இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ரோஜா மலர் 15. அருள் நிறை மந்திரம்.

மங்கள வார்த்தை ஜெபம் எவ்வளவு விண்ணுலகுக் குரியதாயிருக்கின்றது. அதன் பொருளாழத்தில் அது நாம் காண்பதை விட எவ்வளவோ உயர்ந்தது. இதனாலேயே எந்த ஒரு சிருஷ்டியும் அதன் பொருளை முற்றிலும் அறிந்து கொள்ள இயலாதென்றும், பரிசுத்த கன்னிமரியாயின் மைந்தனான நமதாண்டவர் சேசு கிறிஸ்து மட்டுமே அதனை உள்ளபடி விளக்கிக் கூற முடியும் என்றும் முத் ஆலன் ரோச் தீர்மானமான கருத்து கொண்டிருந்தார்,

இம்மங்கள வார்த்தை ஜெபம் நம் தேவ அன்னைக்கு அல்லவா கூறப்பட்டது. இறைவனின் வார்த்தையானவர் மானிட அவதாரம் எடுப்பதற்கென அல்லவா அது சொல்லப் பட்டது. இக்காரணத்திற்காக அல்லவா இச்ஜெபம் பரலோகத்திலிருந்து இங்கு கொண்டுவரப் பட்டது. அதை முதலில் கூறியது யார்? அதிதூதரான அர்ச். கபிரியேல் சம்மனசல்லவா. இந்த காரணங்களுக்காக இவ்வருள் நிறை மந்திரம் மாபெரும் விலையுள்ளதாயிருக்கின்றது.

தேவ அன்னையைப்பற்றி கத்தோலிக்க வேத சாஸ்திரம் கூறும் எல்லாவற்றையும் மங்கள வார்த்தை ஜெபம் ரத்தினச் சுருக்கமாய் கூறுகிறது. வாழ்த்து, வேண்டுதல் என்னும் இரண்டு பாகங்களாக இச்செபம் உள்ளது. மரியாயின் மகத்துவத்தைப் பற்றிய யாவற்றையும் முதல் பாகத்தில் காண்கிறோம். அவர்களிடமிருந்து நாம் அவர்களுடைய நன்மைத்தனத்திலிருந்து எதையெல்லாம் கேட்க வேண்டுமோ எதையெல்லாம் அடைந்து கொள்ளலாமோ அவற்றையெல்லாம் இரண்டாம் பாகத்தில் காண்கிறோம்.

அருள்நிறை மந்திரத்தின் முதல் பாகத்தை மிகப் பரிசுத்த திரித்துவ தேவன் நமக்கு வெளிப்பபடுத்தினார். அதன் பிந்திய பாகத்தை அர்ச். எலிசபெத் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு உரைத்தாள். இம்மந்திரத்தின் முடிவுரையை 430-ம் ஆண்டில் திருச்சபை நமக்குத் தந்தது. எபேசு நகர் பொதுச்சங்கத்தில் நெஸ்டோரியுஸின் *பதிதத்தை திருச்சபை கண்டனம் செய்து, மாதா கடவுளின் தாய் என்பதை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்த போது கடவுளின் தாய் என்ற மகிமையான பெயரால் மாதாவை நாம் அழைத்து இவ்வாறு மன்றாட வேண்டும் என்று திருச்சபை கட்டளையிட்டது. *அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்தினும் வேண்டிக் கொள்ளும்." (* நெஸ்டோரியுஸ் என்பவர் அதிமேற்றிராணியார், கன்னி மாமரி கடவுளின் தாயல்ல என்ற தப்பறையைப் போதித்தார். கி.பி.430-ம் ஆண்டில் கூடிய எபேசு பொதுச் சங்கத்தில் இவருடைய தப்பறை கண்டனம் செய்யப்பட்டது.)

நித்திய வார்த்தையானவர் மானிடனாக வந்த திருநிகழ்ச்சியே அனைத்துலக வரலாற்றில் மிகப்பெரும் நிகழ்ச்சியாகும். அவராலேயே உலகம் மீட்கப்பட்டது. இறைவனுக்கும் மனிதருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டது. இப்பெரிய நிகழ்ச்சிக்கு கடவுளின் கருவியாக நமதன்னை தெரிந்து கொள்ளப்பட்டார்கள். வானதூதன் மரியாயிடம் மங்கள மொழி கூறிய போது இந்நிகழ்ச்சி நடைமுறையாக்கப்பட்டது. இம்மங்களச் செய்தியைக் கொண்டு வர விண்ணரசின் சீரிய இளவல்களுள் ஒருவரான அதிதூதர் கபிரியேல் தெரிவு செய்யப்பட்டார்.

இம்மங்கள வார்த்தையில், பிதாப்பிதாக்கள், தீர்க்கத்தரிசிகள், அப்போஸ்தலர்களிடம் விளங்கிய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் நாம் காணலாம். வேத சாட்சிகளுக்கு தளராத உறுதியையும் பலத்தையும் அளிப்பது இம்மங்கள வார்த்தை ஜெபமே. திருச்சபையின் வேத சாஸ்திரிகளுடைய ஞானமும், துதியருடைய நீடித்த நிலைபேறும், கடவுளின் ஊழியர் யாவரின் வாழ்வும் அதுவே. அருள் வேத புதிய கீதமும், மாந்தருடையவும் சம்மனசுக்களுடையவும் மகிழ்வும் இம்மங்கள வார்த்தையே. இதுவே பசாசுக்களுக்கு அச்சம் விளைத்து அவர்களை வெட்கத்துக்குட்படுத்தும் பாடலாக அமைந்துள்ளது.

சம்மன சின் மங்கள மொழியால் கடவுள் மனிதனானார். ஒரு கன்னிகை தாய்மைப் பேறடைந்தாள். பாதாளத்தில் இருந்த நீதிமான்களின் ஆன்மாக்கள் விடுதலை அடைந்தார்கள்: மோட்சத்தின் வெற்றாசனங்கள் நிரம்பின. மேலும், அதனால் பாவம் பொறுக்கப்பட்டது. நமக்கு வரப்பிரசாதம் வழங்கப்பட்டது. நோயுற்றோர் குணம் பெற்றனர். இறந்தோர் உயிர் பெற்றனர். அகதிகள் இல்லம் சேர்க்கப்பட்டனர். பரிசுத்த திரித்துவம் கோபம் நீங்கி மாந்தர் நித்திய வாழ்வு பெற்றனர்.

இறுதியாக, இம்மங்கள வாழ்த்து இரக்கத்திற்கும் சர்வேசுரன் உலகுக்குத் தந்த வரப்பிரசாதங்களுக்கும் அடையாளமாக விளங்கும் வானவில்லாக அமைந்திருக்கின்றது.

(முத். ஆலன் ரோச்)