இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 18

அநீத நடுவன் உவமையும், பரிசேயனும் ஆயக்காரனும் ஜெபஞ்செய்ததும், கர்த்தர் தம்முடைய பாடுகளை முன்னறிவித்ததும், ஜெரிக்கோ கோட்டையின் அருகில் ஓர் குருடனுக்குப் பார்வையளித்ததும்.

1. சோர்ந்து போகாமல் எப்போதும் ஜெபஞ்செய்ய வேண்டுமென்பதைக் குறித்து, அவர் ஓர் உவமையையும் அவர்களுக்குத் திருவுளம்பற்றினார் (சர்வப். 18:22; உரோ. 12:12; 1 தெச. 5:17.)

2. ஒரு பட்டணத்திலே சர்வேசுரனுக் குப் பயப்படாதவனும், மனிதரை மதி யாதவனுமாகிய ஒரு நடுவனிருந்தான்.

3. அந்தப் பட்டணத்திலே ஓர் வித வையுமிருந்தாள். அவள் அவனிடத்தில் வந்து: என் எதிராளிக்கு விரோதமாய் என் நியாயத்தைத் தீர்த்துக்கொடும் என்று கேட்பாள்.

4. வெகுகாலம்வரைக்கும் அவனுக்கு மனமில்லாதிருந்தது. பிறகு அவன் தனக் குள்ளே சொல்லிக்கொண்டதாவது: நான் சர்வேசுரனுக்குப் பயப்படாமலும், மனிதரை மதியாமலுமிருந்தபோதிலும்,

5. இந்தக் கைம்பெண் என்னைத் தொந்தரவு செய்கிறபடியால், அவள் கடைசியாய் வந்து என்னைத் திட்டிவையாதபடி அவளுக்கு நீதிசெலுத்துவேனென்று சொன்னான் என்றார்.

6. பின்னும் ஆண்டவர் அவர்களை நோக்கி: அந்த அநீத நடுவன் சொல்லு கிறது என்னவென்று கேளுங்கள்.

7. அப்படியானால், சர்வேசுரன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தம்மை நோக்கி இரவும் பகலுமாக அபய மிட்டுக் கூப்பிடுகிறபோது, (அவர்களு க்கு) நீதிசெலுத்தாமல் அவர்கள் மட்டில் பொறுத்துக்கொண்டிருப்பாரோ?

8. தீவிரமாய் அவர்களுக்கு நீதி செலுத்துவாரென்று உங்களுக்குச் சொல் லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும் போது, பூலோகத்தில் விசுவாசத்தைக் காண்பாரென்று நினைக்கிறாயோ என்றார்.

* 8. சர்வேசுரனிடத்தில் அபயமிட்டு மன்றாடுகிறவர்களைத் தாமதமின்றி இரட்சிப்பாரென்கிறதில் சந்தேகமில்லை. ஆகிலும் விசுவாச நம்பிக்கையோடே வேண்டிக்கொண்டால் தானாகும். ஆனால், விசுவாசம் நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்துபோகிறபடியால், உலக முடிவில் அப்படிப்பட்ட உயிருள்ள விசுவாசிகள் வெகு அபூர்வமாய் இருப்பார்களென்று அர்த்தமாம்.

9. பின்னும் தங்களை நீதிமான்களென்று நம்பி, ஆணவங்கொண்டு மற்றவர்களை அலட்சியம்பண்ணிவந்த சிலரைக்குறித்து அவர் பின்வரும் உவமையைச் சொன்னார்.

10. இரண்டு மனிதர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். அவர்களில் ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11. பரிசேயன் நின்றுகொண்டு தனக் குள்ளே ஜெபித்ததாவது: சர்வேசுரா! நான் திருடர் அநீதர் விபசாரக்காரராகிய மற்ற மனிதரைப்போலவும், இந்த ஆயக் காரனைப்போலவும் இராததைப்பற்றி உமக்குத் தோத்திரஞ் செய்கிறேன்.

12. நான் வாரத்தில் இருமுறை ஒருசந்தி பிடிக்கிறேன்; எனக்குள்ள எல்லாவற்றிலும் பத்திலொருபாகம் செலுத்துகிறேன் என்றான்.

13. ஆயக்காரனோ, தூரத்தில் நின்று, தன் கண்களை முதலாய் வானத்தை நோக்கி உயர்த்தத் துணியாமல், தன் மார்பில் அறைந்துகொண்டு: சர்வேசுரா! பாவியாகிய என்பேரில் கிருபையாயிரும் என்று ஜெபித்தான். (சங். 50:19.)

14. இவனே அவனைவிட நீதிமானா கித் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனா னென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்து கிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (மத். 23:12; லூக். 14:11.)

15. அத்தருணத்தில், அவர் பாலர்களைத் தொடும்படியாக அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு அவர்களை அதட்டினார்கள். (மத். 19:13; மாற். 10:13.)

16. ஆனால் சேசுநாதர் அவர்களை வரவழைத்து: சிறுவர்களை என்னண்டையில் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதேயுங்கள்; ஏனெனில் சர்வேசுர னுடைய இராச்சியம் அப்படிப்பட்டவர் களுடையது.

17. ஒரு சிறுபிள்ளைபோல் சர்வேசுரனுடைய இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவன் அதிலே பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

18. அப்பொழுது ஒரு பிரபு அவரை நோக்கி: நல்ல போதகரே, நான் நித்திய ஜீவியத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றான். (மத்.19:16; மாற்.10:17)

19. சேசுநாதர் அவனை நோக்கி: என்னை நீ நல்லவர் என்பானேன்? சர்வேசுரன் ஒருவரேயன்றி வேறெவரும் நல்லவரில்லை.

