1 இராயப்பர்

அதிகாரம் 01

1 போந்த்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா நாடுகளில் சிதறுண்டு, வெளி நாட்டவரென வாழ்பவர்களாய், ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தால் தெளிக்கப்படவும், தந்தையாகிய கடவுளின் முன்னறிவுக்கேற்பத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு,

2 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான இராயப்பன் எழுதுவது: உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!

3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.

4 இதனால் நமக்குக் கிடைக்கும் உரிமைப் பேறு அழியாதது. மாசுற முடியாதது, வாடாதது.

5 இறுதிக் காலத்தில் வெளிப்படப் போகும் மீட்பு வரும் வரை, விசுவாசத்தின் வழியாய்க் கடவுளின் வல்லமையால் காக்கப் பட்டிருக்கும் உங்களுக்கனெ, அந்த உரிமைப் பேறு வானுலகில் வைக்கப்பட்டுள்ளது.

6 இப்போது சொற்பக் காலம் நீங்கள் பலவகைச் சோதனைகளால் துன்புற்றாலும், அப்பேற்றை நினைத்து களிகூருகிறீர்கள்.

7 இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே. அழியக்கூடிய பொன்னும் நெருப்பில் புடமிடப்படுகிறது. அதை விட விலையுயர்ந்த உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். அப்போது தான் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் அவ்விசுவாசம் உங்களுக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும்.

8 நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை; எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,

9 உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.

10 இந்த மீட்பைக் குறித்துத் தான் இறைவாக்கினர் துருவித் துருவி ஆராய்ந்தனர்; உங்களுக்கு என்றிருந்த அருளைப் பற்றி இறைவாக்குரைத்தனர்.

11 தங்களுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய பாடுகளையும், அவற்றிற்குப் பின் வரவேண்டிய மகிமையையும் முன்னறிவித்த போது, அவர் குறிப்பிட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர்.

12 இவற்றை முன்னறிவிக்கும் பணி தங்கள் பொருட்டன்று, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்னுரைத்தவையெல்லாம் விண்ணினின்று அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியால் நற்செய்தி அறிவிப்பவர்கள் வாயிலாய், இப்போது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண வானதூதர்களும் வேட்கைகொள்ளுகின்றனர்.

13 ஆகவே, உங்கள் மனம் செயலாற்ற ஆயத்தமாயிருக்கட்டும். மட்டுமிதத்தோடு இருங்கள்; இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் உங்களுக்கு அளிக்கப்பெறும் அருளின் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.

14 கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் என நடங்கள். முன்பு நீங்கள் அறியாமையில் உழன்ற போது உங்கள் நடத்தை இச்சைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.

15 அப்படி நடவாமல், உங்களை அழைத்த இறைவன் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையில் முற்றும் பரிசுத்தராய் இருங்கள்.

16 ஏனெனில், ' யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ' என எழுதப் பட்டிருக்கிறது.

17 நீங்கள் தந்தை என அழைக்கும் இறைவன், ஆளைப்பார்த்து தீர்ப்புக் கூறாதவர். ஆதலால், அவனவன் செயல்கள் படித் தீர்ப்புக் கூறுபவர். ஆதலால், நீங்கள் இவ்வுலகில் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

18 உங்கள் முன்னோரிடமிருந்து வழி வழியாய் வந்த பயனற்ற நடத்தையினின்று உங்களை விடுதலை ஆக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது அழிவுறும் பொன்னும் வெள்ளியுமன்று.

19 மாசு மறுவற்ற செம்மறி போன்ற கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தமே.

20 உலகம் தோன்றுமுன்னே முன்னறியப் பெற்ற இவர் உங்களுக்காக இந்த இறுதிக் காலத்தில் வெளிப்பட்டார்.

21 இறந்தோரினின்று அவரை உயிர்ப்பித்து மகிமைப்படுத்திய கடவுள் மீது நீங்கள் விசுவாசம் கொள்வது அவரால் தான். இதனால் உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் கடவுள் மீது ஊன்றியிருக்கின்றன.

22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மாக்களைப் புனிதப்படுத்திய நீங்கள் சகோதரர்களிடம் கள்ளமற்ற அன்பு காட்ட முடியும். ஆகவே. ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் உளமார அன்பு செய்யுங்கள்.

23 நீங்கள் புதிதாய்ப் பிறந்துள்ளீர்கள். அப்பிறப்பு உங்களுக்கு அழிவுள்ள வித்தினாலன்று, அழிவில்லா வித்தினால் கிடைத்தது. உயிருள்ளதும், என்றும் நிலைத்து நிற்பதுமான கடவுளின் வார்த்தையால் பிறந்துள்ளீர்கள்.

