இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 17. அருள் நிறை மந்திரத்தின் நற்கனிகள்

முத்திப் பேறு பெற்ற ஆலன் ரோச் என்பவர் பரிசுத்த கன்னிகை மீது மிக அழமான பக்தி பூண்டிருந்தார். அவருடைய பக்தி எவ்வளவு ஆழமாயிருந்ததென்றால், தேவ அன்னை அவருக்கு அநேக வெளிப்படுத்தல்களை அருளினார்கள். இந்த வெளிப்படுத்தல்கள் உண்மை யானவை என்று அவர் சத்தியப் பிரமாணம் செய்து நிச்சயப்படுத்தியுள்ளார்.

இவ்வெளிப்படுத்தல்களில் முக்கியமானவை மூன்று. முதலாவது: (உலகத்தை மீட்ட மங்கள வார்த்தையாகிய) அருள் நிறை மந்திரத்தை, அது பற்றி எனக்குக் கவலையே கிடையாது என்ற மனப்பான்மையாலோ அல்லது அத்தகைய அசமந்தத்தினாலோ அல்லது அதனைப் பகைப்பதினாலோ மக்கள் சொல்லாமல் விடுவார் களானால், அப்படிப்பட்டவர்கள் அநேகமாக விரைவில் நித்திய தண்டனைக்குத் தீர்ப்பிடப்படுவார்கள் என்பதற்கு அது ஒரு அடையாளம்.

இரண்டாவது: இத்தெய்வீக மங்கள மொழியை விரும்பி நேசிப்பவர்கள் பரலோகத்திற்கு முன் குறிக்கப் படுவதின் சிறந்த அடையாளத்தைப் பெறுகிறார்கள்.

மூன்றாவது: தேவ அன்னையை நேசிக்கும் உயரிய வரத்தையும், அன்பினால் அவர்களுக்கு ஊழியம் செய்யும் வரத்தையும் கடவுளிடமிருந்து பெற்றவர்கள் உண்டு. இவர்கள் சம்பாதித்த அளவுக்குத் தக்க மோட்ச மகிமையை, தேவ அன்னை தன் திருக்குமாரனிடமிருந்து அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பார்கள். அதுவரையிலும் அவர்கள் அத்தாயை நேசித்து ஊழியம் செய்து வரும்படி மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

பதிதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் பசாசின் மக்கள். சர்வேசுரனுடைய சாபத் தீர்ப்பின் அடையாளத்தை அவர்கள் தெளிவாக தங்கள் மீது கொண்டுள்ளார்கள். இவர்களிடம் அருள் நிறை மந்திரத்தின் மீது பயங்கரமான வெறுப்பு உள்ளது. அவர்கள் பரலோக மந்திரத்தை இன்னும் சொல்லி வருவார்கள். ஆனால் அருள்நிறை மந்திரத்தை சொல்லவே மாட்டார்கள். தங்கள் கழுத்தைச் சுற்றி நஞ்சுள்ள ஒரு பாம்பை அணிந்தாலும் அணிவார்களே தவிர ஒரு உத்தரியத்தைக் கழுத்தில் அணியவோ, ஒரு ஜெப மாலையைத் தங்களுடன் வைத்திருக்கவோ மாட்டார்கள்,

இறைவனுடைய சாபத்தீர்ப்பின் அடையாளத்தைத் தங்கள் மீது கொண்டிருக்கும் கத்தோலிக்கர்கள் ஜெபமாலையைப் பற்றி நினைக்க மாட்டார்கள் - அது 53 மணியோ அல்லது 153 மணியோ - அவர்கள் ஜெபமாலை சொல்ல மாட்டார்கள். ஜெபமாலை சொன்னாலும் வெகு துரிதமாய், அசிரத்தையாய்ச் சொல்வார்கள்.

முத் ஆலன் ரோச் என்பவருக்கு வெளிப்படுத்தப்பட்ட இவற்றை நான் நம்பாவிட்டாலும் கூட என் சொந்த அனுபவமே இப்பயங்கரமான, ஆனால் ஆறுதலான உண்மையை எனக்கு உறுதிப்படுத்தப் போதுமானது. இவ்வளவு சிறியதாகத் தோன்றும் ஒரு பக்தி முயற்சி நித்திய மீட்பின் தப்பாத அடையாளமாயிருக்கின்றது. இப்பக்தி இல்லாதிருப்பது இறைவனின் நித்திய கோபத்தின் அடையாளமாயிருக்கின்றது. இது எவ்வாறு என்று எனக்கு தெரியவுமில்லை. என்னால் தெளிவுடன் காண முடியவுமில்லை. ஆயினும் இதைப்போல உண்மையானது வேறெதுவுமில்லை .

