இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 24

கிறீஸ்துநாதர் உயிர்த்து, அநேகருக்குத் தரிசனையானதும், பரலோகத்துக்கு ஆரோகணமானதும்,

1. வாரத்தின் முதல் நாள் அதிகாலையிலே அவர்கள் தாங்கள் ஆயத்தம்பண்ணின பரிமள வர்க்கங்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு வந்து, (மத். 28:1; மாற். 16:2; அரு. 20:1.)

2. கல்லறையினின்று கல் புரட்டப் பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.

3. ஆனால் உள்ளே பிரவேசித்தபோது ஆண்டவராகிய சேசுநாதருடைய சரீரத்தை அவர்கள் காணவில்லை.

4. பின்னும் சம்பவித்ததேதெனில், அவர்கள் இதைப்பற்றி மனக்கலக்கமாயிருக்கையில், இதோ பிரகாசமுள்ள உடையணிந்த இரண்டுபேர் அவர்க ளருகே நின்றார்கள்.

5. அவர்கள் பயப்பட்டுத் தரையை நோக்கி முகங்கவிழ்ந்து நிற்கையில், அவ்விருவரும் அவர்களைப் பார்த்து: நீங்கள் உயிரோடிருக்கிறவரை மரித்தோரிடத்தில் தேடுவானேன்?

6. அவர் இங்கேயில்லை, உயிர்த்தெழுந்தார். அவர் இன்னம் கலிலேயாவிலிருந்தகாலத்தில் உங்களுக்கு எவ்விதஞ் சொல்லியிருந்தாரென்று நினைவுகூருங்கள். (மத். 16:21.)

7. மனுமகன் பாவிகளான மனிதர் கையில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலு வையிலே அறையப்படவும் மூன்றாம் நாள் உயிர்க்கவும் வேண்டியதென்று உரைத்தாரல்லோ, என்றார்கள். (மத். 17:21; மாற். 9:30.) 

8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து

9. கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இவைகளையெல்லாம் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.

10. அப்போஸ்தலர்களுக்கு இவைகளைச் சொன்னவர்கள் மரியமதலேனம்மாளும் யோவன்னாளும் யாகப்பருடைய தாயாராகிய மரியம்மாளும் அவர்களோடிருந்த மற்ற ஸ்திரீகளுமாமே.

11. ஆனால் இந்த வார்த்தைகள் அவர்களுக்குப் பித்தப் பிதற்றென்று தோன்றினபடியால், அவர்கள் இவைகளை விசுவசிக்கவில்லை.

12. ஆகிலும் இராயப்பர் எழுந்து, கல்லறைக்கு ஓடிபோய்க் குனிந்து பார்த்தபொழுது, பரிவட்டங்கள் மாத்திரம் கிடக்கிறதைக்கண்டு, சம்பவித்த வைகளின்பேரில் தன் உள்ளத்திலே ஆச்சரியப்பட்டுக்கொண்டு, அவ்விடம் விட்டுப் போனார்.

13. அல்லாமலும் அன்றையத் தின மே இதோ, சீஷர்களில் இருவர் ஜெருசலேமுக்கு அறுபது ஸ்தாது தூரத்திலுள்ள எம்மாவுஸ் என்னும் ஊருக்குப் போனார்கள். (மாற். 16:12.)

* 13. அறுபது ஸ்தாது:- ஏறக்குறைய 8 மைல் தூரம். ஒரு ஸ்தாது சுமார் அரைக்கால் மைலாகும்.

14. போகையில், சம்பவித்த இவை எல்லாவற்றையுங் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு நடந்தார்கள்.

15. இப்படி அவர்கள் தங்களுக்குள்ளே சம்பாஷித்துக்கொண்டு போகையில், சம்பவித்ததேதென்றால் சேசுநாதர் தாமே அவர்களிடம் நெருங்கி, அவர்களோடுகூட நடந்து போனார்.

16. ஆகிலும் அவரை அறிந்துகொள்ளாத மேரையாய் அவர்களுடைய கண்கள் மறைபட்டிருந்தன.

17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமாயிருக்கிறீர்களே. நீங்கள் என்ன சங்கதிகளைக் குறித்து உங்களுக்குள்ளே பேசிக்கொண்டு வழி நடந்து போகிறீர்கள் என்றார்.

