இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 17

கர்த்தர் துர்மாதிரிகையைக் கண்டித்ததும், திருந்துகிற சகோதரனுக்கு மன்னிக்க வேண்டுமென்பதும், விசுவாசத்தின் பலனும், பத்து குஷ்டரோகிகள் குணப்பட்டதும், தமது வருகையைக்குறித்து அவர் அறிவித்த விசேஷங்களும்.

1. மீளவும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராதிருப்பது கூடாத காரியம். ஆயினும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ கேடு! (மத். 18:7.)

2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, அவன் கழுத்தில் எந்திரக்கல் கட்டுண்டு, சமுத்திரத்தில் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.

3. உங்கள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்தால் அவனைக் கடிந்துகொள். அவன் மனஸ் தாபப்பட்டால், அவனை மன்னித் துக்கொள். ( லேவி. 19:17; மத். 18:15.)

4. அப்படியே அவன் ஒரு நாளில் ஏழுமுறை உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஒரு நாளில் ஏழுமுறையும் உன்னிடத்தில் வந்து: மனஸ்தாபப் படுகிறேனென்று சொல்லுவானாகில், அவனை மன்னிப்பாயாக என்று திருவுளம்பற்றினார். (மத். 18:21, 22.)

* 3-4. இதில் நமக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்கிறவர்கள்மேல் நாம் பகை வைராக்கியம் வைக்கலாகாதென்று கர்த்தர் கற்பிக்கிறாரேயொழிய, ஒழுங்குக் கிரமத்தைக் காக்கும்படி குற்றவாளியை எவ்விதத்திலும் கண்டிக்கப்படாதென்றும், குற்றப்பரிகாரம் அவனிடம் வாங்கப்படாதென்றும் கற்பிக்கிறதில்லை. (மத்.18-ம்அதி.17-ம் வசன வியாக்கியானம் காண்க.)

5. அப்பொழுது, அப்போஸ்தலர்கள் ஆண்டவரை நோக்கி: எங்களுக்கு விசுவாசம் அதிகரிக்கச் செய்தருளும் என்றார்கள்.

6. அதற்கு ஆண்டவர்: ஒரு கடுகளவு விசுவாசம் உங்களுக்கிருந்தால், நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி: நீ வேரோடு பிடுங்குண்டு, சமுத்திரத்திலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும். (மத். 17:19; மாற். 11:23.)

7. உங்களுக்குள்ளே உழுவதற்காவது மேய்ப்பதற்காவது ஊழியனை வைத்திருக்கிற எவனாவது அந்த ஊழியன் வயலிலிருந்து வரும்போது, அவனை நோக்கி: நீ உடனே போய் உட்கார்ந்து சாப்பிடு என்பானோ?

8. (அதைவிட்டு) நான் சாப்பிடும்படி போசனம் முஸ்திப்புச் செய்து, உன்னிடையை வரிந்துகொண்டு, நான் போஜனபானஞ் செய்யுமட்டும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பிற்பாடு நீ போஜனபானம் செய்வாய் என்று சொல்லமாட்டானோ ? 

9. தான் கட்டளையிட்டவைகளை அந்த ஊழியன் செய்ததினாலே அவனுக்கு நன்றியறிந்தவனாயிருப்பானோ?

10. இல்லை என்று எண்ணுகிறேன். அந்தப்பிரகாரமே, நீங்களும் உங்களுக் குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றை யும் செய்தபிற்பாடு: நாங்கள் உபயோக மற்ற ஊழியராயிருக்கிறோம்; நாங்கள் செய்யவேண்டியிருந்ததைச் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.

11. பின்னும் சம்பவித்ததாவது: சேசுநாதர் ஜெருசலேம் நகருக்குப் போகையில் சமாரியா, கலிலேயா நாடு களின் நடுவே நடந்துபோனார்.

12. அவர் ஓர் கிராமத்துக்குள் பிரவேசிக்கும்போது, குஷ்டரோகிகளாகிய பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து தூரத்தில் நின்று: (லேவி.13:46.)

13. சேசுவே, போதகரே! எங்கள் பேரில் இரக்கமாயிரும் என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்கள்.

14. அவர்களை அவர் கண்டவுடனே: நீங்கள்போய், உங்கள் ஆசாரியருக்குக் காண்பியுங்கள் என்றார். அவர்கள் போகும் பொழுதே சொஸ்தமானார்கள். (லேவி. 13:2-7.)

15. அவர்களிலே ஒருவன் தான் சொஸ்தமானதைக்கண்டு, உரத்த சத்தமாய்ச் சர்வேசுரனை ஸ்துதித்துக்கொண்டு திரும்பிவந்து,

16. அவருடைய பாதங்களுக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து, அவருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் சொன்னான். அவன் சமாரியனாயிருந்தான்.

