இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 29. ஈடேற்றத்தின் வழி

ஆன்மாக்களின் ஈடேற்ற அலுவலில் ஆண்டவருடன் ஒத்துழைத்து, சாத்தான் அவர்களை அழிக்க வகுத்துள்ள திட்டங்களை ஒழிப்பதைப் போல் கடவுளுக்கு அதிக விருப்பமுள்ளதும் அதிக உயர்வுமானது வேறில்லை என்று அர்ச். டேனிஸ் கூறுகிறார். ஆன்மாக்களை மீட்பதற்கன்றி வேறு எக்காரணத்திற்காகவும் தேவ சுதன் பூவுலகத்திற்கு வரவில்லை .

சேசு தம் திருச்சபையை நிறுவி பசாசின் அரசைக் கவிழ்த்து விட்டார். ஆனால் பசாசு தன் பலத்தை ஒன்று திரட்டியது. ஆல்பிஜென்ஸ் பதிதத்தையும், பகையுணர்ச்சி யையும், பிரிவினைகளையும் மிக அரோசிகமான தீவினைகளையும் 11, 12, 13-ம் நூற்றாண்டுகளில் உலகமெங்கும் பரப்பி மிகவும் கொடிய சீர்கேடுகளைச் செய்தது.

இவ்வித மிகப்பெரும் சீர்கேடுகளைச் சீர்ப்படுத்தி சாத்தானின் சக்திகளை முறியடிக்க வேண்டுமானால் மிகக் கடுமையான நடைமுறைகளை கையாள வேண்டியதா யிருக்கும். ஆனால் திருச்சபையின் பாதுகாவலியான பரிசுத்த கன்னிமாமரி, தன் திருக்குமாரனுடைய சினந்தணிக்க நமக்கு மிகவும் சக்தி வாய்ந்த கருவி ஒன்றை அளித்துள்ளார்கள். அது பதிதத்தை வேரறுக்கும். கிறீஸ்தவ ஒழுக்கத்தை சீர்ப்படுத்தும். அந்தக் கருவியே திருச்ஜெபமாலையின் பக்தி சபை. இதன் பலன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் திருச்சபையின் சிறந்த முதல் நூற்றாண்டுகளில் தழைத்திருந்த பிறர் அன்டையும் அருட்சாதன வாழ்வையும் ஜெபமாலை திரும்பவும் கொண்டு வந்துள்ளது. கிறீஸ்தவ ஒழுக்கத்தையும் புதுப்பித்துள்ளது.

10-ம் சிங்கராயர் பாப்பு, தாம் எழுதிய ஒரு சுற்றறிக்கையில், ஜெபமாலைப் பக்தி சபை கடவுளுடையவும், திருக்கன்னி மரியாயுடையவும் மகிமைக்கென நிறுவப்பட்டதென்றும், திருச்சபை மீது வந்து மோதவிருந்த தீமைகளை தடுத்து நிறுத்தும் மதிலாகக் கட்டப்பட்டதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

13-ம் கிரகோரியார் என்ற பாப்பு, ஜெபமாலையானது கடவுளின் கோபத்தை அமர்த்தவும் தேவ அன்னையின் உதவியை மன்றாடுவதற்குக் கருவியாகவும் பரலோகத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டதென்று கூறுகிறார்.

3-ம் ஜுல்ஸ் என்ற பாப்பு கூறுவது "தேவ அன்னையின் உதவியால் பரலோகம் அதிக எளிதாக நமக்குத் திறக்கும்படி கடவுளின் ஏவுதல் பெற்று வந்தது ஜெபமாலை."

3-ம் சின்னப்பர், அர்ச். 5-ம் பத்திநாதர் என்ற பாப்புமார்கள், ஞான சமாதானத்தையும், ஆறுதலையும் விசுவாசிகள் அதிக எளிதாய்பப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுக்கு ஜெபமாலை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இத்தகைய உன்னத காரியங்களுக்காக ஏற்பட்ட ஜெபமாலைப் பக்தி சபையில் சேர யாவரும் விரும்புவர் என்பது உறுதி.