24 ஏனெனில், " மனிதன் எவனும் புல்லைப்போன்றவன்: அவன் மகிமை அனைத்தும் புல்வெளிப் பூவைப்போன்றது. புல் உலர்ந்துபோம்; பூ உதிர்ந்துபோம்.

25 ஆனால், ஆண்டவரின் சொல் என்றென்றும் நிலைக்கும். "இச்சொல்லே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

அதிகாரம் 02

1 ஆகவே, தீயமனம், வஞ்சகம் அனைத்தையும் அகற்றுங்கள். இளி, கள்ளமும் பொறாமையும் வேண்டாம்.

2 புறணிப் பேச்செல்லாம் விலக்குங்கள். புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல் கலப்பற்ற ஞானப் பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் வளர்ச்சி பெற்று மீட்படைவீர்கள்.

3 ஆண்டவர் இனியவர் எனச் சுவைத்தீர்களன்றோ!

4 அவரையணுகி வாருங்கள். மனிதரால் விலக்கப்பட்டு, கடவுள் முன்னிலையில் விலை மதிப்பற்றதாய்த் தேர்ந்து கொள்ளப்பட்ட உயிருள்ள கல் அவரே.

5 நீங்களும் உயிருள்ள கற்களென, ஞான இல்லமாக அமைக்கப்படுவீர்களாக. அதில் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனுக்குகந்த ஞானப்பலி நிறைவேற்றும் குருத்துவத் திருக்கூட்டமாக அமைவீர்கள். ஏனெனில்,

6 ' இதோ, நான் கல்லொன்றைத் தேர்ந்தெடுத்து, விலைமதிப்பற்ற மூலைக்கல்லாக அதைச் சீயோனில் நாட்டுகிறேன், அதன் மேல் விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று மறை நூலில் காணக் கிடக்கிறது.

7 விசுவாசமுள்ள உங்களுக்குத்தான் அக்கல் மதிப்புள்ளது. விசுவாசமில்லாதவர்களுக்கோ, " கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.

8 தடுக்கி விழச் செய்யும் கல் அது, இடறலான பாறை அது " என்னும் வாக்குகள் பொருந்தும். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால் தான் அவர்கள் தடுக்கி விழுகின்றனர்; அதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருந்தனர்.

9 நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்; உங்களை இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி.

10 ஒரு காலத்தில் நீங்கள் மக்கள் இனமாகவே இல்லை; இன்றோ நீங்கள் கடவுளுடைய மக்கள் இனம். ஒரு காலத்தில் நீங்கள் இரக்கம் பெறாதவர்கள்; இன்றோ இரக்கம் பெற்றவர்கள்.

11 அன்பிற்குரியவர்களே, நீங்கள் அந்நியரும், வெளி நாட்டினருமாய் இருப்பதால், ஆன்மாவிற்கு எதிராகப் போர் புரியும் ஊனியல்புக்குரிய இச்சைகளினின்று விலகுமாறு உங்களை வேண்டுகிறேன்.

12 புற மனத்தினர் உங்களைத் தீயவரென்று இப்போது தூற்றினாலும், உங்கள் நற்செய்கைகளைப் பார்த்து, கடவுள் வரும் நாளில், அவர்கள் அவரை மகிமைப் படுத்துமாறு, அவர்களிடையே நீங்கள் நன்னடத்தையில் சிறந்து விளங்குங்கள்.

13 மனித அதிகாரம் எதற்கும் ஆண்டவரின் பொருட்டு அடங்கியிருங்கள். மேலான அதிகாரம் படைத்தவர் என்பதால் அரசர்க்கு அடங்கியிருங்கள்.

14 தீமை செய்வோரைத் தண்டிக்கவும், நன்மை செய்வோரைப் பாராட்டவும், அரசால் அனுப்பப் பட்டவர்கள் என்பதால், ஆளுநர்களுக்கும் அடங்கியிருங்கள்.

15 இப்படி நீங்கள் நன்மை செய்து விட வேண்டுமென்பதே கடவுளின் திருவுளம்.

16 உரிமை அடைந்தவர்களென வாழுங்கள்; ஆனால், இந்த உரிமையை, தீவினை செய்வதற்குப் போர்வையாகக் கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அடிமைகளென்றே வாழுங்கள்.

17 மனிதர் அனைவர்க்கும் மதிப்புக் கொடுங்கள்; சகோதரர்கள் மீது அனபுக்கூருங்கள்; கடவுளுக்கு அஞ்சி நடங்கள்; அரசருக்கு மதிப்புக் கொடுக்கத் தவறாதீர்கள்.

