அத்தியாயம் 1. பாவசங்கீர்த்தனம் ஒரு மேற்றிராணியாரால் திருச்சபையில் அறிமுகப்படுத்தப்பட்டதா?

ஒருநாள் மாலையில் லிஸ்பன் நகரத்தில், உயர் குடியைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் பலர் தங்கள் சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடினார்கள்.

பிரசித்தி பெற்ற ஓர் வெளிநாட்டவர் அவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, என் நண்பர் ஒருவர் அந்தக் கூடத்திற்குள் நுழைந்தார். மிகச் சரியாக அந்த நேரத்தில் அந்த வெளிநாட்டவர் அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் : ''அம்மணி, பாவசங்கீர்த்தனம் தீயது என்று நான் சொல்லவில்லை. அது பயனற்றது என்று குறித்துக் காட்டுவதும் என் நோக்கமல்ல. நான் சொன்ன தெல்லாம் அது பெண்களுக்கு மிக நல்லது என்பது மட்டும் தான். அவர்கள் ஒரு குருவிடம் தங்கள் மனசாட்சியில் உள்ள பாரத்தை இறக்கி வைத்து விடுவது தங்களுக்கு மிக ஆறுதலளிப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் ஆண்களாகிய எங்களுக்கு அப்படிப்பட்ட ஆறுதல்கள் தேவையில்லை!" என்று சொல்லிக் கொண்டிருந்ததை என் நண்பர் கேட்டார்.

அந்தப் பெண்மணி உடனே பதிலுக்கு, ''ஐயா, அது எப்படி எல்லோருக்கும் பொதுவானதாக ஏற்படுத்தப்பட்ட ஒரு திருச்சபைச் சட்டத்திலிருந்து உங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆண்களாகிய நீங்கள் நினைக்க முடியும்? ஆண்களிடமும் அவர்கள் எப்படியாவது இரட்சித்துக்கொள்ள வேண்டிய ஓர் ஆத்துமம் இல்லையா?

கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய ஆண்களுக்கு மட்டும் கடமையில்லையா?' என்று கேட்டார்.

அதற்கு அந்த அந்நியர், ''என் அன்பான அம்மணி, பாவசங்கீர்த்தனம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டது என்பதே ஒரு கற்பனைதான். பாவசங்கீர்த்தனத்தை ஏற்படுத்தியது கடவுள் அல்ல; அது முழுக்க முழுக்க மனிதனுடைய கண்டு பிடிப்புதான். கிறீஸ்தவத்தின் தொடக்க காலங்களில் அது பற்றிய குறிப்புகளை நாம் எங்கேயாவது காண்கிறோமா? கடவுள்தான் அதை ஏற்படுத்தினார் என்றால், எங்களுக்கும் பாவசங்கீர்த்தனம் செய்யக் கடமை இருந்திருக்கும் என்பது உண்மைதான்.

உள்ளபடியே, பாவசங்கீர்த்தனம் முதன் முதலில் பதினான்காம் நூற்றாண்டில்தான், ஃபுல்லர் என்ற மேற்றிராணியாரால் புதிதாக உண்டாக்கப்பட்டு, அறிமுகப் படுத்தப்பட்டது'' என்று சொல்லிவிட்டு, ஆணவமிக்க துணி வோடு முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட இடங்களின் பெயர்களையும், தேதிகளையும், நிகழ்வுகளையும் ஆதார மாகக் காட்டவும் செய்தார்.

இதைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் மலைத்துப் போனார்கள். சிலர் திருச்சபையின் போதகத்தை ஆதரித்துப் பேச முற்பட்டார்கள். ஆனாலும் இந்தப் பிரசித்தி பெற்ற விருந்தாளியின் பொய்களை ஆணித்தரமாக மறுத்துப் பேசும் அளவுக்கு அவர்களில் யாரும் தங்கள் வேத காரியங் களில் போதுமான அளவுக்கு வேரூன்றியவர்களாக இருக்க வில்லை .

மறுநாள், மேற்கண்ட இந்த நிகழ்ச்சியின் போது அந்த இடத்தில் இருந்த என் நண்பர் என்னை சந்தித்து, அந்த அந்நியரின் வாதங்கள் முழுவதுமே தவறு என்று நிரூபிக்க தம்மால் முடியவில்லை என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொண்டது மட்டுமன்றி, இந்தக் காரியத்தைப் பற்றித் தமக்கு விளக்கமாகக் கூறும்படியாகவும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

இது போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் பல கத்தோலிக்கர்களுக்கும் அதே விதமான பிரச்சினை வருகிறது என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. பாவசங்கீர்த்தனம் நம் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டது என்றும், அது ஆதித் திருச்சபையின் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் அரைகுறையாக அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.

