சைமன் தே மோன்போர்ட் என்ற பிரபு ஜெபமாலைத்தாயின் பாதுகாவலின் கீழ் ஆல்பிஜென்ஸியன் பதிதருக்கு எதிராக பல வெற்றிகளை அடைந்தார். அவை பற்றிப் போதிய அளவு எழுத அநேகமாக சாத்தியமில்லை . இவ்வெற்றிகள் எவ்வளவு பெருமை வாய்ந்தவையென்றால் உலகில் அவற்றிற்கு ஈடு வேறில்லை . ஒரு தடவை அவர் ஐந்நூறு பேரை மட்டும் கொண்டு பத்தாயிரம் பதிதரை தோற்கடித்தார். இன்னொரு தடவை முந்நூறு பேரைக் கொண்டு மூவாயிரம் பேரை மேற்கொண்டார். இறுதியில் எண்ணூறு குதிரை வீரரையும் ஆயிரம் காலாட் படை பினரையும் கொண்டு ஒரு லட்சம் பேரையுடைய அரகோன் நாட்டு மன்னனின் சேனையை முற்றும் சிதறடித்தார். இவர் பக்கத்தில் ஒரே ஒரு குதிரை வீரனும் எட்டு சிப்பாய்களுமே இழக்கப்பட்டனர்.
ஆலன் தே லான்வாலி என்ற பிரிட்டனி நாட்டு வீரனையும் தேவ தாய் பெரும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றினார்கள். இவரும் ஆல்பிஜென்ஸியன் பதிதருக்கெதிராகப் போராடினார். ஒரு நாள் இவரைச் சுற்றி எப்பக்கமும் எதிரிகள் சூழ்ந்து கொண்ட போது நூற்றைம்பது கற்பாறைகள் எதிரிகள் மீது விழுந்தன. அதன் காரணமாக அவர் அவர்களுடைய கைகளிலிருந்து தப்பினார். இன்னொரு நாள் அவருடைய கப்பல் சேதமாகி மூழ்கப்போகும் நிலையில் தண்ணீருக்கு மேலே நூற்றைம்பது குன்றுகள் தோன்றும்படி தேவ அன்னை செய்தார்கள். அவற்றைப் பிடித்து ஏறி பத்திரமாய் அவர்கள் பிரிட்டனி நாட்டை அடைந்தார்கள்,
ஆலன் தே லான்வாலி என்பவர் ஜெபித்து வந்த தினசரி ஜெபமாலை மன்றாட்டைக் கேட்டு தேவ அன்னை செய்தருளிய எல்லா அற்புதங்களுக்கும் நன்றியாக, தினான் என்ற இடத்தில் அர்ச், சாமிநாதருடைய துறவிகளுக்கு ஒரு மடம் கட்டுவித்தார். அவரும் பின்னால் ஒரு துறவியாகி ஆர்லியன்ஸ் நகரில் அர்ச்சிஷ்டவராய் மரணமடைந்தார்,
ஓதேர் என்பவர் பிரிட்டனி நாட்டில் வாசலூர் என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு போர் வீரர். இவரும் தன் ஜெபமாலையைத் தன் கரத்திலோ அல்லது வாள் பிடியிலோ அணிந்து கொண்டு பதிதர் கூட்டங்களையும் திருடர் கும்பல்களையும் வேறு உதவியின்றி விரட்டியடித்தார். ஒரு தடவை இவ்வாறு அவர் எதிரிகளை விரட்டியபின், அவருடைய வாள் ஒளி வீசுவதைக் கண்டதாக அவருடைய பகைவரே கூறினார்கள். இன்னொரு தடவை அவருடைய கரத்தில் ஒரு கேடயத்தைக் கண்டதாகவும் அதில் ஆண்டவர், அவர் திரு அன்னை, அர்ச்சிஷ்டவர்கள் ஆகியோரின் படங்கள் பொறித்திருந்ததாகவும் சொன்னார்கள். இந்தக் கேடயம், அவர் தாக்குறாதபடி அவரைப் பாதுகாத்தது. அவர் தாக்குதல் செய்யவும் வலிமையளித்தது.
இன்னொரு முறை இருபதாயிரம் பேர் கொண்ட எதிரிப்படையை பத்தே சிறு அணிகளைக் கொண்டு வென்றார் ஓதெர். இவர் பக்கம் யாருமே சேதமாகவில்லை, இதனை கண்ட அப்பதிதப் படைத்தலைவன் ஓதெரைப் பார்க்க வந்தார். தன் பதித்தைப் பகிரங்கமாகக் கை விட்டார். யுத்தத்தின் போது ஓதெரைச் சுற்றிலும் நெருப்பு மயமான வாள்கள் காணப்பட்டன என்று எல்லோர் முன்பாகவும் அறிக்கையிட்டார்.