இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் - அதிகாரம் 16

அநீத காரியஸ்தன் உவமையும், விவாகக்கட்டு அவிழ்க்கப்படாதென்பதும், ஐசுவரிய வானையும் ஏழையாகிய லாசரையும்பற்றிய உவமையும்.

1. அன்றியும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஐசுவரியவானாகிய ஒரு மனிதனுக்கு ஒரு காரியஸ்தனிருந்தான். அவன் தன் எஜமானுடைய ஆஸ்தியைச் சிதறடித்ததாக எஜமானிடத்தில் அவ னைக் குறித்து அவதூறு சொல்லப் பட்டது.

2. ஆகையால் எஜமான் அவனை வரவழைத்து, அவனை நோக்கி: உன்னைக் குறித்து இப்படி நான் கேள்விப் படுகிறதென்ன? உன் விசாரிப்பின் கணக்கையொப்புவி; நீ இனி என் காரியஸ்தனாயிருக்கக்கூடாது என்றான்.

3. அப்பொழுது காரியஸ்தன் தனக் குள்ளே சொல்லிக்கொண்டதாவது: நான் என்ன செய்வேன்? என் எஜமான் விசாரணை வேலையினின்று என்னை நீக்குகிறானே. மண்வெட்டவும் எனக்கு சக்தியில்லை, பிச்சையெடுக்கவும் வெட்கமாயிருக்கிறது.

4. ஆகையால் நான் காரியஸ்த வேலையினின்று தள்ளப்படும்போது, சிலர் என்னைத் தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளும்படி நான் செய்யவேண்டியது இன்னதென்று அறிவேன் என்று சொல் லிக் கொண்டு,

5. தன் எஜமானிடத்தில் கடன் பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து, முதலாவது வந்தவனைப் பார்த்து: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்க,

6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, உடனே உட்கார்ந்து, ஐம்பதென எழுது என்றான்.

7. அப்பால் அவன் வேறொருவனை நோக்கி: உன் கடன் எவ்வளவு என, அவன்: நூறு கோரளவு கோதுமை என்றான். அதற்குக் காரியஸ்தன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பதென எழுது என்றான்.

* 7. ஒரு கோர் என்பது எபிரேயருக்குள் வழங்கிய அளவு. இந்நாட்டளவின்படிக்கு ஒரு கோரென்பது சுமார் 150 பக்காப்படி கொண்டதாகும்.

8. அந்த அநீத காரியஸ்தன் விவேகமாய்ச் செய்து கொண்டதைப்பற்றி, எஜமான் அவனை மெச்சிக்கொண்டான். ஏனெனில் இப்பிரபஞ்சத்தின் மக்கள் ஒளியின் மக்களிலும் தங்கள் சந்ததியிலே அதிக விவேகமுள்ளவர்களா யிருக்கிறார்கள்.

* 8. இந்த அநீத காரியஸ்தனை எஜமான் புகழ்ந்தானென்கும்போது அவனுடைய வஞ்சக செய்கையைப்பற்றியல்ல, அவன் தன் பிழைப்புக்கு வழிப்பண்ணிக்கொள்வதற்குக் காண்பித்த சாமர்த்தியத்தைப் பற்றியே புகழ்ந்தான். 2-வது, அந்தப்பொருளை அநீத பொருளென்பது ஏதுக்கெனில், அது அநேகம் அநீதங்களுக்குக் காரணமா யிருப்பதினாலும், அதை அநேகர் வழக்கமாய் அநீதத்தில் செலவழிக்கிறதினாலுமென்க.

9. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் மரணமடை யும்போது நித்திய கூடாரங்களில் உங்களை ஏற்றுக்கொள்ளும்படிக்கு அநீதப் பொருட்களைக்கொண்டு உங்க ளுக்குச் சிநேகிதரைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

10. அற்பக்காரியத்திலே பிரமாணிக்கனாயிருக்கிறவன் பெரிய காரியத்திலும் பிரமாணிக்கனாயிருக்கிறான். அற்பக் காரியத்திலே அநீதனாயிருக்கிறவன் பெரிய காரியத்திலும் அநீதனாயிருக்கி றான்.

