் நடந்து வந்தார்கள். அப்போதுதான் நான் ஜெபமாலையைப் பற்றி எடுத்துரைக்க தீர்மானித்தேன்.

'என் பங்கு மக்களுக்கு ஜெபமாலை எவ்வளவு விலையுயர்ந்தது என்று எடுத்துச் சொன்னேன். அதை எப்படி ஜெபிப்பது என்று கற்றுக் கொடுத்தேன். ஜெபமாலையைப் பற்றி விடாமல் கூறி வந்தேன். அதனால் அவர்கள் மத்தியில் ஜெபமாலைப் பக்தி வேரூன்றியது. ஆறு மாதம் கழித்துப் பார்த்தால், என் பங்கு மக்கள் உண்மையிலேயே நல்லபடியாக மாறியுள்ளதைக் கண்டேன். கடவுளால் தரப்பட்ட இச்செபத்திற்கு தெய்வீக சக்தி உண்டு என்பது எவ்வளவு உண்மை ! இச்செபம் இருதயங்களைத் தொட்டு அவற்றில் பாவத்தின் மீது வெறுப்பையும் புண்ணியத்தின் மீது விருப்பத்தையும் வளர்க்கிறது'.

ஒரு நாள். முத் ஆலன் ரோச்சுக்கு தேவ அன்னை தோன்றி 'தேவ வார்த்தையானவரை மனிதாவதாரம் எடுக்கச் செய்யவும், மானிட மீட்பைக் கொண்டு வரவும் கடவுள் எவ்வாறு சம்மனசின் மங்கள மொழியை உபயோகித்தாரோ, அதைப் போலவே ஞான சீர்திருத்தத்தைக் கொண்டுவர விரும்புகிறவர்களும், கிறீஸ்துவில் மாந்தர் மறு பிறப்படைய வேண்டும் என்று ஆசிப்பவர்களும் என்னை மகிமைப்படுத்தி, அதே மங்கள வார்த்தையை எனக்குக் கூற வேண்டும். இறைவனை மனிதர்களுக்குக் கொண்டு வரும் வாய்க்காலாக நான் இருக்கிறேன். இதுபோலவே என் திருக்குமாரனுக்குப் பின், என் மூலமாகவே மனிதர், அருளையும் புண்ணியத்தையும் அடைய வேண்டும்' என்றும் கூறினார்கள்.

மிகக் கடினமான இருதயங்களைக் கூட மனந்திருப்ப ஜெபமாலைக்கு சக்தி உண்டு என்பதை இதை எழுதும் நானே என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். தியானப் பிரசங்கங்களில் மிகவும் பயங்கரமான உண்மைகளைப் பற்றிக் கேட்டும், கொஞ்சங்கூட மனம் இளகாத ஆட்களை எனக்குத் தெரியும். இவர்கள் நான் கூறிய ஆலோசனைப்படி, தினமும் ஜெபமாலை செய்ய ஆரம்பித்த பின் மனந்திருந்தி தங்களை முழுவதும் கடவுளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

முன்பு நான் தியானப் பிரசங்கங்கள் கொடுத்த பங்குகளுக்கு மறுதடவை சென்றபோது அங்கே மாபெரும் நல்மாற்றத்தைக் கண்டிருக்கிறேன், எங்கே ஜெபமாலை வழக்கம் கைவிடப்பட்டதோ அங்கு மக்கள் மீண்டும் அவர்களுடைய பழைய பாவப் பழக்கங்களுக்குள் விழுந்து விட்டதையும், எங்கே ஜெபமாலை சொல்லப்பட்டு வந்ததோ அங்கே மக்கள் தேவ வரப்பிரசாதத்தில் நிலைத்து. தினமும் புண்ணியப் பயிற்சியில் முன்னேறி வந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.