இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 25. அர்ச்சிப்பின் திரவியம்

ஜெபமாலையில் வரும் ஜெபங்களிலும் அதன் தேவ இரகசியங்களிலும் அடங்கியிருக்கும் நம் அர்ச்சிப்புக்கேது வான வியப்புக்குரிய ஞான திரவியங்களை நாம் ஒரு போதும் முற்றும் அறிந்து கொள்ள முடியாது. நமதாண்டவரும் மீட்பருமான சேசு கிறீஸ்துவின் வாழ்வு, மரணம் இவை பற்றிய தியானம், அதைச் செய்கிறவர்களுக்கு மிக ஆச்சரியமான பலன்களை விளைவிக்கும் ஊற்றாகியிருக்கிறது.

இக்காலத்தில் மக்கள் தங்கள் ஆன்மாவை அசைத்துக் குலுக்கி ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தும் காரியங்களைத் தேடுகிறார்கள். ஆனால் உலக சரித்திரத்திலேயே, ஜெபமாலையில் பொதிந்திருக்கும் வியப்புக்குரிய நம் மீட்டாரின் வாழ்வு, மரணம், மகிமை போன்று ஆன்மாவை நெகிழச் செய்யும் வரலாறு வேறு கிடையாது. ஆண்டவரின் வாழ்க்கைத் திருநிகழ்ச்சிகளில் முக்கியமானவையெல்லாம் பதினைந்து தேவ இரகசிய நிலைக்காட்சிகளில் நம் கண்முன் நிறுத்தப்படுகின்றன. கர்த்தர் கற்பித்த ஜெபம், மங்கள வார்த்தை ஜெபம் இவற்றைவிட மிஞ்சிய வியப்பும் உன்னதமுமான ஜெபம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? நம்முடைய எல்லா விருப்பங்களும் எல்லாத் தேவைகளும் இந்த இரு ஜெபங்களிலும் காணப்படுகின்றனவே!

ஜெபமாலையில் வரும் தேவ இரகசியங்களைப் பற்றிய தியானமும் அதில் வரும் ஜெடங்களும்தான் மற்றெல்லா ஜெபங்களிலும் எளிதானவை. ஏனென்றால், அவற்றில் காணப்படும் நமதாண்டவரின் பலதிறப்பட்ட புண்ணியங் களும் அவருடைய வாழ்வின் பல நிலைகளும் மிக அற்புதமான முறையில் நம் மனதிற்குப் புத்துணர்ச்சி ஊட்டி பராக்குகளைத் தவிர்ப்பதில் நமக்கு உதவியாயிருக்கின்றன.

கல்வியுடையோருக்கு இத்திரு நிகழ்ச்சிகள் மிக அழமான உண்மைகளின் ஊற்றாகின்றன. மற்ற சாதாரண மக்களுக்கு அவர்கள் சக்திக்கேற்ற ஞான அறிவையூட்டும் வழிகளாயிருக்கின்றன.

அன்பின் ஐக்கிய ஜெபத்தின் மிக உயர்ந்த நிலைக்குச் செல்லுமுன் இந்த எளிய முறையான தியானத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். இதுவே அர்ச். தாமாஸ் அக்வினாஸின் கருத்து. ஒருவன் முதலில் ஒரு போர்க்களத்தில் பயிற்சி பெறுவது போல, ஜெபமாலை நமக்கு எடுத்துக் காட்டும் எல்லாப் புண்ணியங்களையும் அடைய முயற்சிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை யாகக் கூறுகிறார். வேத அறிவிற் சிறந்த கயித்தான் என்பவர் 'கடவுளுடன் நாம் உண்மையான நெருங்கிய ஐக்கியத்தை அடையும் வழி இதுவே. ஏனென்றால் (புண்ணியப் பயிற்சி) இல்லாமல் மேற்கொள்ளப்படும் ஐக்கிய ஜெபம், ஆன்மாக்களை தவறிப் போகச் செய்யும் ஒரு ஆபத்தான பொய்த்தோற்றமே' என்கிறார்.

இக்காலத்தில் 'ஒளி பெற்றோர்' - 'செயலற்றோர்' * என்பவர்கள் இந்த ஆலோசனையைக் கடைப்பிடித்திருந்தால் அவர்கள் இவ்வளவு கீழ்நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள். இத்தனை துர்மாதிரிகை காட்டி நன்மக்களின் பக்தியைக் கெடுத்திருக்கவும் மாட்டார்கள். பரலோக மந்திரத்தையும் அருள் நிறை மந்திரத்தையும் விட அதிக அழகும் உயர்ந்ததுமான ஜெபங்களைச் சொல்ல முடியும் என்று நினைப்பது பசாசின் விநோதமான ஒரு ஏமாற்றுக்கு உட்படுவதாகும். (* ஒளி பெற்றோர் (Illuminatl) செயலற்றோர் (Quletists) என தங்களை அழைத்துக் கொண்ட தவறான கொள்கை யுடையவர்கள் அர்ச். லூயிஸ் காலத்தில் இருந்தார்கள். இரு சாராருமே இறைவனின் ஏவுதலைப் பற்றி தவறாக எண்ணினார்கள். எல்லாம் இறைவனால் ஏவப்படுவதினால் தன் முயற்சியே தேவையில்லை என்பதே இவர்களின் கொள்கை.)