18 வேலையாட்களே, உங்கள் தலைவர்களுக்கு முழு மரியாதையோடு கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்த முள்ளவர்களுக்கும் மட்டுமன்று, கடுமையானவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.

19 ஒருவன் அநியாயமாய்த் துன்புறுத்தும் போது, இறைவனை மனத்தில் நினைத்துக் கொண்டு பொறுமையோடு ஏற்றுக் கொள்வானானால், அது அவருக்குகந்ததாகும்.

20 குற்றம் செய்தபின், அதற்காக அடிபட்டால், அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வதில், என்ன பெருமை? மாறாக, நன்மை செய்தும், அதற்காகத் துன்புற்றால், அதைப் பொறுமையாக ஏற்றுக் கொள்வதே கடவுளுக்கு உகந்தது.

21 இவ்வாறு வாழவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்ற போது, தம்முடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றுமாறு முன்மாதிரி தந்து சென்றார்.

22 அவர் பாவம் எதுவும் செய்ததில்லை, அவரது வாயினின்று வஞ்சகம் வெளிப்பட்டதில்லை".

23 அவர்கள் பழித்துரைத்த போது, அவர் எதிர்த்துப் பழிக்கவில்லை. துன்புற்ற போது அச்சுறுத்தவில்லை. நீதியோடு தீர்ப்பிடும் இறைவனிடம் தம் காரியத்தை ஒப்படைத்தார்.

24 நாம் பாவங்களை அப்புறப்படுத்தி இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ, கழுமரத்தின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.

25 நீங்கள் ஆடுகளைப் போல் வழி தவறி அலைந்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் காவலருமானவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

அதிகாரம் 03

1 மனைவியரே, நீங்கள் அங்ஙனமே உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.

2 இதனால், அவர்களுள் சிலர் தேவ வார்த்தையை ஏற்காதவர்களாய் இருந்தால், மரியாதையும் கற்பும் உள்ள உங்கள் நடத்தையை அவர்கள் காணும் போது, வார்த்தை எதுவும் தேவைப்படாமல் தம் மனைவியருடைய நன்னடத்தையாலே வசமாக்கப்படுவார்கள்.

3 சடை பின்னுவதும், பொன் நகைகள் அணிவதும், உடை மாற்றுவதுமாகிய வெளி அலங்கரிப்பில் உங்கள் அழகு அமையாமல்,

4 சாந்தமும் அமைதியுமுள்ள மனப்பான்மையாகிய அழியாத அலங்கரிப்பில் அமையட்டும். அந்த அலங்கரிப்போ மனித உள்ளத்தில் மறைவாயிருப்பதொன்று. அதுவே கடவுள் முன்னிலையில் விலை உயர்ந்தது.

5 இவ்வாறுதான் அக்காலத்தில், கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்த பரிசுத்த பெண்டிரும், தங்கள் கணவர்க்குப் பணிந்திருப்பதையே தங்கள் அணியாகக் கொண்டிருந்தார்கள்.

6 இவ்வாறே சாராள், ஆபிரகாமுக்குப் பணிந்திருந்தாள்; அவரைத் தன் தலைவன் என அழைத்தாள். நன்மை செய்து, எத்தகைய அச்சத்திற்கும் மனக் குழப்பத்திற்கும் இடங்கொடாமலிருந்தால், நீங்கள் சாராளின் புதல்வியராய் இருப்பீர்கள்.

7 அவ்வாறே கணவர்களே, நீங்களும் நல்லறிவோடு மணவாழ்க்கை நடத்துங்கள்; பெண்ணினம் வலுக் குறைந்தது என்பதால் மட்டுமன்று, வாழ்வுதரும் இறையருளுக்கு அவர்கள் உங்கள் உடன் உரிமையாளர் என்பதாலும், அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்; அப்போது தான், உங்கள் செபங்களுக்குத் தடை ஏற்படாது.

8 இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.

9 தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; பழிக்குப்பழி கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள்; ஏனெனில், இறைவனின் ஆசிக்கு உரிமையாளர் ஆவதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

10 " வாழ்வை விரும்பி இன்பநாளைச் சுவைக்க விழைபவன், தீமையினின்று தன் நாவைக் காத்துக் கொள்க; வஞ்சகப் பேச்சினின்று தன் வாயைக் காத்துக்கொள்க;

11 தீமையினின்று விலகி நன்மை செய்க; அமைதியை நாடி அதனைத் தொடர்க;

12 ஆண்டவர் நீதிமான்கள் மேல் தம் பார்வையைச் செலுத்துகிறார்; அவர்களது வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறார்; தீமை செய்வோருக்கோ ஆண்டவர் கடுமுகம் காட்டுகிறார்".