17. சேசுநாதர் மறுமொழியாக: பத்துப்பேரும் சொஸ்தமானார்களல்லோ? மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18. இந்த அந்நியன் ஒழிய வேறொரு வனும் திரும்பிவந்து, சர்வேசுரனுக்கு ஸ்துதி செலுத்தக் காணோமே என்று சொல்லி,

19. அவனை நோக்கி: நீ எழுந்து போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று திருவுளம்பற்றினார்.

20. அத்தறுவாயிலே, பரிசேயர் அவரை நோக்கி: சர்வேசுரனுடைய இராச்சி யம் எப்பொழுது வருமென்று கேட்க, அவர் மறுமொழியாக: சர்வேசுரனுடைய இராச்சியம் பிரத்தியட்சமாய் வராது;

* 20. பரிசேயர் எண்ணினதுபோல, சர்வேசுரனுடைய இராச்சியம் உலக இராஜாங்கத்துக்குரிய ஆரவாரத்தோடு துலங்காதென்றர்த்தமாகும்.

21. இதோ, இங்கேயிருக்கிறதென் றும், அதோ, அங்கேயிருக்கிறதென்றும் சொல்வார்கள். அது என்னவென்றால் சர்வேசுரனுடைய இராச்சியம் இதோ, உங்களுக்குள்ளேயிருக்கிறது என்றார். (அரு. 18: 36.)

22. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: மனுமகனுடைய நாளொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசிக்கும் காலம் வரும். ஆயினும் அதைக் காணமாட்டீர்கள்.

23. அப்பொழுது சிலர்: இதோ, இங்கேயென்றும், அதோ, அங்கேயென்றும் உங்களுக்குச் சொல்லுவார்கள்; நீங்கள் போகவும் வேண்டாம், பின்பற்றவும் வேண்டாம். (மத். 24:23.)

24. மின்னல் வானத்தின்கீழ் ஒரு திசையில் தோன்றி, வானத்தின்கீழ் மறுதிசை வரையிலும் பிரகாசிக்கிறது எப்படியோ, அப்படியே மனுமகனும் தம்முடைய நாளில் இருப்பார்.

25. ஆகிலும் முந்தமுந்த அவர் அநேகம் பாடுபடவும், இச்சந்ததியினால் ஆகா தவரென்று தள்ளப்படவும் வேண்டும்.

26. நோவா என்பவருடைய நாட்களிலே சம்பவித்ததுபோல மனுமகன் வரும் நாட்களிலும் சம்பவிக்கும்.

27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் உண் டும், குடித்தும், பெண் கொண்டும், கொடுத்தும் வந்தார்கள். அப்போது ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

28. லோத் என்பவருடைய நாட்களிலே சம்பவித்ததுபோலவும் சம்பவிக்கும். ஜனங்கள் உண்டார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், வீட்டைக் கட்டினார்கள். (ஆதி. 19:25.)

29. லோத் என்பவர் சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலோ, வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் பெய்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

30. மனுமகன் தன்னை வெளியாக்கும் நாளிலும் இப்படியே நடக்கும்.

31. அந்நேரத்தில் வீட்டுக்குள் தன் பொருட்களிருக்க, அரமியத்தின் மேலிருப்பவன் அவைகளை எடுப்பதற்கு இறங்காதிருப்பானாக: அப்படியே வயலிலிருப்பவனும் திரும்பி வராதிருப்பானாக. (மத். 24:17, 18.)

32. லோத் என்பவருடைய மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். (ஆதி. 19:26.)

33. தன் ஜீவனை இரட்சிக்கத் தேடுகிற எவனும், அதை இழந்துபோவான். அதை இழப்பவன் எவனும், அதைக் காப்பாற்றுவான். (மத். 10:39; மாற். 8:35; லூக். 9:24; அரு. 12:25.)

* 33. மத். 10-ம் அதி. 39-ம் வசன வியாக்கியானம் காண்க.

34. நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: அந்த இராத்திரியிலே இரண்டு பேர் ஒரு மஞ்சத்திலிருக்க, ஒருவன் எடுபடுவான், மற்றொருவன் விடுபடு வான். (மத். 24:40; 1 தெச. 4:15.)

35. இரண்டு ஸ்திரீகள் ஒரு திரிகை திரித்துக்கொண்டிருக்க, ஒருத்தி எடுபடு வாள், மற்றொருத்தி விடுபடுவாள். வயலிலிருக்கிற இருவரில் ஒருவன் எடு படுவான், மற்றொருவன் விடுபடுவான் என்று திருவுளம்பற்றினார்.

36. அவர்கள் அவருக்கு பிரத்தியுத்தாரமாக: ஆண்டவரே எங்கே என்றார்கள்.

37. அதற்கு அவர்: பிணம் எங்கேயோ, அங்கேயே கழுகுகளும் வந்துகூடும் என்று திருவுளம்பற்றினார்.

* 37. மத். 24-ம் அதி. 28-ம் வசன வியாக்கியானம் காண்க.