இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 28. ஜெபமாலையால் வரும் மீட்புப் பலன்

நம் இரட்சகரின் பாடுகளை இடைவிடாமல் நினைத்திருப்பதைப் போல் நம் மீட்புக்கு உதவியானதும், அதிக பலன் தருவதுமான ஞான முயற்சி வேறு எதுவும் இல்லை என்று அர்ச். அகுஸ்தீன் அழுத்தமாகக் கூறியுள்ளார்,

அர்ச், தாமஸ் அக்வினாஸின் ஆசிரியராயிருந்த அர்ச் பெரிய ஆல்பர்ட் என்பவருக்கு கடவுளின் வெளிப்படுத்துதலில் இவ்வாறு அருளப்பட்டது. ஒரு கிறீஸ்தவன் வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமையிலும் அப்பம் தண்ணீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கிறான். அல்லது வாரம் ஒரு முறை இரத்தம் வரும் வரை கசையால் அடித்து தவஞ் செய்கிறான். அல்லது 150 சங்கீதங்களையும் தினமும் சொல்கிறான் என வைத்துக் கொண்டால், இவற்றால் அவன் அடையும் பேறு பலன்களை விட நமதாண்டவரான சேசு கிறீஸ்துவின் பாடுகளைத் தியானிப்பதால் அல்லது அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால் அதிகமான பேறு பலன்களை அடைய முடியும். இது இப்படியானால், நமதாண்டவரின் முழு வாழ்வையும், அவரது பாடுகளையும் நினைவில் கொள்கிற பரிசுத்த ஜெபமாலை வழியாக நாம் எவ்வளவு பெரிய நற்பலன் அடையலாம்

ஒரு நாள் நம் தேவ அன்னை முத், ஆலனுக்கு இதனை வெளிப்படுத்தினார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் நமதாண்டவரின் பாடுகளின் உயிருள்ள நினைவுச் சின்னமுமாகிய திவ்விய பலி பூசைக்குப் பின் ஜெபமாலையைப் போல் அதிக நயமுள்ள பக்தி முயற்சி, அதிக பலனுள்ள பக்திச் செயல் வேறு இல்லை. நமதாண்டவர் சேசு கிறீஸ்துவின் வாழ்க்கை , பாடுகள் இவற்றின் இரண்டாம் பிரதிபலிப்பும் நினைவுச் சின்னமுமாக ஜெபமாலை இருக்கிறது.

'இஷ்டப்பிரசாத நிலையில் இருக்கும் ஒரு விசுவாசி, சேசு கிறீஸ்துவின் வாழ்வையும், பாடுகளையும் தியானித்து கொண்டு ஜெபமாலை ஜெபித்தால் அவன் தன் பாவங்களின் முழு பரிகரிப்பையும் அடைகிறான்' என்று திரேவ் நகர் கர்த்தூசிய சபையைச் சார்ந்த வண. தோமினிக் என்பவருக்கு 1481-ம் ஆண்டு தேவ அன்னை தோன்றி கூறியதாக சங். டோர்லண்ட் என்ற குரு உரைக்கின்றார்.

முத். ஆலனுக்கு நம் அன்னை தோன்றி, பின்வருவனவற்றைக் கூறியுள்ளார்கள். 'நீ இதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் ஜெபமாலையைச் சொல்வதற்கு ஏற்கனவே அநேக பலன்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆயினும் ஒவ்வொரு ஐம்பது அருள் நிறை மந்திரங்களாலான (ஐந்து தேவ இரகசியங்களைக் கொண்ட ஜெபத்தையும் சாவான பாவமில்லாத நிலையில், பக்தியுடனும் முழங்காலிலிருந்தும் ஜெபிப்பவர்களுக்கு இன்னும் அநேக பலன்களை அளிப்பேன். ஜெபமாலையின் ஜெபங்களையும் தியானங்களையும் நீடித்துச் செய்து வருகிறவர்கள் அதற்கு சன்மானம் அடைவார்கள். அப்படிச் செய்கிறவர்களுக்கு வாழ்வின் முடிவில் அவர்களுடைய பாவங்களுக்குரிய முழு மன்னிப்பையும் தண்டனைப் பரிகரிப்டையும் முழுவதுமாக அடைந்து கொடுப்பேன். இது நடைபெற முடியாதது என்று நம்பிக்கையற்றவனாயிராதே. இதைச் செய்வது எனக்கு எளிது. ஏனென்றால் பரலோக அரசரின் அன்னையாய் இருக்கிறேன். அவரும் என்னை அருள் நிறைந்தவளென அழைக்கிறார். அருளால் நான் நிறைந்திருப்பதால் என் அன்புப் பிள்ளைகளுக்குத் தாராளமாய் வரப்பிரசாதங்களை அள்ளி வழங்க முடியும்'.

ஜெபமாலையின் சக்தியைப் பற்றி அர்ச். சாமிநாதர் எவ்வளவு நிச்சயத்தோடிருந்தாரென்றால், அவர் பாவசங்கீர்த்தனம் கேட்கும் போது ஜெபமாலையைத் தவிர வேறு பரிகாரம் கொடுப்பதே அரிது. இதற்கு ஒரு உதாரணம். நான் ஏற்கெனவே கூறிய ரோமை நகர் பெண்மணிக்கு அவர் ஒரு ஜெபமாலையைப் பரிகாரமாகக் கொடுத்தது. சாமிநாதர் ஒரு பெரிய அர்ச்சிஷ்டவர். மற்ற குருக்களும் அவரை கண்டு நடக்க வேண்டும். மற்ற ஜெப தவங்களை பரிகாரமாகக் கொடுப்பதை விட ஜெபமாலையைத் தியானித்து சொல்லும்படி கூற வேண்டும். மற்ற பரிகாரங்கள் குறைந்த பலனுள்ளவை. கடவுளுக்கு விருப்பம் குறைந்தவை, புண்ணிய வளர்ச்சியில் அவ்வளவு உதவி செய்ய இயலாதவை. பாவத்தில் விழாமல் தடுக்க ஜெபமாலையைப் போல் அவ்வளவு சக்தி கொண்டவையல்ல. மேலும் மற்ற பல பக்தி முயற்சிகளுக்கு இல்லாத பலன்கள் ஜெபமாலைக்கு உள்ளன. அவற்றை விசுவாசிகள் அடையலாம்.

பிலோஸியுஸ் என்ற குரு கூறுவது போல், 'சேசு கிறீஸ்துவின் வாழ்வு, பாடுகள் பற்றிய தியானத்தோடு கூடிய ஜெபமாலை நிச்சயமாக நமதாண்டவருக்கும் அவர் திருத்தாயாருக்கும் மிகவும் விருப்பமானது. எல்லா வரப்பிரசாதங்களையும் அடைந்து கொள்ள மிகவும் நிச்சயமான வழியாயிருக்கின்றது. நாம் நமக்காக ஜெபமாலை சொல்லலாம். யாருக்காக ஜெபிக்க விரும்புகிறோமோ அவர்களுக்காகச் சொல்லலாம். அனைத்து திருச்சபைக்காகச் சொல்லலாம். எனவே நம் தேவைகள் யாவற்றிலும் ஜெபமாலையைச் ஜெபிப்போம். நம் ஆன்ம ஈடேற்றத்துக்காக சர்வேசுரனிடம் நாம் கேட்கும் வரப்பிரசாதங்களைத் தப்பாமல் அடைவோம்.