இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 29

யாக்கோபு லாபான் வீட்டில் சேர்ந்ததும் - இராக்கேலைக் கண்டதும் - லாபான் அவனை ஏய்த்துப்போட்டதும் - யாக்கோபு இராக்கேலுக்காக உடன்படிக்கை பண்ணினதும் - இராக்கேலுக்குப் பதிலாக யாக்கோபுக்கு லியாளென்பவள் வஞ்சகமாய் விவாகம் பண்ணப்பட்டதும் - யாக்கோபு திரும்ப ஏழு வருஷம் சேவகம் பண்ணி இராக்கேலையும் விவாகம் பண்ணினதும்.

1. ஆகையால் யாக்கோபு புறப்பட்டுக் கீழ்த்திசைத்தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.

2. அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதனருகே கிடந்திருந்த ஆட்டு மந்தைகள் மூன்றையும் கண்டான்; அந்தக் கிணற்றிலிருந்துதானே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்பட்டிருக்கும். அதன் வாயோ ஒரு பெருங்கல்லால் மூடப் பட்டிருந் தது;

3. ஆடுகள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்த பின்பு மேய்ப்பர்கள் கல்லைப் புரட்டுவார்கள். அவைகள் வேண்டிய மட்டும் குடித்தான பிற்பாடு மறுபடியும் கல்லைக் கிணற்று வாயில் மேல் தூக்கிவைப்பது வாடிக்கையாம்.

4. யாக்கோபு மேய்ப்பவர்களை நோக்கி: சகோதரரே நீங்கள் எந்த ஊர்? என, அவர்கள் நாங்கள் ஆரானூர் என்றார்கள்.

5. மறுபடியும் அவன்: நாக்கோரின் மகனான லாபானை அறிவீர்களா என்று வினவ, அவர்கள்: அறிவோம் என்றார்கள்.

6. அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரிக்க; அவன் சுகமாய்த்தானிருக்கிறான்; அதோ அவனுடைய மகளாகிய இராக்கேல் தனது மந்தையோடு வருகிறாள் என்றார்கள்.

7. அப்பொழுது யாக்கோபு: இன்னும் பொழுது சாய அதிக நேரம் செல்லும். இது மந்தைகளைக் கொண்டு போய்ப் பட்டியில் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுங்கள், பிறகு அதுகளை இன்னும் மேயவிடலாம் என்றான்.

8. அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் ஒன்றாய்ச் சேருமுன்னே அப்படிச் செய்யலாகாது. அதுகள் சேர்ந்த பின் கிணற்று வாயினின்று கல்லை இறக்கி ஆடுகளுக்குந் தண்ணீர் காட்டுவோமென்று சொன்னார்கள்.

9. இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக் கையிலே, இராக்கேல் தன் தகப்பனுடைய ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். ஏனெனில், அவளே மந்தையை மேய்த்துக் கொண் டிருப்பாள்.

* 9-ம் வசனம். அக்காலத்திலுள்ள பிதாப்பிதாக்களின் முக்கியமான ஆஸ்தி ஆடுமாடுகளேயாம்; ஆதலால் அநேக மந்தைகளை எவர்கள் வைப்பார்களோ அவர்களுக்கு மேன்மை. மந்தைகளை மேயவிடுகிறது அக்காலத்திலே நல்ல தொழிலென்று எண்ணப்படும்.

10. யாக்கோபு அவளைக் கண்டவுடனே, அவள் தனது மைத்துனியென்றும், ஆடுகள் தன் மாமனாகிய லாபானுடையவைகளென்றுந் தெரிந்துகொண்டு கிணற்றை மூடிய கல்லைப் புரட்டி, 

11. மந்தைக்குத் தண்ணீர் காட்டினான். பிறகு இராக்கேலை முத்தஞ் செய்து உரத்த சத்தமிட்டழுதான்;

12. பின்பு தான் அவள் தகப்பனுக்குச் சகோதரி இரெபெக்காளுடைய குமாரனென்று அவளுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டு அவள் ஓடித் தன் தகப்பனிடம் போய்ச் சொன்னாள்;

13. தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபு வந்த சமாச்சாரங் கேட்டவுடன் லாபான் அவனுக்கு எதிர்கொண்டோடி அவனை அரவணைத்து மென்மேலும் முத்தஞ் செய்து தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனான். பின்னும் அவன் பிரயாணத்தின் முகாந்தரங்களைக் கேள்விப்பட்டமாத்திரத்தில் யாக்கோபை நோக்கி:

14. நீ என் எலும்பும் மாம்சமுமானவ னல்லவா? என்றான். அப்பால் ஒரு மாதக் காலம் முடிந்தபின்பு,

15. லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் சகோதரனென்று சும்மா எனக்கு வேலை செய்யலாமா? நீ சம்பளம் என்ன கேட்கிறாய் சொல் என்றான்.

16. லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவளுடைய பெயர் லீயாள், இளையவளின் பெயர் இராக்கேல்.

17. ஆனால் லீயாள் பீளைக்கண்ணுடையவள்; இராக்கேலோ ரூபவதியும், முகசவுந்தரி யமுமுள்ளவள்.

18. யாக்கோபு இவள்மேல் விருப்பம் கொண்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய இராக்கேலுக்காக நான் உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான்.

19. அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப் பார்க்கிலும் அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் இரு என்றான்.

* 19-ம் வசனம். லாபான் இவ்வார்த்தைகளைப் கபடமாய்ச் சொன்னான் என்று பின் சம்பவித்தவைகளால் தெரியலாயிற்று. அவன் அதிக லோபி. லோபித்தனத்தால் வரும் கேடு கொஞ்சமல்லவென்று பின்னால் விளங்கும்.