* 19. சேசுநாதர் தேவனும் மனுஷனுமாயிருந்ததால், அவர் மெய்யாகவே நல்லவராயினும் அந்தப் பிரபு அவரை மனுஷனென்றே எண்ணிக் கேட்டதினால், இவ்விதம் மறுமொழி சொன்னார்.

20. கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் பண்ணாதிருப்பாயாக, களவாடாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்று சொல்ல, (யாத். 20:12-16.)

21. அவன்: இவைகளையெல்லாம் என் இளம்பிராயமுதல் அநுசரித்துக் கொண்டு வருகிறேன் என்றான்.

22. சேசுநாதர் அதைக் கேட்டு அவனுக்குச் சொன்னதாவது: இன்னும் உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது, உனக்குள்ள எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு: அப்பொழுது மோட்சத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்: பின்னும் வந்து, என்னைப் பின்செல் என்றார்.

23. அவனோ, இந்த வார்த்தை களைக் கேட்டு, விசனமடைந்தான். ஏனெனில் மிகவும் திரவியவானாயிருந்தான்.

24. சேசுநாதர் அவன் விசனமடைந்த தைக் கண்டு திருவுளம்பற்றினதாவது: திரவியவான்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்திலே பிரவேசிப்பது எவ்வள வோ வருத்தமாயிருக்கின்றது. (லூக். 6:24.)

25. திரவியவான் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட் டகம் ஊசித்துவாரத்தின் வழியாய் நுழை ந்து போவது எளிதாயிருக்கும் என்றார்.

* 25. மத். 19-ம் அதி. 24-ம் வசன வியாக்கியானம் காண்க.

26. இதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சணியம் அடையக்கூடும் என்றார்கள்.

27. அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் சர்வேசுரனால் கூடும் என்று அவர்களுக்குச் சொன்னார்.

28. அப்பொழுது இராயப்பர்: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, உம்மைப் பின்சென்றோமே என்று சொல்ல,

29. அவர் அவர்களை நோக்கி: சர்வேசுரனுடைய இராச்சியத்தினிமித்தம் வீட் டையாவது, பெற்றோரையாவது, சகோ தரர்களையாவது, மனைவியையாவது, மக்களையாவது விட்டுவிட்ட எவனும்,

30. இம்மையில் மிகவும் அதிகமான வைகளையும், மறுமையில் நித்திய ஜீவனையும் அடையாமல் போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

31. பின்னும் சேசுநாதர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து, அவர்களுக்குத் திருவுளம்பற்றினதாவது: இதோ, ஜெருசலேம் நகருக்குப் போகிறோம்; மனுமகனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட யாவும் நிறைவேறும். (மத். 20:17; மாற். 10:32.)

32. எப்படியெனில், அவர் புறஜாதியாருக்குக் கையளிக்கப்பட்டுப் பரிகாசம் பண்ணப்படுவார், சாட்டைகளால் அடிக்கப்படுவார், துப்பப்படுவார்.

33. அவரைச் சாட்டைகளால் அடித்த பின்பு, அவரைக் கொலை செய்வார்கள். மூன்றாம் நாளிலோ அவர் உயிர்த்தெழுந் திருப்பார் என்றார். (மத். 20:19.)

34. அவர்களோ இவைகளில் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. இந்தப் பேச்சு அவர்களுக்கு மறைபட்டிருந் தது, சொல்லப்பட்டதையும் அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

35. பின்பு சம்பவித்ததேதெனில், அவர் ஜெரிக்கோ பட்டணத்துக்குச் சமீப மாய் வருகையில், ஒரு குருடன் பாதை யோரத்தில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். (மத். 20:29-34.)

36. ஜனக்கும்பல் நடந்துபோகிறதை அவன் கேட்டு: இதென்னவென்று விசாரித்தான்.

37. நசரேனுவாகிய சேசுநாதர் அவ் வழியாய்ப் போகிறாரென்று அவனுக்கு அறிவித்தார்கள்.

38. உடனே அவன்: சேசுவே! தாவீ தின் குமாரனே, என்பேரில் இரக்க மாயிரும் என்று கூவினான்.

39. முந்தி நடந்தவர்கள் அவன் பேசாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, என்பேரில் இரக்கமாயிரும் என்று அதிக மாய்க் கூவினான்.

40. அப்பொழுது சேசுநாதர் நின்று, அவனைத் தம்மிடத்தில் அழைத்து வரக் கட்டளையிட்டார். அவன் கிட்ட வந்த பொழுது, அவர் அவனை நோக்கி:

41. நான் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, அவன்: ஆண்ட வரே, நான் பார்வை அடையவேண்டும் என்றான்.

42. அப்பொழுது சேசுநாதர்: நீ பார்வையடைவாயாக; உன் விசுவாசம் உன்னை இரட்சித்ததென்று அவனுக்குச் சொன்னார்.

43. அப்பொழுதே அவன் பார்வையடைந்து, சர்வேசுரனை ஸ்துதித்துக் கொண்டு அவர் பிறகே போனான். ஜனங்களெல்லாரும் இதைக் கண்டு, சர்வேசுரனைத் தோத்திரம் பண்ணினார்கள்.