11. ஆனால் அநீதப் பொருளிலே நீங்கள் பிரமாணிக்கமாய் இராவிட்டால் உங்களை நம்பி மெய்ப்பொருளை ஒப்பு விக்கிறவர்கள் யார்?

12. பின்னையும், பிறர் பொருளில் நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால், உங்களுக்குச் சொந்தமானதை உங்களுக் குக் கொடுப்பவர்கள்யார்?

* 10-12. அற்பக்காரியமாகிய அநித்திய பொருட்களைக் கிரமமாகவும் தன் ஆத்துமத்துக்குப் பிரயோசனமாகவும் செலவழிக்கிறவன் பெரிய காரியமாகிய இஷ்டப்பிரசாத முதலிய ஞான நன்மைகளையும் தன் ஆத்தும பிரயோசனமாக உதவிக்கொள்ளுவான். இப்படியிருக்க இப்பிரபஞ்ச பொருட்களை நீங்கள் உங்கள் ஆத்துமப் பிரயோசனமாக உதவிக்கொள்ளாதேபோனால், மெய்ப்பொருளாகிய இஷ்டப்பிரசாத முதலிய ஞான நன்மைகளைச் சர்வேசுரன் உங்களுக்குத் தரமாட்டார். 12-ம் வாக்கியத்தில் உலக ஆஸ்தியைப் பிறர் பொருளென்றும் ஞான ஆஸ்தியை உங்களுக்குச் சொந்தப் பொருளென்றும் ஆண்டவர் சொல்லுகிறார். (காலமேத்.)

13. எந்த ஊழியனும் இரண்டு எஜ மான்களுக்கு ஊழியஞ்செய்ய முடியாது. ஏனெனில் ஒன்றில், ஒருவனைப் பகைத்து, மற்றவனைச்சிநேகிப்பான்; ஒன்றில், ஒருவனைச்சார்ந்துகொண்டு, மற்றவ னைப் புறக்கணிப்பான். அப்படியே சர் வேசுரனுக்கும் திரவியத்துக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது என்றார். (மத். 6:24.)

* 13. சர்வேசுரனுக்கும், உலக திரவியமாகிய பேய்க்கும் பொருந்தாத விரோதமானதினாலே, மனிதன் இருவருக்கும் பிரியப்படும்படியாக ஊழியஞ் செய்யவேமுடியாது.

14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயர் கேட்டு, அவரைக் கேலிபண்ணினார்கள்.

15. ஆதலால் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதருக்கு முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள். சர்வேசுரனோ, உங்கள் இருதயங்களை அறிவார். அது என்னவென் றால், மனிதருக்கு உயர்ந்ததாயிருக்கிறதே தேவ சமுகத்தில் அருவருப்பாயிருக்கின்றது.

16. வேதப் பிரமாணமும், தீர்க்கதரிசனங்களும் அருளப்பர் வரைக்குந்தான். அதுமுதல் சர்வேசுரனுடைய இராச்சியம் சுவிசேஷமாகப் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; எவரும் அதில் பலவந்தமாய்ப் பிரவேசிக்கிறார்கள். (மத். 11:12.)

17. ஆகிலும் வேதப் பிரமாணத்தில் ஒரு எழுத்தின் அணுப்பிரமாணமும் (நிறைவேறாமல்) போவதைவிட, வானமும் பூமியும் ஒழிந்துபோவது அதிக எளிதாயிருக்கும். (மத். 5:18.)

* 17. மத். 11-ம் அதி. 12-ம் வசன வியாக்கியானம் காண்க.

18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகஞ் செய்து கொள்ளுகிற எவனும் விபசாரஞ் செய்கிறான். புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகஞ்செய்கிறவனும் விபசாரஞ்செய்கிறான். (மத். 5:32; மாற். 10:11.)

* 18. மத். 19-ம் அதி. 9-ம் வசன வியாக்கியானம் காண்க.

19. ஐசுவரியவான் ஒருவன் இருந்தான். அவன் இரத்தாம்பரமும் மெல்லிய வஸ்திரமும் தரித்து, நாள்தோறும் சம்பிரமமாய் விருந்தாடிவந்தான்.