13 நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால், உங்களுக்கு யார் தீமை செய்யப் போகிறார்கள்?

14 நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.

15 ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.

16 ஆனால், விளக்கங் கூறும் போது சாந்தத்தோடும் மதியாதையோடும் பேசுங்கள்; உங்கள் மனச்சாட்சியும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்போதுதான், நீங்கள் அவதூறுக்கு ஆளாகும் போது, உங்கள் கிறிஸ்தவ நன்னடைத்தையைப் பழிப்பவர்கள் நாணமடைந்து போவார்கள்.

17 ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

18 கிறிஸ்துவைப் பாருங்கள்; நீதியுள்ள அவர், அநீதருக்காக இறந்தார்; நன்மைக் கடவுளிடம் சேர்க்க, பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார்; ஊன் உடலில் சாவுக்குள்ளானார்;

19 ஆனால், தேவ ஆவியில் உயிர் பெற்றார். அந்த ஆவியைக் கொண்டே, அவர் சிறையிலிருந்த ஆன்மாக்களிடம் சென்று, அவர்களுக்குத் தம் செய்தியை அறிவித்தார்.

20 இவ்வான்மாக்கள், அன்று நோவா, பேழையைச் செய்துகொண்டிருந்த காலத்தில், கடவுள் பொறுமையோடு காத்திருந்த போது, கீழ்ப்படியாமல் போனவர்கள், அப்பேழையில் நுழைந்து, சிலர் -அதாவது எட்டுப்பேர் - நீரின் வாயிலாய்க் காப்பாற்றப்பட்டனர்.

21 இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.

22 அவர் விண்ணகம் சென்ற பின், அதிகாரம் தாங்குவோர், வலிமை மிக்கோர், தூதர் அனைவரையும் தமக்குட்படுத்தி, கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.

அதிகாரம் 04

1 ஆகவே, கிறிஸ்து தம் ஊன் உடலில் பாடுபட்டதை நினைத்து, அவர் அப்போது கொண்டிருந்த உள்ளக் கருத்தை நீங்களும் படைக்கலமாக அணிந்து கொள்ளுங்கள்.

2 உடலில் துன்புற்றவன், பாவத்தினின்று விலகிவிடடான்; இனி அவன் தன் வாழ்வின் எஞ்சிய நாட்களில் மனித இச்சைகளின்படி வாழாமல், கடவுளின் திருவுளப்படி வாழ்பவன் ஆகிறான்.

3 புறமதத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்போது காமவெறி, தீய இச்சை, மது மயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலை வழிபாடு இவற்றில் உழன்றீர்கள்.

4 இப்போதோ நீங்கள் அத்தகைய வெறி கொண்ட வாழ்க்கையில் தங்களோடு சேர்ந்து உழலாததைக் கண்டு, அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாமல், உங்களைப் பழித்துரைக்கின்றனர்.

5 வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பிடத் தயாராயிருப்பவரிடம் அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.

6 இறந்தோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது எதற்காகவெனில், அவர்கள் உடலைப் பொருத்த மட்டில் எல்லா மனிதர்க்குமுரிய தீர்ப்புப் பெற்றிருந்தாலும், தேவ ஆவியைப் பெற்ற நிலையில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவதற்காகவே.

7 அனைத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. எனவே, நீங்கள் செபத்தில் ஈடுபடுவதற்குச் சம நிலையோடும், மட்டுமிதத்தோடும் வாழுங்கள்.

8 அனைத்திற்கும் மேலாக, ஒருவர்க்கொருவர் எப்போதும் அன்பு காட்டுங்கள்; ஏனெனில், அன்பு திரளான பாவங்களை அகற்றி விடும்.

9 முணுமுணுக்காமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

10 உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்ற வரத்திற்கு ஏற்றவாறு கடவுளுடைய பலவகைப்பட்ட அருளின் சீரிய கண்காணிப்பாளர் என, கிடைத்த வரத்தைப் பிறர்க்குப் பணிபுரியப் பயன் படுத்துங்கள்.

11 பேசும் வரத்தைப் பெற்றவன், கடவுள் மொழியையே பேசுபவன்போல் பேசட்டும்; பணிசெய்யும் வரத்தைப் பெற்றவன், கடவுள் அளிக்கும் ஆற்றலை அடைந்தவன் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் மகிமை அடைவார். அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகும். ஆமென்.

12 அன்பிற்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் புடமிடப்படுகையில், ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென மலைத்துப் போகாதீர்கள்.

