முதல் வேதபோதகக் கனவு (1872)

ஒரு வேதபோதகப் பயணத்திற்காக அர்ஜெண்டீனிய அரசாங்கத்திற்கும், டொன் போஸ்கோவுக்குமிடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, தாம் பல வருடங்களுக்கு முன் கண்ட ஒரு கனவு அல்லது காட்சியின் அர்த்தம் டொன் போஸ்கோவுக்குத் தெளிவாகத் தொடங்கியது. அவர் அதை விவரித்த விதம் இதுதான்:

நான் திடீரென எனக்குத் தெரியாத, ஒரு காட்டுத்தனமான இடத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டதைக் கண்டேன். அந்த நாட்டுப் புறம் முழுவதும் பண்படுத்தப்படாத சமவெளியாக இருந்தது. அதில் ஒரு குன்றோ மலையோ இருக்கவில்லை. அந்தச் சமவெளியில் காட்டுமிராண்டித்தனமானவர்களும், அசாதாரணமான உடல்வாகு உள்ளவர்களும், வெண்கல நிறமும், கிட்டத்தட்ட கறுப்பு நிறமும், நீண்ட, படியாத தலைமுடி உள்ளவர்களுமான ஏராளமான மனிதர்கள் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். மிருகத் தோல்கள்தான் அவர்கள் அணிந்திருந்த ஒரே ஆடையாக இருந்தது. அவை அவர்களுடைய தோள்களிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவனும் ஒரு கரடான ஈட்டி யையும், கவணையும் ஆயுதமாக வைத்திருந்தான்.

சமவெளி முழுவதும் சிதறிக் காணப்பட்ட இந்த மனிதர்கள் கூட்டம் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகத் தோன்றியது. சிலர் காட்டு மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர். வேறு சிலர் தங்கள் ஈட்டி முனைகளில் இரத்தம் சொட்டும் பெரிய மாமிசத் துண்டுகளைச் சுமந்தபடி நடந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே ஏதோ கடுமையாக வாதாடிக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் ஐரோப்பிய உடைகளில் இருந்த வீரர்கள் அணி ஒன்றின் கைகளில் சிக்கியிருந்தனர். அந்த நிலம் முழுவதிலும் இறந்த அல்லது இறந்து கொண்டிருந்த மனிதர்கள் விழுந்து கிடந்தார்கள்.

இந்த பயங்கரமான காட்சியைக் கண்டு அரண்டு போனவனாக நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென அந்தச் சமவெளியின் ஒரு கோடியில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான மனிதர்கள் தோன்றினார்கள். அவர்களுடைய ஆடைகளி லிருந்தும், அவர்கள் செயல்பட்ட விதத்திலிருந்தும் அவர்கள் திருச்சபையின் பல்வேறு சபைகளைச் சேர்ந்த வேதபோதகர்கள் என்று நான் யூகித்தேன். கிறீஸ்துவின் உண்மையான வேதத்தை போதிப்பதற்காக அவர்கள் நெருங்கி வந்தனர். அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, நான் அவர்களை மிக நெருக்கமாக ஆராய்ந்தேன். ஆனால் அவர்களில் ஒருவரையும் நான் அடையாளம் காணவில்லை. அச்சமற்றவர்களாக அவர்கள் அந்தக் காட்டு மிராண்டிகளின் மத்தியில் சென்றார்கள். ஆனால் இவர்கள், அவர்களைக் கண்டவுடன், பேய்த்தனமான கடுங்கோபத்திற்கு உள்ளானதாகத் தோன்றினார்கள். அவர்கள் மேல் விழுந்து, அவர் களைக் கொன்று, அவர்களுடைய உடல்களைத் துண்டுதுண்டாகக் கிழித்தார்கள். இப்படிக் கிழிக்கப்பட்டதும், இன்னும் சூடாக இருந்தவையுமான அவர்களுடைய பெரிய மாமிசத் துண்டுகளைத் தங்கள் ஈட்டி முனைகளால் குத்தினார்கள். இதன்பின், முந்தின காட்சிகள் புதுப்பிக்கப்பட்டன: தொடர்ச்சியான உள்நாட்டுப் போரும், அண்டை மக்களினங்களோடு போரும் நடைபெற்றன.

