இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதியாகமம் - அதிகாரம் 28

இசாக் யாக்கோபை மெசொப்பொத்தாமியா தேசத்திற்கு அனுப்பினதும் - யாக்கோபு சொர்ப்பனத்தில் ஒரு ஏணியைக் கண்டதும் - பேட்டலில் ஒரு கல்லை நாட்டினதும் - யாக்கோபு பிரதிக்கினை பண்ணினதும்.

1. ஆகையால் இசாக் யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்து; நீ கானானியப் பெண்ணைக் கொள்ளவேண்டாம்;

2. புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப் பொத்தாமியாவுக்குப் போய் உன் தாயாரின் தந்தையாகிய பத்துவேல் என்பவரின் வீட்டிலே உன் மாமனாகிய லாபான் என்பவருடைய புத்திரிகளிலே ஒருத்தியை விவாகம் பண்ணக் கடவாய்.

3. சர்வ வல்லபமுள்ள கடவுளே உன்னை ஆசீர்வதித்து நீ அநேக ஜனங்களுக்குத் தகப்பனாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி,

4. அபிரகாம் பெற்ற ஆசீர்வாதத்தை அவர் உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததிக்கும் அருள்வாராக; அதனால் நீ பரதேசியாய் சஞ்சரிக்கும் பூமியையும், அவர் உன் பாட்டனுக்கு வாக்குத்தத்தம் பண்ணிக் கொடுத்த தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வாயாக என்றான்.

5. இசாக் அவனை அவ்விதமாய் அனுப்பி விட்ட பிறகு, யாக்கோபு புறப்பட்டுச் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய்த் தன் தாயாரான இரெபெக்காளின் தமயனுஞ் சீரியா தேசத்தானான பத்து வேலுடைய புத்திரனுமாகிய லாபானிடத்திலே சேர்ந்தான்.

6. இசாக் யாக்கோபை ஆசீர்வதித்து விவாகத்தின் பொருட்டுச் சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்கு அனுப்பி விட்டதையும், அவனை ஆசீர்வதித்த பிற்பாடு: நீ கானான் (நாட்டுக்) குமாரத்திகளின் பெண் கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,

* 6-ம் வசனம். இரெபெக்காள் தன் புருஷனுக்கு நேரான முகாந்தரங்களைச் சொல்லாமல் சாக்குப்போக்குச் சொல்லி வந்தாள். இசாக்குக்கு எசாயூவின்மேல் கோபமும் கஸ்தியும் வராதபடிக்கு அப்படிச் செய்தாள்.

7. யாக்கோபு தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து சீரியாவுக்குப் போனதையும் எசாயூ கண்டதினாலும்,

8. கானான் நாட்டுப் பெண்களின்மேல் தன்னுடைய தகப்பன் வெறுப்பாயிருக்கிறா னென்று சுயானுபோகத்தால் அறிந்ததி னாலும்,

9. எசாயூ இஸ்மாயேலியரிடஞ் சென்று தான் முன் கொண்டிருந்த மனைவிகளை யன்றி இன்னும் ஆபிரகாமுடைய புத்திர னான இஸ்மாயேலின் குமாரத்தியும் நப யோத்தின் சகோதரியுமான மகெலெத் என்பவளை விவாகம் பண்ணினான்.

10. யாக்கோபோவென்றால் பெற்சபேயிலிருந்து புறப்பட்டு ஆரானை நோக்கிக் கடந்து கொண்டிருந்தான்.

11. அவன் ஓர் இடத்தில் வந்து, சூரியன் அஸ்தமித்தபடியால் அங்கே இளைப்பாற விரும்பி அவ்விடத்தில் கிடந்த கல்லுகளில் ஒன்றை எடுத்துத் தலையணையாகத் தன் தலையின் கீழ் வைத்து அங்குதானே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

12. அப்போது அவன் கண்ட சொர்ப்பன மென்னவென்றால்: ஓர் ஏணி பூமியிலே ஊன்றியது; அதன் மேல் நுனியோ வானத்தை எட்டும். அதன்மேல் தேவதூதர்கள் ஏறுகிறவர் களும் இறங்குகிறவர்களுமாயிருந் தார்கள்.

13. அதற்கு மேலாக ஆண்டவர் வீற்றிருந்து அவனை நோக்கி: நாம் உன் தந்தையான அபிரகாமின் தேவனும் இசாக்கின் தேவனு மாகிய கர்த்தர்: நீ படுத்துக் கொண்டிருக்கிற இப்பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தந்தருளுவோம்;

14. உன் சந்ததியோ நிலப் புழுதிக்கு ஒக் கும்; நீ மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு திசைகளில் பரம்புவாய்; உன்னிலும் உன் சந்ததியிலும் பூமியினது சகல வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படுவன;

15. எவ்விடத்திலே போனாலும் உனக்கு நாம் காவலாயிருந்து இத்தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரப் பண்ணுவோமன்றி, நாம் உனக்குச் சொல்லியதை எல்லாம் நிறைவேற் று மட்டும் உன்னைக் கைவிடமாட்டோம் என் றார்.