* 19. சேசுநாதர் 13-ம் வசனத்தில், ஆஸ்திக்கும் சர்வேசுரனுக்கும் ஊழியம் பண்ணக்கூடாதென்று சொன்னபோது, பரிசேயர் கேலிபண்ணினார்கள். ஏனெனில் சர்வேசுரன் பழைய ஏற்பாட்டிலே நல்ல நடத்தைக்குச் சம்பாவனையாக ஆஸ்தியைக் கொடுப்போமென்று சொல்லியிருந்தார். (இசை. 1-ம் அதி 19-ம் வச.) அபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு, தாவீது முதலியவர்கள் திரண்ட ஆஸ்திக்காரராயிருந்தாலும், சர்வேசுரனுக்குப் பிரிய தாசராயிருந்தார்கள். இதினிமித்தமே, சேசுநாதர்சுவாமி ஆஸ்தியைப்பற்றிப் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவைகள் ஸ்நாபக அருளப்பர் காலத்தோடு முடிகிறதென்றும், புதிய ஏற்பாட்டில் மனத்தரித்திரரே பாக்கியவான்கள், மோட்ச இராச்சியம் அவர்களுக்குரியதென்றும் போதிக்கிறார். ஆகையால் இப் பொழுது பிரசங்கிக்கப்படுகிற அருள்வேதம் பழைய வேதத்தைப் பார்க்க மேன்மையும் உத்தமுமானதால், இதில் பிரவேசிக்க விரும்புகிறவர்கள் உலகக் கோட்பாடுகளையுந் தங்கள் மனவாஞ்சைகளையும் வெறுக்கவேண்டியது.

20. லாசர் என்னும் பெயருள்ள ஒரு பிச்சைக்காரனும் இருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய் ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21. அவனுடைய பந்தியிலிருந்து சிந்தி விழும் உரொட்டித் துண்டுகளால் தன் பசியை ஆற்றத் தேடியும், அவனுக்குக் கொடுப்பவன் ஒருவனுமில்லை. நாய்கள் வந்து அவன் புண்களை நக்கும்.

22. பின்னும் சம்பவித்ததேதெனில், பிச்சைக்காரன் மரித்து, தேவதூதர்களால் அபிரகாம் மடியில் கொண்டு போய் வைக்கப்பட்டான். ஐசுவரியவானும் மரித்து, நரகத்தில் புதைக்கப்பட்டான்.

23. அவன் ஆக்கினைக்குள்ளாயிருக்கும்போது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்தில் அபிரகாமையும் அவருடைய மடியிலே லாசரையும் கண்டான்.

24. அப்பொழுது அவன் உரக்கக் கூப்பிட்டு: பிதாவாகிய அபிரகாமே, என்பேரில் இரக்கமாயிருந்து, லாசர் தன் விரலின் நுனியைத் தண்ணீரிலே தோய்த்து, என் நாவைக் குளிரச்செய்யும்படி அனுப்பியருளும். ஏனெனில் இந்த அக்கினிச் சுவாலையிலே உபாதைப்படுகிறேன் என்றான்.

25. அதற்கு அபிரகாம் அவனை நோக்கி: மகனே, உன் ஜீவியகாலத்தில் நீ நன்மைகளைப் பெற்று அனுபவித்தாய் என்றும், லாசர் அவ்விதமே தின்மைகளை அனுபவித்தான் என்றும் நினைத்துக்கொள். இப்பொழுது இவன் தேற்றரவடைகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26. இதன்றியே, உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே ஒரு பெரும் பாதாளம் ஸ்திரமாய் ஏற்பட்டிருக்கிறது. ஆகை யால் இங்கேயிருந்து அங்கே வரவும், அங்கேயிருந்து இங்கே வரவும் மனதிருந் தாலும், கூடாததாயிருக்கிறது என்றார்.

27. மீளவும் அவன்: அப்படியானால் பிதாவே, அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை மன்றாடுகிறேன்;

28. ஏனெனில் எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு; அவர்களும் இந்த ஆக்கினை ஸ்தலத்துக்கு வராதபடி, இவன் அவர்களுக்குச் சாட்சி சொல் லட்டும் என்றான்.