விண்ணிலிருந்து வந்த இந்த ஜெபங்கள் நம் ஆன்மாக்களுக்கு துணையும் பலமும் பாதுகாப்புமாக இருக்கின்றன. ஆனால் இவற்றை எப்போதும் வாய்ச் ஜெபமாகவே செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு வகையில் மனஜெபம் வாய்ச் ஜெபத்தைவிட சிறந்ததுதான். ஆனால் கடவுளுடன் அதிக உத்தமமான ஐக்கியத்தைத் தேடுகிறேன் என்ற காரணத்தைக் கூறி, ஜெபமாலை சொல்வதை தன் விருப்பமாக விட்டு விடுவது உண்மையிலே ஆபத்தான ஒன்று. அவ்வாறு செய்வதால் ஆன்மாவை இழக்கக்கூட நேரிடலாம்.

சில சமயங்களில், மிக நுட்பமான ஆங்காரமுடைய ஒரு ஆன்மா, அர்ச்சிஷ்டவர்கள் அடைந்த ஐக்கிய ஜெபத்தின் உன்னத நிலையை அடைவதற்குரிய எல்லாவற்றையும் செய்திருந்தாலும் நண்பகல் பசாசினால் தன் முந்திய பக்தி முயற்சிகளை விட்டு விடும்படி ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும். தான் ஒரு அதிக சிறந்த நன்மையை அடைந்து விட்டதாக அவ்வான்மா நினைக்கிறது. ஆகவே, முன்பு தான் கைக்கொண்டிருந்த பக்தி முயற்சிகளெல்லாம் கீழானவை. சாதாரண மட்டரக ஆன்மாக்களுக்கே அவை தகுதி என்று கருதுகிறது.

இப்படிப்பட்ட ஒரு ஆன்மா அதிதூதன் கூறிய மங்கள வார்த்தை ஜெபத்தையும், ஆண்டவரே இயற்றி அவரே கற்பித்து ஜெபித்த ஓர் ஜெபத்தையும், வேணுமென்று சொல்ல மறுத்து விடுகின்றது. ஆதலால் நீங்கள் இவ்வாறு ஜெபியுங்கள். பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே...' (மத் 6:9) இந்த அளவுக்கு வந்துவிட்ட அவ்வான்மா, அதன் முதல் ஏமாற்றத்திலிருந்து இன்னும் அதிக ஏமாற்றங்களுக்கு உட்பட்டு ஒரு பாதாளத்திலிருந்து இன்னொரு பாதாளத்தில் விழுகிறது.

ஜெபமாலைப் பக்தி சபை சகோதரர்களே! நான் கூறுவதை நம்புங்கள். உண்மையாகவே நீங்கள் ஒரு உயர்ந்த ஜெபநிலையை அடையவும், ஜெபிக்கிறவர்களுக்கு பசாசு வைக்கும் கண்ணிகளில் விழாமல் காப்பாற்றப்படவும் விரும்பினால், தினமும் ஒரு முழு ஜெபமாலை சொல்லுங்கள். குறைந்தபட்சம் ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையாவது சொல்லி வாருங்கள்.

தேவ அருளால் நீங்கள் ஒரு உயர்ந்த ஜெப நிலையை அடைந்திருந்தால் அதில் நிலைத்திருக்கவும், அதனால் தாழ்ச்சியில் வளரவும் நீங்கள் விரும்பினால் ஜெபமாலைப் பழக்கத்தைக் காப்பாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்கிறவன் ஒரு போதும் பதிதனாக மாட்டான். பசாசினால் வழி தவறிப் போகவுமாட்டான். இதன் உண்மைக்கு சான்று பகர நான் மகிழ்ச்சியோடு என் இரத்தத்தால் கையொப்பமிடவும் தயாராயிருக்கிறேன்.

கடவுள் தமது அளவற்ற இரக்கத்தால் அர்ச்சிஷ்டவர்கள் சிலரை ஜெபமாலை சொல்லும் போது மிக வலுவாய்த் தம்மிடம் இழுத்தது போல் உன்னையும் தம் வசம் அவர் இழுப்பாரானால், நீ எதிர்ப்புச் செய்யாமல் அவரால் இழுக்கப்படும்படி விட்டுக் கொடு. அவரே உன்னில் கிரியை செய்யட்டும். அவரே உன்னில் ஜெபிக்கட்டும். உன் ஜெபமாலையை அவரே தம் முறைப்படி செய்யட்டும். இதுவே போதுமானது.

ஆனால் நீ அடைந்துள்ள ஜெபநிலையில் உன் சொந்த முயற்சி இன்னும் தேவைப்படுவதாயிருந்தால், அல்லது உன் வழக்கமான அமைதி ஜெப நிலையில் நீ இருந்தால் அதாவது தேவ சந்நிதானத்தில் உன்னை வைத்து, அவரை நேசித்தால் நீ ஜெபமாலை ஜெபிப்பதை கை விடவே கூடாது. ஜெபமாலை உன் மனச் ஜெபத்தை அழிக்காது. அதன் வளர்சியைக் குறைக்காது. ஜெபமாலை உனக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும். யாக்கோபின் ஏணியைப் போல் உனக்கு அது உதவும். பதினைந்து படிகளுடன் அது இருக்கும். ஒவ்வொரு படியின் மீதும் ஏறி நீ புண்ணியத்தின் மேல் புண்ணியம் புரிந்து ஒளி மேல் ஒளி பெறுவாய். தவறிப் போகும் ஆபத்தின்றி நீ எளிதாக சேசு கிறிஸ்துவின் நிறைவை வந்தடைவாய்.