* 15-ம் வசனம். யாக்கோபு தனியாகத் துக்கித்துக் கவலையுற்றுச் செல்லுகையில், கடவுள் அவனைத் தேற்றச் சித்தமாகி அவனுக்கு இக்காட்சியைத் தந்தருளினார். அவன் பிரயாணஞ் சுகமாய் முடியுமென்றும், பிறகு அவன் தன் சுயநாட்டிற்கும் வீட்டிற்கும் திரும்பிச் செல்வான் என்றும் காட்ட வேண்டியதைப்போல தேவதூதர் ஏணியில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருந்தார்கள். அன்றியும் அந்த ஏணி திவ்விய இரட்சகரின் மனு ஷாவதாரத்திற்கு அடையாளம். தேவசுதனானவர் பற்பல வம்சங்களாகிய படிகளின் வழியா யிறங்கி யாக்கோபின் கோத்திரத்தில் பிறப்பாரென்றும், அச்சந்ததியாரில் அநேகரை மோட்சத் திற்குக் கூட்டிக் கொண்டு போவார் என்றுங் குறிப்பாயிருக்கிறது. அதினால் அல்லோ கடவுள்: அபிரகாமின் தேவனும் இசாக்கின் தேவனும் நாமே, அவர்களின் பேரில் எப்படித் தயாபரரா யிருந்தோமோ அப்படியே உன்னையுங் கைவிடாமல் காப்பாற்றி அவர்களுடைய சந்ததியாகிய உன் கோத்திரத்திலே மனுஷாவதாரம் பண்ணி, பூமியிலுள்ள சகல கோத்திரங்களையும் ஆசீர் வதித்து மோட்ச சுதந்தரவாளிகளாகச் செய்வோம் என்கிறார். அந்த ஏணியில் ஏறுகிற சம்மன சுகள் யாக்கோபின் மன்றாட்டுக்களையுஞ் சுகிர்த ஆசைகளையும் தேவ சிம்மாசனத்திற்குக் கொண்டு போய் ஒப்புக்கொடுத்து, இறங்குகிற சம்மனசுகள் தேவ கிருபையின் பலன்களையுஞ் சகாயங்களையும் கொண்டு வந்து அவனுக்கு அளிக்கிறார்கள். ஜெபத்திலுள்ள வல்லபத்தையும், கிறீஸ்தவர்களுடைய கோவில்களின் பிரதாப மகிமையையும் இதனால் கண்டுபிடிக்கவும்.

16. யாக்கோபு நித்திரை தெளிந்து: மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்திலிருக்கின்றார், நானோ இதை அறியாதிருந்தேன் என்று,

* 16-ம் வசனம். ஆண்டவர் சர்வ வியாபகராகையால் அவர் இல்லாத இடம் எங்குமில்லை. ஆயினும் அவர் சில ஸ்தலங்களிலே தமது வியாபகத்தையும் மனிதர்களுக்கு அதி விசேஷ விதமாய் வெளிப்படுத்தச் சித்தமுள்ளவராயினார். யாக்கோபு நித்திரை செய்த இடம் மகா பரிசுத்தமான இடமென்று யோசிக்கவும்.

17. திகிலடைந்து: இந்த ஸ்தலம் எவ்வளவோ பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடும் பரலோகத்தின் வாசலுமே என்றான்.

18. பிறகு யாக்கோபு காலையில் எழுந்து தலையணையாகத் தான் வைத்துக் கொண்டிருந்த கல்லை எடுத்து ஞாபக ஸ்தம்பமாக நாட்டி, அதன்மேல் எண்ணெயை வார்த்து,

19. முன்னே லூசாவென்னும் பெயர் கொண்ட அந்த ஸ்தலத்திற்குப் பேட்ட லென்று பெயரிட்டான்.

* 19-ம் வசனம். பேட்டலென்பது தேவ வீடென்று அர்த்தமாகும்.

20. பின்னும் அவன்: தேவனாகிய கர்த்தர் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியில் என்னைக் காத்துக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுத்திக்கொள்ள வஸ் திரமும் எனக்குத் தந்தருளுவாராகில்,

21. நானும் என்தந்தையின் வீட்டிற்குச் செளக்கியமாய்த் திரும்பிச் சேர்ந்திருப்பேனா கில், கர்த்தரே எனக்குத் தேவனாகவிருப்பார்.

* 21-ம் வசனம். அதற்கு அர்த்தமாவது: முன்னை விட இனிமேல் அதிக பட்சம் நம்பிக்கை விசுவாசம் சர்வேசுரன் பேரில் வைத்து நடப்போம் என்பதே.

22. அன்றியும் நான் ஞாபக ஸ்தம்பமாக நாட்டிய இந்தக் கல்லே கோவில் எனப்படும்; மேலும் தேவரீர் எனக்குத் தரும் யாவற்றிலும் நான் பத்தில் ஒரு பங்கு தேவரீருக்குச் செலுத்துவேன் என்று நேர்ந்தான்.

* 22-ம் வசனம். கோவில் என்னும் பதத்திலே ஈகோடு என்பது கடவுள், ஈஇல்டு என்பது வீடு என்று அர்த்தமாகும். ஆதலால் கோவில் என்கிற பெயரானது தேவ ஆலயம் என்று அர்த்தமுள்ளதாமே. அது மெய்யான கடவுளின் ஆலயங்களுக்குச் செல்லுமேயன்றி, பொய்யான தேவர்களுக்கு அந்தப் பெயர் செல்லாது. பத்தில் ஒன்றைச் சுவாமிக்கு ஒப்புக்கொடுக்கிற முறை இவ்விடத்தில் தெளிவாய்க் காட்டப் பட்டிருக்கிறது. அப்படியே சுவாமிக்குத் தோத்திரமாகக் கோவில்களுக்குஞ் சன்னியாசி முதலிய துறவறத்தார்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் பக்தியுள்ள கிறீஸ்தவர்கள் பத்தில் ஒரு பங்கு கொடுத்துவருகிறார்கள்.