இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 16. அருள் நிறை மந்திரத்தின் அழகு

கடவுளின் மகத்துவத்தைப் போல் உயர்வானது எதுவுமில்லை. மனிதனைப் போல் அவன் பாவி என்ற முறையில் தாழ்ந்ததுவும் இல்லை. ஆயினும் யாவும் வல்லவரான தேவன் நம் எளிய ஜெபத்தையும் புறக்கணிப்பதில்லை. மாறாக, நாம் அவருடைய புகழைப் பாடும் போது அவர் மகிழ்ச்சியடைகிறார்.

சர்வேசுரனுடைய மாட்சிமைக்கு நாம் சாற்றக்கூடிய சிறந்த புகழ்ப்பாக்களில் ஒன்று தேவ அன்னைக்கு கபிரியேல் தூதன் உரைத்த மங்களமாகும். 'உமக்கு நானொரு புதிய பாட்டுப் பாடுவேன் (சங். 1439} தாவீதரசன் தீர்க்க தரிசனமாய்க் கூறிய இப்பாடல் மெசையாவின் வருகையின் போது பாட வேண்டிய புதிய பாட்டு - இந்த சம்மனசின் மங்கள வார்த்தையே!

பழைய பாடல் ஒன்றுள்ளது. புதிய பாடலும் ஒன்று உள்ளது. பழைய பாடல்: யூத மக்கள் இறைவனுக்குப் பாடிய நன்றிப் பாடல். தங்களை அவர் படைத்ததற்காகவும், நிலை நிறுத்திக் காத்ததற்காகவும், அடிமைத் தனத்திலிருந்து மீட்டதற்காகவும், செங்கடல் வழியே பாதுகாப்பாக தங்களை வழி நடத்தியதற்காகவும், மன்னாவை உணவாகத் தந்ததற்காகவும், இன்னும் மற்றெல்லா நலன்களுக்காகவும் ஆண்டவருக்கு நன்றியாகப் பாடிய பாடல்.

புதிய பாடல்: கிறிஸ்தவ மக்கள் சர்வேசுரனுக்குப் பாடும் நன்றிப் பாடல். கடவுளின் மனிதாவதாரத்திற்காகவும் அவர் தந்த மீட்புக்காகவும் நன்றி கூறும் பாடல்.

இம்மாபெரும் அதிசய நிகழ்ச்சிகளெல்லாம் சம்மனசின் மங்கள வார்த்தையால் நிகழ்ந்தன. எனவே இதே மங்களத்தை மிகப் பரிசுத்த திரித்துவத்திற்கு நன்றியாக - திரித்துவம் நமக்களித்துள்ள அளவற்ற நன்மைகளுக்கு நன்றியாக நாம் மீண்டும் பாடுகிறோம்.

பரம பிதா தம் ஏக சுதனை தமது மீட்டராகத் தரும் அளவிற்கு உலகை நேசித்ததால் அவரை நாம் போற்றுகிறோம்.

தேவ சுதன் மோட்சத்தை விட்டு நம்மிடம் இறங்கி வரவும், மனிதனாகவும், நம்மை மீட்கவும் தயை கூர்ந்ததற்காக அவரைப் போற்றுகிறோம்.

பரிசுத்த ஆவியானவர் நமதாண்டவரின் பரிசுத்த சரீரத்தை மாதாவின் உதரத்தில் உருவாக்கியதற்காக அவரை போற்றுகிறோம். இந்த சரீரம் தான் தம் பாவங்களுக்காகப் பலியாக்கப்பட்டது.

இந்த நன்றி மனப்பான்மையோடுதான் நாம் எப்போதும் அருள் நிறைந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும். விலைமதிக்கப்பட முடியாத மீட்பென்னும் வரத்தினை ஆழ்ந்து விசுவசித்து, நம்பி, நேசித்து, நன்றி கூறும் மனத்தோடு அதை நாம் உச்சரிக்க வேண்டும்.

இப்புதிய பாடல் தேவ அன்னைக்கே நேரடியாகப் பாடப்படுகிறது. ஆயினும் இது பரிசுத்த திரித்துவ தேவனை மிகவும் மகிமைப்படுத்துகிறது. காரணம் என்னவெனில், நம் அன்னைக்குச் செலுத்தும் எந்த மரியாதையும் தடுக்கப்படாத முறையில் இறைவனைச் சென்று அடைகின்றது. ஏனெனில் அவரே இவ்வன்னையில் எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தமதனத்திற்கும் காரணமாயிருக்கிறார். நாம் நம் தேவ அன்னையை மகிமைப்படுத்தும் போது, பிதாவாகிய சர்வேசுரன் மகிமை பெறுகிறார். ஏனென்றால் அவருடைய படைப்புகளில் உத்தம படைப்பான மரியாயையே நாம் மகிமைப்படுத்துகிறோம்.

சுதனாகிய சர்வேசுரனும் மகிமை பெறுகிறார், ஏனென்றால் அவருடைய மிகவும் பரிசுத்த தாயையே நாம் மகிமைப்படுத்துகிறோம்.

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனும் மகிமை பெறுகிறார், ஏனென்றால் அவர் தம் பத்தினியை அலங்கரித்துள்ள அருள் வரங்களை வியந்து பாராட்டுவதிலே நாம் மூழ்கியிருக்கிறோம்.

