இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 2. ஆரம்ப வரலாறு

ஜெபமாலையின் அடிப்படையாக, அதில் முதலிடம் வகிக்கும் ஜெபங்கள் கர்த்தர் கற்பித்த ஜெபமும் மங்கள வார்த்தை ஜெபமுமே. அதாவது பரலோக மந்திரமும் அருள் நிறை மந்திரமும். இந்த இரண்டு ஜெபங்களும் தான் விசுவாசிகளின் முதல் பக்தி முயற்சியாயிருந்தன. இவைதான் அப்போஸ்தலர்கள் காலம் முதல் இன்று வரை உபயோகத்தில் இருந்தும் வருகின்றன. அவையே விசுவாசிகளின் முதல் ஜெபம் என்று ஐயத்திற்கிடமின்றி கூறலாம்.

ஆயினும், 1214-ம் ஆண்டில்தான் ஜெபமாலையை இன்று நாம் கொண்டிருக்கும் வடிவத்திலும் முறைப்படியும் தாயாகிய திருச்சபை பெற்றுக் கொண்டது. ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தைப் பின் சென்றவர் களையும், பாவங்களில் உழன்றவர்களையும் மனந்திருப்பும் வல்லமையுள்ள கருவியாக அர்ச். சாமிநாதர் தேவதாயிடமிருந்து இதைப் பெற்று திருச்சபைக்கு அளித்தார். (ஆல்பிஜென்ஸ் பதிதம்: நன்மைக்கொரு கடவுள், தீமைக்கொரு கடவுள் உண்டென்றும், சேசு வெறும் மனிதன் மட்டுமே என்றும், இன்னும் பல தவறுகளைக் கொண்ட ஒரு பதிதக் கொள்கை.)

அர்ச். சாமிநாதர் எவ்வாறு ஜெபமாலையைப் பெற்றுக் கொண்டார் என்பதை இப்போது கூறுகிறேன். அந்த வரலாறு முத்தி பேறு பெற்ற ஆலன் ரோச் என்பவர் எழுதியுள்ள பிரசித்தி பெற்ற 'ஜெபமாலையின் மகிமை என்ற நூலிலேயே காணப்படுகிறது. ஆல்பிஜென்ஸியர் மனந்திரும்புவதற்கு இடையூறாக இருந்தது மக்களின் பாவங்களே என்பதை உணர்ந்த அர்ச். சாமிநாதர், தூலூஸ் என்ற பட்டணத்தினருகே இருந்த ஒரு காட்டுக்குள் சென்று மூன்று நாள் இரவும் பகலும் இடைவிடாது மன்றாடினார். அம்மூன்று நாளும் அவர் தேவ கோபத்தை அமர்த்துவதற்காக கடின தவ முயற்சிகளைச் செய்வதும் அழுது மன்றாடுவதுமாகவே இருந்தார். சாட்டையால் அவர் தம்மையே எவ்வளவு அடித்துக் கொண்டாரென்றால், அவருடைய உடல் புண்ணாகி, இறுதியில் மயக்கமுற்று விழுந்தார்.

அப்போது தேவ அன்னை மூன்று சம்மனசுக்களுடன் அவருக்குத் தோன்றினார்கள். சாமிநாதா, எந்த ஆயுதத்தைக் கொண்டு உலகத்தை சீர்திருத்த பரிசுத்த தமதிரித்துவம் விரும்புகிறது என்பதை அறிவாயா? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் மறுமொழியாக 'ஓ என் அன்னையே! என்னை விட உங்களுக்கே இது மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால், உம் திருக்குமாரனான சேசு கிறிஸ்துவுக்குப் பின் எங்கள் இரட்சண்ய கருவியாய் நீங்களல்லவா இருக்கின்றீர்கள்' என்று கூறினார்.

இதற்குப் பதிலுரையாக தேவ அன்னை இந்த வகையான போராட்டத்தில் கபிரியேல் தூதன் கூறிய மங்கள வார்த்தைதான் வெற்றி தரும் கருவியாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் அடித்தளக்கல் அதுவே. எனவே இந்த கடினப்பட்ட ஆன்மாக்களை அணுகி அவர்களை கடவுள் பக்கம் திருப்ப வேண்டுமானால், என்னுடைய ஜெபமாலையைப் பிரசங்கி என்று கூறினார்கள்.

அர்ச். சாமிநாதர் எழுந்தார். ஆறுதல் பெற்றார். அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை மனந்திருப்பும் ஆவலால் பற்றி எரிந்தவராய் நேரே பட்டணத்திலுள்ள மேற்றிராசன ஆலயத்துக்குச் சென்றார். உடனே கண்காணா தேவ தூதர்கள் மக்களைக் கூட்டுவதற்காக ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தார்கள். மக்கள் திரண்டனர். சாமிநாதர் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

அவர் பிரசங்கம் ஆரம்பித்ததும் ஒரு பயங்கர புயற்காற்று எழும்பியது. பூமி குலுங்கியது, கதிரவன் மங்கியது. பெரிய இடி முழக்கமும் மின்னலும் காணப்பட்டன. எல்லாரும் மிகவும் அஞ்சினார்கள். அவ்வாலயத்தின் ஒரு முக்கிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் படத்தைப் பார்த்த அம்மக்கள் முன்னைவிட அதிகம் பயந்தார்கள். மாதாவின் அந்தப் படம் தன் கரத்தை வான் நோக்கி மும்முறை உயர்த்தி, அவர்கள் மனந்திருந்தி வாழ்க்கையை திருத்தி அமைத்து தேவ அன்னையின் பாதுகாப்பைத் தேடாவிட்டால் அவர்களைத் தண்டிக்குமாறு தேவ நீதியை அழைத்தது.

இயற்கைக்கு மேலான இந்நிகழ்ச்சியின் மூலமாய் ஜெபமாலை என்னும் புதிய பக்தி முயற்சியைப் பரப்பவும், அதை மிகப் பரவலாக அறியச் செய்யவும் இறைவன் சித்தங்கொண்டார்.

இறுதியில் அர்ச். சாமிநாதரின் வேண்டுதலால் புயல் அமர்ந்தது. அவர் தம் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். ஜெபமாலையின் முக்கியத்துவத்தையும் பலனையும் அவர் எவ்வளவு உருக்கமுடனும் வலிமையுடனும் விவரித்துக் கூறினாரென்றால், ஏறக்குறைய தூலுஸ் நகர் வாசிகள் அனைவரும் ஜெபமாலையை ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் தவறான கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள். வெகு துரிதத்தில் பட்டணத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள். தங்கள் பழைய துர்ப்பழக்கங்களை விட்டு விட்டார்கள்.