இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 18. அருள்நிறை மந்திரத்தினால் வரும் ஆசீர்வாதங்கள்

பரலோகத்துக்குரிய இம்மங்கள மொழி சேசு மரியாயுடைய ஆசீர்வாதங்களை ஏராளமாய் நம் மீது வருவிக்கின்றது. ஏனென்றால் சேசுவையும், மரியாயையும் மகிமைப்படுத்துகிறவர்களுக்கு அவர்கள் ஆச்சரியத்துக்குரிய முறையில் சன்மானம் அளிக்கிறார்கள். நாம் அவர்களை வாழ்த்திப் போற்றுவதற்கு நூறு மடங்கு அவர்கள் பதிலளிக்கிறார்கள். "என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்...... என்னை நேசிக்கிறவர்களை செல்வந்தராக்கவும் அவர்களுடைய செல்வங்களை நிறைக்கும்படியாகவுமே' (பழ. 8:17,21) சேசுவும் மாமரியும் எப்போதும் இவ்வாறு கூறுகின்றார்கள்: எங்களை நேசிப்பவர்களை நாங்கள் நேசிக்கிறோம். அவர்களுடைய செல்வம் பொங்கி வழியுமட்டும் அவர்களை செல்வந்தராக்குகிறோம். 'சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப்பவன் பெருக அறுப்பான் (2 கொரி. 9:6)

அருள் நிறை மந்திரத்தை நாம் தகுந்தவாறு சொல்வோமானால், அதுவே நாம் சேசுவையும், மரியாயையும் நேசித்து வாழ்த்தி மகிமைப்படுத்துவ தாகுமல்லவா?

ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் நாம் சேசுவையும் மரியாயையும் வாழ்த்துகிறோம்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று கூறுகிறோம்.

இறைவன் தமக்குப் பதிலாக அதிதூதர் கபிரியேலை மரியாயிடம் அனுப்பி மங்களம் கூறிய போது அவ்வன்னைக்கு அளித்த மகிமையை, ஒவ்வொரு அருள் நிறை மந்திரம் சொல்லும் போதும் நாமும் அளிக்கின்றோம். சேசுவும் மாதாவும் தங்களை சபிக்கிறவர்களுக்கு பலமுறைகள் நன்மை செய்கிறார்கள். அப்படியிருக்க அவர்கள், அருள் நிறை மந்திரம் சொல்லி தங்களை ஆசீர்வதித்து மகிமைப்படுத்துகிறவர்களை சபிக்கக்கூடும் என்று யார் நினைக்க முடியும்?

இவ்வுலகிலுள்ள நாகரீக நன்னடத்தையுள்ள மனிதர்களை விட பரலோக அரசியான மாமரி நன்றியிலும் நல்லுணர்விலும் நிச்சயம் குறைந்தவர்களல்ல என்று அர்ச். பெர்னர்தும், அர்ச். பொனவெந்தூர் என்பவரும் பகருகின்றார்கள். மாமரி அன்னை, மற்றெல்லா தற்பண்புகளிலும் சிறந்து விளங்குவது போல நன்றிப் பண்பிலும் நம்மையெல்லாம் விட மிகச் சிறந்து விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் அன்புடனும், மரியாதையுடனும் அவர்களை மகிமைப்படுத்தும் போது அதற்கு நூறு மடங்கு நமக்குப் பதிலுக்குச் செய்யாமல் விடமாட்டார்கள். அருள் நிறை மந்திரத்தால் நாம் மாதாவை வாழ்த்தும்போது அவ்வன்னை அருள் வரங்களால் நம்மை வாழ்த்துகிறார்கள் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார்.

நம் தேவ அன்னை நம் மீது இனிய கரிசனை கொண்டு அவர்களே நம்மை வாழ்த்துவதாயிருந்தால் அது எத்தனை வரங்களையும், ஆசீர்வாதங்களையும் நமக்கு அளிக்கும் என யாரால் உணரக்கூடும்? மாமரி அன்னையின் வாழ்த்தொலி எலிசபெத்தின் காதில் ஒலித்த முதல் வினாடியிலிருந்து அவள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அவள் உதரத்திலிருந்த குழந்தை அக்களிப்பால் துள்ளிற்று. நாமும் நம் அன்னையின் வாழ்த்துக்கும், ஆசீர் வரங்களுக்கும் தகுதியுடையவர்களாய் நம்மை ஆக்கிக் கொள்வோமானால், நிச்சயம் நாம் அருள் வரங்களால் நிரப்பப்படுவோம். ஒரு வெள்ளப் பெருக்கு போல் ஞான ஆறுதல் நம் ஆன்மாக்களில் வந்து பாய்ந்து நிரம்பும்.