மிகப் பல பயங்கரமான, இரத்தக் களறியான காட்சிகளைப் பார்த்த பிறகு, “இவ்வளவு மிருகத்தனமானவர்களும், வெறிபிடித் தவர்களுமான மனிதர்கள் உண்மையான விசுவாசத்திற்கு மனந் திருப்பப்பட முடியுமா?” என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட அதே சமயத்தில், என் எண்ணத்திற்குத் தரப்பட்ட பதிலைப் போல, தூரத்தில் மற்றொரு வேதபோதகக் குழுவினரை நான் கண்டேன். அவர்கள் இந்தக் காட்டுமிராண்டிகளை மேலும் மேலும் நெருங்கி வந்தனர். இந்தப் புதிதாக வந்த மனிதர்கள் தங்கள் தோற்றத்தில் உற்சாகமாகவும், மகிழ்ச்சியானவர்களாகவும் இருந்தார்கள். உயிரோட்டமும், சந்தோஷ உற்சாகமும் உள்ள சிறுவர்களின் பெரிய கூட்டம் ஒன்று அவர்களுக்கு முன்னால் வந்தது.

நான் அச்ச நடுக்கத்தோடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவர்கள் நிச்சயமான மரணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நான் அவர்களை நெருங்கிச் சென்று, அவர்களைக் கூர்ந்து கவனித்தபோது, அந்த வேதபோதகக் குழுவில் நம் சொந்த சலேசியர்களும் இருந்ததை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பின்னால் வந்தவர்களை விட முன்னால் வந்தவர்களை நான் மிக நன்றாக அறிந்திருந்தேன். ஆயினும் அவர்கள் எல்லோரும் சலேசிய சபையினர்தான் என்பதை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.

“இது எப்படி நடந்தது?” என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன். மேலும் நெருங்கி வர வேண்டாம் என்று அவர்களை நோக்கிக் கத்த நான் விரும்பினேன். ஒவ்வொரு கணமும், முந்தைய வேதபோதகர்களுக்கு நேரிட்ட அதே நிலையைத்தான் இவர்களும் சந்திக்கப் போகிறார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில், அவர்களைப் பார்த்ததும், அந்தக் காட்டு மிராண்டிகள் அனைவரையும் சந்தோஷ உற்சாகத்தின் அலை ஒன்று ஊடுருவியதாக எனக்குத் தோன்றியது! அவர்கள் தங்களை ஈட்டிகளை எறிந்து விட்டு, தங்கள் கோபவெறி கொண்ட தோற்றத் தையும் மாற்றிக் கொண்டு, மரியாதை, மகிழ்ச்சி, திருப்தி ஆகிய வற்றின் ஒவ்வொரு அடையாளத்தோடும் இந்த வேதபோதகர்களை வரவேற்கச் சென்றார்கள்.

இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்டு பிரமித்துப் போனவனாக, இதெல்லாம் எப்படி முடியப் போகிறது என்று பார்க்க நான் ஆவலா யிருந்தேன். கவனமாகப் பார்த்தபோது, இந்த வேதபோதகர்கள் அந்த உள்ளூர் மக்களுக்கு எப்படி போதிக்கிறார்கள், வேதம் கற்பிக் கிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இவர்கள் அவர்கள் சொன்ன வற்றையெல்லாம் மிகுந்த கவனமுடனும், ஆர்வத்துடனும் கவனித்துக் கேட்டார்கள். எவ்வளவு வேகமாக அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதையும், தாங்கள் கற்றுக் கொண்டவற்றை உடனடியாக நடைமுறையில் அனுசரிக்க எப்படி முயற்சி செய்தார்கள் என்பதையும் நான் கண்டேன்.

நான் தொடர்ந்து கவனித்தபோது, வேதபோதகர்கள் ஜெபமாலை சொல்லத் தொடங்கியதையும், இந்தக் காட்டு மிராண்டிகள் இந்த ஜெபத்தில் பங்குபெற எல்லாத் திசைகளிலிருந்தும் ஓடி வந்ததையும் நான் பார்த்தேன்.

சற்று நேரத்திற்குப் பிறகு, சலேசியர்கள் அந்த மிகப் பெரிய கூட்டத்தின் நடுவில் வந்து முழந்தாளிட்டார்கள். காட்டு மிராண்டிகள் வேதபோதகர்களின் பாதங்களருகில் தங்கள் கரங்களை ஊன்றி, அவர்களோடு முழந்தாளிட்டு, ஜெபிக்கத் தொடங் கினார்கள். சலேசியர்களில் ஒருவர் அதன்பின் “லவ்தாத்தே மரியாம், ஒலிங்குவே ஃபிதேலெஸ் - ஓ விசுவாசமுள்ள நாவுகளே, மரியாயைப் புகழுங்கள்” என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். காட்டு மிராண்டிகளும் வார்த்தைக்கு வார்த்தை உரத்த குரலில் கூட சேர்ந்து அதைப் பாடினர். அவர்களுடைய உற்சாகமுள்ள பாடலின் சத்தம் எவ்வளவு அதிகமாயிருந்தது என்றால் அது என்னை அச்சப்படுத் திற்று. நான் கண்விழித்தேன்.

