இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 27. ஜெபமாலையால் விளையும் நன்மைகள்

எத்தனையோ சிறந்த ஆன்மாக்கள் கைக்கொண்ட ஜெபமாலையை நீங்களும் கைக்கொள்ளுமாறு இன்னும் பல காரணங்களைக் காட்ட விரும்புகிறேன். தேவ இரகசியங்களைத் தியானித்துக் கொண்டு சொல்லப்படும் ஜெபமாலையால் கீழே வரும் வியப்புக்குரிய நன்மைகள் விளைகின்றன. 

1 சேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான அறிவை கொஞ்சங் கொஞ்சமாக ஜெபமாலை நமக்கு ஊட்டுகிறது. 

2. நம் பாவங்களைக் கழுவி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது. 

3. நம் எல்லா எதிரிகள் மீதும் வெற்றியளிக்கிறது.

4. புண்ணியப் பயிற்சியை எளிதாக்குகிறது.

5. நமதாண்டவர் மீது அன்பால் நம்மை எரியச் செய்கிறது. 

6. வரப்பிரசாதங்களாலும் பேறு பலன்களாலும் நம்மை செல்வந்தராக்குகிறது. 

7. சர்வேசுரனுக்கும் நம் அயலாருக்கும் நாம் செலுத்த வேண்டியவற்றைச் செலுத்த உதவுகிறது. 

8. அத்துடன் எல்லாம் வல்ல கடவுளிடமிருந்து எல்லா வகையான அருனையும் பெற்றுத் தருகின்றது.

கிறீஸ்தவனின் கல்வி எது? 

சேசு கிறீஸ்துவைப் பற்றிய அறிவும் மீ' பின் பாடமுமேயல்லவா? எல்லா மனிதக் கல்வியையும் விட இது விலை மிகுதியும் நிறைவும் கொண்டது என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார் (பிலிப். 3:8) இது உண்மையே, ஏனென்றால்:

1 சர்வேசுரனும் பரிசுத்தருமானவரே இதில் அறியப்பபடும் பொருளாயிருக்கிறார். பிரபஞ்சத்தையே இவருடன் ஒப்பிட்டாலும் அது ஒரு பனித்திவலை அல்லது ஒரு மணல் பொடியே ஆகும்.

2 இவ்வறிவு நமக்கு மிகவும் உதவக்கூடியது. மனிதக் கல்வியெல்லாம் நம்மை புகையாலும் ஆங்காரத்தின் வெறுமையாலும் தான் நிரப்புகின்றன.

3. இவ்வறிவு நமக்கு இன்றியமையாதது. ஏனென்றால் சேசு கிறீஸ்துவின் அறிவு இல்லாமல் எவரும் மீட்படைய இயலாது. ஆனால் இதர கல்வி எதுவும் அறியாத ஒருவன் சேசு கிறீஸ்துவின் அறிவால் ஒளி பெறுவானாயின் அவன் மீட்படைகிறான்.

நமதாண்டவரின் வாழ்வு, மரணம், பாடுகள், மகிமை இவற்றை தியானிப்பதால் சேகவைப் பற்றிய அறிவை நமக்குத் தருகிற ஜெபமாலை ஆசீர் பெற்றதல்லவா!

சாலமோனின் ஞானத்தைக் கண்டு வியப்பில் மூழ்கிய சாபாவின் அரசி இவ்வாறு கூறினாள்: 'உம் மக்களும் உம் ஊழியரும் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் எப்போதும் உம்முன் நின்று உமது ஞானத்தைக் கேட்டுவருகிறார்கள்' (அர, 10:8), ஆனால் நம் மீட்பரின் வாழ்வு, புண்ணியங்கள், பாடுகள் மகிமை இவற்றை கருத்துடன் தியானிக்கும் விசுவாசிகள் அவர்களைவிட அதிக மகிழ்ச்சி யடைகிறார்கள். காரணம், இந்த தியானத்தினால் அவர்கள் உத்தம அறிவைப் பெறுகிறார்கள். அதிலே நித்திய வாழ்வு அடங்கியுள்ளது. இதுவே நித்திய வாழ்வு (அரு. 17:3).

முத்தி பேறு பெற்ற ஆலன் ரோச் என்பவருக்கு தேவ அன்னை இதனை வெளிப்படுத்தினார்கள். அதாவது, அர்ச் சாமிநாதர் ஜெபமாலையைப் பிரசங்கிக்கத் தொடங்கின உடனே கடினப்பட்ட பாவிகள் நெஞ்சுருகி தங்கள் பெரும் பாவங்களுக்காக கசிந்து அழுதார்கள். இளஞ்சிறார்கள் நம்பற்கரிய சுய ஒறுத்தல்களைச் செய்தார்கள். எங்கெல்லாம் அவர் ஜெபமாலையைப் போதித்தாரோ அங்கெல்லாம் எவ்வளவு உருக்கம் எழுந்ததென்றால் பாவிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து, தாங்கள் மேற்கொண்ட பரித்தியாகங்களாலும் இருதய மாற்றத்தாலும் எல்லாருக்கும் முன்மாதிரிகையாய்த் திகழ்ந்தார்கள்.