20. அந்தப்படியே யாக்கோபு ஏழு வருஷம் இராக்கேலைப் பற்றி வேலைசெய்து வந்தனன்; ஆனால் அவள் பேரில் அவன் வைத்திருந்த பட்சத்தின் மிகுதியால் அவ்வேழு வருஷம் அவனுக்குக் கொஞ்சநாளாகவே தோன்றின.

21. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: நீர் என் மனைவியை எனக்குத் தாரும்; ஏனென்றால் நான் அவளோடு சேர வேண்டிய கெடு ஏற்கனவே ஆயிற்றன்றோ? என்றான்.

22. அவன் இஷ்டர்களைப் பெருங்கூட்டமாக விருந்துக்கழைத்து விவாக மகோத்சவத்தைக் கொண்டாடி முடித்தான்.

23. ஆனால் அந்தி வேளையிலே அவன் தன் குமாரத்தியாகிய லீயாளை அழைத்துக் கொண்டுபோய் அவனிடத்தில் விட்டான். 

24. அவளுக்கு ஊழியம்பண்ண ஜெல்பாளென்பவளைக் கொடுத்தான். இப்பால் யாக்கோபு வழக்கப்படி லீயாளோடு சயனித்திருக்கக் காலையிலே அவள் லீயா ளென்று கண்டு, 

25. தன் மாமனாரை நோக்கி: நீர் என்னை இப்படி ஏன் செய்தீர்? இராக்கேலுக்காக அல்லவா நான் உமக்கு வேலை செய்தேன்? என்னை இப்படி வஞ்சகம் பண்ணுவானேன்? என்றான்.

26. அதற்கு லாபான்: மூத்தவளிருக்க இளைய பெண்ணைக் கொடுப்பது இவ்விடத்தில் வழக்கமல்லவே.

* 26-ம் வசனம். லாபான் தன் நாட்டு வழக்கத்தை ஆரம்பத்திலல்லோ சொல்ல வேண்டியதாயிருந்தது. உறுதியான வார்த்தைப்பாடு கொடுத்து அதை மீறின பின்பு ஊர் வாடிக்கையைப் பாராட்டுகிறது துரோகமான செய்கையென்றேயன்றி வேறென்ன சொல்லுவோம்?

27. (ஆகையால்) நீ இவளோடு சஞ்சாரம் பண்ணி ஏழு நாளை நிறைவேற்று; பிறகு இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலை செய்தால் இராக்கேலையும் உனக்குக் கொடுப்பேன் என்றான்.

28. யாக்கோபு அந்தப்படி செய்ய சம்மதித்தான். அந்த ஏழு நாள் சென்றபின்பு இராக்கேலோடு கல்யாணம் முடித்தான்.

* 28-ம் வசனம். தேவ பிரசையின் வர்த்திப்பினிமித்தமாகக் கடவுள் பிதாப்பிதாக்களுக்குச் செய்தருளிய விசேஷ உத்தரவுகளைக் குறித்து, முன்னே (16:3) வசனத்திற்குரிய விளக்கத்தில் நாம் சொல்லியதைக் காண்க.

29. லாபான் இவளுக்குப் பாளாள் என்பவளைத் தாதியாகத் தந்திருந்தனன்.

30. யாக்கோபு தான் அத்தனை நாள் ஆசித்த பெண்ணைக் கொண்டபின்பு முந்தினவளிலும் பிந்தினவளை அதிகமாய் நேசித்து, இன்னும் ஏழு வருஷம் லாபானிடத்திற் சேவித்து வந்தான்.

31. ஆனால் யாக்கோபு லீயாளை அற்பமாய் எண்ணுகிறானென்று கர்த்தர் கண்டு அவள் கெர்ப்பந்தரிக்கும்படி செய்தார். இவள் தங்கையோ மலடியாயிருந்தாள்.

32. லீயாள் கர்ப்பவதியாகி ஒரு புத்திரனைப் பெற்று: ஆண்டவர் எனது தாழ்மையைக் கண்டிருக்கின்றார். இனிமேல் என் புருஷன் என்னை நேசிப்பார் என்று கூறி அவனுக்கு ரூபன் என்னும் பெயரைச் சூட்டினாள்.

33. மறுபடியும் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை ஈன்றபோது: நான் அற்பமாய் எண்ணப் பட்டிருப்பதைக் கர்த்தர் அறிந்தமையால், இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று, அவனுக்குச் சீமையோன் என்னும் பெயரை யிட்டாள்.

34. அவள் மீண்டும் கர்ப்பவதியாகி இன்னொரு புத்திரனைப் பெற்று: இனிமேல் என் புருஷன் என்பேரில் பட்சமாயிருப்பார், அவருக்கு மூன்று மக்களைப் பெற்றேனன்றோ? என, இதற்காக அவனுக்கு லேவி என்னும் பெயரையிட்டாள். 

35. அன்றியும் நான்காம் முறைக்குக் கருக் கொண்டு ஒரு புத்திரனைப் பெற்று: இப் பொழுது ஆண்டவரைத் துதிப்பேன் என்று சொல்லி, அது நிமித்தம் அவனை யூதா வென்று அழைத்தாள். பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

* 35-ம் வசனம். எபிறேய பாஷையில் ஈரூபன்டு என்பது புத்திரனைத் தரிசித்தல்; ஈசீமையோன்டு என்பது கேட்டருளுதல்; ஈலேவிடு என்பது சம்சாரக் கட்டு; ஈயூதாடு என்பது துதி என்று அர்த்தமா கும்.