மங்கள வார்த்தையைச் சொல்லி நாம் நம் தேவ அன்னையை வாழ்த்திப் போற்றும் போதெல்லாம் சர்வ வல்லப கடவுளுக்கே அவர்கள் அதனைத் தந்து விடுகிறார்கள், எலிசபெத்தம்மாள் தன்னை வாழ்த்திய போது எவ்வாறு கடவுளுக்கே அவ்வாழ்த்தைச் செலுத்தினார்களோ அவ்வாறே இப்பொழுதும் செய்கிறாரகள். மாதாவின் மிகச் சிறந்த மகிமை 'கடவுளின் அன்னை' என்னும் மகிமையே, இத்தாய்மையையே எலிசபெத்தம்மாள் வாழ்த்திப் போற்றினாள். ஆனால் இவ்வாழ்த்துக்களை நம் மாத 'ஆண்டவரை வியந்து வாழ்த்து தென் ஆன்மா' என்ற அழகிய துதிப் பாடலால் சர்வேசுரனை நோக்கியே திருப்பி விட்டார்கள்.

தூதனின் மங்கள வாழ்த்து பரிசுத்த திரித்துவத்திற்கு எவ்வாறு மகிமையளிக்கிறதோ அதே போலவே, நாம் நம் தாய்க்குச் செலுத்தக் கூடிய மிகப்பெரும் புகழுரையாகவும் அது அமைந்துள்ளது.

ஒரு நாள் அர்ச். மெற்றில்டா (Mechtilda) ஜெபித்துக் கொண்டிருந்தாள். தேவ அன்னையின் மீது தனக்குள்ள அன்பை வெளியிட ஏதாவது வழி உண்டா என்று நினைத்துப் பார்க்க முயன்றாள். இதுவரை தான் அவ்வன்னைக்குச் செய்ததைவிட அதிக நன்றாய் செய்து, தன் அன்பைக் காட்ட வேண்டும் என்று நினைக்க முயன்ற அப்புனிதை பரவசமானாள். அப்போது நம் தேவ அன்னை அவளுக்குத் தோன்றினார்கள். சம்மனசின் மங்கள வார்த்தைகள் சுடர்விடும் பொன் எழுத்துக்களில் அன்னையின் நெஞ்சில் காணப்பட்டன. நம் அன்னை மெற்றில்டாவைப் பார்த்து, இவ்வாறு கூறினார்கள்: என் மகளே, ஆராதனைக்குரிய பரிசுத்த திரித்துவ தேவன் எந்த மங்களத்தை எனக்குக் கூறி அதனைக் கொண்டு கடவுளின் தாயாகும் மகிமைக்கு என்னை உயர்த்தினாரோ அந்த மங்கள வார்த்தையைச் சொல்லி என்னை வாழ்த்துவதை விட அதிகமாய் யாரும் என்னை மகிழ்விக்க முடியாது என்பதை நீ அறிய வேண்டுமென விரும்புகிறேன்.

'அருள் நிறைந்த' என்ற வார்த்தைகள், பரிசுத்த ஆவியானவர் எத்தனை அருள் வரங்களை என் மீது பொழிந்துள்ளார் என்பதை எனக்கு ஞாபகமூட்டுகின்றன.

இவ்வரங்களை, மத்தியஸ்தி என்ற முறையில் என்னிடம் கேட்பவர்களுக்கு ஏராளமாய் கொடுக்க என்னால் கூடும்.

'மரியாயே' என்ற சொல் ஒளியின் மாது என்று பொருள் படும். ஒளிரும் விண்மீனைப் போல் பரலோகத்தையும் பூலோகத்தையும் ஒளிர்விக்குமாறு சர்வேசுரன் ஞானத்தாலும் ஒளியாலும் என்னை நிரப்பியுள்ளார் என அது எடுத்துக் காட்டுகின்றது.

'வாழ்க' என்ற சொல் கடவுள் தம் எல்லையற்ற வல்லபத்தால் எல்லாப் பாவத்திலிருந்தும் என்னைக் காத்துள்ளார் என்றும், முதல் பெண் உட்பட்டிருந்த பாவம், பாவத்தொடர்பான தீமைகளிலிருந்து என்னைக் காப்பாற்றினார் என்றும் நான் அறியச் செய்கின்றது.

'கர்த்தர் உம்முடனே' என்று மக்கள் சொல்லும்போது நித்திய வார்த்தையானவர் என் உதரத்தில் மனிதாவதாரம் கொண்டதில் நான் உணர்ந்த விவரிக்க முடியாத மகிழ்ச்சியை மீண்டும் புதுப்பிக்கிறார்கள்.

'பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே' என்று நீங்கள் என்னிடம் கூறும் போது என்னை இவ்வுன்னத மகிழ்ச்சி நிலைக்கு உயர்த்திய சர்வ வல்லப கடவுளின் தெய்வீக இரகசியத்தை வாழ்த்துகிறேன்.

'உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே' என்ற வார்த்தைகள் சொல்லப்படும் போது, மனுக்குலத்தை மீட்டதற்காக என் குமாரன் சேசு கிறீஸ்து ஆராதிக்கப்படுவதைக் கண்டு மோட்சலோகம் முழுவதுமே என்னுடன் மகிழ்ச்சி கொள்கிறது.