இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 32. ஜான் பேத்ரோ

அர்ச், சாமிநாதருடைய ஒன்று விட்ட சகோதரனான ஒரு உறவினன் இருந்தான். பெயர் ஜான் பேத்ரோ. இவன் மிக ஒழுக்கங்கெட்டவனாய் வாழ்ந்தான். தன் உறவினரான சாமிநாதர் அந்நகரில் ஜெபமாலையின் அதிசயங்களைப் பற்றிப் பிரசங்கிப்பதாகவும் அதனால் அநேகர் மனந்திருந்தி தங்கள் வாழ்வை சீர்படுத்துவதாகவும் கேள்விப்பட்டான். 'நான் மீட்படைவேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன், ஆனால் இப்போது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடவுளின் மனிதனான இவருடைய பிரசங்கத்தைக் கேட்க வேண்டும்' என்று தனக்குள்ளே கூறிக் கொண்டான் பேத்ரோ.

எனவே ஒருநாள் அர்ச். சாமிநாதரின் உரையைக் கேட்கச் சென்றான். அவன் வருவதை அர்ச். சாமிநாதர் கண்டவுடன் பாவத்தைப் பற்றி அதிக தீவிர ஊக்கத்துடன் கூறினார். அதே நேரம் தன் சகோதரனின் ஆன்மாவை ஒளிர்வித்து எவ்வளவு இரங்கத்தக்க நிலையில் அது உள்ளது என்பதை அவன் காணுமாறு செய்ய எல்லாம் வல்ல சர்வேசுரனை மன்றாடினார்.

முதலில் பேத்ரோ சற்றுத் திகிலடைந்தான். ஆயினும் தன் தீய வழிகளை விட்டுவிட தீர்மானிக்கவில்லை.

மீண்டும் ஒருமுறை சாமிநாதரின் பிரசங்கத்தை அவன் கேட்குமாறு வந்தான். இவ்வளவு இறுகிப் போன அவன் இருதயம், ஏதாவது ஒரு அசாதாரணமான வகையில் தான் உருக முடியும் என்று உணர்ந்த சாமிநாதர் உரத்த குரலில் 'ஓ ஆண்டவரான சேசுவே! இப்பொழுது உம் ஆலயத்துள் நுழைந்தவனுடைய ஆத்துமம் என்ன நிலையில் உள்ளதென்பதை இங்குள்ள அனைவரும் காணுமாறு செய்தருளும்' என்றார்.

திடீரென அங்கிருந்த யாவரும் ஜான் பேத்ரோவின் ஆன்மா ஒரு கூட்டம் பசாசுக்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவை அரோசிகமான மிருகங்களைப் போலிருந்தன. அவை பெரிய சங்கிலிகளால் அவனை கட்டி வைத்திருந்தன. இதைக் கண்டு பயந்து கலவரமடைந்த மக்கள் அங்குமிங்கும் ஓடி ஒளிந்தார்கள். தன்னைக் கண்டு மக்கள் எப்படி ஒதுங்கி ஓடுகிறார்கள் என்று கண்ட பேத்ரோ அவர்களை விட அதிக கலவரமடைந்தான்.

எல்லாரும் அப்படியே நில்லுங்கள் என அர்ச். சாமிநாதர் கூறி, தன் உறவினனைப் பார்த்து: 'நிர்ப்பாக்கிய மனிதா. நீ இருக்கும் பரிதாபத்துக்குரிய நிலையை ஒப்புக் கொண்டு தேவ அன்னையின் பாதத்தில் போய் விழு. இந்த ஜெபமாலையை வைத்துக் கொள். இதை பக்தியோடும் உன் எல்லாப் பாவங்கள் மீது உண்மையான துக்கத்தோடும் ஜெபி. உன் வாழ்வைத் திருத்துவதாக உறுதியான தீர்மானம் செய் என்றார்.

ஜான் பேத்ரோ முழங்காலில் விழுந்தான். ஜெபமாலையை முழுவதும் ஜெபித்தான். அதன் பின் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என அவனுக்குத் தோன்றிற்று. இதய பூர்வமான மனஸ்தாபத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்தான். அவன் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை செய்ய வேண்டுமென்று அர்ச். சாமிநாதர் கட்டளையிட்டார். அவன் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான், சாமிநாதர் தம் கையாலே அவன் பெயரை ஜெபமாலைப் பக்தி சபையில் எழுதிக் கொண்டார்.

பேத்ரோ கோவிலை விட்டுப் புறப்பட்ட போது அவன் முகம் முன் போல் கோர ரூபமாக இல்லை . அது ஒரு சம்மனசின் முகம் போல் காந்தி வீசியது. அது முதல் அவன் ஜெபமாலைப் பக்தியில் நீடிய ஊக்கமுடன் இருந்து கிறீஸ்தவ நல்வாழ்வு வாழ்ந்து நன்மரணம் அடைந்தான்.