13 எந்த அளவிற்குக் கிறிஸ்துவின் பாடுகளில் நீங்கள் பங்கு கொள்ளுகிறீர்களோ, அந்த அளவிற்கு அகமகிழுங்கள்; அவரது மகிமை வெளிப்படும்போது, உவப்புடன் அக்களிப்புக் கொள்வீர்கள்.

14 இயேசுவினுடைய பெயரின் பொருட்டுப் பிறர் உங்களை வசை கூறினால், நீங்கள் பேறுபெற்றவர்கள்; அப்போது இறைமாட்சிமையும் கடவுளின் ஆவியும் உங்கள் மீது தங்கும்.

15 ஆனால், உங்களுள் எவனும் கொலைஞன் என்றோ, திருடன் தீமை செய்பவன் என்றோ, பிறர் காரியங்களில் தலையிடுபவன் என்றோ துன்பத்திற்குள்ளாதல் கூடாது.

16 மாறாக, ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்காகத் துன்பத்திற்கு உள்ளானால், அதைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்; அப்பெயரை பெற்றிருப்பதால், அவன் கடவுளை மகிமைப் படுத்துவானாக.

17 இதோ, தீர்ப்புத் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முதலில் அது கடவுளுடைய குடும்பத்திலேயே தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?

18 நீதிமான்களே மீட்படைவது அரிpதென்றால் இறைப்பற்றில்லாதவர், பாவிகள் இவர்கள் கதி என்னவாகும்?"

19 எனவே, கடவுளின் திருவுளப்படி துன்பத்துக்கு ஆளாகிறவர்களும் நன்மை செய்வதில் நிலைத்திருந்து, படைத்தவரிடம் தம் ஆன்மாக்களை ஒப்படைப்பார்களாக; அவர் சொல் தவற மாட்டார்.

அதிகாரம் 05

1 கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சிமையில் பங்குக்குரியவனுமாகிய நான் உங்கள் மூப்பர்களுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்குக் கூறும் அறிவுரையாவது:

2 மூப்பர்களே, உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளின் மந்தையை மேய்த்து வாருங்கள். கட்டாயத் தினாலன்று, மன உவப்புடன், கடவுளின் விருப்பத்திற்கேற்ப அதைக் கண்காணித்தல் வேண்டும். இழிவான ஊதியத்திற்காகச் செய்யாமல், உள்ளத்தார்வமுடன் பணி செய்யுங்கள்.

3 உங்களிடம் ஒப்பமைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாய் இருந்து, அதை மேய்ப்பீர்களாக.

4 அப்போதுதான் தலைமை ஆயர் தோன்றும் நாளில், மகிமையின் வாடாத வெற்றிவாகை சூட்டப்பெறுவீர்கள்.

5 இளைஞர்களே, நீங்கள் மூப்பர்களுக்குப் பணிந்து நடங்கள். ஒருவரோடு ஒருவர் பழகுகையில் மனத்தாழ்ச்சியை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார். தாழ்ச்சியுற்றவர்களுக்கோ அருளை அளிக்கிறார் ".

6 கடவுளது கைவன்னமைக்குப் பணிந்து, உங்களைத் தாழ்த்துங்கள்; குறித்த காலத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.

7 உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு.

8 தெளிந்த மனத்தோடு விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் எதிரியான அலகை, கர்¢ச்சிக்கும் சிங்கம்போல் யாரை விழுங்கலாமெனத் தேடித் திரிகிறது.

9 விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாய், அதை எதிர்த்து நில்லுங்கள்; உலகமெங்குமுள்ள உங்கள் சகோதரர்களும் அதே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமன்றோ?

10 அருளுக்கெல்லாம் ஊற்றாகிய கடவுள், கிறிஸ்துவுக்குள் தம் முடிவில்லா மகிமைக்கு உங்களை அழைத்தவர், சிறிதுகாலம் நீங்கள் துன்புற்றபின், அனைத்தையும் சீர்ப்படுத்தி, உங்களுக்கு உறுதியும் உரமும் நிலைபேறும் அளிப்பார்.

11 அவரது வல்லமை என்றென்றும் உள்ளது. ஆமென்.

12 நம்பிக்கைக்குரியவன் என நான் கருதும் உங்கள் சகோதரன் சில்வானுவின் வழியாக உங்களுக்குச் சுருக்கமாக எழுதியனுப்பினேன். உங்களுக்கு அறிவுரை கூறவும், கடவுளுடைய உண்மை அருள் இதுவே எனச் சான்று பகரவும் விரும்பினேன்.

13 இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப்போல் தேர்ந்துகொள்ளப்பட்டு, பாபிலோனில் வாழும் திருச்சபையினர் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்.

14 அன்பு முத்தம் தந்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் வாழும் உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாகுக.