இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 36. சாத்தானிடமிருந்து விடுதலை

1578-ம் ஆண்டில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சி: ஆன்வர் என்ற இடத்தில் ஓர் பெண் தன்னை முழுவதும் பசாகக்குக் கையளித்து, அச்சாத்தானுடன் ஒப்பந்தம் செய்து, தன் இரத்தத்தைக் கொண்டு ஒப்பமும் இட்டிருந்தாள். கொஞ்ச நாளைக்குப் பின் அவள் மனச்சாட்சி அவளைக் கடித்துத் துன்புறுத்தியது. அவள் உண்மையிலேயே மனந்திருந்தி இப்பாவச் செயலுக்காகப் பரிகாரம் செய்ய விரும்பினாள். எனவே அவள் கருணையுள்ளமும் விவேகமும் உடைய ஒரு குருவிடம் சென்றாள். அவர் அவளை சங். ஹென்ரி என்ற குருவிடம் அனுப்பினார். இந்த ஹென்ரி என்ற குரு அர்ச். சாமிநாதர் சபையின் இயக்குநராக இருந்தார். இவரிடம் வந்து தன்னை அச்சபையில் சேர்த்துக் கொள்ளக்கேட்டு, பாவசங்கீர்த்தனமும் செய்யும்படி அப்பெண்ணிடம் அந்தக்குரு கூறியிருந்தார்.

அந்தப் பெண்ணும் அதன்படி சங். ஹென்ரி சுவாமியைத் தேடி வந்தாள். ஆனால் அவள் அங்கு ஹென்ரி சுவாமியைச் சந்திக்கவில்லை. மாறாக, சாமிநாதர் சபைக் குரு ஒருவரைப் போல் பசாசு வேடம் தரித்து வந்தது! இப்போலிக் குரு அந்தப் பெண்ணை கொஞ்சங்கூட இரக்கமின்றி திட்டினார். அவள் வாழ்நாளில் இனி ஒருபோதும் எல்லாம் வல்ல கடவுளின் இரக்கத்தை காணவே முடியாது என்று கூறினார். பசாசுடன் அவள் செய்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு போதும் அவள் தப்ப முடியாது என்று திட்ட மாய்க் கூறி விட்டார். அப்பெண் இதைக் கேட்டு மிகவும் வருந்தினாள். ஆயினும் தேவ இரக்கத்தின் மீது நம்பிக்கையை முற்றும் இழந்து விடவில்லை. மீண்டும் சென்று ஹென்ரி சுவாமியைத் தேடினாள். ஆனால் அதே போலிக் குருவையே சந்தித்தாள். இந்த இரண்டாம் முறையும் அவர் அவளுக்கு மீட்பு இல்லை என்றே மறுத்து விட்டார். அந்தப் பெண் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. மூன்றாம் முறையாக ஹென்ரி சுவாமியைப் பார்க்க வேண்டும் என்று தேடி வந்தாள். இந்தத் தடவை அவள் தேவ பராமரிப்பின் உதவியால் ஹென்ரி சுவாமியை நேரில் கண்டு கொண்டாள். அவர் அவளை மிக அன்புடன் வரவேற்றார். அவள் தன்னை முழுவதும் கடவுளின் இரக்கத்திற்குக் கையளித்துவிட்டு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்று கூறினார். அதன்பின் அவளை ஜெபமாலைப் பக்தி சபையில் சேர்ந்து அடிக்கடி ஜெபமாலையைச் சொல்லும்படியும் கூறினார்.

ஒரு நாள் சங். ஹென்ரி இப்பெண்ணுக்காக திருப்பலி பூசை நிறைவேற்றுகையில் தேவ அன்னை அப்பெண் எழுதிக் கொடுத்திருந்த ஒப்பந்தத்தை அவளிடமே திரும்பக் கொடுத்துவிடும்படி பசாசை கட்டாயப்படுத்தினார்கள். இவ்விதமாய் அவள் தேவ அன்னையின் அதிகாரத்தாலும் தன் ஜெபமாலைப் பக்தியாலும் அப்பசாசின் பிடியிலிருந்து விடுதலையடைந்தாள்.