ஜெபமாலை மீது ஆழ்ந்த பக்தியுடைய கர்த்தூசியன் சபை சாமி நாதர் என்ற குரு இக்காட்சியைக் கண்டார்: அவர் பார்க்கும்படி பரலோகம் திறக்கப்பட்டது. மகத்தான அணி வரிசைகளில் அங்குள்ளோர் குழுமியிருந்தனர். அவர்கள் மிகவும் இனிய ராகங்களில் ஜெபமாலையைப் பாடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பத்து மணியும் நமதாண்டவர் சேசு கிறீஸ்துவினுடையவும் அவர் திருத்தாயுடையவும் வாழ்வு, பாடுகள், மகிமை இவற்றைப் பற்றியதாயிருந்தது. மரியாயின் திருப்பெயர் வந்த போதெல்லாம் அவர்கள் தலை வணங்கினர். சேசுவின் திருப்பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் முழந்தாளிட்டனர். ஜெபமாலைப் பக்தி சபை உறுப்பினர் இங்கு ஜெபிக்கின்ற திருச்செபமாலையால், பரலோகத்திலும், பூவுலகிலும் தேவன் ஆற்றியுள்ள அரும் நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறினர். மேலும் ஜெபமாலையைக் கைக்கொள்ளுகிறவர்களுக்காகவும் அவர்கள் மன்றாடியதை அக்குரு கவனித்தார். ஜெபமாலைப் பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கென பல வண்ண நறுமண மலர்களால் ஆன பூ முடிகள் தயாராக இருந்ததையும் அவர் கண்டார். ஜெபமாலை சொல்கிறவர் கள் தங்கள் ஜெபிக்கும் ஒவ்வொரு ஜெபமாலைக்கும் தங்களுக்கு ஒரு மகுடத்தைத் தயாரிக்கிறார்கள் என்றும் அதை அவர்கள் மோட்சத்தில் அணிந்து கொள்ளலாம் என்றும் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இப்புனித கர்த்தூசிய குரு கண்ட காட்சி சேசுவால் நேசிக்கப்பட்ட அர்ச். அருளப்பர் கண்ட காட்சியைப் போலவே ஏறக்குறைய இருக்கின்றது. மாபெரும் திரளான சம்மனசுக்களையும் அர்ச்சிஷ்டவர்களையும் அவர் கண்டார். அவர்கள் நம் திவ்ய மீட்டர் அவர்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் பூமியில் நம் மீட்புக்காக அவர் அனுபவித்த பாடுகளுக்காகவும் இடைவிடாமல் அவரைத் துதிப்பதைக் கண்ணுற்றார். ஜெபமாலைப் பக்தி சபையின் பற்றுதலுள்ள உறுப்பினர்களும் இதனையன்றோ செய்கின்றார்கள்.

பெண்களுக்கும் பாமர எளியவர்களுக்கும் தான் ஜெபமாலை என்று கருதவே கூடாது. ஜெபமாலை ஆண்களுக்கும் உரியது. அதிலும் ஆடவரில் சிறந்தவர்களுக்கு அது உரியதாகும்: 3-ம் இன்னசென்ட் என்ற பாப்புவிடம், ஜெபமாலைப் பக்தி சபையை நிறுவ விண்ணிலிருந்து தாம் உத்தரவு பெற்றதாக அர்ச். சாமிநாதர் அறிவித்தார். அதைக் கேட்ட உடனேயே பரிசுத்த தந்தை தம் முழு அங்கீகாரத்தை அதற்கு அளித்தார். அதைப் பிரசங்கிக்குமாறு அர்ச். சாமிநாதரை ஊக்கப்படுத்தினார். தாமே அதில் சேர விருப்பம் தெரிவித்தார். அநேக கர்தினால்மார் மிக விருப்பத்துடன் இப்பக்தி முயற்சியைக் கைக்கொண்டனர். அதைப் பார்த்த லோப்பஸ் என்பவர் இவ்வாறு உரைத்தார். 'வயதும், பாலின அல்லது வேறு எந்த வேறுபாடும் யாரையும் இச்செபமாலைப் பக்தியில் ஈடுபடுவதைத் தடுப்பதாயில்லை '.

எப்பொழுதும் எல்லாத் துறையினரும் ஜெபமாலைப் பகதி சபையில் உறுப்பினராக இருந்து வந்துள்ளனர், அரசர்கள், இளவல்கள், பிரபுக்கள் இன்னும் பாப்புமார், கர்தினால்கள், மேற்றிராணிமார் எல்லோரும் அதில் உள்ளனர். இச்சிறு நூலில் இவர்கள் அனைவருடைய பெயர்களையும் எழுதினால் மிக நீளும். இந்நூல் ஒரு சுருக்கமான விளக்கமேயாகும். இதை வாசிக்கும் நண்பரே, இச்சபையில் நீரும் உட்பட்டால் உம் சகோதர உறுப்பினர்களுடைய பக்தியிலும் அவர்கள் இவ்வுலகில் அடையும் வரங்களிலும் மறுவுலகின் மகிமையிலும் நீர் பங்கு கொள்வீர். 'அவர்களுடைய பக்தியில் நீர் ஒன்றித் திருப்பதால் அவர்களுடைய நல்லுயர்விலும் பங்கு பெறுவீர்.