நம் காலத்திலும் நாம் என்ன காண்கிறோம். தாயாகிய பரிசுத்த திருச்சபையால் கண்டனம் செய்யப்பட்ட கொள்கைகளை உடையவர்களிடம் அழமில்லாத ஒரு மாதிரி பக்தி உள்ளது. ஆனால் அவர்கள் ஜெபமாலையை ஏளனமாக எண்ணுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஜெபமாலை மீதுள்ள அன்பையும் விசுவாசத்தையும் அழித்து ஜெபமாலை சொல்லாதபடி அவர்களை தளர்வுப்படுத்தி விடுகிறார்கள். உலக நோக்கில் சரியெனப்படும் விரிவான காரணங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். * கால்வினியர் செய்வது போல் ஜெபமாலையையும் உத்தரியத்தையும் ஒரேயடியாகக் கண்டனம் செய்ய மாட்டார்கள். அதிலே கவனமாயிருந்து கொள்கிறார்கள். ஆனால் அவற்றை அவர்கள் தாக்கும் முறை மிகவும் தந்திரமுள்ளதாகையால் மிக மிகக் கொடியதாயிருக்கின்றது. இதுபற்றி நான் பின்னால் குறிப்பிடுவேன். (* கால்வினியர், கால்வின் என்பவனைப் பின் சென்றவர்கள், 16-ம் நூற்றாண்டில் கால்வின் பதிதம் பிரான்ஸ் நாட்டில் நிலவியது. மனிதனுக்கு சுயாதீன சித்தம் இல்லை . மோட்சத்திற்கும் நரகத்திற்கும் போகிறவர்கள் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டு விட்டதால் பக்தி முயற்சிகளே தேவையில்லை என்று வாதிப்பது இப்பதிதம்.)

கடவுளுடைய ஆவியால் நடத்தப்படுகிறவர்கள் யாரென்றும் பசாசினால் ஏமாற்றப்படுகிறவர்கள் யாரென்றும் உரசிப் பார்த்து நாம் சொல்லக்கூடிய தப்பாத உரைகல் எது? அதுவே மங்கள வார்த்தை ஜெபம். ஐந்து அல்லது பதினைந்து பத்து மணிகளைக் கொண்ட ஜெபமாலை என்னும் ஜெபம்! தெய்வீக தியானத்தில் கழுகுகளைப் போல் உயர்ந்து காணப்பட்டாலும், மிகவும் பரிதாபத்துக்குரிய விதமாய் பசாசினால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆன்மாக்களை நான் அறிவேன். அவர்கள் அருள் நிறை மந்திரமும் ஜெபமாலையும் தங்களுக்கு மிகவும் கீழானவை என்று கருதி அவைகளை ஒதுக்கி விட்டதை நான் அறிய வந்த போது, அவர்கள் எவ்வளவு தவறிப் போனார்கள் எனக் கண்டேன்.

நல்ல ஆன்மாக்கள் மீது மோட்சத்திலிருந்து பொழியப்படும் ஆசீர்வதிக்கப்பட்ட பனி மழையே அருள் நிறை மந்திரம். ஓர் அதிசய ஞானச் செழிப்பை அது அவர்களுக்குக் கொடுக்கிறது. அதனால் அவர்கள் எல்லாப் புண்ணியங்களிலும் வளர்ச்சி பெற முடிகிறது. ஆன்மா என்னும் தோட்டம் இச்செபத்தினால் எவ்வளவு அதிகமாய் நீர் பாய்ச்சப்படுகிறதோ அவ்வளவு அதிகமாய் அவ்வான்மா அறிவு விளக்கம் பெறுகிறது. இருதயம் ஊக்கமடைகிறது. ஞானப் பகைவர்களுக்கெதிரான ஆயுதம் வலிமை பெறுகிறது.

அருள் நிறை மந்திரம் என்பது, பற்றியெரியும் கூர்மையான வாள். கடவுளின் வார்த்தையுடன் அது இணைக்கப்பட்டால், போதிப்பவனுக்கு இருதயங்களைக் குத்தித் திறக்கும் சக்தியைக் கொடுக்கிறது. இறுகிப் போன இருதயங்களை இளக்கி மனந்திருப்பும் ஆற்றலைத் தருகின்றது. அதுவும், பிரசங்கிக்கும் ஆற்றல் மிகக் கொஞ்சமாக அல்லது இல்லாமலேயிருந்தாலும் கூட இந்நற்பலன் விளையும்.

நான் முன்பு கூறியது போல, பாவிகளையும் பதிதர்களையும் மனந்திருப்புமாறு அர்ச். சாமிநாதருக்கும் முத் ஆலன் ரோச் என்பவருக்கும் நம் தேவ அன்னை தந்த மாபெரும் இரகசியம் இதுவே.

அநேக குருக்கள் தங்கள் பிரசங்கத்திற்கு முன் ஒரு அருள் நிறை மந்திரம் சொல்லும் வழக்கத்தைக் கைக்கொண்டது இதனாலேயே என்று அர்ச். அந்தோனினுஸ் என்பவர் கூறுகிறார்.