ஏதோ தவறுதலாக உங்கள் மனச்சாட்சி பாவத்தால் பளுவுற்றிருந்தால், உங்கள் ஜெபமாலையை எடுங்கள். அதில் ஒரு பகுதியையாவது சொல்லுங்கள். சொல்லும் போது நமதாண்டவரின் வாழ்வு, பாடுகள், மகிமை இவற்றின் தேவ இரகசியங்களைச் சிந்தியுங்கள். இவ்வாறு நீங்கள் இத்திரு நிகழ்ச்சிகளைத் தியானித்து அவற்றை மகிமைப்படுத்தும் போது, நிச்சயம் மோட்சத்தில் அவர் தமது திருக்காயங்களை பிதாவிடம் காட்டுவார். உங்களுக்காக பிதாவிடம் மன்றாடுவார். பாவத்துக்காக துயர மனஸ்தாபத்தையும் மன்னிப்பையும் உங்களுக்குப் பெற்றருள்வார்.

'பரிதாபத்திற்குரிய பாவிகள் ஜெபமாலையை மட்டும் சொல்வார்களானால், என் பாடுகளின் பேறுபலன்களிலே அவர்கள் பங்கு பெறுவார்கள். நான் அவர்களுக்காகப் பரிந்து பேசுவேன். என் பிதாவின் நீதியை சாந்தப் படுத்துவேன்' என்று ஒரு நாள் நமதாண்டவர் முத். ஆலனுக்குக் கூறினார்.

இந்த வாழ்வுதான் என்ன? ஒரே யுத்தமும் தொடர்ச்சியாக வரும் சோதனைகளும் தானே? மாம்சமும் இரத்தமுமல்ல நாம் போராடும் எதிரிகள். நரக வல்லமைகளோடு அல்லவா நாம் போராட வேண்டியுள்ளது! நம்மை நடத்துகிறவரே நமக்குக் கற்றுத் தந்த பரலோக மந்திரம் ஒரு ஆயுதம். பாசாசுகளை விரட்டி பாவத்தை அழித்து, பூமியைப் புதுப்பித்த மங்கள வார்த்தை ஜெபம் இன்னொரு ஆயுதம். இவ்விரு ஆயுதங்களைக் கொண்டல்லாமல், இவற்றை விடச் சிறந்த வேறு எதைக் கொண்டு இந்த எதிரிகளுடன் போராடப் போகிறோம்? நமது ஆண்டவரும் மீட்பருமான சேசு கிறீஸ்துவின் வாழ்வையும் பாடுகளையும் தியானிப்பதாகிய ஆயுதத்தைத் தவிர, வேறு எந்த சிறந்த ஆயுதத்தை நாம் பயன்படுத்த முடியும்? அர்ச். இராயப்பர் கூறுவது போல, அவர் வெற்றி கண்ட விரோதிகளை - நம்மைத் தினமும் தாக்குதல் செய்யும் அதே விரோதிகளை இந்த பாடுகளின் சிந்தனையால் நாம் வெல்ல வேண்டும். 1இரா. 4:1

கர்தினால் ஹுயூக் என்பவர் இவ்வாறு உரைக்கிறார்: 'சேசு கிறீஸ்துவின் தாழ்ச்சியாலும் அவருடைய பாடுகளாலும் பசாசு நசுக்கப்பட்டது. அந்நேர முதல், எந்த ஆன்மா நமதாண்டவரின் வாழ்வின் திருநிகழ்ச்சிகளைத் தியானித்து தன்னையே ஆயத்தப்படுத்திக் கொள்கிறதோ, அந்த ஆன்மாவைத் தாக்க பசாசு ஏறக்குறைய முற்றிலும் பலமிழந்து விடுகிறது. அப்படியே அந்த ஆன்மாவை பசாசு உபத்திரவம் செய்தாலும், நிச்சயம் அது தோற்று வெட்கிப் போகும்'.