29. அபிரகாம் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: அவர்களுக்கு மோயீசனும் தீர்க்கதரிசிகளும் உண்டு; அவர்களுடைய வாக்கை அவர்கள் கேட்கக் கடவார்கள் என்று சொல்ல,

30. அவனோ: பிதாவாகிய அபிரகாமே, அப்படியல்ல, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்தில் போனால் தவஞ்செய்வார்கள் என்றான்.

31. அதற்கு அவர்: மோயீசனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், விசுவசிக்கமாட்டார்களென்று சொன்னார் என்றார்.

* 22-31. அபிரகாம் மடியென்பது, பிதாப்பிதாக்கள் ஸ்தலமாம். யேசுநாதர் பரலோகத்துக்கு ஆரோகணமாகி, ஜென்மப்பாவத்தினால் அடைபட்டிருந்த மோட்ச வாசலைத் திறக்குமுன் மரித்த மகாத்துமாக்கள், அந்த ஸ்தலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள். யேசுநாதர் மரித்தவுடனே, அவருடைய திரு ஆத்துமம் அந்த ஸ்தலத்திற்குப் போய், அந்த ஆத்துமாக்களை அழைத்துக்கொண்டு வந்து, தாம் பரலோகத்துக்குப் போகும் போது, தம்மோடு அவர்களையும் கூட்டிக்கொண்டு போனார். 2-வது, பூலோகத்திலே சுகம் அனுபவித்தாயென்றும், லாசர் துன்பப்பட்டானென்றும் நினைத்துக்கொள். இப்போது இவன் தேற்றரவடைய, நீ வேதனைப்படுகிறாயென்று அபிரகாம் சொல்லுகிறார். ஆகையால் இவ்வுலகத்திலே சுகத்தையனுபவித்தவர்கள் எல்லாரும் நரகத்துக்குப் போகவேண்டியதென்றும், துன்பப்பட்டவர்கள் எல்லாரும் மோட்சத்தை யடையவேண்டுமென்றும் சொல்லுவோமோ? அல்ல. இதிலே சொல்லப்பட்ட ஆஸ்திக்காரன் மோட்சத்தை எண்ணாமல், இவ்வுலக சுகசெல்வங்களை மட்டும் தனக்குக் கதியாக எண்ணி நடந்தான். இவனைப்போல மரணபரியந்தம் நடந்தவர்களுக்கு நரகமே கதியாகும். அப்படியே அநேகம் பேர்கள் இவ்வுலக துன்பத்தையனுபவித்தாலும், மோட்சத்தை எண்ணாமலுந் தேடாமலுமிருக்கிறபடியினாலே, அந்தத் துன்பங்களினால் யாதொரு பிரயோசனமும் அடையாமல், நரகத்துக்குப் போகிறார்கள். ஆனால் லாசரைப்போல, அந்தத் துன்பங்களை மோட்ச நம்பிக்கையோடும், பொறுமையோடுஞ் சகித்துக்கொண்டு, வேத கற்பனைகளையும் அனுசரித்துப் புண்ணிய வழியில் நடந்து வருகிற வர்கள், அவனைப்போல் மோட்சத்தில் சேருவார்கள். 3-வது, மோயீசனுக்கும் தீர்க்கதரிசி களுக்கும் செவிகொடாதவர்கள் மரித்தோரிலிருந்து ஒருவன் போனாலும் விசுவசிக்க மாட்டார்களென்று அபிரகாம் சொல்லுகிறார். இங்கே மோயீசனையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து சொல்லுகிறதையெல்லாம், வேத வாக்கியங்களைக் குறித்துச் சொல்லவேண்டும். தேவ வாக்கியங்களை விசுவசியாதவன், மரித்தவர்கள் எழுந்து வருவதைக் கண்டாலும் விசுவசியான். அப்படியே சேசுநாதர் காலத்திலிருந்த யூதர்கள் தங்கள் கண்முன்பாக அவர் செய்த எண்ணிறந்த புதுமைகளையும், லாசர் உயிர்ப்பிக்கப்பட்டதையும் கண்டாலும், அவரை விசுவசிக்கவில்லை.