இனி, யார் அந்தக் காட்டுமிராண்டிகள்?

அவர்கள் எத்தியோப்பிய மக்கள் என்று டொன் போஸ்கோ முதலில் நம்பினார். ஆனால் எத்தியோப்பியர்களின் குணங்கள் மற்றும் வழக்க வழக்கங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களை அவர் பெற்றுக் கொண்டவுடன், அவர்தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அதன்பின், அந்த மனிதர்கள் ஹாங்காங்கைச் சுற்றியுள்ள பிரதேசத்திலுள்ள மக்களாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் தேவ அழைத்தல்களைத் தேடி அந்த சமயத்தில் ட்யூரினுக்கு வந்திருந்த ஒரு சீன வேதபோதகரோடு பேசிய போது, இவர்களும் தம் கனவில் வந்தவர்கள் அல்ல என்பதை அவர் அறிந்து கொண்டார்.

அதன்பின் ஆஸ்த்ரேலிய வேதபோதகங்களைப் பற்றி அவர் ஆராயத் தொடங்கினார். ஆனால் இன்னமும் தம் கனவில் வந்த மக்களினம் வாழும் இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உரோமை அவருக்கு ஆஸ்த்ரேலியாவில் ஓர் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதித்துவத்தை அழிக்க எண்ணியபோது, அவருடைய எண்ணங்கள் மீண்டும் கறுப்பர்களாகிய ஆஸ்த்ரேலியப் பழங்குடியினரிடம் சென்றது. ஆனால் இன்னும் அவருக்கு முழுமை யான நம்பிக்கை வரவில்லை.

அர்ஜெண்டினாவிடமிருந்து மேலும் மேலும் தம்மை வற்புறுத்துகிற அழைப்புகளை அவர் பெற்றுக் கொண்ட போது, மற்ற எல்லாக் கருத்துக்களையம் ஒதுக்கி வைத்து விட்டு, பாட்டகோனியாவின் காட்டுவாசிகளுக்கு மத்தியில் தங்கள் முதல் வேதபோதகப் பணியைச் செய்யத் தம் மகன்கள் அழைக்கப் படுகிறார்கள் என்பதையும், அந்த நாகரீகமற்ற, தங்களை வரவேற்க விரும்பாத நாடுதான் தாம் தம் காட்சியில் கண்ட நாடு என்பதையும் அவர் தெளிவாக உணர்ந்து கொண்டார். 1875, ஜனவரி 29, அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் திருநாளுக்காக  அர்ஜெண்டினாவிலிருந்து மேலும் மேலும் கடிதங்கள் வந்தன என்று காலக்கிரமப் பதிவேட்டில் நாம் வாசிக்கிறோம். 1875, ஜனவரி 29 அன்று, டொன் போஸ்கோ , தமது ஆலோசக சபையினரும், பல்வேறு உள்ளூர் மடங்களின் அதிபர்களும் ஆரட்டரியின் அரங்க மேடையில் தம்மைச் சூழ்ந் திருக்க, அந்தக் கடிதங்களைத் தம் சிறுவர்களுக்கு உரக்க வாசித்துக் காட்டச் செய்தார். ஏனெனில் தொடக்கத்திலிருந்தே சிறுவர்கள் சலேசியக் குடும்பத்தின் ஒரு பாகமாகக் கருதப்பட்டு வந்தார்கள். அவர்கள் சபைக்கென நியமிக்கப்பட்ட விதியை நிர்ணயிக்கும் முக்கியமான நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும் என்று டொன் போஸ்கோ கருதினார். இப்போது எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்றும், இப்போது எல்லாவற்றிற்கும் பரிசுத்த பாப்பரசரின் சம்மதத்தைப் பெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையும் இந்தக் கடிதங்களிலிருந்து அவர் அறிந்து கொண்டார்.

இந்தக் காரணத்திற்காக டொன் போஸ்கோ உரோமைக்குச் சென்று, பாப்பரசரைச் சந்தித்தார். பாப்பரசர் இந்த முழு விவகாரத் தையும் கர்தினால் ஃப்ரான்ச்சி என்பவரிடம் ஒப்படைத்தார். அவருடைய அறிக்கை கிடைத்ததும், மேற்கொண்டு எந்தத் தாமதமோ, சம்பிரதாயமோ இன்றி அவர் இந்தப் புதிய வேதபோதகத்தை அங்கீகரித்து, அதை ஆசீர்வதித்தார்.