18. அவர்களில் ஒருவராகிய கிலேயோப்பாஸ் என்கிறவர் அவருக்கு மாறுத்தாரமாக: நீர் மாத்திரம் ஜெருசலேமில் அந்நியராயிருந்து, இந்நாட்களில் அதில் சம்பவித்தவைகளை அறியீரோ என்றார்.

19. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேனுவாகிய சேசுநாதரைப்பற்றித்தான். அவர் சர்வேசுரனுக்கும் சகல ஜனங்களுக்கும் முன்பாகக் கிரியையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.

20. நம்முடைய குருக்களும் அதிகாரிகளும் அவரை எப்படி மரணத்தீர்வைக்கு ஒப்புக்கொடுத்துச் சிலுவையில் அறைந்தார்கள் என்பதைக் குறித்துப் (பேசிக்கொண்டு போகிறோம்.)

21. நாங்களோவென்றால் இஸ்ராயேலை மீட்டிரட்சிப்பவர் அவர்தானென்று நம்பியிருந்தோம். ஆனால் இவையெல்லாம் இப்படியிருக்க, இப்போது இவைகள் நடந்து இன்று மூன்றாம் நாளாகிறது.

22. ஆகிலும் எங்கள் கூட்டத்தாராகிய சில ஸ்திரீகளும் எங்களைப் பயப்படுத்திவிட்டார்கள். இவர்கள் உதயத்துக்குமுன் கல்லறைக்குப் போய்,

23. அவருடைய சரீரத்தைக் காணாமல் திரும்பி வந்து, அவர் உயிரோடிருக்கிறாரென்று சொல்லியதேவதூதரை முதலாய்த் தாங்கள் தரிசித்ததாகச் சொன்னார்கள்.

24. எங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும் புறப்பட்டுக் கல்லறைக்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள். ஆயினும் அவரைக் காண வில்லை என்றார்கள்.

25. சேசுநாதர் அவர்களை நோக்கி: ஓ மதியீனரே, தீர்க்கதரிசிகள் வசனித்த யாவையும் விசுவசிப்பதற்கு மந்த இருதயமுள்ளவர்களே,

26. கிறீஸ்துநாதர் இந்தப் பாடுகளைப் படவும், இவ்விதமாய்த் தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையோ என்று சொல்லி,

27. மோயீசன் முதல் சகல தீர்க்கதரிசிகளாலும் தம்மைப்பற்றிச் சொல்லப் பட்ட சகல வேத வாக்கியங்களை யும் அவர்களுக்கு விவரித்துக் காண் பித்தார்.

28. அப்பொழுது அவர்கள் தாங்கள் போகிற ஊருக்குச் சமீபமானார்கள். அவரோ இன்னம் அதிக தூரம் போகிற வர்போல் காண்பித்தார்.

29. ஆனால் அவர்கள்: அந்திநேர மாகிப் பொழுதுஞ் சாய்ந்து போயிற் றே, எங்களோடு வந்து தங்கியிரும் என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆதலால் அவர்க ளோடுகூட ஊரில் பிரவேசித்தார்.

30. பின்னும் சம்பவித்ததேதெனில், அவர்களோடுகூட அவர் பந்தியிலிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு அவர் களுக்குக் கொடுத்தார்.

* 30. இந்தச் சமயத்தில் சேசுநாதர்சுவாமி தேவநற்கருணையை உண்டாக்கி அவர்களுக்கு கொடுத்தாரென்று வேதபாரகர் நிச்சயிக்கிறார்கள். சாப்பிடத்தக்கது இங்கே உங்களிடத்தில் உண்டோ என்றார்.

31. உடனே அவர்களுடைய கண் கள் திறக்கப்பட, அவர்கள் அவரை அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர் அவர்கள் கண்களுக்கு மறைந்து போனார்.

32. அப்பொழுது அவர்கள் ஒருவரொருவரை நோக்கி: வழியிலே அவர் நம்மோடு பேசி, வேத வாக்கியங்களை நமக்குத் தெளிவிக்கும் போது நம்மு டைய இருதயம் நமக்குள் பற்றியெரிந்து கொண்டிருந்ததல்லவோ என்றார்கள்.

33. மீளவும் அந்நேரமே அவர்கள் எழுந்து, ஜெருசலேமுக்குத் திரும்பி வந்து பதினொருவரும், அவர்களோ டிருந்தவர்களும் ஒன்றாய்க் கூடியிருக் கிறதையும்:

34. சுவாமி மெய்யாகவே உயிர்த்து, சீமோனுக்குத் தரிசனையானார் என்று அவர்கள் சொல்லுகிறதையும் கண்டார்கள்.