'கடவுளின் ஆயுதங்களை அணிந்து கொள்ளுங்கள்' (எபே. 6.11} என்று உரைக்கிறார் அர்ச், சின்னப்பர், கடவுளின் ஆயுதமாகிய ஜெபமாலையினால் உங்களை ஆயுதபாணிகளாக்கிக் கொள்ளுங்கள், அப்படியானால் நீங்கள் பசாசின் தலையை நசுக்குவீர்கள். அவனுடைய சோதனைகளையெல்லாம் எதிர்த்து நிற்பீர்கள். இதனாலன்றோ வெறும் ஜெபமாலை கூட பசாசுக்கு அவ்வளவு பயங்கரமுள்ளதாயிருக்கின்றது. இதனாலன்றோ பேய் பிடித்தவர்களின் உடலிலிருந்து பேய்களை விரட்ட இச்செபமாலையை அர்ச்சிஷ்டவர்கள் உபயோகித்திருக் கிறார்கள். இவ்வித நிகழ்ச்சிகளை பல நம்பகமான ஏடுகளில் காணலாம்.

முத், ஆலனுக்குத் தெரிந்த ஒரு மனிதனுக்குப் பேய் பிடித்திருந்தது. அதை விரட்ட அவன் எல்லா வகையான பக்தி முயற்சிகளையும் கடைசி மட்டும் அனுசரித்தும் முடியவில்லை. முடிவில் அவன் ஜெபமாலையைத் தன் கழுத்தில் அணிந்தான், அது அவனுக்கு ஓரளவுக்கு விடுதலை கொடுத்தது. அதைக் கழுத்திலிருந்து கழற்றும் போதெல்லாம் பசாசு அவனைக் கொடுமையாக வதைத்தது. எனவே அதை ஒருபோதும் கழற்றாமல் இரவும் பகலும் அணிந்திருந்தான், இந்த சங்கிலியை சகிக்க கூடாமல் பசாசு அம்மனிதனை விட்டு வெளியேறிற்று. மேலும் பேய் பிடித்த அநேகருடைய கழுத்தில் ஜெபமாலையை அணிவித்ததனால் அவர்களை விடுவித்துள்ளதாக முத் ஆலன் உறுதியாக கூறியுள்ளார்,

அரகோன் நாட்டில் அர்ச். சாமிநாதர் சபையைச் சேரந்த சங். ஜான் ஆமாட் என்ற குரு தபசு கால பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். பேய் பிடித்திருந்த ஒரு இளம் பெண்ணை அவரிடம் கொண்டு வந்தார்கள். பேயைத் துரத்த அவர் பல முறை முயன்றும் கூடவில்லை . இறுதியில் தன் ஜெபமாலையை எடுத்து அவள் கழுத்தில் போடவும் அவள் மிகப் பயங்கரமாகக் கூச்சலிட்டாள். இதை எடுத்து விடுங்கள். இதை எடுத்து விடுங்கள். இந்த ஜெபமாலை என்னை வதைக்கிறதே என்று கத்தினாள். அந்த குரு அவள் மேல் இரக்கப்பட்டு ஜெபமாலையை எடுத்து விட்டார்.

அன்று இரவு அவர் படுக்கையில் படுத்ததும் அந்தப் பெண்ணைப் பிடித்திருந்த பேய்கள் கடும் கோபத்துடன் அவர் மீது பாய வந்தன. அவரோ தன் ஜெபமாலையைக் கைக்குள் வைத்துக் கொண்டார். அதை அகற்ற பசாசுகள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லலை. அந்த குரு 'அர்ச்சிஷ்ட மரியாயே, ஜெபமாலையின் மாதாவே எனக்கு உதவ வாரும்' என்று கூறி தன் ஜெபமாலையால் பசாசுகளை அடித்து விரட்டினார்.

மறுநாள் அவர் கோவிலுக்குப் போன போது அந்தப் பெண்ணை மீண்டும் பேய் பிடித்திருக்கக் கண்டார். அப்பேய்களுள் ஒரு பேய் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டு, 'சகோதரா, நீ மட்டும் ஜெபமாலை இல்லாமல் இருந் திருப்பாயானால் அப்படியே உன்னை அமுக்கியிருப்போம்' என்றது. அவரோ தன் ஜெபமாலையை அந்தப் பெண்ணின் கழுத்தில் போட்டு சேசுவின் திருப்பெயராலும் அவருடைய திருத்தாயாரான மரியாயின் பெயராலும் ஜெபமாலையின் வல்லமையாலும் அசுத்த அரூபிகளே, உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். இப்பெண்ணின் உடலை விட்டு போங்கள்' என்று கூறினார். கூறவும் அவைகள் அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. அந்தப் பெண்ணுக்கும் விடுதலை கிடைத்தது.

கெட்ட அரூபிகள் செய்யும் எல்லா வகையான தந்திர சோதனைகளை மேற்கொள்ள ஜெபமாலைக்கு இருக்கும் சக்தியை இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அதே போல ஜெபமாலையால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற முடியும். ஏனென்றால் மந்திரித்து ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபமாலை மணிகள் பசாசுக்களை விரட்டியடிக்கின்றன.