ஆனால் யாராவது அவர்களிடம் வந்து, இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என்று கேட்டால், இப்போது குறிப்பிடப் பட்ட அந்தக் கத்தோலிக்கர்களைப் போல், அவர்களாலும் தங்கள் விசுவாசத்திற்கு சரியான விளக்கம் தர முடியாமலே போய்விடுகிறது.

இதை விட மோசமான விதத்தில் ஒரு பதித சபைக்காரனோ, அல்லது ஓர் அவிசுவாசியோ அவர்களுக்கு சவால் விட்டால், பாவசங்கீர்த்தனத்தின் பக்திக்குரிய அழகு, அதன் தெய்வீக நற்பயன், அதன் அற்புதமான விளைவுகள், அது தரும் ஆழ்ந்த ஆறுதல்கள் ஆகியவற்றை விளக்கிக் கூற அவர்களால் முடிவதில்லை .

இதையும் விட மோசமாக, இந்த மாபெரும் தேவத்திரவிய அனுமானத்திற்கு எதிராக மிக அடிக்கடி கேட்கப்படும் பல கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற முடிவதேயில்லை .

பெரும்பாலான கத்தோலிக்க விசுவாசிகளுக்குள்ள இத்தகைய அறியாமையைப் போக்கும் ஒரு சிறு முயற்சி யாக இந்தச் சிறு புத்தகத்தை அவர்களுக்கு ஒரு விளக்கமாகத் தர நாம் துணிகிறோம்.

இந்நூல் பாவசங்கீர்த்தனம் மெய்யாகவே கிறீஸ்துநாதரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதோடு, அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த ஆறுதலையும் பலத்தையும் தருகிறது என்பதையும் தெளிவுபடுத்தும்.

அநேக கத்தோலிக் கர்கள் பாவசங்கீர்த்தனத்தின் உண்மையான, அடிப்படைக் கருத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். சிலர் அதை மிக வேதனையான, வெறுப்பூட்டுகிற ஒரு கடமையாகவே பார்க்கிறார்கள்.

ப்ரொட்டஸ்டாண்ட் சபையினருக்கு பாவசங்கீர்த் தனம் என்றாலே வேப்பங்காய்தான், ஆனாலும் அது நல்ல முறையில் விளக்கிச் சொல்லப்படுவதைக் கேட்ட அநேக பதித சபையார், அது எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொண்டு, கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்த சம்பவங்களும் மிக அடிக்கடி நிகழ்ந்துள்ளன.

கத்தோலிக்கர்களும், ப்ரொட்டஸ்டாண்ட் சபைக் காரர்களும் நம்முடைய இந்தச் சிறு நூலை ஆழ்ந்து வாசித்து தியானித்து, அதனால் மிகப் பெரும் பயனடைய வேண்டும் என்று நாம் மிகவும் ஆசிக்கிறோம்.

இந்தச் சிறு புத்தகத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று, பாவசங்கீர்த்தனம், துயரப்படுகிறவர்கள் மற்றும், பலவீனமானவர்களின் ஆத்துமங்களுக்கு எவ்வளவு மேலான ஆறுதலையும், ஞான உதவியையும் தருகிறது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதாகும். மேலும் மறைந் திருக்கிற ஏதாவது ஒரு ஆபத்தின் விளிம்பிலிருந்து பாவசங்கீர்த்தனம் எப்படி சிறுவர், சிறுமியரைப் பிடித்திழுத்துக் காப்பாற்றுகிறது என்பதையும் இது விளக்குகிறது. மேலும்,

அந்தப் பிரபலமான ப்ரொட்டஸ்டாண்ட் மனிதர் அரை வேக்காட்டுத்தனமாக வற்புறுத்திக் கூறியது போல, பாவ சங்கீர்த்தனம் மனிதனிடமிருந்து, அவனுடைய ஆணுக்குரிய ஆளுமைத் தன்மையை அகற்றுவதற்குப் பதிலாக, ஒரு குருவிடம் இரகசியமாகச் செய்யப்படும் ஒரு பாவசங் கீர்த்தனம் ஒரு மனிதனை வீரமிக்க போர்வீரனாகவும், பிரமாணிக்கமுள்ள குடிமகனாகவும், நம்பிக்கைக்குரிய நல்ல நண்பனாகவும் ஆக்குகிறது.