35. அப்பொழுது அவர்களும் வழியில் சம்பவித்தவைகளையும், அவர் அப்பத் தைப் பிட்கையில், தாங்கள் அவரை அறிந்துகொண்ட விதத்தையும் வெளிப் படுத்தினார்கள்.

36. இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், சேசுநாதர் அவர்கள் நடுவிலே நின்று, அவர் களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் உண்டாகக்கடவது! நான்தான் பயப் படாதேயுங்கள் என்றார். (மாற். 16:14; அரு. 20:19.)

37. ஆனால் அவர்கள் கலங்கிப் பயந்து, தாங்கள் ஓர் பூதத்தைக் காண் கிறதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

38. ஆதலால் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கலங்குவானேன்? உங்கள் இருதயங்களில் விசாரங்கள் எழும்புவதென்ன?

39. நான்தான் என்று அறியும்படி, என் கரங்களையும் பாதங்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள். ஏனெனில் மாமிசமும் எலும்புகளும் எனக்கு இருக்கிறதாக நீங்கள் காண்கிறதுபோல ஓர் பூதத்துக்குக் கிடையாது என்றார்.

40. அவர் இவ்விதம் சொன்ன பின்பு, தம்முடைய கரங்களையும் பாதங்களை யும் அவர்களுக்குக் காண்பித்தார்.

41. அவர்கள் இன்னம் விசுவசியாமல் சந்தோஷத்தினால் பிரமித்துக் கொண்டிருக்கையில்: ஏதாகிலுஞ் சாப்பிடத்தக்கது இங்கே உங்களிடத்தில் உண்டோ என்றார்.

42. அவர்களோ சுட்ட மச்சத்துண்டையும், தேனிராட்டையும் அவருக்குக் கொடுக்க,

43. அவர்களுக்கு முன்பாக அவர் சாப்பிட்டு, மீதியானவைகளை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார்.

44. மேலும் அவர் அவர்களை நோக்கி: மோயீசனுடைய வேதப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளுடைய ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என் னைக்குறித்து எழுதப்பட்டிருக்கிற யாவும் நிறைவேறவேண்டுமென்று நான் உங்களோடிருக்கையில் உங்களுக்குச் சொன்ன வாக்கியங்கள் இவை களே என்றார்.

45. அப்பொழுது வேத வாக்கியங்களை உணர்ந்துகொள்ளும்படியாக அவர்களுடைய புத்தியைத் தெளிவித்து.

46. அவர்களை நோக்கி: (வேதத்திலே) இவ்விதமாய் எழுதப்பட்டிருக்கிறபடியினாலே, கிறீஸ்துநாதர் இவ்விதமாய்ப் பாடுபடவும், மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிர்க்கவும், (சங். 18:6; லூக். 24:6.)

47. ஜெருசலேம் முதற்கொண்டு, சகல ஜனங்களுக்கும் தவமும் பாவப் பொறுத்தலும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியதாயிருந்தது.

48. நீங்களே இவைகளுக்குச் சாட்சி களாயிருக்கிறீர்கள் (அப். 1:8; 2:32; 1 அரு. 1:1.)

49. அன்றியும் என் பிதாவானவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் வல்லபத் தைப் பூண்டுகொள்ளும்வரையில் பட்டணத்திலே தங்கியிருங்கள் என்று திருவுளம்பற்றினார். (அரு. 14:26; அப். 1:4; 2:1-3.)

50. பின்பு அவர்களை வெளியே பெத்தானியாவுக்குக் கூட்டிக் கொண்டு போய், தம்முடைய கரங்களை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 

51. அப்பொழுது சம்பவித்ததேதெனில் அவர்களை அவர் ஆசீர்வதிக்கும்போது, அவர்களிடத்திலிருந்து பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். (மாற். 16:19.)

52. அவர்களோ, அவரை ஆராதித்து மிகுந்த சந்தோஷத்துடனே ஜெருசலே முக்குத் திரும்பிவந்து,

53. எப்பொழுதும் தேவாலயத்தில் சர்வேசுரனைத் துதித்துப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆமென். (அப். 1:4-14.)


அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் முற்றிற்று.